An excerpt from my forthcoming novel MILAGU
ஜெருஸூப்பா பிற்பகல் மஞ்சுநாத்.
மஞ்சுநாத் ஓடி விளையாடிய தெருதான் இது. சதா பாட்டுச் சத்தமும் பேச்சொலியும் கேட்டுக் கொண்டிருக்கும் பெரிய வீடுகளும், அங்கங்கே ஜவுளித் துணியும், சந்தனமும் அத்தரும், மாமிசமும், பழங்களும் விற்கும் கடைகளும் அம்மாவின் இனிப்பு மிட்டாய்க்கடையும் இருக்கும் ராஜவீதி இது.
பழக்கமான இடத்துக்கு வந்து சேர்ந்ததில் மஞ்சுநாத்துக்கு ஒரு சின்ன உற்சாகம் ஏற்பட்டது. இதோ வெற்றிலைக்கடை. அதற்கு அடுத்து மிட்டாய்க்கடை.
மிட்டாய்க்கடை படி ஏறும்போது கவனித்தான். அலமாரிகளில் அங்கும் இங்குமாகக் கொஞ்சம் மிட்டாய் இருந்தது. அதை விற்றுக் காசு வாங்கிப் போட்டுக்கொள்கிற ஊழியர்களைக் காணோம். வாங்க வந்து காத்திருப்பவர்களையும் காணோம்.
அம்மா அம்மா அவன் கூப்பிட்டான். அவள் குரல் கேட்கவில்லை.
அப்பா. அப்பா. பரமன் அப்பாவைக் கூப்பிட்டான். அவர் சமையல் கட்டத்தில் ஜயவிஜயிபவ இனிப்பு செய்துகொண்டிருப்பார்.
கடை மேடையைக் கடந்து உள்ளே ஓடினான். எண்ணெய் நெய் காய்ச்சும் வாடையும், முந்திரியும் ஏலமும் வாதுமையும் கலந்து வறுபடும் ஆகார வாடையும் இல்லை எங்கும். இனிப்பு மிட்டாய்க்கு சர்க்கரை பாகு வைக்கும் மடையர்கள் ஒருவரும் இல்லை.
திலகன் அம்மாவா திலகன் அம்மாவா. உதவி தலைமை மடையரான திலகனை உரக்கக் கூப்பிட்டான் மஞ்சுநாத். இல்லை அவரும்.
நல்ல பசி எடுத்தது. என்ன உண்ணலாம்? யார் கொடுப்பார்கள்? பசி அதிகமானது. பயம் அதிகமானது. கடை முகப்பில் அலமாரிகளுக்குள் கை விட்டுத் துளாவினான். சின்ன எறும்புகள் லட்டுருண்டை உதிர்த்த பூந்திலட்டு துகள்களின் மேலும், ஜாங்கிரி ஓரமாகவும், பாதாம் அல்வா நடுவிலும் பரவ ஆரம்பித்திருந்தன. அவற்றை உதறிவிட்டு இனிப்பு மிட்டாய்த் துணுக்குகளை பொறுக்கி எடுத்து உண்டான் மஞ்சுநாத்.
கிராம்பு அடைத்த ஒரு இனிப்பை கொஞ்சம் போல் எறும்பு அரித்திருந்தது. அதைத் திரட்டி எடுத்து வாயிலிட்டுக் கொண்டபோது கிராம்பு வாயில் கடிபட காரம் நாக்கில் சூடு போல் தட்டுப்பட்டது.
தண்ணீர் தேடி கடை முழுக்க சுற்றி வந்தான் மஞ்சுநாத். எங்கும் கிடைக்கவில்லை.
அடுத்த வெற்றிலை, பாக்கு விற்கும் கடையில் வெற்றிலைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் மிதக்க விட்டிருப்பார்கள். படி இறங்கி அங்கே ஓடிப்போய்ப் பார்த்தான் மஞ்சுநாத். கடை கதவு திறந்திருக்க உள்ளே வெற்றிலை மிதக்கும் பாத்திரத்தில் ஒற்றை வெற்றிலை மிதந்து கொண்டிருக்க, முழுக்க நனைத்துத் தண்ணீர்.
பாத்திரத்தில் இருந்து உள்ளங்கையில் அந்த வெற்றிலை வாசமடிக்கும் நீரை எடுத்துப் பருகினான். பழைய வாடையும், வெற்றிலைக் காம்பு காரமுமாக இருந்த அந்தத் தண்ணீரை விட்டால் வேறேதும் இல்லை.
இனிப்புக் கடைக்குள் திரும்ப வந்தபோது கண்ணைச் சுழற்றிக்கொண்டு உறக்கமும் வந்தது. அலமாரி வைத்த சுவர் ஓரமாக நீட்டிக் கொண்டிருக்கும் வட்டமான சுற்றுப் பலகையில் ஏறிப் படுத்தபோது அவனுக்கு உறைத்தது அவன் மட்டும்தான் அந்தப் பெரிய வீதியில் இருக்கப்பட்டவன்.
நகரமே அவன் தவிர வேறே யாரும் இல்லாமல் தனிமைப் பட்டிருப்பதை அவனுக்குச் சொல்ல யாருமில்லை.
அப்பா அப்பா அம்மா அம்மா.
அவன் நாலு தடவை குரலெடுத்து அழைத்து வெறுமையை பதிலாகப் பெற்றான்.
அப்பா அம்மா.
அவன் உறங்கியிருந்தான்.
ஜெருஸோப்பா அந்திப்பொழுது பரமன்.
இவ்வளவு தூரம் வந்து அந்தக் கொலைகாரி ரோகிணி கண்ணில் பட்டிருக்க வேண்டாம். அதற்காக இப்படி ஓடியும் வந்திருக்க வேண்டாம்.
தெருவில், ஏன் ஊரிலேயே யாரும் இல்லாமல் வீடு வாசலை இடித்துத் தகர்த்து எல்லோரும் சேர்ந்து கிளம்பி விட்டார்கள். ஊர் எல்லை வரை பரமன் நடையை எட்டிப்போட்டு நடந்தார். எங்குமே யாருமே கண்ணில் தட்டுப்படவில்லை.
காலையில் சூறையிடும் கேலடி படை வீரர்கள் பெரிதாக எதுவும் கிடைக்காமல் பேய் மிளகு காலிலும் கையிலும் சுற்ற ஓடிப் போனதை இங்கே இருந்து பார்த்தார் பரமன். அதற்கு முன் வீட்டு முன்னறையில் நெருப்புக் கட்டை வைத்து வெப்பப்படுத்தும் சுவர்ப் பகுதிக்குள் புதையலை வைத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
பரமனுக்கு செல்வம் ஏதும் வேண்டாம். பம்பாய் திரும்ப ஏதாவது வண்டி கிட்டினால் போதும். பம்பாய் இல்லாத இறந்த காலத்தில் இருந்துகொண்டு அங்கே எப்படிப் போவது?
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதில் இருந்து ஆயிரத்துஅறுநூறாம் ஆண்டுக்கு வர முடியும் என்றால் பின்னே இருந்து முன்னால் பயணப்படுவது முடியாதா?
ஹொன்னாவரில் இருந்திருக்கலாம். அங்கே பக்கத்தில் மிர்ஜான் கோட்டையை முற்றுகை இட்டு நேமிநாதனும் அடுத்தடுத்த குறுநில மன்னர்களும் ஜெர்ஸோப்பாவின் மகாராணி சென்னபைரதேவியை எதிர்த்துப் போர் நடப்பதால் இங்கே ஜெருஸப்பாவில் பாதுகாப்பாக இருக்கும் என்று வந்ததற்குக் காரணம் இருந்தால் அதோடு மஞ்சுநாத்தைப் பார்க்க வேண்டும், எப்படியாவது அவனைக் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்றும் வழி தேடி வந்ததும் பரமனின் வலுவான காரணம் தான்.
நானூறு வயது மூத்த சின்னப் பையன் மஞ்சுநாத்தோடு நாளைக்கே பம்பாய் போக வழி பிறந்தால் அவனைக் கூடவே கூட்டிப் போகலாமா? வண்டிக்காரன் சத்திரத்தில் கிழவர்கள் யாராவது இருப்பார்களே. போய்ப் பார்த்தால் என்ன?
அப்படியே காலை எட்டிப்போட்டு நடந்து சமணக் கோவில்கள் நிறைந்த தெருவில் சாப்பிட ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்து வரலாமே. பரமன் ஜெருஸோப்பா முழுக்க நடந்து திரிந்த அனுபவம் கைகொடுக்க, அடுத்த அரை மணி நேரத்தில் வண்டிக்காரன் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தார்.