A longish extract from my forthcoming novel MiLAGU
எந்தக் குதிரை வேண்டும்? என்னிடம் குதிரை பராமரிப்பு ஊழியர் கேட்டார்.
இல்லை, நடந்தும் ஓடியும் யுத்தம் புரியும் காலாட்படை வீரன் நான் என்றேன். குதிரை ஏறத் தெரிந்த சிப்பாய்களில் நூறு பேரை குதிரைவீரர் ஆக்கியிருக்கிறார்களாம். அவர்களில் நானும் ஒருவனாம்.
குதிரை ஏற்றம் தெரியும் என்று அரசவை உத்தியோகத்தில் வரும்போதே அறிவித்து விட்டு வந்திருக்கக் கூடாது என்று இப்போது தோன்றியது.
என்னைப் போலவே சாதுவான ஒரு குதிரை, வயது சென்றது அது, எனக்குக் கொடுத்தார்கள். லகானை இழுத்துச் சொன்னபடி திரும்ப, ஓட, நிற்க படித்த குதிரை. அதெல்லாம் தெரியாமல் இருந்திருக்கலாமே என்று அந்தக் குதிரையும் என்னைப் போலவே அங்கலாய்த்திருக்கும்.
எந்த நிலையில் குதிரையோடு போய் யுத்தம் புரிய வேண்டும்? குதிரைப்படை தளவாயிடம் கேட்டேன். நீயும் இன்னும் இருபத்துநான்கு பேரும் போர்ச்சுகீஸ் படைக்கு முன்னே போக வேண்டும். மீதி இருபது பேர் அந்த படைக்கு பின்னால் வரவேண்டும்.
எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. என்ன ஐயா, புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேலே படுங்கன்னு பழமொழி சொல்வாங்க தமிழ்லே அது மாதிரி அந்த சும்பன்களுக்கு பாதுகாப்பாக நின்னு நான் சண்டை போடணுமா என்று கேட்டபடி குதிரையோடு நகர்ந்தேன்.
பின்னே, நானும் நடுவிலே நிக்கறேன்னு அடம் பிடிக்கவா முடியும்?
ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் மிச்சம் இருக்கும்போது கோட்டையில் இருந்து சங்கு பிடிக்கும் சத்தம் கேட்கும். இன்றைய யுத்தம் தொடங்குகிறது என்று முத்திரை காட்டும் சூசனை அது. இன்றைக்கு ஒன்பதும் ஆகி, ஒன்பது மணி பத்து நிமிடமும் ஆச்சு. சங்கு பிடிக்கவில்லை.
என்ன காரணம் என்று பக்கத்தில் குதிரை மேல் ஆரோகணித்திருந்த சக குதிரைவீரனிடம் கேட்டேன். கல்யாண மாப்பிள்ளைகள் வந்து சேரலை என்றான் அவன்.
கேடுகெட்ட போர்த்துகீஸ் படை ராத்திரி சுதி ஏற்றிக்கொண்டது இன்னும் இறங்காமல் கொஞ்சம் மிச்ச சொச்ச போதையும். கொஞ்சம் தூக்கமுமாக கையில் பன்றி இறைச்சி உருளை உருளையாக உருட்டிப் பிடித்துக் கடித்தபடி வருகிறவர்கள் அவர்கள். கொடுக்கப்பட்ட வாள்களை அலட்சியமாக எடுத்து வீசினார்கள்.
எனக்குப் பின்னால் நின்ற அங்கோலா – போர்த்துகீஸ் படையணியின் கருப்பு இன இளைஞன் என்னைக் கேட்டான் – குதிரையை ராத்திரியே கொடுத்துட்டானுங்களா?
நான் சாவதானமாக, இல்லை என்றேன்.
பின்னே ஏன் நொண்டுது? ராத்திரி பூரா நீ குதிரை ஏற்றம் பழகிக்கிட்டு இருந்திருப்பேன்னு நினைச்சேன்
மோசமான பொருள் தொனிக்க என்னை கேலி செய்து வம்புக்கிழுத்தாலும், நான் இப்போதுதான் கவனித்தேன், என் குதிரை பின்னங்கால் இடது கொஞ்சம் நொண்டித்தான் நடக்கிறது.
சங்கொலி. இன்றைய சாவுகளுக்கு முன்கூட்டி ஊதித் துக்கம் கொண்டாடிய சூசனை கோட்டை வெளியில் சூழ்ந்தது.
நான் என் குதிரையை மெல்ல நகர்த்தினேன். ஓ என்று பெரிய சத்தம். அரசு எதிரணிப் படை எங்களை நோக்கி வேகமாக பெருவெள்ளமாக ஓடி வந்தது.
முன்னால் எதிர்கொண்டு அல்ல. எம் பின்னால் இருந்து.
நிலை குலைந்து போன நடுவில் வரும் போர்த்துகீஸ் படை திரும்பி நின்று தாக்காமல் எல்லா திசையிலும் ஓட ஆரம்பித்தார்கள். அவர்கள் போர்த்துகீஸ் மொழியில் கூவியது சண்டை போட வேண்டாம், எதிரி நம்மைவிட அதிகமாக இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டியதாக இருந்தது.
பத்தரை மணிக்குள் போர்த்துகீஸ் படை கிழக்கே சமுத்திரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததை நம்ப முடியாமல் கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதானிகள் பார்த்துக் கொண்டிருந்த காட்சி தட்டுப்பட்டது.
எங்களுக்குப் பின்னால் எதிரணியின் காலாட்படை ஓவென்று கூச்சலிட்டு மிர்ஜான் கோட்டையை நோக்கி ஓடி வந்தது. இந்தக் களேபரத்தில் என் குதிரை கனைத்தது. முன்கால் இரண்டும் தூக்கி அது நிற்க, பலகீனமான பின்கால் வழுக்கி கீழே விழுந்தது.
அரசுப் படை தினசரி அறிக்கை
இன்று உயிர்த்தியாகம் செய்த காலாட்படையினர் நூற்று முப்பத்தெட்டு பேர் . குதிரைப் படையினர் பத்து பேர். அவர்கள் பட்கல் வாயுசேனன், ஹொன்னாவர் திருத்தக்கன், கோகர்ணம் மல்லையா மற்றும். ஜயவிஜயிபவ.
எதிரணிப் படை தினசரி அறிக்கை
கேலடி அரசரின் போர்த் தந்திரம் வென்ற நாள் இது. நம் படையினர் அரசுப் படையினரை கோட்டைக்கு நேர்பின்னே நிலை எடுத்து அதி விரைவில் சூழ்ந்து பின்னால் இருந்து தாக்கிக் கிடைத்த வெற்றி இது. இன்றைய போர் முடிவில் கேலடி அரசர், பிலகி அரசர், நேம்நாதர் தலைமையில் உள்ள அணி மிகப் பெரும் வெற்றி.
இன்று இருநூற்று முப்பத்தேழு வீரத் தோழர்கள் தங்கள் இன்னுயிர் நீத்தார்கள். நேற்று வாள் காயம் சிரித்தபடி ஏற்ற வஜ்ரமுனி என்னும் கேலடி மாநிலப் பெரும் வீரர் காயம் புரைபிடித்து, சிகிச்சையில் அதிக ரணமாகி இன்று போரிடும்போது அகால மரணமடைந்தார். போரில் நேரடியாக அன்றி களம் கண்டு துஞ்சிய வீரர்களின் இன்றைய எண்ணிக்கை எண்பத்தெட்டு.
இன்று மாலை கேலடி அரசர் வெங்கடப்ப நாயக்கரும், பில்கி அரசர் திம்மராஜுவும் படைகளைச் சந்தித்து பேசி, நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பங்கு கொண்டார்கள். ஜயவிஜயி பவ.