an excerpt from my forthcoming novel MILAGU
அகநாசினி நதிநீர் நிரம்பிய குளத்தைப் பார்த்தபடி இருந்தது விருந்தினர் அறை. போர்த்துகீஸ் இளவரசர், கோழிக்கோட்டு சாமுத்ரி மகாராஜா, மதுரை மன்னர், நிர்மல முனிவர், உள்ளால் மகாராணி அப்பக்கா என்று கெருஸொப்பாவின் அதிமுக்கிய விருந்தாளிகள் வந்து வெவ்வேறு கால கட்டத்தில் தங்கியிருந்த அழகான, பெரிய அறை அது.
முழுக்கவோ வரிசையாகப் பாதி கவிழ்த்தோ ஜன்னல் கண்ணாடிகள் வெனீஷியன் ப்ளைண்ட் அடுக்காக ஒவ்வொரு ஜன்னலும் வடிவெடுத்திருப்பது இந்த அறையிலும், அரசியின் படுக்கை அறையிலும் மட்டும்தான்.
இருபத்துநாலு மணிநேரமும் ஜன்னலுக்கு வெளியே ரோந்து போய்க்கொண்டிருக்கும் வீரர்கள் கண்ணை, தலையை இப்பக்கம் அப்பக்கம் அசைப்பது கூட இல்லை. ஜன்னலை, ஜன்னலுக்குள்ளே வெளிச்சக் கோடாகத் தெரியும் உள்ளறையை, வெளி இருளும், உள் ஒளியும் ஒன்றை ஒன்று விழுங்கப் பார்க்கும் விளையாட்டைப் பார்த்தபடி நடை பழகினாலும் கவனம் சிதறாது இருக்கிறவர்கள் அவர்கள்.
இப்போதும் அறைக்கு வெளியே அவர்கள் ரோந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். உள்ளே தங்கியிருப்பவருக்குப் பாதுகாவலாக இல்லை. கைதிக்கு வெறுங்காவலாக.
சென்னபைராதேவி மிளகுராணி அரசப் பதவி பறிக்கப்பட்டு, நண்பரான கெலடி மாநில அரசர் வெங்கடப்ப நாயக்கரால் கைதாக்கப்பட்டு மிளகுராணி நிர்மாணித்த மிர்ஜான் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட இரவு இது.
தன் வீட்டிலேயே விருந்தினராக சென்னபைராதேவி மகாராணி உட்காரவைக்கப் பட்டிருக்கிறாள்.
இன்று பகல் இங்கே அழைத்து வரப்பட்டாள். அதற்கு அப்புறம் நகரவே இல்லை. நேரே நிமிர்ந்து அமர்ந்து சுவரை வெறித்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருக்கிறாள்.
அவளை இந்த அறைக்கு அனுப்ப சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்த்து கெலடி வெங்கடப்ப நாயக்கரும், பிலகி அதிபர் திம்மராஜுவும் ஒரு சிறு படையை கோட்டையில் அரச மாளிகைக்கு வெளியே நிறுத்தியிருந்தார்கள் இன்று பிற்பகலில். ஆனால் அதற்குத் தேவையே ஏற்படவில்லை.
இந்த அறைக்குள் கழிவறை, நாற்காலியில் அமர்தல் போல் இருந்து கழிவு நீக்கும் சௌகரியத்தோடு அமைத்தது நன்றாகப் போய்விட்டது. சென்னா குத்தவைக்கும் சிரமம் இல்லாமல் போனது. கழிவறை பயன்படுத்தி விட்டு நாற்காலிக்கு வந்தாள் சென்னா. இன்றைய தினம் அவள் மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது.
காலையில் வழக்கம் போல் குளி கழிந்து பூஜை முடித்து வெகுநேரம் விஷ்ணு சகஸ்ரநாமமும் சமண மந்திரமும் நிதானமாகச் சொல்லி, வெளி மண்டபத்துக்கு நடக்கும்போது அவளுக்கு முன்னும் பின்னும் காவல்படை வீரர்கள் பாதுகாப்புக்காக இடைவெளி விட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.
ரஞ்சனாதேவி சாப்பிட்டார்களா என்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த புதுத் தாதி ருக்மணியை விசாரித்தாள் மிளகுராணி. அவங்க வீட்டுக்கு வெளியே வரல்லே மகாராணி அம்மா என்று பயந்த குரலில் சொன்னாள் ருக்மணி.
அவளுக்கு வேலை நிலைக்குமா, உயிர் உடலில் நிலைக்குமா என்று பயம் என்பதை சரியாகக் கண்ட மிளகுராணி ருக்மணியின் தோளில் தட்டிச் சொன்னது – பயப்படாதே. எல்லாம் சரியாகி விடும். ரஞ்சனாதேவியைப் பார்க்கலாம். நட.
ராணி சிறு குறுக்குப் பாதை வழியே இரண்டே நிமிடத்தில் இளவரசர் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தாள்.
இன்னும் தண்ணீர் காயாத தரை குருதி வாடை புலர்த்திக் கொண்டிருந்தது. நேமிநாதனின் ரத்தம் நிணவாடையை மட்டும் மீதி வைத்துவிட்டுத் தண்ணீரோடு தண்ணீராகக் கலைந்து போயிருந்ததைக் காணத் துக்கம் மனதில் கவிந்து மிகுந்த சோர்வையும், படபடப்பையும் உண்டாக்கியிருந்தது.
உள்ளே இருளில் விசும்பும் முனகல் ஒலி. ரஞ்சனா. மெல்ல அங்கே நடந்தாள் மிளகுராணி.
அடுத்த ஐந்து நிமிடம் அந்த இரண்டு பெண்களும் மௌனமாகத் தலையாய சோகத்தைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒற்றை ஜன்னலைத் திறந்து வைத்தாள் மகாராணி. தாதி ருக்மணியை அழைத்து ரஞ்சனாதேவிக்கு காலைப் பசியாற பலகாரம் அனுப்ப ஏற்பாடு செய்யச் சொல்லியபடி ரஞ்சனாவைத் தலையில் வருடிச் சொன்னாள் –
ரஞ்சி இதையும் நாம் கடந்து போவோம்
சொல்லியபடி வெளியே நடந்தாள் மிளகுராணி. போஜனசாலை வாசலில் தலைமை மடையர் காத்திருந்தார்.
அம்மா, நீர்த் தோசை பண்ணியிருக்கிறோம். உண்டு பார்க்க வேணும். ஜீரணம் சுலபமாக இருக்கும் என்று தலைமை மடையர் கிருஷ்ண ராயர் பணிவோடு நின்று வார்த்தை சமர்ப்பித்தார்.
ராயரே, ஜீரணத்துக்கு எனக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை. கெருஸொப்பா, ஆட்சி, ஜனம், மிர்ஜான் கோட்டை எல்லாம் விழுங்கி என் மகனையும் விழுங்கி விட்டது. மிளகு ரசம் பகலுக்கு வைத்து இன்னும் விழுங்க என்ன எல்லாம் உண்டோ அதெல்லாம் விழுங்க உத்தேசம் என்று கலகலவென்று சிரித்தாள்.
அம்மா அப்படி நீங்கள் சொல்லக் கூடாது. உங்களைப் பார்த்து நாங்கள் நம்பிக்கையை மீதி வைத்திருக்கிறோம். எல்லாம் நல்லபடி முடியும் என்றார் தலைமை மடையர் ராயர்.
இரண்டு இட்டலிகளையும் ஒரு நீர்த்தோசையையும் பிய்த்துக் கொஞ்சம் தின்று, உண்டதாக பேர் பண்ணினாள். ராயரே, நீர்த்தோசை மிக அருமை என்று பாராட்டி விட்டுக் கோட்டையின் முன் மண்டபத்துக்கு நடந்தாள்.
பிரதானிகளும் உப பிரதானிகளும் தளவாய்களும் சென்னபைராதேவி வருகைக்காக அங்கே காத்திருந்தார்கள். சடங்கு சம்பிரதாயத்துக்காகக் கூடிய சபை அது. எனினும் தோல்வியில் துவண்டவர்களாக யாரும் இல்லை என்பதை சென்னா ராணி கவனித்தாள்.
மனதளவில் இருந்தாலும் வெளியே காட்டாத பாங்கு அவளுக்கு ஆறுதலைக் கொடுத்தது. அரியணைக்கும் வேலைப்பாடு அமைந்த நாற்காலிக்கும் நடுவில் அமைந்த ஆசனத்தில் சென்னபைராதேவி அமர்ந்தாள்.
ஜயவிஜயீபவ என்று முழக்கங்கள் எழுந்தன. வாசலில் முரசறைவதும், மங்கல வாத்தியம் இசைப்பதும் இல்லாத அமைதி.
சென்னபைராதேவி பிரதானிகளின் வரிசையில் தேடினாள். நஞ்சுண்டய்யா பிரதானி எங்கே?
பிரதானி சந்த்ரப்ரபு எழுந்து மரியாதையாக வணங்கி, நஞ்சுண்டய்யா-வருக்கு ராத்திரி முதல் நெஞ்சுவலி அதிகமாகி கைகால்கள் சுண்டி இழுத்து படுத்த படுக்கையாக இருக்கிற தகவலைப் பகிர்ந்து கொண்டார். உடம்பு உஷ்ணமாகி ஜ்வரமும் பீடித்திருப்பதாகச் சொன்னார் சந்த்ரா.
குதிரைகளில் இருந்து மனுஷர்களைப் பீடிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளின் நோயுண்டாக்கும் செயல் இது என்று பின்வரிசை உப பிரதானி ஒருவர் சொன்னார். நஞ்சுண்டய்யா குதிரை ஏறி எங்கும் போகவில்லையே. இன்னொரு உப பிரதானி சொல்ல, பிரதானிகள் மௌனமானார்கள்.
நடந்து முடிந்த சிறு யுத்தத்தில் தளவாய்களையும் ஒன்றிரண்டு சேனாதிபதிகளையும் தவிர பிரதானி, உப பிரதானி அளவில் யாரும் போரிடவோ, குதிரையேறி அரசுப் படைகளுக்கு ஆதரவும், துணிவும், ஊக்கமும் தரவோ வரவில்லை என்பதைத் தினசரி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது சென்னாவுக்கு நினைவு வந்தது.
நஞ்சுண்டய்யா எழுபதைத் தொடும் முதியவர். அவர் குதிரையேறி விழுந்துவைப்பார். வேண்டாம். மற்றவர்கள்?
அரசுப் படை தோற்றதற்கு அது காரணம் இல்லைதான். என்றாலும் இனி அதை எப்போது கேட்பது?
என்ன பேசப் போகிறோம்? சென்னா அவையைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டுக் கேட்டாள். அமைதிதான் பதிலாக வந்தது.
போன மாதம் விளைந்த மிளகு நீர்ச் சத்து கூடியதால் தரம் சற்றே குறைந்து, லிஸ்பனில் இருந்து விலை குறைப்பை எதிர்பார்க்கிறதை சந்த்ரப்ரபு பிரதானி சொல்ல ஆரம்பித்தார். ஏதாவது பேச வேண்டும் என்ற நினைப்பு தெரிந்தது அவர் குரல் நடுங்கப் பேசியதில்.
வெளி மண்டபத்தில் ஓவென்று பெரும் சத்தம்.