An excerpt from my forthcoming novel MILAGU
கோட்டை மதிலின் உள்சுவர் தெப்பக்குளத்துக்கு அருகே வளைந்து திரும்பும் இடத்தில் தரையில் வெண்துணி பரப்பி காயமடைந்த வீரர்கள் நால்வர் படுத்திருக்க முழங்காலில் மூலிகைப் பற்று தன்மையான வெப்பத்தில் பூசப்பட அவர்கள் வலியில் துடிக்கும் ஒலியைக் கடந்து ஊர்ந்தது கோச்.
லாகவமாக கோச் குதிரைகளை சற்றே மேடாக வளைந்து திரும்பும் பாதையில் செலுத்தி கோட்டை அலுவலகத்துக்கு முன் வண்டியை நிறுத்தி உள்ளே நுழையப் போகும்போதுதான் அவருக்கு நினைவு வந்தது –குதிரைகளுக்கு ஓய்வும் உணவும் தண்ணீரும் தரவேண்டுமே என்று.
கோச்சில் திரும்ப ஏறி, அரசு குதிரை லாயத்தில் நுழைந்தார் அவர். வணக்கம் சொல்லி அவருடைய கோச்சை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தினார் லாயத் தலைமைக் காவலர்.
வண்டிக்குள் விலை மதிப்புயுர்ந்த ஏதும் இல்லையே என்று அவர் கேட்க, நான் தான் இருக்கிறேன் என்று பெத்ரோ சொல்லிச் சிரித்தார். லாயத் தலைமைக் காவலர் தானும் சேர்ந்து சிரிப்பது மரியாதையாக இருக்காது என்று நினைத்தோ என்னமோ முகத்தைக் கரிசனம் காட்டாமல் வைத்துக்கொண்டு குதிரைகளை அவிழ்த்து உள்ளே நடத்திப் போனார்.
அந்தி சூரியன் சிவப்பு பூசியிருந்த கோட்டையின் பிரம்மாண்டமான சுவர்களைப் பார்த்தபடி உள்ளே நடந்தார் பெத்ரோ.
சற்றே வேகமாக நடந்து வெளிமண்டபம் கடந்து உள்ளே போக, யாருமில்லை அங்கே. அரச வசிப்பிடத்தில் மேற்கில் இருந்து பாத்திரங்கள் உருள, உணவு பாகம் பண்ணும் ஒலியும் வாடையும் கலந்து வந்தது.
பெத்ரோ ஆசனத்தில் அமரும் முன் பார்த்தார் – அது சென்ற முறை வந்தபோது இருந்தது போலன்றி, சுத்தமாக இருந்தது ஒரு தூசு இன்றி. மறையும் ஆதவன் சாளரங்கள் வழியே விடைபெற, அந்த மாளிகை, பகுதி வெளிச்சம் பூசி, மீதி இருளை வரவேற்று நின்றது காண, ஏனோ துயரமாக இருந்தது பெத்ரோவுக்கு.
டொக் டொக் என்று கட்டைகளைத் தரையில் மோதினால் வரும் ஒலி. உள்கதவு திறந்து கைத்தடியை ஊன்றியபடி மிளகுராணி ஜெர்ஸுப்பா மகாராணி சென்னபைரதேவி தளர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் அவளுடைய தளர்ச்சியும் வயதும் இருமடங்கு அதிகரித்திருந்ததாக பெத்ரோவுக்குப் பட்டது. தன்னையும் முதுமையும் தளர்ச்சியும் தொற்றி, தசை, நாளங்களூடாக பீடித்ததாகத் தோன்றியது.
வரிசையாக ஏழு தீபங்களை ஏற்றி சூழலை பிரகாசிக்க வைத்து விட்டு ஒரு பணிப்பெண் உள்ளே போனாள்.
எழுந்து மரியாதையோடு வணங்கினார் பெத்ரோ. அவரைத் திரும்ப அமரச் சொல்லி விட்டு பெத்ரோ அருகில் இருந்த நாற்காலியைச் சற்றே திருப்பி பெத்ரோ முகத்தைப் பார்க்க வசதியாக நகர்த்தியபடி அமர்ந்தாள் சென்னா.
பெத்ரோ மண்டியிட்டு அவள் கையில் மரியாதையோடு முத்தமிட்டு தலைகுனிந்து இருக்க அன்னைபோல் அவர் தலையில் கைவைத்து ஆசியருளினாள் சென்னா.
பெத்ரோவுக்கு அடக்க முடியாமல் கண்ணீர் சுரக்க, கண்கள் கலங்கி. எல்லா வண்ணமும் மேலோடி, குவியம் காணாத விழிகளைத் திரை மறைக்க, உருவங்கள் குழம்பித் தெரிய, சமாளித்துக்கொண்டு எழுந்தார். தன் இருக்கையில் அமர்ந்தார்.
அரசி அவரைக் குறிப்பாகப் பார்த்துச் சொன்னாள் – காலையில் செய்தி வந்தது. நீங்கள் கோவாவுக்கு போயிருக்கிறீர்கள் என்று.
பெத்ரோ நிதானமாகச் சொன்னார் –
ஆம் அம்மா. எவ்வளவு விரைவில் போர்த்துகல் படையாக நான் தங்களுக்கு அனுப்பித்தர முடியுமோ அவ்வளவு விரைவில் அனுப்பினால் பல விதத்திலும் நன்மை உண்டாகுமே. அதனால்தான் நானே நேரில் போய்வந்தேன். இன்று இரவுதான் திரும்புவதாக இருந்தேன். ஆனால் அங்கே இருப்புக் கொள்ளாமல் நேற்று இரவெல்லாம் பயணம் செய்து காலையில் வந்து சேர்ந்தேன். அசதியில் கண்ணயர்ந்து விட்டேன். விழிப்பு வந்ததும் தங்களை தரிசிக்க இங்கேதான் ஓடி வந்திருக்கிறேன் என்றார் பெத்ரோ.
தரிசனம். அது ரொம்ப பெரிய வார்த்தை பெத்ரோ சின்ஹோர். நான் வெறும் மனுஷி. என்னைச் சந்திக்க நீங்கள் வந்திருக்கிறீர்கள். தரிசிக்க இல்லை. நான் இறந்தால்கூட, சொந்தமும் நட்பும் விரும்பினால், உடல் காட்சிக்கு வைக்கப்படும். தரிசனத்துக்கு வைக்கப்படாது.
பெத்ரோ இருகை கூப்பி, நீங்கள் இன்னும் பல ஆண்டு ஜீவித்திருப்பீர்கள் என்றார். சென்னா சிரித்தாள்.
இறப்பு பற்றி இப்போதெல்லாம் நினைவு வந்துகொண்டே இருக்கிறது. இழப்பு பற்றியும் தான். பேரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த யுத்தத்தால் என்ன பிரயோஜனம்? நேற்று மட்டும், நூற்று அறுபத்திரண்டு பேர், போர் என்ற, தெய்வங்கள் ஆடிக் களிக்கும் குரூர விளையாட்டில் இறந்து போனார்கள். இரண்டு பக்கமும் சேர்த்த சாவு எண்ணிக்கை இது. எல்லா யுத்தங்களையும், பேரிழப்பையும், போரிழப்பையும் களைந்த உலகம் வர பகவான் மகாவீரரை பிரார்த்திக்கிறேன்.
சென்னா கைகூப்பி கண்மூடிப் பிரார்த்திக்க, பெத்ரோ தானும் கைகூப்பி இருந்தார். இனி இவர் பேசுவாரா? அரசியைக் கவனித்தார். உறக்கமோ, அயர்வோ, பிரார்த்தனை ஆழ்ந்திருந்தாரோ சென்னா அசையவில்லை.
இதற்கு மேல் பேச ஏதுமில்லை பெத்ரோவுக்கு. அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கூறினார் –
மன்னியுங்கள். நான் திரும்பப் போய் போர்த்துகீசிய படைகள் பற்றி செய்தி உண்டா என்று பார்த்து வரட்டுமா?
அவசரமாக எழுந்து அனுமதியின்றிப் புறப்பட்டதற்காக கண்டிப்பான வார்த்தை வாங்காமல் இருக்க நாற்காலியின் முனையில் தொற்றியபடி இருந்தார்.
போர்த்துகீஸ் படைகள் வந்துவிட்டன.
சென்னா நிதானமாகச் சொல்ல பெத்ரோவால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
வந்துடுத்தா? எனக்குத் தெரியாமலா?
ஆமாம் அங்கோலா படைகள். தில்லி பக்கம் கப்பலை நிறுத்தி இறங்க வரைபடத்தைப் பார்த்துக்கொண்டு உள்ளல் துறைமுகத்துக்கு வந்தார்களாம். அவர்களை ஹொன்னாவர் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறாள் என் பிரியமான தோழி அப்பக்கா