An excerpt from my forthcoming novel MILAGU
படகில் முதலில் வேனும் தொடர்ந்து காரும் உருண்டு ஏறியது. படகு சைரன் ஊதிக் கிளம்பியது.
ஸ்ராங், எல்லோரும் ஒரே பக்கம் உட்காராதீர்கள் பிரிந்து உட்காருங்கள் என்று சத்தமாக மலையாளத்திலும், கன்னடத்திலும், கொங்கணியிலும் சொன்னான்.
ஏன் அப்படி என்றாள் தெரிசா.
Load Balancing என்று சுருக்கமாகச் சொன்னாள் கல்பா. சரிதான் என்றாள் பகவதி. அறிவியலார் குழுக்குறி போல இருக்கு என்று திலீப் ராவ்ஜி கல்பாவைக் கேட்டார். அப்படித்தான்னு வச்சுக்குங்களேன் என்றாள் கல்பா.
அக்கரையில் என்ன இருக்கு?
சாரதா தெரிசா கேட்டாள்.
மாலை மங்கும் நேரம் பக்கவாட்டுத் தோற்றமாக அவள் ரொம்ப அழகாக இருக்கிறதாக பகவதிக்குத் தோன்றியது. அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
போட் பயணத்துக்கு எல்லாம் பயப்படக் கூடாது என்று தெரிசா வெள்ளந்தியாகச் சொல்ல, பகவதி சிரித்து ஓயவில்லை.
அக்கரையில் நாம் இன்று ராத்திரி தங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. நாலு ரூம் இருக்கு. நாலையும் நாம் புக் பண்ணிட்டோம் என்று பிஷாரடி வேனுக்குள் அறிவித்தார்.
அப்பா, கெருஸொப்பா இங்கேயா இருக்கு?
திலீப் ராவ்ஜி பரமனைக் கேட்டார். அவர் மௌனமாக தாங்குகோல்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
திலீப் அவசரமாக இறங்கி அவர் கீழே தாங்குகோல்களை ஊன்றி வெளியே வர உதவி செய்தார்.
தரை மெல்லிய கீற்றாக இறங்கும் இருட்டில் கல்லும் செடியும் கொடியுமாக சமதளமின்றி இருந்தது. எறும்புகள் ஓரமாகப் புற்று வைத்து அமைதியான படையாக மெல்லிய வெளிச்சத்திலும் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.
கடிக்குமே என்று தெரிசா இறங்க தயக்கம் காட்டினாள்.
அது கிட்டே போகாமல் நாம் பாட்டுக்கு இன்னொரு ஓரமாக நகரந்தா ஒண்ணும் பண்ணாது என்றார் வேன் ஓட்டி வந்த ட்ரைவர் பாலன்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பரமனின் தாங்குகோல் ஒன்று எறும்பு வரிசையில் ஊன்றிக் கடகடத்தது.
ஐயோ எறும்பு மேலே கட்டைக்காலை வச்சுட்டேனே என்று பரமன் நடுநடுங்கிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்தப் பெரிய எறும்புகள் சின்னச் சின்னதாகச் சிறகு விடர்த்தின.
அவை நமநமநம என்று கூட்டாக இறகு தாழ்த்தி உயர்த்தி மேலே எழும்பிப் பறந்தன. எந்த நேரமும் அவை பெரும்படையாக மேலே இறங்கிக் கடிக்கத் துவங்கும் என்ற நடுக்கத்தோடு எல்லோரும் நின்றார்கள்.
அணி அணியாக மேலே எழுந்து அவை தரைக்கு ஆறடி உயரம் பறந்தபோது இவர்களையும் வாகனங்களையும் தவிர்த்துப் போனதைக் கண்டார்கள்.
அபூர்வமாக ஒன்று இரண்டாக, சட்டை காலரிலோ புறங்கையிலோ இறங்கியவை பரம சாதுவாக ஊர்ந்தன.
யாரும் சத்தம் போடவோ அதிகமாக உடல் அசைத்து நடக்கவும் வேணாம். இதெல்லாம் இப்போ போயிடும்
ட்ரைவர் பாலன் சொன்னபடி இரண்டு நிமிடத்தில் எறும்புப் படை காணாமல் போனது.
எல்லா எறும்பும் இப்படி சாதுவா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனாலும் ஒண்ணு சொல்லலாம். கடிக்கற எறும்பு கட்டாயம் இறக்கை விரிச்சுப் பறக்காது.