பெரு நாவல் ‘மிளகு’ – A simple soldier speaks

An excerpt from my forthcoming novel MiLAGU

நான் திருத்தக்கன்.

ஹொன்னாவர் வாசி. தமிழ்ப் புலவன். கன்னட கவிஞன். போர்த்துகீஸ் மொழி எழுதப் படிக்கத் தெரியும். தமிழிலும் கன்னடத்திலும்   முறைப்படி இலக்கணம் படித்திருக்கிறேன். தச்சுத் தொழில் செய்கிறேன். இப்போது சென்னபைரதேவி மிளகு ராணியின் அரசு அணி போர்வீரன்.

தயார்நிலைப் போர்வீரனாக இருந்து இந்த வாரம் அரசுப் படைவீரனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

எங்கள் அணியில் என் போன்ற தயார்நிலை போர்வீரர்கள், அரசு காவல்படை வீரர்கள், போர்த்துகல் அரசு கட்டணம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்த ஆப்பிரிக்க இனத்து போர்த்துகீஸ் போர்வீரர்கள் என்று மூன்று பகுதி உண்டு. எங்களில்.

போர்த்துகீஸ படைவீரன் என்றால் இடுப்பில் இரண்டு பக்கமும் வெள்ளை றெக்கை முளைத்தவர்கள். முளைத்து மட்டுமில்லை அதைப் பரத்திப் பறப்பவர்கள். கால் நடப்பதற்காக ஏற்பட்டவர்கள் இல்லை அவர்கள்.

நேரம்  பார்த்து வேலை ஆரம்பிப்பார்கள்.  நேரம் முடிந்தால் அதற்கு அப்புறம் ஒரு க்‌ஷணம் கூட வேலையைத் தொடர மாட்டார்கள். காலை ஒன்பதுக்கு யுத்தம் புரிய ஆரம்பித்தால் சாயந்திரம் எதிர்த் தரப்பில் வந்த படைவீரனைத் துரத்துவதில் ஈடுபட்டிருக்கும்போது சாயந்திரம் ஆறு என்று சங்கு ஊதக் கேட்டு உடனே துரத்துவதை நிறுத்தி நடந்து வந்து விடுவார்கள்.

சாயந்திரம் போரிட்டு வந்து கோட்டைக்குள் நிற்கும்போது ஆளாளுக்கு இரண்டு குவளை நாட்டுச் சாராயமோ கள்ளோ தரப்பட மற்ற வீரர்களுக்குப் பானகம் வழங்கப்பட்டாலே ரொம்ப அதிகமான உபசரிப்பு அது.

அவர்களுக்காக போர்த்துகீஸ் அரசு சார்பில் கோவாவில் இருந்து வந்திருக்கும் அதிகாரி, இத்தனை நாள் சீரும் சிறப்புமாக தலைமை பிரதிநிதியாக இருந்த இம்மானுவேல் பெத்ரோ பிரபுவை ஓரம் கட்டிவிட்டு ஜோசப் பவுலோஸ் என்ற இவரே சகலமும் என்று இந்த ஊதியத்தை மிளகாக படியால் அளந்து தினசரி சாயந்திரம் வாங்கிப் போகிறார்.

பவுலோஸ் துரைக்கும் சாராயம் விளம்பப்படும். வந்ததுதான் வந்தீர் மிளகு இருக்கட்டும். உம்மை ஆகாயத்தில் பறக்க வைக்கும் மங்கலாபுரம் நாட்டுச் சாராயம் ஒரு குவளை பருகிவிட்டுப் போம் என்றோம். வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

வேண்டாமா கொஞ்சம் கம்மி போதை நல்ல வாசனை, ருசியாக ஷெண்டி என்று நாங்கள் தினம் ருசித்து மதம் கொண்டு மிதந்திடச் செய்யும் தேங்காய்க் கள்ளு நாலு லோட்டா குடித்துப் போம் என்று சகலரும் உபசரித்து முட்டமுட்டக் குடிக்க வைத்து அனுப்பினோம்.

பெத்ரோ பிரபு ’என்ன கண்றாவி என்றாலும் கம்புக்கூட்டில் இடுக்கிக்கொண்டு ஆரியக்கூத்து ஆடுங்கள், நான் லிஸ்பனுக்குத் திரும்பப் போகிறேன்’ என்று மெழுகு பொம்மையாக உட்கார்ந்திருக்கிறார். அவர் லிஸ்பனுக்கு கோழிக்கோடு வழியாகப் போகப் போகிறதாகக் கேள்வி.

பெத்ரோ செயலாக இருந்தாலாவது போர்த்துகீஸ் படையினர் தலைதிரிந்து ஆடுவதை நிறுத்திப் போட்டிருப்பார். அல்லது கட்டுப்படுத்தியிருப்பார். அவருக்குத் தெரியும், போர்த்துகீஸ் படைவீரனை விட வலிமையிலும் போர்த் திறத்திலும் அதிகமாக முன்னே நிற்பவர்கள் உள்நாட்டு வீரர்கள்.

அதுவும் காவல் படை போன்ற கட்டுக்கோப்பான அமைப்பில் வீரர்கள் கொஞ்சம் கூடுதலாக வயதானவர்களாக இருந்தாலும், நம்பி யுத்தபூமியில் இறங்கலாம். அவர்களிடமிருந்து போரை ஒரு கலையாக மற்றவர்கள் கற்றுக் கொள்ளலாம். போர் அறனையும் அவர்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம்.

நடந்தும் ஓடியும் போர் செய்கிற ஒரு படைவீரன் எதிரணியில் அதே போல் வந்த காலாட்படை வீரனோடு பொருதுதல் தான் அடிப்படை போர் தர்மம் என்று செயல்மூலம் கற்றுத் தருவார்கள் காவல் படையினர்.

எதிரணியோ இதற்கு நேர்மாறு. நேற்றைக்கு சாயந்திரம் இருள் அப்பிக்கொண்டு வரும் அந்திக் கருக்கலில் எதிரணி காலாட்படை வீரன் ஒருவன் போர் செய்து தளர்ந்து குதிரைமேல் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் காவல்படை வீரருக்குப் பின்னால் இருந்து கடப்பாறையை எறிந்து ரத்தக் காயம் உண்டாக்கியதை வீரப் பிரதாபமாக எதிரணியே ஆரவாரம் செய்து வரவேற்றது.

யுத்த தர்மம் என்ற சொல்லே அவர்கள் அகராதியில் இல்லை போலிருக்கிறது.

PIC  A medieval European soldier

Ack  en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன