பெரு நாவல் ‘மிளகு’ – An evening in Gerusoppa as the town is under destruction

An excerpt from my forthcoming novel MILAGU

ஆளுக்கு ஒரு கடப்பாரையோடு கேலடி படை அந்த வீட்டுக்குள் ஹோவென்று கத்திக்கொண்டு நுழைகிறது. வாசல் முழுக்க   காரைக்கட்டிகளுக்கு நடுவே சுவர்  பாதி கிடக்க, முன் கதவு பாதி அறுந்து கிடக்கிறது.

ஜாக்கிரதையாகக் கால் வைத்து வீட்டுக்குள் நுழைகிறவர்கள் அடுத்த வினாடி காலில் யாரோ எதுவோ இறுகக் கட்டி மேலே ஊர்வது முதுகுத் தண்டில் சிலிர்ப்பை ஏற்படுத்த பாம்பு பாம்பு பாம்பு என்று அங்கங்கே குரல் எழுகிறது.

அவசரமாக வெளியேறுகிறவர்களின் காலை இன்னும் இறுகிப் பிடித்து பேய் மிளகுக்கொடி அசுர வேகத்தில் இலையும் சிறுதண்டுமாக நீண்டு கவ்வுகிறது.

சிக்கிமுக்கிக் கல்லை வைத்து நெருப்புப் பொறி உண்டாக்கி அந்தப் பேய்க் கொடியை சுட்டுப் பொசுக்க முயன்றால் தீக்குள் சாம்பலாகாமல் துளிர்க்கிறது அந்த அதிசயக் கொடி.

சர்க்கார் உத்தியோகஸ்தன் வீட்டு வாசலை முழுக்க மறைத்த பேய் மிளகுக் கொடிக்குப் பின்னே இருந்து விடுவிக்கச் சொல்லி முதலில் உள்ளே புகுந்த படைவீரன் தீனமாக ஒலியெழுப்புவது கேட்கிறது. தீவட்டிகளின் மங்கிய ஒளி காற்றில் அலைபாய்கிறது. உஸ்ஸ்ஸ் என்று ஒளி இறந்த தீவட்டிகள் தீனமாக ஒலி எழுப்பி, இலுப்பை எண்ணெய் வாடையோடு அடுத்த ஒளியூட்டலுக்குக் காத்திருக்க, சூறையாடும் படை முன்னே நகர்கிறது.

இந்த வீட்டில் தங்க நகையாசாரி இருந்தார்.. உள்ளே நுழைய முயன்று பேய் மிளகுக்கொடி விரைந்து காலில் சுற்றுவதற்குப் பயந்து அந்த வீட்டை விட்டு அடுத்த வீடு, அதற்கும் அடுத்தது என்று போக முற்பட்டு எதுவும் சரிவராமல் தெருவில் கடைசியில் இருந்த நாகநாத பசதியில் ஊடுறுவுகிறார்கள்.

அப்பாண்டை பூங்கா காலை எட்டு மணி. மஞ்சுநாத். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுவனைத் தலையில் தாக்குகிறான் சொத்தைப்பல் தளபதி.  மஞ்சுநாத் அவனை உற்றுப் பார்க்கிறான். நெருப்புப் பாளம் மேலே விழுந்து உருள்வது போல் உணர்ந்து தளபதி அலறுகிறான்.

தாறுமாறாக ஓடிய குதிரை வண்டி தெருக்கோடியில் கவிழ குதிரை தன்னிச்சையாக லகானிலிருந்து பிய்த்துக் கொண்டு வெளிவந்து வெறும்வாயை அசைபோட்டபடி நிற்கிறது.

அவிழ்ந்து தொங்கிய அதன் சேணத்தைக் கழற்றி எறிந்து விட்டு மஞ்சுநாத் ஓடுகிறான். வண்டிக்குள் இருந்து தளபதி காப்பாற்றச் சொல்லி இரைஞ்சுகிற பார்வையோடு ஒலியெழுப்பியபடி கிடக்கிறான்.

பின்னால் குதிரைகளின் காலடி ஓசை. கேலடி படை பூங்காவை ஒட்டிய தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

முற்பகல் பதினொன்று மணி.

அப்பாண்டை பூங்கா. ரோகிணி. அவசரமாக பூங்கா வாசலில் தன் சாரட்டை நிறுத்தி ஓட்டமும் நடையுமாக பூங்காவுக்குள் சுற்றுகிறாள் ரோகிணி.

மஞ்சுவையோ தளபதியையோ அங்கே எங்கும் காணோம். பூங்காவுக்கு பின்வாசலுக்கு அருகே குதிரை வண்டி கவிழ்ந்து கிடந்தது கண்ணில் பட அங்கே ஓடுகிறாள்.

மஞ்சு மஞ்சு என்று அரற்றிக்கொண்டு அவள் தாறுமாறாக ஓடி செடிகளுக்குமேல் மிதித்து மலர்களை கூழாக்கி நசிப்பித்து ஓடி விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறாள்.

வண்டிக்குள் யாரும் இல்லை. வண்டிக்குள் இருந்து ரத்தச் சுவடு வீதியில் வழிந்து ஓடிச் சால் கட்டி நிற்கிறது. சிறிது தொலைவில் குதிரை ஏறிய கேலடி சூறையாடும் படை போய்க் கொண்டிருக்கக் காண்கிறாள்.

அடக்க முடியாமல் அழுகிறாள் ரோகிணி.

அவள் இனி இருக்கப் போவதில்லை. இருப்பில் எந்த அர்த்தமும் கிடையாது. இந்தத் தங்கமும் வைரமும் சாக்குப் பைகளில் அடைத்திருந்தது எதற்குப் பயன்படும் இனி?

தன் சாரட்டை நோக்கி நடக்கிறாள் மெதுவாக. கண் இருண்டு வர சாரட்டை கேலடிப் படையைத் தொடர்ந்து ஓட்ட ஆரம்பிக்கிறாள்.  தரையில் ஏதோ, யாரோ கிடக்கிறதாகப்பட நிறுத்துகிறாள். தளபதிதான்.

அவனுடைய மோதிரம் அணிந்த கை விரல்கள் வெட்டிச் சிதைக்கப்பட்டிருக்கின்றன. கைகளில்

மஞ்சு மஞ்சு.

தளபதி சிரமத்தோடு கண் திறந்து பார்க்கிறான்.

குழந்தை ஓடிட்டான். குழந்தையா அவன்? பரிசுத்த ஆத்மா. தீர்க்காயுசா இருப்பான். என்னை மன்னிச்சுடுங்க.

இதற்காகவே காத்திருந்த மாதிரி அவன் கண்கள் இறுதி உறக்கத்தில் மூடுகின்றன.

ரோகிணிக்கு ஒரு அபத்தமான நாட்டியத்தில் ஆயிரம் பேரோடு அவளும் ஆடுவதாகத் தோன்றியது. எதற்குச் சிரிக்க வேண்டும், எப்போது அழ வேண்டும் என்று தெரியாத நர்த்தகி. காலடிச் சுவடுகள்  தடுமாறி ஆடுகிறாள். ஆடச் சொல்லி தன்னைத்தானே சாட்டையால் அடித்துச் சுழன்றாடுகிறாள்.

இந்தப் பாதையில் மஞ்சு நடந்துபோனானோ? அவன் மோதிரம் ஏதும் அணியவில்லை தான். சூறையாடும் கேலடிப்படை அவனை குழந்தை என்பதற்காக விட்டு வைத்திருப்பார்கள் அவர்கள் கண்ணில் பட்டிருந்தால்.

பால்மணம் மாறாத அந்த ஐந்து வயதுச் சிறுவன் எங்கே இருக்கிறான் இப்போது? யாருமில்லாத வீதியின் இருபுறமும் பார்த்து சாரட் ஓட்டிப் போகிறாள் ரோகிணி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன