An longish extract from my forthcoming novel MILAGU
காட்சி கலைந்து சதுர்முக பசதி சுழல்கிறது.
ஓரமாக அடித்துச் செல்லப்பட்ட பரமன் சுவரை ஆதரவாகப் பற்றிக்கொண்டு எழுந்து நிற்கப் பார்க்கிறார். காட்சி நிலைக்க, ஆப்பிரிக்க நாட்டு அரசாங்க அலுவலகம். வெளியே பெயர் எதுவும் போடாத அங்கே வாசலில் கடைசிப் படியில் உட்கார்ந்திருப்பதும் பரமன் தான்.
இரண்டு தாங்குகட்டைகள் நிறுத்தி வைக்க அவற்றை ஊன்றி நடக்க முயலும் அந்த இன்னொரு பரமன் தத்தித் தத்தி நடக்கத் தொடங்க, ஒரு பெரிய நாற்காலியைக் கழிகளில் பிணைத்துச் சுமந்து கொண்டு இரண்டு கருப்பர் இனத்தவர் வருகிறார்கள்.
இன்னொரு பரமன் இந்தப் பரமனைப் பார்த்துச் சிரிக்கிறார். உம் தாங்குகட்டைகளை வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார்கள். சனியன் விட்டது. எனக்கு உம் துன்பமும் சேர்த்து சிலுவை சுமக்க வேண்டும் என்று எங்கள் பிரபஞ்சத்தில் விதித்திருக்கிறது.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாற்காலி சுமந்து வந்த கருப்பர் இனத்தவர் அந்தப் பரமனை நாற்காலியில் ஏற்றி மாடிப்படியில் ஏறி தடதடவென்று ஓடுகிறார்கள்.
இந்தப் பரமன் வாசல் படிக்குப் பக்கத்தில் நெருங்க, நாற்காலிக்காரர் அவரிடம் சொல்கிறார் – உமக்குத்தான் கால்கள் கிழங்கு மாதிரி இருக்கே. நடந்து தான் போய் எல்லா வினோதமும் சுற்றிப் பாரும். எதற்கு உம்மை தூக்கிக்கொண்டு நடக்கவேணும்?
காட்சி மறுபடியும் குழம்ப, இந்தப் பரமன் மறுபடி பசதியின் சுழற்சியில் கால் தடுமாறித் தரையில் விழுகிறார். எழுந்திருக்கும்போது நடுவயது பரமன் தாதர் மின்சார ரயில் பரபரப்பாக வந்து போய்க் கொண்டிருக்கும் தாதர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்தில்அடுத்த கல்யாண் விரைவு லோக்கல் ட்ரெயின் வந்து கொண்டிருப்பதை உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். அவர் கையிடுக்கில் லெனின் கடிதங்கள் தொகுப்பு மராட்டி மொழிபெயர்ப்பு புதுப் புத்தக வாடையோடு அமர்ந்திருக்கிறது.
மூன்றாவது ப்ளாட்பாரத்துக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினல் – கல்யாண் விரைவு லோக்கல் வருவது தெரிய தடதடவென்று தாதர் மேம்பாலப் படிகளில் ஓட்டமும் நடையுமாக விரைகிறார் நடுவயது பரமன்.
இந்தப் பரமன் அவர் பாதையில் குறுக்கிடுகிறார். காட்சியாக வந்த பரமன் இவரிடம் சொல்கிறார் – விலகிப் போ. என் ரயில் வந்துவிட்டது.
அதற்குள் தாதர் லோக்கல் கிளம்பி விடுகிறது. வந்த பரமன் தாவி வண்டியில் ஏறும்போது நிலை தவறி ஓவென்று அலறல். வந்த பரமனின் இடது கால் நடைமேடைக்குக் கீழே எலக்ட்ரிக் ட்ரெயின் சிக்கிக் கொண்டிருக்க வண்டி நகர்கிறது.
இந்த ஜெருஸூப்பா பரமன் ஐயோ வேணாம் வேணாம் என்று கூக்குரலிட ஓரமாக நிர்மல் முனிவர் நக்னராக வீற்றிருந்து உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார்.
உன்னையே நீ அகன்று நின்று பார்க்கிறாய். வேண்டுவதும் வேண்டாததும் எதுவென்று தீர்மானிப்பது உன் கையிலும் மனோசக்தியிலும் இல்லை. பொறுத்திரு. உன் ரயில் இன்னும் வரவில்லை.
நிர்மல முனிவருக்குக் காணிக்கையாகக் கையிடுக்கில் வைத்திருந்த லெனின் கடிதங்கள் புதுப் புத்தகத்தை அளித்து அவர் காலில் விழுந்து வணங்குகிறார் பரமர். சதுர்முக பசதி மறுபடி சுழல்கிறது. வலம் இடமாக இருக்கிறது இந்த சுழற்சி.
மண்டபத்தில் தாதர் ரயில்வே ஸ்டேஷன் காட்சி பின்னோக்கி நகர, ரயிலும், மனுஷர்களும் பின்னால் போகிறார்கள். மேம்பாலத்தில் ஏறுகிறவர்கள் பசதிச் சுவருக்கு முதுகு காட்டிக்கொண்டு இறங்குவதாகவும். இறங்குகிறவர்கள் ஏறுகிறதாகவும் காட்சி தொடர்கிறது.