an excerpt from my forthcoming novel MILAGU
இரவெல்லாம் கண் விழித்து இரு கோச் வண்டிகள் மாற்றி காலை ஒன்பது மணிக்கு அவர் மாளிகைக்கு வந்து சேர கதவு எல்லாம் அடைத்துச் சார்த்தி வைத்திருந்தது. மனைவி மரியா, குழந்தைகள் மற்றும் கஸாண்ட்ராவைக் காணவில்லை. அவர் வசம் மாளிகைத் திறவுகோல் இல்லாத காரணத்தால் வாசலில் நின்று காத்திருக்க, எதிரே முட்டை வணிகம் செய்யும் கிருஷ்ணப்பா, அவர்கள் இன்று ஞாயிறென்பதால் தேவாலயம் போயிருப்பதாகத் தெரிவித்தான்.
ஞாயிற்றுக்கிழமை பரமபிதா அண்ட சராசரங்களைப் படைத்து ஓய்வெடுத்த வார முதல் நாள். பெத்ரோ மட்டும் அரசு காரியமாக அலைய வேணும் என்று விதித்தவன் சாத்தானாக இருக்கும் என்று மனதில் பழித்தார் அவர்.
உத்தேசமாக தலையில் கொம்போடு மனதில் சாத்தான் உருவம் உருவாக்கினார். பாதி கவுட்டின்ஹோ பிரபு சாயலிலும், மீதி பெத்ரோவின் மாமனார் சாயலிலும் மனதில் வந்த அந்த சாத்தான், நரகத்தைவிட கோரமாக இருந்த ஸ்திதியை எண்ணி பெத்ரோ வியந்து நிற்க, வாசலில் கோச் வண்டி வந்து நின்றது.
பெத்ரோவின் மனைவி மரியாவும். குழந்தைகளும் கஸாண்ட்ராவும் இறங்க, மரியாவோடு கைகோர்த்து கஸாண்ட்ரா வந்த அந்நியோன்யம் கண்டு சகோதரிகளோ என்று பார்த்தவர் ஆச்சரியப்படுவர் என பெத்ரோவுக்குத் தோன்ற, கொஞ்சம் சந்தோஷமும், மீதி அந்த அவசரமான கூட்டணி குறித்து ஆச்சரியமுமாக அவர்களை வரவேற்றார்.
மரியாளுக்கு உதட்டில் முத்தம் தந்து கஸாண்ட்ராவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது அவரே முக்கியப் பங்கு பெறும் ஒரு நாடகத்தின் அந்தம் அரங்கேறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி பெத்ரோவுக்குத் தோன்றியது.
நாளை இதே நேரம் மரியாவும் குழந்தைகளும் பயணம். வேறெங்கே, கோழிக்கோட்டில் மரியாவின் தாய்வீடுதான். இது அவசியமானதாகக் கருதப்படும் பயணம். அவளும் பெத்ரோவும் யோசித்து முடிவெடுத்த ஒன்று.
தாய்வீட்டுக்குத் திரும்பவும் குடும்பத்தோடு போய்ச் சேருவதில் அடக்க முடியாத சந்தோஷம் மரியாவுக்கு. நாளை பெத்ரோவும் மரியாவோடு கோழிக்கோடு போகிறார். அங்கே தற்காலிகமாகத் தன் பணியிடத்தை மாற்றிக் கொள்கிறார்.
யுத்தத்தில் இறப்பு அதிகரிப்பும், கலவரமான சூழ்நிலையும் ஹொன்னாவரில் இருந்து பணிபுரிவதைச் சிக்கலாக்கும். ஹொன்னாவரில் இந்த போர்த்துகீஸ் அரச தலைமை பிரதிநிதி மாளிகை இப்போதைக்கு பூட்டி வைக்கப் பட்டிருக்கும். கோவாவில் இருந்து ஜெருஸூப்பா நிலைமை கண்காணிக்கப்படும்.
கஸாண்ட்ரா? கஸாண்ட்ரா ரொம்ப யோசித்து எடுத்த முடிவு அவள் மிர்ஜான் கோட்டைக்குள் வசிப்பிடத்தை மாற்றிக் கொள்கிறாள். மிங்குவின் அகால மரணத்தைத் தொடர்ந்து பைத்யநாத் வைத்தியர் வீட்டில் இருப்பாள். வைத்தியரும் குழந்தை கோணேஸ்வரனும், மருத்துவச்சி ராஜம்மாளும் கூட இருக்க தோழியின் குழந்தையைக் கவனித்துக் கொள்ள கஸாண்ட்ரா அங்கே குடிபுகுவாள் நாளை. வைத்தியரோடு பேசி விவாதித்து அவருடைய இல்லை, குழந்தையின் நன்மைக்காக எடுத்த முடிவு அது.
வைத்தியருக்கு, யுத்தத்தில் எந்தக் கட்சி வென்றாலும் பணியும் ஆயுளும் கெட்டி. ஒரு மாதத்திற்குள் நிரந்தரத் தேர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்போது வைத்தியர் கஸாண்ட்ராவைக் கல்யாணம் கழிப்பார். அவளுடைய இறந்த காலத்தைத் துடைத்து தூரப் போட்டு விட்டு வரப்போகிறாள் கஸாண்ட்ரா. அவரும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை.
கஸாண்ட்ரோ கடந்து போன வியாழக்கிழமை சாயந்திரம் பெத்ரோவோடு நிறையப் பேசினாள். மடாலய வீதி போர்த்துகீஸிய மற்றும் உள்ளூர் சிநேகிதிகளிடம் யாத்திரை சொல்லி வரப் போயிருந்தாள் மரியா. குழந்தைகளையும் தன்னோடு கூட்டிப் போயிருந்தாள் அவள்.
வேலைக்காரர்கள் எல்லோருக்கும் கணக்கு தீர்த்து மூன்று மாத ஊதியம் கூடுதலாகவும் அளிக்கப்பட்டு விட்டது. வீட்டில் ஆழ்ந்த மௌனம் நிலவியது.
மரியா ஏறிப்போன கோச் வண்டி நகர்ந்ததும் பெத்ரோ கஸாண்ட்ராவை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார்.
என் கண்ணே, உயிரின் உயிரே, நீ மட்டும் சரின்னு சொல்லு, எல்லாவற்றையும் எல்லாரையும் விட்டு நீங்கி உன்னோடு நான் வருவேன். வா ரெண்டு பேரும் எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய் ஏதாவது சிறிய வேலை பார்த்து பிழைக்கலாம். அப்படித்தானே சொல்லப் போறீங்க சின்ஹோர் பெத்ரோ.
அவரை உதட்டில் கடித்து முத்தமிட்டபடி கஸாண்ட்ரா சொல்ல, பெத்ரோ மயக்கம் போட்டு விழாத குறைதான். கஸாண்ட்ரா அவர் பக்கத்தில் அமர்ந்தாள். இன்னொரு ஆலிங்கனம். அமைதி. அதைக் கிழித்தபடி கஸாண்ட்ரா சொன்னாள் –
நான் இங்கே மாளிகை நிர்வாகியாக நானாக வரல்லே. அரசியார் சென்னபைரதேவி கட்டளைப்படி, முக்கிய பிரதானி நஞ்சுண்டய்யா சுவாமி ஏற்பாடு செய்து நான் இங்கே வந்தேன். காரணம், நான் அரசாங்க வேவுத்துறையில் கௌரவ அங்கம் வகிக்கிறவள். உங்களால், உங்கள் மூலம், போர்த்துகல் அரசால் சென்னா மகாராணியின் ஜெருஸுப்பா அரசுக்கு ஏதும் இடர் ஏற்பட சாத்தியம் இருக்கிறதா, உங்களை தினசரி சந்திக்க யார் யார் வருகின்றார்கள் என்ற விவரம் எல்லாம் நான் அரசுக்கு அறிவிக்க வேண்டிய கடமை. ஆனால் நான் வந்த இரண்டு மாதத்தில் எனக்கு பணி விலக்கு தரப்பட்டது. காரணமாகச் சொல்லப்பட்டது இது –
பெத்ரோ துரையால் ராஜாங்க ரகசியம் எதுவும் வெளியேறாது. அவர் சாது பிராணி. நல்லொழுக்கம் கொண்டவர். ஒரே போதைப் பழக்கம் பெண் சிநேகிதத்தில் அசாத்தியமான ஈடுபாடு. செல்வி கஸாண்ட்ரா அதை ஏற்றுக்கொண்டால் ஜெரஸூப்பா அரசு அதைப் பற்றிக் கரிசனம் காட்டுவதை நிறுத்திக் கொள்ளலாம்.
ஆக உங்கள் காதலும் காமமும் நான் உங்கள் மேல் வைத்த காதலும் அரசாங்க விஷயங்கள்.
pic medieval european lady
ack en.wikipedia.org