An excerpt from my forthcoming novel MILAGU
மிளகு அத்தியாயம் எழுபத்தேழு 1606 உள்ளால்
போர்த்துகீஸ் படை வந்து சேர்ந்தது.
எங்கே வரவேண்டும் என்று தெரிவிக்கப் படாததால் உள்ளால் துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்ட பத்து சிறு கப்பல்களில் வந்த ஐநூறு பேர் படகுகளை அமர்த்திக்கொண்டு கரைக்கு ஏக கோலாகலமாக வந்து சேர, அப்பக்கா மகாராணிக்கு உடனடியாகச் செய்தி அறிவிக்கப்பட்டது.
அப்பக்கா உடனே போர்த்துகல் அரசின் தலைமைப் பிரதிநிதியான சின்ஹோர் இம்மானுவல் பெத்ரோ அவர்களை துரிதமாக உள்ளாலுக்குப் புறப்பட்டு வரச்சொல்லி ராஜாங்க தூதன் மூலம் லிகிதம் அனுப்பினாள்.
இது போர்த்துகீஸ் அரசின் கோவா பிரதிநிதி அல்வாரீஸால் நிர்வகிக்கப்படும் என்று திருப்பிவிட நினைத்தாலும், தான் கோழிக்கோடு வழியாக லிஸ்பனுக்குத் தாயகம் திரும்ப இருக்கிற இந்த நேரத்தில் எல்லோருக்கும் நட்போடு செயல்பட்டிருக்கத் தீர்மானித்தார் பெத்ரோ.
அவர் வரும்வரை போர்த்துகீஸ் படையினரை திரும்ப கப்பலுக்கே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போர்த்துகல் ஆக்கிரமித்து அடக்கி ஆட்சி செய்யும் ஆப்பிரிக்கக் காலனி அங்கோலாவிலிருந்து புறப்பட்டு வந்த அந்தக் கடற்படை திரும்பக் கடலுக்குப் போகச் சொன்னதற்காக கோபித்துக் கொண்டார்கள்.
கையில் கிடைத்த பொருட்களைப் பிடுங்கி அழித்து ஆட்சேபத்தை வெளிப்படுத்தவோ என்னமோ அவர்கள் பார்க்க கடற்கரை மணல் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதையும் காணோம்.
இங்கே போகச் சொல்லி இருக்கிறார்கள் எங்களை மாண்புமிகு போர்த்துகீஸ் அரசர் என்று ஒரு பழைய கிழிந்த வரைபடத்தில் அவர்கள் கைசுண்டிக் காட்டியது தில்லியை ஒட்டி விரிந்த பெருமணல் வெளியை. அங்கே கப்பல் ஓட்டிப் போக முடியாது என்று அப்பக்காவின் அரசு அதிகாரிகள் பொறுமையாகச் சொன்னபோது கொஞ்சம் புரிந்து தலையசைத்தார்கள்.
ஆனாலும் திரும்ப கப்பலுக்கு போகமுடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்கள். அப்பக்காவின் அதிகாரிகள் அடுத்து செய்வதென்ன என்று அறியாமல் அரசியைப் பணிந்து கைகட்டி நிற்க, விருந்தினராக வந்த போர்த்துகீசியர்களுக்கு உணவும் தண்ணீரும் இந்த ஒரு காலை வேளைக்கு கடற்கரையில் வைத்து தரவும், அவர்கள் அதற்கு அப்புறம் கப்பலுக்கு திரும்பினால் மூன்று நாள் மும்மூன்று ஒன்பது வேளைக்கான ஆகாரமும் தண்ணீரும் போனால் போகிறதென்று கொஞ்சம் சாராயமும் கள்ளும் அவர்களுக்குக் கப்பல் உள்ளே வந்து அன்பளிப்பாகத் தரப்படும் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்கள் அரசு அதிகாரிகள்.
அதுவும் சரி, முடிந்தால் சாராயத்தை உடனே தந்தருள முடிந்தால் கடப்பாடு உடையவர்கள் ஆவோம் என்று அந்த படையணியின் தலைவர் என்று அறிமுகப்படுத்துக்கொண்ட பெரைரா அவர்கள் வேண்டியது அப்பக்கா மகாராணியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அவர்கள் போக வேண்டிய துறைமுகம் அதிகத் தொலைவில் இல்லாமல் மேற்குக் கரையோடு வரும் ஜெருஸுப்பா அல்லது ஹொன்னாவர் துறைமுகமாக இருக்கக் கூடும் என்றும் புரியவைக்கப் பட்டது.
கப்பலுக்குப் போனதும் படைத்தலைவர் என்று சொல்லப்பட்ட பெரைரா உடனே சாராயம், ஆகாரம் வருவதை எதிர்பார்த்திருக்க, படையினரில் பத்து பேர் மட்டும் எப்படியோ கடற்கரையில் இருந்து உள்ளால் நகரத்துக்குள் புகுந்தார்கள். அவர்கள் அப்பக்கா மகாராணியின் அதிகாரிகளால் உடனே பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
ஒன்பது வேளை ஆகாரம், தண்ணீர், சாராயம் எல்லாம் அன்பளிப்பாக வந்து சேர, நின்று, மண்டியிட்டு, தரையைத் தலையால் தொட்டு, விதவிதமாக நன்றி தெரிவித்து கப்தான் பெரைரா பாய்மரம் ஏற்றி ஒன்றன் பின் ஒன்றாக பத்து சிறுகப்பல்களைச் செலுத்திப் போனபோது, அனுபவம் இல்லாத காரணத்தால் தலை எண்ணாமல் போனார்.
pic Medieval Navy
ack en.wikipedia.org