New இலக்கியக் குதிரை வண்டி – டாக்டர் பாஸ்கரனின் ‘இலக்கிய முத்துக்கள் ‘ நூலுக்கு என் முன்னுரை

டாக்டர் பாஸ்கரன் நூல் முன்னுரை

ஆதியில் ஒலி இருந்தது. அது எண்ணத்தை   வெளியிட வார்த்தைகளாகப் பிறப்பெடுத்தது. நினைத்ததை முழுக்க வெளிப்படுத்த சொல் மட்டும் போதாது என்ற நிலை வந்தபோது சைகைகளும், ஆட்டமும், பாட்டும் சொல்லை மிகுத்து உயிர்த்து வந்தன. வார்த்தை காதுகளின் வெளியைக் கடந்து போகும்போது புரிதலும், நினைவு கூரலும் ஆளாளுக்கு மாறுபட, ஒரே என்ணத்தின் கணக்கற்ற பிரதிகளாகச் சொல் விரிந்தது. சொல்ல வந்ததில் பகுதி மட்டும் சொல்லப்பட்டு, அதுவும் ஆதி  வார்த்தைக்கு வேறுபட்டு வந்து சேர, சொல்லியதும் சொல்ல நினைத்ததும் சொல்லாததும் எழுத்தாகி அடுத்த பரிணாமமாக விரிந்தது.

சொல் என்ற காட்டுக் குதிரையை அடக்கி, எழுத்து என்ற வண்டிக் குதிரை ஆக்கினால், ஓடும் வரை ஜல்ஜல் என்று பசும்புல்லும் கொள்ளும் மணக்க ஓடும். ஓடினால் தான் உண்டு. இதெல்லாம் புரிந்தோ புரியாமலோ தான் எழுத்தை ஆளும் ஆளுமைகளாக எழுத்தாளர்கள் குதிரை வண்டி செலுத்தி வாசகரைப் பயணம் கூட்டிப் போகிறார்கள். எல்லாப் பயணங்களும் சுகமாக இருக்குமா என்ன? எல்லா எழுத்தாளர்களும் எப்போதும் வார்த்தை வசப்பட படைப்பாற்றலின் உச்சத்தில் சதா வீற்றிருக்க முடியுமா என்ன? வண்டி குடை சாயலாம். கொண்டும் சேர்க்கலாம்.

வண்டிக்கார அண்ணன் மாரே, அக்கா தங்கச்சிகளே வணக்கம். எழுத்தைப் பற்றி மட்டும் எழுதினால் போதாது, நுட்பமாக வாசித்து, எழுத்தைப் பிறப்பித்தவர்களின் வாழ்க்கையை அவதானம் செய்து எழுதவும் வேண்டியிருக்கிறது. எழுத்தை இன்னும் கூடுதலாகப் புரிந்து கொள்ள எழும் விழைவு அது. லகரி மேம்பொடி கலக்காத சுத்தமான எழுத்தே வேண்டியது.  டாக்டர் பாஸ்கரனுக்கு இது கைவந்த கலையாகி இருக்கிறது.

பாஸ்கரன் இந்த நூலில் நமக்குப் படைப்புகள் மூலம் தெரிந்த எழுத்தாளர்களைப் பற்றி விரிவாகவும் சுவாரசியமாகவும் எழுதுகிறார். ரொம்ப நாளைக்கு அப்புறம் கவர் டு கவர் ஒரே இருப்பில் இருந்து வாசித்தேன் என்றால் இந்தப் புத்தகம் தான் அது.

எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது கொஞ்சம் சிரமமான விஷயம். ஒருவேளை அவர்களுடைய சொந்த வாழ்க்கை பற்றி எழுத சுவாரசியம் அதிகமாக இல்லாத, ’வந்தார் – இருந்தார் – இல்லாமல் போனார்’ வகை விவரிப்புகள் மட்டும் பெரும்பான்மையாகக் கிடைக்கும். அல்லது எழுத ஏகப்பட்டது கிடைத்தாலும் அதில் பலவும் சபையில் பகிர்ந்து கொள்ள முடியாத வகையில் இருக்கக் கூடும். எல்லோருக்கும் கொஞ்சம் களிமண் பாதமும், கொஞ்சம் பூப்பாதரட்சை அணிந்த தேவதைக் கால்களும் உண்டே. இதில் எழுத்தாளருக்கு மட்டும் என்ன தனியாகப் பார்க்க? நூலுக்கு வருவோம்.

இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளின் அடிப்படையில் இடதுசாரி சிந்தனை உண்டு என்பது இ.பாவின் வாசகர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் எத்தனை பேருக்கு அவருடைய மூத்த சகோதரர் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர உறுப்பினராக இருந்தார் என்பது தெரியும்? அதே போல், அவருடைய நாவலை நாடகமாக்கி ‘மழை’ என்று பெயரிட்டு உருவாக்கியபோது அதை, வெளிப்படையான வசனங்களோடு (’எனக்கு ஒரு ஆண் துணை வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம்’) அரங்கேற்ற பலர் தயக்கம் காட்டியபோது துணிச்சலாக முன்வந்து நிகழ்த்திக் காட்டியவர் விமர்சகர் க.நா.சுவின் மருமகனான பாரதி மணி என்பதும் அப்படியான இலக்கிய அவல் தான். ‘இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டபோது எண்பது வயது கடந்த இ.பா சட்டென்று அளித்த பதில் – எழுத்தாளனுக்கு வயதானால் வேறென்ன செய்ய முடியும்? கணையாழியின் கடைசிப் பக்கம் பத்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்’. மற்றும், குடந்தையில் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டில் இ.பாவுக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் தி.ஜானகிராமன்! ஏதோ ஒரு விதத்தில் இந்தத் தகவல்கள் நம்மை இ.பாவுக்கு ஒரு மில்லிமீட்டராவது அருகே கொண்டு போவதாகத் தோன்றுகிறது. திருவல்லிக்கேணி முதியவர் ‘அண்ணா பக்கோடா வாங்கித்தான்னு பாரதி என் கிட்ட கேட்டு வாங்கிச் சாப்பிடுவானாக்கும்’ என்று இட்டுக்கட்டிய பெருமையோடு புது வரலாறு மொழிவது போல் இல்லை இத்தகவல்கள். சரி பார்க்கப்பட்டவை.

மேல்மட்ட sophistication உடன் நடமாடும் பல பாத்திரங்களை இ.பா படைத்து உலவ விட்டிருப்பதாக டாக்டர் பாஸ்கரன் சொல்வதோடு உடன்படலாம், அல்லாமலும் இருக்கலாம். இ.பா என்ற தேர்ந்த கதைசொல்லிக்கு இரண்டுமே பொருந்தும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் டாக்டர்.

ஒரு புனைபெயரில் எழுதுவதே ஓர் எழுத்தாளருக்குப் பெரிய விஷயமாக இருக்கக் கூடும். இந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கிறவரின் ஆளுமை எது? இவரிடம் எதிர்பார்க்கக் கூடிய நடையும், உத்தியும், உள்ளடகக்கமும் என்னவாக இருக்கும்? இதைவிட முக்கியமாக, இந்தப் புனைபெயரில் என்ன எல்லாம் எழுதக் கூடாது? இப்படித் தமக்குத்தாமே சுய கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு அந்தப் பெயருக்குப் பெருமை சேர்க்க முற்படுவது இயல்பு. ஆனால், ஒன்றல்ல, பத்து புனைபெயர்கள். ஒவ்வொன்றுக்குமென்று பிரத்தியேகமான நடை, எழுத்து வகை, அந்தந்தப் பெயர் எழுத்துக்குத் தேவையான படிப்பு, ஆய்வு, படைப்புத் திட்டமிடல் என்று வேலை பெருகி அந்த எழுத்தாளரை ஓய்த்து விடலாம். சாயாமல், சரியாமல் பத்து பெயரில் பத்து விதமாக எழுதி எல்லாவற்றிலும் சிறப்புப் பெயர் வாங்கி ஒரு ஐம்பது ஆண்டு காலம் தமிழ்ப் பத்திரிகை, இதழ்த் துறைகளில் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று வெற்றிகரமாக வலம் வந்தவர் ரா.கி.ரங்கராஜன். ரா.கி.ர  என்ற நல்ல மனிதரை, மிகுதி நல்லனவும் மற்றுமாங்கே அல்லாதனவுமெல்லாம் எழுதிய படைப்பாளியை அவருடைய வாழ்க்கையைச் சுருக்கமாக, சுவையாக சித்தரிப்பதில் டாக்டர் பாஸ்கரன் பெருவெற்றி பெறுகிறார். இந்திரா பார்த்தசாரதியின் படைப்புலகம் வேறு. ரா.கி.ர-வின் இயங்குதளம் கிட்டத்தட்ட முழுவதும் வேறுபட்டது. இரண்டு பேரைப் பற்றியும் சிறப்பாக எழுத பரந்துபட்ட வாசக அனுபவம் வேண்டும். டாக்டர் பாஸ்கரனுக்கு அது தீர்க்கமாக வாய்த்திருக்கிறது. ரா.கி ரங்கராஜன் எழுத்தில் சிலவாவது படிக்க பேட்டை நியூஸ் பேப்பரான அண்ணாநகர் டைம்ஸ் இருக்கிறது. ரா.கி.ர பற்றிப் படிக்க பாஸ்கரனின் இந்த நூல் உண்டு.

’பிடிச்சுவர் மேல் குடத்தை இறக்கி சுருக்கைக் கழற்றி அவள் குடத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்ட வேகத்தில் ஜலம் அவள் முகத்தில், உடல் முகப்பில் விசிறி நனைத்தது’.

உறங்கும் முகத்தில் நீர் விசிறி எழுப்பிக் கவனத்தைக் கவ்விப் பிடிக்கும் வைர வரிகள்.

’பகவானே தன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவனவனும் தன்னை அவனே தானே தேடிக்கொள்ள வேண்டும்’?

’அதன் பெயர் தான் விசுவப் ப்ரேமை. மனிதர் மீதான காதல் அல்ல. காதல் மீது காதல் கொண்டு விட்டது’.

விலையுறுத்த முடியாத எழுத்து. கொஞ்சம் மெனக்கெட்டால் புரியும். பின் ரசானுபவமும் வாசக அனுபவமும் ஒருங்கே கிடைக்கும். பாம்புப் பிடாரன் மகுடி வாசிப்பது போல் சரஞ்சரமாகச் சொற்கள் உதிர்ந்து, ஒன்றாகக் கலந்து, புதுப் புது அர்த்தங்களைக் கோடி காட்டிக் கலைந்து மறுபடி எழுந்து மாயாஜாலம் செய்யும் எழுத்துகள். காருகுறிச்சி அருணாசலத்தின் ’சக்கனிராஜ’ கரகரப்ரியா ராக ஆலாபனை கேட்ட திருப்தியோடு தன்  சிறுகதையை, நாவலைப் படித்து அனுபவிக்க வைக்கும் எழுத்தாளர் என்ற பெருமை எல்லாம் லா.ச.ராவுக்கே சேரும். அவர் எழுத்தைப் பற்றி எழுதுவது கடினம். அவரைப் பற்றி எழுதுவது பின்னும் கடினம். அநாயசமாக வெற்றி பெற்றிருக்கிறார் டாக்டர் பாஸ்கரன் இந்தக் காரியத்தில்.

கண்ணதாசன் ’கந்தன் கருணை’ திரைப்படத்துக்காக ஓர் அருமையான பாடல் எழுதி இருப்பார் – ’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா, பிள்ளைப் பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே’ என்று இனிமைத் தடம் பதித்துப் போகும் அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு சுஜாதா தான் நினைவு வருவார். எழுத்திலும், கணினித் துறையில் என் காலத்தைத் திட்டமிடுவதிலும் எனக்கு வழிகாட்டியாக, குருவாக இருந்த மறக்க முடியாத ஆளுமை அவர். ’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா, சுஜாதா பெயரை’ என்று எனக்குப் பாட வந்தால் பாடுவேன். சுஜாதா பற்றி நேர்த்தியான எழுத்துக் கச்சேரி நிகழ்த்தியிருக்கிறார் டாக்டர் பாஸ்கரன் இந்த நூலில்.

’வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபநிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள். கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும் அற்புத கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என் நோபல்’ – சுஜாதாவின் சத்தியமான வார்த்தைகளோடு அமர்க்களமாக ஆரம்பிக்கிறார் பாஸ்கரன்.

’அப்படி என்ன வாழ்க்கையில் இருக்கிறது? உயிர் வாழும் சவால்’.

சுஜாதாவின் கேள்வி பதில்களில் இருந்து நறுக்குத் தெறித்தது போல் சில பதில்களைக் கோடிட்டுக் காட்டிக் களை கட்ட வைக்கிறார் டாக்டர். சுஜாதாவின் தார்மீகக் கோபத்தைக்கூட விட்டுவைக்கவில்லை – ’எழுத ஆரம்பிக்கிறவன் எல்லாம் படிக்க வேண்டியவர்கள் புதுமைப் பித்தன், கு.ப.ரா எல்லாம். ஆனால் எவனுக்குத் தெரிகிறது. அப்போதுதான் ஒரு எரிச்சல் வருது’ என்ற சுஜாதா மொழி இத்தன்மை கொண்டது. சுஜாதாவின் சாகாவரம் பெற்ற ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் போன்ற பயோபிக்‌ஷன் கதைகளையும், திமலா போன்ற காலத்தால் அழியாத அறிவியல் புனைகதைகளையும் சுவையாக அலசுகிறார் டாக்டர் பாஸ்கரன். எனக்குப் பிடித்த ’குதிரை’ கதையையும் விட்டு வைக்கவில்லை. சுஜாதாவின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் கட்டுரைகள், பரபரப்பான பத்தி எழுத்து என்று ’சுஜாதாயனா’ பற்றிய நல்ல ஓர் அறிமுகம் இந்தக் கட்டுரை.

”சுஜாதாவின் ’எப்போதும் பெண்’ நாவலில் மையக் கதாபாத்திரம் சின்னுவிடம் அவள் அப்பா இறுதியில் மன்னிப்புக் கேட்கும்போது நான் அழுதேன்” என்று சராசரி வாசகரையும் பிரதிநிதிப் படுத்தி மரியாதை செய்திருக்கிறார் டாக்டர். ’சரசாவின் தியாகத்தைப் படிக்கக் கண்கள் குளமாயின’ என்பது பத்திரிகை ஆசிரியருக்கு வாசகர் கடிதத்தில் வரும் சொல்லாடலாக இருக்கலாம். பாஸ்கரன் எழுதுவதுபோல் சில நேரம் நடந்துமிருக்கலாம். ஒரு நல்ல எழுத்தாளருக்கே இன்னொரு சிறந்த எழுத்தாளரின் படைப்பை சகல நுட்பமான உணர்வுகளோடும் உள்வாங்கி ஒன்றுபட முடியும் என்பதை பாஸ்கரன் காட்டுகிறார்.

ஒரு பானை சோற்றுக்கு இங்கே மூன்று பருக்கை பதம் பார்த்துச் சொன்னேன். இங்கே ஒரு பானை நிறைய சர்க்கரைப் பொங்கலே இனிக்க இனிக்கச் சமைத்திருக்கிறார் டாக்டர்.

சார்வாகன், தேவன், பரணீதரன், சுந்தர ராமசாமி, உ.வே.சா, ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பரசுப்பிரமணியன், பாக்கியம் ராமசாமி, கி.ராஜநாராயணன், ஆர்.சூடாமணி, ஆ.மாதவன், க.நா.சு, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், ஜெயகாந்தன் என்று தமிழில் பெயர்பெற்ற படைப்பாளிகள் எல்லோரும் டாக்டர் பாஸ்கரனின் எழுத்தில் உயிர்த்து வலம் வருகிறார்கள். விதம்விதமான ஆளுமைகள், வெவ்வேறுபட்ட சித்தரிப்புகள், வளம் சேர்க்கும் தகவல்கள் என்று இந்நூலை உழைத்து, அனுபவித்து எழுதியிருக்கிறார் அவர்.

ஆதியில் வார்த்தை இருந்தது. அது இன்னும் இருக்கிறது. இனியும் இருக்கும் என்று அவருடைய எழுத்தில் சொல்லாமல் சொல்கிறார் நூலாசிரியர். வாழ்க.

இரா.முருகன்

ஏப்ரல் 26 2021

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன