An excerpt from my forthcoming novel ‘MILAGU’
ஒன்றுக்கு இரண்டாக இட்டலித் துணியை அவனிடம் வாங்கிக்கொண்டு வந்தேன். அவற்றில் ஒன்றை இடுப்பில் முடிந்து கொண்டு மற்றதை கால் காயத்தின் மேல் இறுக்கக் கட்டினேன்.
கூடார ஓரத்தில் கத்தி, அதுதான் சொன்னேனே, ஒவ்வொருத்தருக்கும் வாள் ஒன்று எடுத்துக் கொடுத்து ஜயவிஜயிபவா சொல்லி அனுப்புகிறார்கள். சாயந்திரம் மறந்து விடாமல் கொடுக்கவும் என்று நேமிநாதரின் உத்தியோகஸ்தன் சொல்லும்போது சிரித்தேன்.
வாங்கிய வாளை வீசிப் பார்த்தேன். அந்த வாள் வைத்த இடத்துக்கு அருகே நின்று வாள் வாங்கிப் போகிறவர்கள் அதை நின்று வீசிப் பார்க்க மறப்பதில்லை. நான் என் வாளை வீச அது ஒச்சை நாற்றம் அடித்தது. ரத்த வாடை அது. கொஞ்சம் வேகமாகச் சுழற்ற கைப்பிடி தனியாக வந்து விழுந்தது. உடனே அதை மாற்றி பழுதில்லாத வாள் ஒன்று வாங்கிக் கொண்டேன். ரத்த வாடையும் ருசியும் அறிந்திருக்காது அந்த வாள்.
நேற்றைக்கு வாளோங்கி நாள் முழுக்க யுத்தம் செய்து எப்போதோ மாலை மயங்கும்போது பின்னாலோ முன்னாலோ வந்த அரசுப்படை வீரர் ஆழக் குத்தி இறக்க வைத்த வாளை திரும்பக் கொடுத்தபோது அந்த உயிர் படிந்த வாள் உத்தியோகஸ்தனால் கவனமின்றிப் பின்னால் எறியப்பட்டது. அவ்வீரன் இறந்திருந்தால் நேற்று இரவில் அவன் தகிக்கப் பட்டிருப்பான்.
வாளுக்கு மட்டுமில்லை, அதை எடுத்துப் போரிட்டவன் நினைவும் விரைவில் நிணம் சார்ந்த கூட்டு வழிபாடு ஒன்றை உயிர் நீத்த எல்லா வீரர்களுக்கும் பொதுவாக நடத்தி மறக்கப்படும்.
இதை யோசித்தபடி நிற்க, அடுத்து தளவாயை சந்திக்கச் சொன்னார்கள். இருமியபடி வசம்பு இட்ட வென்னீரால் வாய் கொப்பளித்தபடி நின்ற தளவாய் முகத்தை கொஞ்சம் அசைத்து, வருகிறேன் என்று ஓரமாகத் துப்பி வந்தான்.
நேற்று என் போர் நிகழ்வு திருப்திகரமாக இருந்ததால் எனக்கு இன்று பின் வரிசையில் இருந்து முதல் வரிசைக்கு இடம் மாற்றி நான் கௌரவப்படுத்தப் படுகிறேன் என்று கூறினான் அவன். கோட்டை வாசலுக்கு நேர் முன்னே வாளோங்கி வென்று வரச் சொல்லி அனுப்பினான். வருவேனா?
மறுபடியும், நான், திருத்தக்கன்.
மறுபடி இன்றும் காலை உணவாக கம்பங்களி. எந்த விரோதமும் எனக்குக் கம்பங்களிமேல் இல்லை. என்றாலும் மூன்று நாளாகத் தினமும் காலையிலும் ராத்திரி போஜனமாகவும் களி தின்ன வேண்டும் என்ற கட்டாயம் மனதில் ஒரு எரிச்சலை உண்டாக்குகிறது.
இதுவும் இல்லாமல் பட்டினியோடு யுத்தம் புரிய முடியாது. வீடா என்ன இது, காலை உணவு கொள்ளாவிட்டால் உடனே சாப்பிட்டு விட்டு மற்ற காரியம் பாருங்கள் என்று கட்டாயப்படுத்தும் மனைவியும், முட்டை உடைத்து ஊற்றிய தோசை ஆசையோடு வார்த்து மேலே மிளகுப்பொடு கொஞ்சம் தூவித் தரும்போது எச்சில் கை கண்ணு வேறே உனக்கு அம்மாவை சுட்டுத்தரச் சொல்றேன் என்று சொன்னதைக் கேட்காமல் என் தட்டில் இருந்தே பிய்த்துத்தரும் ஒண்ணரை வயது மகனும் இனி எப்போதும் நினைவுகள் மட்டும்தானா?
எனக்கு என் மனைவி தான் மிளகுராணி. என் மகன் தான் மிளகு இளவரசன். யாரும் ஜெயிக்கட்டும். யாரும் தோற்கட்டும். இன்றோடு நான் ஓய்வு பெறப் போகிறேன்.
இன்று இரவு மிர்ஜான் கோட்டைக்குப் போகப் போவதில்லை. நண்பனின் கோச் வண்டியில் குடும்பத்தோடு ராமுழுக்க பயணப்பட்டு தமிழ் சுவாசிக்கும் ஓசூருக்குப் போய்ச் சேர்ந்து இனி எப்போதும் அங்கே வசித்திருக்க விரிவாக, நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறேன்.
மிளகுக் குடும்பம் எப்படியும் போகட்டும். அது சரியாமல் அண்டக்கொடுக்கிற வெல்வெட்டுத் தலகாணியாக நிறைய உழைத்தாகி விட்டது. வரியும் தவறாமல் கட்டிவிட்டாகி விட்டது. இனி எனக்காக, என் குடும்பத்துக்காக உழைக்கப் போகிறேன்.
pic medieval cavalry
ack history.com