An excerpt from my forthcoming novel MILAGU
எதிரணி போர் நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் பில்கி அரச்ர் திம்மராஜுவும் கலந்து கொண்டதை நேமிநாதனும் வகுளாபரணனும் சிலாகித்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு முக்கியமான பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது.
வேறுவேறு இடங்கள், சூழலில் இருந்து வரும் எதிரணிப் படையில் ஒற்றுமை அருகி வருவதை தினசரி அறிக்கை சுட்டிக்காட்டியது. முக்கியமாக கேலடி படை வீரர்கள் அணியின் தளவாய் ராஜசேகரனின் அதிகாரத்தை மதிக்காமல் தாந்தோன்றியாகச் செயலபடுவது பலவீனமாகச் சுட்டிக் காட்டப்பட்டது.
கூட்டத்துக்கு நாளை வெங்கடப்ப நாயக்கரும் வருகை புரிவார் என்ற செய்தியில் முக்கியத்துவம் அழுத்தமாக வைத்து வகுளாபரனணன் பேசினான்.
காவலர் அணி ஓய்வு வயதை நெருங்கும் வயதான வீரர்களால் அமைந்தது என்றும் எதிரணி முப்பது வயது அதிக பட்சமாகவும், பதினெட்டு குறைந்த பட்சமாகவும் அமைந்த இளைஞர் படை என்றும் இது குறித்தே வெற்றி நிச்சயம் என்றும் வகுளாபரணனால் நம்பிக்கையோடு சொல்லப்பட்டது.
மூன்றாம் நாள் காலை தாறுமாறாக எந்த ஒழுங்கும் இல்லாமல் யுத்தம் தொடங்கியது. அரசுக்கு எதிரணிப் படையில் கேலடி வெங்கடப்ப நாயக்கர் அடுத்த ஈடாக அனுப்பிய, ஐம்பது அனுபவம் வாய்ந்த வீரர்களும் சேர, எதிரணி பலமும் போர்த் திறமையும் உடனடியாக அதிகரித்தது.
கேலடி படைவீரர்கள் யாருக்கும் அடங்காது, கீழ்ப்படியாது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையில் அரிவாளைச் சுழற்றிக்கொண்டு முன்னேறி ஓடியதைக் கண்டே அரசுக் காவல் படையில் ஒரு பகுதி கலவரமாகி ஓடியதை எதிரணி ஆச்சரியத்தோடு கவனித்தது. என்றாலும் சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பக் குழுமி போரைத் தொடர்ந்து கேலடி வீரர்களைப் பின்வாங்க வைத்தார்கள்.
அரசு காவல்படைக்கு நல்ல வேளையாக இருநூற்றைம்பது தயார்நிலை இரண்டாம் கட்டப் படையினர் சேர்ந்தது வலிமையை ஏகமாக அதிகரித்திருப்பது பிரத்யட்சமாக்த் தெரிந்தது.
கேலடி படையணியும் பில்கி அணியும் முற்றுகையை இன்னும் சக்தியோடு முன்னெடுத்துச் செல்வதை உடனடியாக தடுத்து நிறுத்த தயார்நிலைப் படை மிகுந்த உழைப்பை ஈந்து போர்த் தந்திரப் பிரயோகத்தையும் நடத்தியது.
என்றாலும் பதினோரு பேர் அரசு காவல் படையிலும், முப்பத்தேழு பேர் எதிரணியிலும் போர் நடவடிக்கைகளின்போது இறந்து போனார்கள். அறுபத்தேழு எதிரணியினரும், இருபத்தெட்டு அரசு காவல் படைவீரர்களும் அரிவாள், கத்தி, குறுவாள் காயங்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள்.
இரவு நடந்த அரசணியின் போர் நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் நாளை போர்த்துகீஸ் வீரர்கள் இருபத்தாறு பேருக்கு முன்கூட்டியே வார ஊதியம் மிளகாகத் தரவேண்டும், அடுத்த வாரம் மற்ற படையினருக்கு ஊதியம் வராகன் நாணயங்களாகத் தரவேண்டும் என்பதும் அதற்கான தொகை கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டால் முக்கிய கட்டிட, சாலை மராமத்து நடவடிக்கைகள் நின்றுபோகும் என்றும் பொருளாதார அறிக்கை சென்னபைரதேவி மகாராணி அரசவைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
ஊதியத்தை மிளகாக வழங்க மகாராணி ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று நஞ்சுண்டய்யா உட்பட எல்லா பிரதானிகளும் கருத்து சொன்னார்கள்.
அவசரமான தேவையான ஒரே ஒரு முறைச் செலவு என்பதால் என் முடிவை மன்னித்து விடுங்கள், செலவுகளை சுருக்குவோம். போரில் வெல்வோம் என்றாள் மிளகுராணி. ஏனோ யாரும் ஏற்று வாங்கி அந்த கோஷத்தை எதிரொலிக்கவில்லை.
இன்னும் இரண்டு செய்திகள்.
பைத்யநாத் வைத்தியர் சென்னபைரதேவியின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்.
எதிரணியின் ஆய்வுக் கூட்டத்தில் ரோகிணி கலந்து கொள்ளவில்லை.
pic medieval European war
ack en.wikipedia.org