மிளகு நாவலில் இருந்து இரு சிறு பகுதிகள்
சென்னா ஒற்றர் அணி கொண்டுவந்த தகவலை முன்பைவிட நிதானமாக அறிவித்தாள். ஆச்சர்யம் விலகாமல் கையிரண்டையும் உயர்த்தி, இது அதிசயமானது என்று பொருள் தர பெத்ரோ நின்று நடனக் கலைஞன் போல் அபிநயிக்க, சென்னபைரதேவி இருந்தபடியே குறுநகையோடு, அதேபோல் அபிநயித்தாள். அவளுடைய ஊன்றுகோல் தரையில் ஓசையெழுப்பி விழுந்தது.
பெத்ரோ அமர்ந்து சொன்னார் –
சரி அம்மா! நான் உங்கள் அனுமதியோடு கோழிக்கோடு செல்லப் போகிறேன். அங்கிருந்து என்னை இயங்கச் சொல்லி கோவா செயலகம் மூலமாக உத்தரவு வந்திருக்கிறது. போர் நின்றதும் திரும்ப அனுமதி உண்டு.
தெரியும் பெத்ரோ. ஆனால் நீங்கள் வரப் போவதில்லை. லிஸ்பனுக்குக் குடும்பத்தோடு திரும்பிவிடுவீர்கள்.
பெத்ரோ தலைகுனிந்து சென்னபைரதேவி காலில் விழுந்து இந்துஸ்தானி பாரம்பரியத்தின் படி சர்வாங்கமும் நிலம் தொட வணங்கி எழுந்தார்.
ஆயுஷ்மான் பவ. ஜெயவிஜயிபவ. முன்கூட்டிய ஆசிர்வாதங்கள் என்றாள் மகாராணி. பெத்ரோ கைகூப்ப அவள் சொன்னாள் –
முன்கூட்டியே போர்த்துகல் படைக்கு ஊதியம் அதுவும் மிளகாகத் தரவேண்டும். அதை நீங்கள் தரச்சொல்லி கேட்கவில்லையே. போகிறது. நாளை நஞ்சுண்டார் படை எண்ணிக்கை, தகுதி சரி பார்த்து அளிப்பார்.
பெத்ரோவுக்கு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அரசாளுதல் ஈதன்றி வேறு உண்டோ. அவருக்குத் தெரியாது.
கண்ணைக் கண்ணீர் மறைக்கப் புவி ஈர்ப்பு இல்லாத பூமியில் நடப்பதுபோல் தடுமாறிக் காலடிகளை எடுத்து வைத்து இருள் படியும் முன்மண்டபத்துக்கு நடந்தார். ஏதோ தோன்றப் பின்னால் திரும்பிப் பார்த்தார். அங்கே மகாராணி சென்னபைரதேவி நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருகையும் கூப்பி வணங்கி பெத்ரோ தொடர்ந்து நடந்தார். இனி மிளகுராணியைச் சந்திக்கப் போவதில்லை என்று அவருக்குத் தோன்றியது.
*************************************************************************
திருத்தக்கன் என்ற எளிய போர் வீரன் பேசுகிறான் – தொடர்ச்சி
அரசுப்படையில் இருக்கும் இந்தியன், போர்த்துகீஸ் வீரன் என்ற தனித்தனியான கவனிப்பு எதிரணியில் கிடையாது. எல்லோரும் ஒரே மாதிரித்தான்.
அதுவும் இளைஞர்கள் என்பதில் தான் அவர்கள் மேலே இருக்கிறார்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் இன்றைய யுத்தம் தொடங்கி விடும். இரண்டு பக்கத்திலும் இரண்டாயிரம் பேர் கிட்டத்த்ட்ட பங்குபெறும் பெரிய யுத்தம் தான் இது. இன்று ஐந்தாம் நாள்.
ஆனால் என்ன? அரசு அணியோ எதிரணியோ எந்தப் பக்கத்தில் யுத்தம் செய்தாலும், எதற்காக சண்டை போடுகிறாய், ஜெயித்தால் என்ன ஆகும், தோற்றால் என்ன ஆகும், உயிர் பிரிய நேர்ந்தால் என்ன ஆகும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாது இரண்டு ஜனப் பிரவாகமாக சண்டை நடக்கிறது. இரண்டு அணியாகப் பிரித்து இறப்பு வந்து இணைத்துச் சேர்கிறது.
நான் வஜ்ரமுனி.
நான் ஜெரஸோப்பா யுத்தத்தில் பங்குபெரும் காலாட்படை வீரன். பில்கி அரசர் அனுப்பிப் பங்குபெற வைத்த பில்கி பிரதேசத்து விவசாயி.
நேற்றைய யுத்தத்தில், என் காலில், எங்களுக்கு விரோதியான அரசு அணி வீரர் ஒருவர் விட்டெறிந்த, வழியில் கிடந்த கத்தி கிழித்து, காயம் உண்டாக்கியது. மன்னிக்கவும். நேற்று வந்ததும் எங்களுக்கு படைத் தலைவரான ஒரு தளவாய் பாடமாகக் கற்றுக்கொடுத்தபடி கத்தி என்று சொல்லக் கூடாது. வாள் என்பதே சரியான வார்த்தைப் பிரயோகமாம்.
நேற்று இரவு எங்களுடையதான எதிரணியின் பெருந்தலைவர் நேமிநாதர் எம் படையினர் அனைத்துப் பேரும் வந்து நின்றிருக்க சொற்பொழிந்தார்.
ராத்திரி மருத்துவன் என் காலில் காயத்தைக் கழுவி சாராயத்தை எரிய எரியத் தடவி வெள்ளைத் துணியைக்கிழித்துக் காயத்தின் மேல் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தபோது எல்லோரும் அவசரமாக முன்வசத்துப் பொட்டலில் வந்து குழும வேண்டும் என்று தண்டோரா முழக்கிப் போனார்கள்.