An excerpt from my forthcoming novel MILAGU
சென்னபைராதேவி அணிலுக்காகக் காத்திருந்தாள்.
ராத்திரியில் வரும் அணில் அது. சென்னோவோடு தான் இங்கே எங்கேயோ தங்கி இருக்கிறது.
இந்த அணிலோடு அதன் பெண்டாட்டி ஒரு பெண் அணில் உண்டு. பொழுது சாய்ந்த பிறகு வெளியே வராது அது. சதா கர்ப்பத்தில் வயிறு புடைத்து ஊர்ந்து கொண்டிருக்கும் பெண் அணில் பிரசவித்துக் கொஞ்ச நாள் குழந்தை அணில்கள் ஒன்றிரண்டு அப்பா அணிலோடு கூடவே வால் பிடித்துப் போகும். அவையும் ராத்திரியில் காட்சி கொடுக்க மாட்டாதவை.
குஞ்சு அணில்கள் ஏதோ பேசி வைத்துக் கொண்ட மாதிரி திடீரென்று ஒருநாள் காணாமல் போய்விடும். அப்புறம் எப்போதாவது வாசலில் வாதுமை மரத்தில் நீண்டு வளைந்த கிளையில் குந்தி இருந்தபடி, பெரிய மனுஷ, பெரிய அணில்தனமாக, சௌக்கியமா என்று விசாரித்து விட்டு அவசர அவசரமாக ஓடும்.
இப்படி இதுவரை ஆறு முறை கர்ப்பம், பிரசவம், வீடு விட்டு நீங்குதல். ஒரு கர்ப்பத்துக்கும் அடுத்ததற்கும் இடையில் மூன்று மாதம் கிட்டத்தட்ட இடைவெளி இருப்பதை சென்னபைராதேவி கவனித்திருக்கிறாள். ஆக பதினெட்டு மாதங்கள், ஒண்ணரை வருடங்களாகி விட்டது சென்னா இங்கே வந்து.
ஆண் அணில் ராத்திரியில் வரும்போது இப்போது தடுமாறுகிறது. சுவரில் மோதிக் கொள்கிறது சமயா சமயங்களில். கண் பார்வை சரியில்லை. வயதாகிக் கொண்டிருக்கிறது.
என்றாலும் ராத்திரியில் சென்னபைராதேவி உண்ணக் கொண்டு வந்த தோசைகளில் ஒரு முழு தோசையை தட்டில் வைத்து இருப்பிடத்துக்குப் பின்னால் ஜன்னல் மேடையில் வைத்து விடுகிறாள் சென்னா. அணில் ஜோடிக்கு அது எதேஷ்டம்.
இட்டலியும் தோசையும் தவிர அணில்கள் ராத்திரி வேறு ஏதும் ஆகாரம் கழிப்பதில்லை என்பதால் சென்னாவும் ராப்போஜனமாக இந்த இரண்டு பலகாரங்களில் ஒன்றைத்தான் உண்ணுகிறாள்.
பகலுக்கு அரிசிச் சாதம் புளிக்குழம்போ மிளகுக் கூட்டோ சேர்த்து உண்பதில் பிரியமுண்டு அணிலுக்கு என்பதால் பகல் உணவை அதே ரீதியில் அமைத்துக் கொண்டிருக்கிறாள் சென்னா.
சில நாட்களில் ஜோடி சாப்பிடாமல் பட்டினி கிடக்கும். அப்போது வரக் காணாமல் பகலிலும் ராத்திரியிலும் சென்னா துடித்துப் போவாள்.
இன்றைக்கு ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் வந்து விட்டுப் போனது அணில். நேரம் சென்னபைராதேவிக்குத் தெரியாது. சாப்பாடு எடுத்து வருகிறவர்கள் சொன்னால் தான் உண்டு. அதுவும் சரியான நேரமா தவறா என்று அவளுக்குத் தெரியாது.
கெலடியில் வெங்கடப்ப நாயக்கரின் அரண்மனைக்குப் பின்னால் அதே வளாகத்தில் அவசர அவசரமாகக் கட்டப்பட்ட ஒரு சிறு வீட்டில் அவள் வசிக்கிறாள் என்றால் அதைவிடப் பெரிய பொய் ஏதும் இருக்க முடியாது. அந்த வீட்டில் ஒரு ஜன்மாந்திர கைதியாக கண்ணுக்குத் தெரியாத கற்பனை விலங்குகள் கையிலும் காலிலும் பூட்டி அவளை வைத்திருக்கிறார்கள்.
இங்கே யாராவது அவளைப் பார்க்க வருகிறவர்கள் தகவல் அறிவித்துத்தான் கெருஸொப்பா ஒண்ணரை வருடத்தில் பாழடைந்த நகரமாகி விட்டது என்பதை அறிந்து வெகுவாக விசனப் பட்டாள் சென்னா.
ஹொன்னாவரில் என்ன நடக்கிறது? அவளுக்கு அன்பான பிரதானி நஞ்சுண்டய்யா காலம் சென்று விட்டதாகப் போன மாதம் செய்தியோடு வெங்கடப்ப நாயக்கரே சென்னபைராதேவியை சந்திக்க வந்தார்.
ரஞ்சனா தேவி உடுப்பியில் அவள் தாய் வீட்டுக்குப் போய்த் தங்கியிருக்கிறாள். போன சித்திரையில் நேமி நாதனின் பரிசாக ஓர் அழகான குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்று தெரிந்து அதிகமான மகிழ்ச்சியில் நாள் முழுக்க இருந்தாள் சென்னா.
குழந்தைக்கு சென்னபைராதேவி என்று பெயர் வைத்ததுதான் சென்னா மகாராணிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவளுக்குத் தன் பெயரே பிடிக்கவில்லை. என்ன கண்டேன் என் வாழ்க்கையில் என்று அவள் தன்னைத்தானே சமயங்களில் உரக்கக் கேட்டுக்கொள்கிறாள்.
மிர்ஜான் கோட்டையில் வெங்கடப்ப நாயக்கரின் மகன் வெங்கட லட்சுமணன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறானாம். ஹொன்னாவரும், மிர்ஜானும், கோகர்ணமும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வெங்கடப்ப நாயக்கர் குடும்பத்துக்கு ஜெயவிஜயிபவ சொல்லித் துதித்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனவாம்.