an excerpt from my forthcoming novel MiLAGU
எழுபத்தாறு 1606 மிர்ஜான் கோட்டை
யுத்தம் ஆரம்பித்து விட்டது.
மகாராணி சென்னபைரதேவி தொடங்கி வைக்கவில்லை. நேமிநாதன் தொடங்கினானா, தொடங்கினான் என்றால் எப்போது என்று அவனுக்கே தெரியாது.
என்றாலும் அடிதடி ஆரம்பமாகியிருக்கிறது. மிர்ஜானுக்கு வெளியே நூறு பேரைக் கையில் வாளெடுத்து அணிவகுத்து இப்படியும் அப்படியும் கோட்டைக்கு வெளியே பிரதட்சணமாக நடக்க வைத்தபோது அந்தக் கூட்டத்துக்கும் கோட்டைக்குள்ளே வழக்கமான பாதுகாப்புக்காகப் பணிபுரியும் அரசு காவல் படைக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தட்டுப்படவில்லை.
ஒரே ஒரு விஷயம். காவல்படை வருடக் கணக்காக அணிவகுத்து நடந்து கோட்டைக்கு உள்ளும் வெளியும் சுற்றி மிடுக்காக ஒருசேர காலடி எடுத்து வைத்து நடப்பது போல் ஒழுங்கான நடையும் கம்பீரமும் நேமிநாதன் அவசர அவசரமாகக் கூட்டிய கூட்டத்தில் இல்லை.
ஏனோ தானோவென்று மிர்ஜான் கோட்டையை பிரதட்சிணமாகவும் இரண்டு கோஷ்டியாக பிரிந்து இடவலம், வல இடமாகவும் சுற்றிச் சுற்றி வந்தபோது உள்ளே இருந்து ஒரு குதிரை வீரன் கையில் நீலத்துணியில் ஓரமாக மூன்று வெள்ளை வட்டங்கள் மின்னும் ஜெருஸோப்பா நாட்டுக் கொடியோடு வந்து நின்று இரு கைகளையும் வட்டச் சுழற்சியில் ஈடுபடுத்தினான்.
பின்னால் போ, கலைந்து போ என்று அரசு காவல்படை உத்தரவிடும் சமிக்ஞை அது. கோட்டையில் பீரங்கி வேட்டு ஒன்பது முறை முழங்கி யுத்தம் ஆரம்பித்ததாக அடையாளம் காட்டியது. கோட்டை முரசங்கள் அதிர்ந்து ஒலித்தன. எதிரணியின் எக்காளங்கள் அவ்வப்போது ஊதப்பட்டு யுத்த சூழலை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது.
நேமிநாதனின் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினார்கள் வாய் வார்த்தைத் தகராறு அடுத்துத் தொடங்கியது. அது மும்முரமாகி இரண்டு பக்கமும் வாள் பயிற்சி செய்து பழக்கமுடையவர்கள் வாளோங்கி முன்னும் பின்னும் ஓடினார்கள்.
வாள் வீசும்போது மிக அருகில் வந்து தோளிலும் நெற்றியிலும் ரத்தக் காயம் ஏற்பட்டவர்கள் உடனடியாக இரு தரப்பிலும் அகற்றப்பட்டு முதல் சுற்று மருத்துவ உதவியாக காயத்துக்கு துணிக்கட்டு போடப்பட்டது. காயத்தின் தீவிரத்தைப் பரிசீலித்து அவர்கள் ஓய்வு தரப்பட்டார்கள். அல்லது திரும்ப போர் நடத்த அனுப்பப் பட்டார்கள்.
அரசு காவல் படை வீரர்கள் காயமடைந்தபோது அவர்கள் உடனடியாகக் கோட்டைக்குள் கொண்டு போய் சிகிச்சை அளிக்கப் பட்டார்கள். எதிரணி வீரர்கள் கோட்டைக்கு மேற்கே மரங்கள் நிறைந்த நிலப்பகுதியில் கூடாரம் அமைத்து முதல் உதவி தரப்பட்டார்கள்.
சங்குகள் ஒலிக்க, முரசுகள் நிதானமாக முழங்கின. காவல் படை கோட்டைக்குள் போக, உள்ளே இருந்து அடுத்த அலை படையினர் குதிரை வீரர்களாக கோட்டை வாசல் காவலில் ஈடுபட்டார்கள்
எதிரணி கோட்டைக்கு அடுத்த வெற்று நிலத்தில் தரையில் குந்தி உட்கார்ந்து, தென்னம்பாளை, வாழை மட்டைகளைக் கிழித்து மடித்து உருவாக்கிய தொன்னைகளில் சோறும் வாழைக் கறியும் உண்டார்கள். உணவு ஹொன்னாவரில் நேமிநாதன் ஏற்பாடு செய்தது.
நகரத்தில் ரதவீதி மிட்டாய்க்கடையில் இனிப்பு தயாரிப்பது உடனடியாக நிறுத்தி வைக்கப் பட்டு எதிரணி போர்ப்படைக்கு உணவு தயாரிக்க தளவாடங்களும் அரிசியும், புளியும், வெங்காயமும், பச்சை மிளகாயும், வற்றல் மிளகாயும், பூசணியும், பரங்கியும், வாழைக்காயும் பயன்படுத்தப்பட்டன.
அரசு அணி படையினருக்குக் கிட்டத்தட்ட இது போன்ற உணவு மிர்ஜான் கோட்டை சமையலறையிலும் அதை ஒட்டிய வெளியிலும் சமைக்கப்பட்டு கோட்டைக்குள் பரிமாறப்பட்டது. அணி அணியாக உண்ண உள்ளே போனார்கள். உண்ணக் காத்திருக்கிறவர்கள் கோட்டை வாசலில் காவல் தொடர, உண்டு வந்தவர்கள் அவர்களிடமிருந்து காவலைக் கைக்கொண்டார்கள்.
அடுத்த சங்கு முழங்குதல். முரசு அதிர்தல். பீரங்கி கோட்டைக்குள் இருந்து ஒன்பது முறை ஒலித்தல். யுத்தம் தொடர்ந்தது. சாயந்திரம் ஆறு மணிக்கு முரசு ஒலித்து நிற்க இரண்டு தரப்பும் இன்றைய போராட்டம் ஓய்ந்து திரும்பின.
pic medieval battle
ack en.wikipedia.org