An excerpt from my novel MILAGU
அனந்தம் அக்ஞாதம் அவர்ணநீயம்
ஈலோக கோளம் திரியுன்ன மார்க்கம்
அதின்கலெங்காந்து ஓரிடத்திருந்நு
நோக்குன்ன மர்தயன் கதயெந்தறிஞ்சு (நாளப்பாட்டு நாராயண மேனோன்)
ராத்திரியில் கேட்கும் கவிதை இது. நகர்ந்தபடி சொல்லப்பட்ட கவிதை.
வேம்பநாட்டுக் காயலில் இரவு நேரத்தில் அந்த மோட்டார் படகு நிதானமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. பிஷாரடி வைத்தியர் என்ற எழுபது வயதான பேராசிரியரும். அவருக்கு அடுத்ததற்கு அடுத்த தலைமுறை இளையோரான கல்பா, மருது, பகவதிக்குட்டி ஆகியோரும், திலீப் ராவ்ஜி, சாரதா தெரசா என்ற இரண்டு அறுபதுக்காரர்களும் சென்று கொண்டிருக்கும் ராத்திரிப் படகு யாத்திரை.
ராத்திரி படகு யாத்திரை என்றால் எனக்கு ராப்பாடி நினைவு வருது. ஒன்றைக்கூடக் காணோமே என்றாள் கல்பா.
ராப்பாடி என்றால்? பகவதிக்குட்டி கேட்டாள். ராப்பாடி என்றால் nocturnal singing bird என்றான் மருது. ராத்திரியில் பறந்து இரைதேடும், பாடும் பறவை. மருது அடுத்துக் கூறினான்.
எனக்கு குமாரன் ஆசான் நினைவு வருகிறார் என்றார் பிஷாரடி. கவிதையா என்று கேட்டாள் கல்பா.
பிஷாரடி சொன்னார் –
பௌர்ணமிக்கு முந்திய ராத்திரி காயலில் போகும் நேரத்தில் கவிதையும் இருந்தால் இன்னும் நன்றாகவே இருக்கும் தான். குமாரன் ஆசான் கவிதை நினைவு வருதோ என்னமோ, ராத்திரி இப்படி படகேறி பல்லண நதிப் பயணமாக ஆலப்புழை போகும்போது படகு கவிழ்ந்து மகாகவி குமாரன் ஆசான் இறந்தது நினைவு வருகிறது.
பிஷாரடிதான் இந்த ராத்திரிப் படகுப் பயணத்தை ஏற்பாடு செய்தவர். கல்பாவின் சகோதரன் அனந்தனும் வரலாம் என்று சொல்லியிருந்தார். அனந்தனால் வரமுடியாமல் போய்விட்டது.
கல்பாவின் தந்தை திலீப் ராவ்ஜியும், மருதுவின் அம்மா சாரதா தெரிசாவும் நாங்களும் வருவோம் என்றார்கள். வேண்டாம் என்று தவிர்க்கப் பார்த்தார் பிஷாரடி. வருவேன் என்று ஒரே பிடிவாதம். சரி வாங்க.
பகவதிக்குட்டியின் அப்பா (மருதுவின் தந்தையும் கூட) சின்ன சங்கரன் ‘போட் யாத்திரை ஒழிவாக்கணும் அபகடம் பற்றும்’ என்று எந்தக் காலத்திலோ பகவதிப் பாட்டியிடம் கற்ற மலையாளத்தில் ஜாக்கிரதையாக வார்த்தை கோர்த்துச் சொன்னார். அவர் வரவில்லை
நாளப்பாடு நாராயண மேனோன் கவிதையை அதைப் படிப்பதற்கே உரிய பாட்டுக்கும் பேச்சுக்கும் இடைப்பட்ட குரல் எடுத்துச் சொன்னார் அவர் – அனந்தம் அக்ஞாதம் அவர்ணநீயம்.
கவி சொன்னது பூமி என்ற இந்தச் சிறு கிரகத்தின் இயற்கை பற்றி.
பிஷாரடி தொடர்ந்தார் –
சூரியனைச் சார்ந்து சுழலும் பத்து கிரகங்களில் ஒன்றான பூமியில் இருக்கும் நாம், நம் பூமி, பூமி அடங்கிய சூரிய மண்டலம் Solar System, சூரிய மண்டலம் இடம் பெற்ற பால்வீதி என்ற விண்மீன் மண்டலம் Milky Way Galaxy, இன்னும் பலப்பல விண்மீன் மண்டலங்கள்.
அத்தனையும், எல்லாமும், எப்போதும் இடம் பெற்ற பிரபஞ்சம் Universe.
இந்தப் பிரபஞ்சத்தின் தூசிக்குத் தூசியான தூசிக்குத் தூசியான உயிர்கள் நாம்.
இந்தப் பிரபஞ்சம் போல் இன்னும் எத்தனை பிரபஞ்சம் விண்வெளியில் உண்டோ அதிலெல்லாம் எத்தனை எத்தனை சூரிய மண்டலமோ, அந்தச் சூரிய மண்டலங்களில் எவ்வளவு பூமிக் கிரகமோ, அவற்றில் நம்மின் பிரதிகளாக எத்தனை நானோ, நீங்களோ.
அவர்கள் நம்மின் பிரதிகளா, நாம் அவர்களின் பிரதிகளா? எவற்றின் பிரதிகள் நாம்?
இந்தப் பால்வீதிப் பிரபஞ்சத்தில் நாம், நாம் என்றால் பிஷாரடியான நானும், மருது, கல்பா, கொச்சு பகவதி, திலீப் ராவ்ஜி, தெரசாம்மா ஆகிய நீங்களும் இப்போது, இந்தப் பௌர்ணமி இரவில் வேம்பநாட்டுக் காயலில் படகில் போய்க் கொண்டிருக்கிற இதே நேரத்தில் வேறு வேறு பிரபஞ்சங்களில் நம்மின் பிரதிகள் படகோட்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள் அல்லது இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது காதைக் குடைந்து கொண்டிருப்பார்கள் அல்லது வேறேதாவது செய்து கொண்டு உயிர்த்திருப்பார்கள். அல்லது பிறக்கக் காத்திருப்பார்கள். அல்லது ஆடி முடித்து அடங்கி ஒன்றுமில்லாமல் போயிருப்பார்கள்.
இதே நேரம் என்று சொன்னேனா, காலமும் கன பரிமாணம் போல் ஒரு பரிமாணமாக, நான்காவது பரிமாணமாகத் திகழ்வது.
இன்றைய நாம், நேற்றைய இன்னொரு பிரபஞ்சத்து இன்னும் பல நாம், நாம் இல்லாத ஐநூறு வருடம் முந்திய பௌதீக வெளி என்று எல்லாமே, எல்லாரும், எப்போதும் வேறுபாடுகளோடு இந்தக் கணத்தில் உறைந்திருக்கலாம்.
பூமியின் குழந்தைகளான நாம் இந்த மாற்று பிரபஞ்சங்களை (alternative universe) பலவான பிரபஞ்சங்களாக (multiple universes – multiverse) உணர்ந்ததுண்டோ! அவற்றின் இருப்பு சாத்தியமா என்று கூட அறியாமல், ஒரு ஓரத்தில் அறிவியல் ஆய்வு, மற்ற ஓரத்தில் புனைகதையில் கற்பனைச் சித்தரிப்பு என்று அம்பலப்புழை பால் பாயசத்தோடும், மில்க் சாக்லெட்டோடும் கலந்துகட்டியாகச் சுவைத்துக் கொண்டிருக்கிறோம்.
மாற்று பிரபஞ்சங்கள், கணிதமொழியில் சொன்னால் ten to the power of ten to the power of sixteen எண்ணிக்கையில் இருக்கிறதாம்.
கிட்டத்தட்ட கணக்கற்றவை. அநந்தம்.
வேறு யாரோ எதுவோ, நம் பிரபஞ்சத்திலோ வேறேந்தப் பிரபஞ்சத்திலோ, நம்மில் சிலரை, அவர்களின் பிற பிரபஞ்சப் பிரதிகளை, நான்காவதான கால வெளியில், முன்னும் பின்னும் அசைத்து இயக்கி, என்ன ஆகிறதென்று பார்க்கிறார்கள். அதுதான் இப்பொழுது நடக்கிறது.
முக்கியமாக கல்பா மற்றும் அனந்தனின் தாத்தாவான பரமன் என்ற பரமேஸ்வர அய்யரை இப்படிக் காலவெளியில் இயக்குகிறார்கள்.