An extract from my forthcoming novel MILAGU
வீராயி ஓரமாகக் கிடந்த பிடவையை உடுத்திக் கொண்டு பரமனிடம், போகலாம் என்றாள். யாரும் இல்லே எல்லாரும் போய்ட்டாங்க என்று இன்னொரு தடவை சொன்னார் காரியகர்த்தா.
பரமன் வெளியே கிளம்பியபோது வீராயியும் அவரோடு நடந்தாள். மனதே இல்லாமல் அவள் கூட வரச் சம்மதித்தார் பரமன்.
எல்லோரும் வந்தாங்க யாரும் இல்லே இப்போ என்றார் காரியகர்த்தா கடைசியாக.
வேட்டி வேணாமா என்று பரமனிடம் கேட்டாள் வீராயி. ஒன்றும் பதில் சொல்லவில்லை பரமன். இருட்ட ஆரம்பித்திருந்தது. பரமன் அருகே நடந்த வீராயியால் இரண்டடி சேர்த்து எடுத்து வைக்க முடியவில்லை. பரமனின் கையைப் பற்றிக்கொண்டு அவர் மார்பில் முகம் புதைத்து நின்றாள் அவள்.
அஞ்சு பேர் ஐயா, ஒருத்தன் அடுத்து மத்தவன் இல்லே. ரெண்டு ரெண்டு பேராக சேர்ந்து வந்து சீரழிச்சாங்க தேவிடியா பசங்க.
சொல்லியபடி அழுதாள் வீராயி. அவள் பரமனைக் கட்டியிருந்த கரங்கள் வலுவாக அவர் மேல் படர, தெருவோரத்தில் ஆள் அரவம் இல்லாமல் யார் வீடோ வெறுமையோடு நின்றது. பேய் மிளகு விதைக்காத அது வீடு தானா?
நாட்டியசாலை என்றாள் வீராயி. வாசலில் எடுப்பாக இரண்டு பக்கமும் இரு திண்ணைகள் உள்கதவு வரை நீண்டிருந்தன. பரமனை அதில் சாய்த்து மேலே படர்ந்தாள் வீராயி. அசதியும் களைப்பும் பறந்து போக அவளோடு இயற்கை தர்மப்படி இயங்கினார் பரமன்.
எல்லாம் முடிந்து மேடையை விட்டு இறங்கும்போது ரொம்ப நன்றி என்று சொல்லி நினைவு வச்சுக்குங்க நானா என் உடம்பை கொடுத்தது உங்களுக்கு மட்டும்தான் நான் போகறேன் என்று அவர் உதட்டில் இழுத்து முத்தமிட்டாள் வீராயி. சட்டென்று கையை விட்டுவிட்டு இருளில் ஓடி மறைந்தாள் அவள். சில்வண்டுகளின் நீண்ட சீழ்க்கையொலி அவளோடு ஓடி திரும்பி வந்தது.
இடுப்பில் வேட்டி இல்லாமல் இருந்தது நினைவு வர சத்திரத்துக்குள் ஓடினார். விளக்கு இல்லாத வண்டிக்காரன் சத்திரத்தில் வாசலில் உட்கார்ந்திருந்தார் காரியகர்த்தா. என்ன வேணும் என்று கேட்டார். என் வேட்டி என்றார் பரமன். இங்கே எப்படி வந்தது வேட்டி? நான் கொஞ்ச நேரம் முந்தி வீராயியை உங்களோடு வந்து அந்த உக்கிராண அறைக்குள்ளே பார்த்தோமே அப்போ நக்னம் மறைக்க வேட்டி கொடுத்தேனே அவளுக்கு.
வீராயியா அந்தப் பொண்னு இறந்து போய் ஒரு மாசம் ஆச்சே.
இப்போ பேசினோமே அவளோடு, நீங்க இங்கேதானே இருந்தீங்க?
நான் இப்போதான் வர்றேன். வண்டிக்காரன் சத்திரம் மூடி ஒரு வருஷம் ஆகப் போறது. வேட்டி ஏது அங்கே?
அவர் கேட்பதற்கு முன் பரமன் சாடி உக்கிராண அறைக்குள் கதவு திறந்து பார்த்தார். ஒரு வேட்டி ஒரு ஓரமாகக் கிடந்தது. வீராயி குரல் இருட்டில் கேட்டது.
பரமனய்யா சீரழிச்சிட்டாங்க. அவள் சொன்னாள். அந்தக் காட்சி இன்னொரு முறை அனுபவிக்க வேண்டி வரும் என்று தோன்ற வெளியே ஓடினார் பரமன்.
சமையலறையில் வைத்திருந்த சாதமும் புளிக்குழம்பும் நினைவு வர சமையலறைக்குள் புகுந்தார். ஒரு கடுகு கூட இல்லாத சமையலறை. வெளியே ஓடி வரும்போது அவர் இடுப்பில் வேட்டி ஏறி இருந்தது. உக்கிராண அறைக்குள் சத்தம் ஏதுமில்லை.
சதுர்முக பசதி ஆடியது.
பரமனுக்கு அப்படித்தான் தோன்றியது. அது தூரத்தில் இருந்து கண்ணில் பட்டு மூளையில் உறைந்த காட்சி. பக்கத்தில் அருகனின் சமணக் கோவிலும் ஆடியது. பின்னால் ஏதோ சத்தம். என்னவென்று பார்த்தால் ரிஷபநாதர் ஆலயம் நிதானமாக ஆடியது. தொடர்ந்து சுமதிநாதர், விமலநாதர், மகாவீரர் கோவில்கள் அந்தப் பரம்பில் ஆடத் தொடங்கின. நிசப்தமான தெருவும் ஆட்டத்தைத் தொடர்ந்தது. பரமன் அவசரமாகத் தெரு ஓர வாதுமை மரத்தைப் பிடித்துக் கொண்டார்.
வண்டிக்காரன் சத்திரத்தில் என்ன சாப்பிட்டோம்? சுயம்பாகமாக பூஷணிக்காய் புளிக்குழம்பும், குழைய வடித்த சாதமும் தான்.
அந்த சாதத்துக்கும் புளிக்குழம்புக்கும் ஆதாரமாக சுடவைத்த தண்ணீர்? அங்கேயே செப்புப் பாத்திரத்தில் வைத்திருந்த பாதி வரை பாத்திரம் நிறைத்த கிணற்றுத் தண்ணீர், அந்தத் தண்ணீரில் போதை தரும் ஏதாவது கள்ளோ சாராயமோ கலந்திருந்ததா?
பரமனுக்கு எப்படித் தெரியும்? ஆக, தெருவும் கட்டிடங்களும் ஆடவில்லை. பரமன் தான் ஆடுவது. விளக்கு ஒற்றையாக எரியும் கோவில் மண்டபத்துக்குள் நுழையும்போது தலைசுற்றல் கூடவே வந்தது. நான்கு தெருக்கள் சந்திக்கும் விளக்குச் சந்திப்பில் மண்டபத்தின் மற்ற வாயில் திறந்து வெளியே போக வழி தெரிந்தது.
நைவேத்தியம் இல்லாத கோவிலும் பரிசாரகர்கள் இல்லாத மடைப்பள்ளியும் விளக்கு இல்லாத சந்நிதியுமாக வெற்றிடம் கொண்டு இருந்தது. வெளிப் பிரகாரத்துக்கு திரும்பி நடந்தபோது மறுபடி கட்டிடம் எல்லாம் ஆடும் அனுபவம்.
புளிக்குழம்பில் தொடங்கிய ஆட்டம் இல்லை இது என்று தீர்மானமாகத் தெரிந்தது. நிலநடுக்கமாக இருக்கலாம்.
பரமன் வெளியே வரும்போது யோசித்தபடி ஓடத் தொடங்கினார்.