An excerpt from my forthcoming novel MILAGU
புது இடம் கொஞ்சமாவது பழகினால் அல்லாமல் இயல்பாக இருக்க முடியாது என்பதால் பரமனைத் தவிர மற்றவர்கள் அறை அறையாகப் புகுந்து புறப்பட்டு, இருட்டு வானத்தில் அடர்த்தியாகத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து வியந்து கொண்டு குரலைச் சற்றே உயர்த்தி இது சகஜமான சூழ்நிலை என்று அவரவர்க்கு அவரவரே கற்பித்து அதுவும் இதுவும் பேசியபடி இருக்க நிலா சகல சௌந்தர்யத்தோடும் வானத்தில் புறப்பட்டது.
பௌர்ணமியா இன்னிக்கு என்று பகவதிக்குட்டி கேட்டாள்.
பௌர்ணமிக்கு இன்னும் மூணு நாள் இருக்கே என்றாள் தெரிசா.
அப்பாவை எழுப்பி சாப்பிட வைக்கலாமே. தெரிசா சொன்னாள்.
பரமன் பாதி நித்திரைக்கு மாறி இருந்தார். அவர் வாய் முணுமுணுத்துக்கொண்டே இருந்ததை பிஷாரடி கவனித்தார். கெருஸொப்பா என்று திரும்பத் திரும்பச் சொன்னார் அவர் உறக்கத்தில்.
திலீப் ராவ்ஜி அவருக்கு ஊட்ட நினைத்த சப்பாத்தியை வாயில் வைத்திருந்து உமிழ்ந்து விட்டார். துவையலை மட்டும் ஐந்து பெரிய ஸ்பூன், உறங்கியபடியே சுவைத்து உண்டார்.
மிளகு போடவில்லை என்று யாரிடமென்று இல்லாமல் பொதுவான புகாரைச் சொல்லியபடி படுத்தவர் கெருஸொப்பா என்றபடி மறுபடி உறங்கினார்.
அவரை உறங்க விட்டு மற்றவர்கள் சேர்ந்து உட்கார்ந்து அந்த வினோதமான சப்பாத்தி தேங்காய்த் துவையல் ராச்சாப்பாட்டை கோகோ கோலா சகிதம் சுவைத்து உண்டார்கள்.
மருது கான்வாஸ் பையை காரில் இருந்து எடுத்து வந்தான். மெட்டல் டிடெக்டர் என்றான் உள்ளிருந்து எடுத்த இரண்டு உலோகக் கண்டுபிடிப்பான் கருவிகளை நாற்காலியில் வைத்து.
நாளைக்கு விடிந்து எழுந்து கெருஸொப்பா நகரம் சிதிலமடைந்து என்ன இருக்கோ அதை எல்லாம் பார்க்கறோம். பரமன் தாத்தாவுக்கு அதைப் பார்க்கும்போது பழைய கெருஸொப்பா நினைவு வரலாம். இதுவரை அதிகமாக அகழ்வு செய்யாத பூமி இது. தரைக்கு ஆழத்திலே புதைத்து வைத்த புராதனப் பொருளாக, ஏதாவது கிடைக்கலாம். மெட்டல் டிடெக்டர் அதுக்குத்தான்.
அப்படிக்கூட புதையல் கிடைக்குமா? கல்பா கேட்டாள். –
எல்லாம் பரமன் நினைவு வைத்திருப்பதைப் பொறுத்து.
பிஷாரடி தேங்காய்த் துவையல் புரட்டிய சப்பாத்தியை ரசித்து உண்டபடி சொன்னார்.
என்ன எல்லாம் இருக்கு பார்க்க என்று கல்பா கேட்டாள். மருதுவுக்கும் இப்போது ஆர்வம் பற்றிக் கொண்டது.
நாலைந்து கட்டிடங்கள் சிதிலமடைந்து, அதெல்லாம் நானூறு வருஷம் முன்பு மனுஷர் வசித்த சிறு மாளிகைகளாக இருக்கலாம். விளக்குத் தூண் தெருச் சந்திப்பில் இருந்து விழுந்ததாக இருக்கலாம். அப்போது அங்கே சந்தித்துப் பிரியும் சாலைகள் இருந்திருக்கலாம். அப்புறம் சிதிலமடைந்து ஜ்வாலாமுகி கோவில். மகா முக்கியமாக சதுர்முக பஸதி, கிட்டத்தட்ட சிதிலமடையாமல்.
சதுர்முக பஸதின்னா? தெரிசா கேட்டாள்.
நாலு கதவு நாலு திசையிலும் இருக்கப்பட்ட சமணக் கோவில். நாளைக்கு எல்லாம் பார்க்கப் போறோம். பார்க்கக் கிடைக்காவிட்டாலும் பழைய நினைவுப்படி கெருஸொப்பாவை அங்கே இருந்தவர்ங்கிறதாலே பரமன் வாய் வார்த்தையாக விரிவாகச் சொல்வார்னு எதிர்பார்த்துத்தான் இங்கே வந்திருக்கோம். புதையல் ஏதும் கிடைத்தால் சர்க்காருக்குத் தரணும். இங்கே வர்றதுக்குக் கொடுத்த அனுமதிக் கடிதத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கு. கிடைக்கும். கொடுப்போம்.
பிஷாரடி சொல்லிவிட்டுக் கை அலம்பப் போனார். உண்ட களைப்பு தீர சற்றுப் பக்கத்தில் நடந்து விட்டு வரலாம் என்று மருது புறப்பட்டான்.
போய்த்தான் ஆகணுமா என்று திலீப் ராவ்ஜி தன் மெல்லிய மறுப்பை வெளியிட்டார்.
மலையும் வனமுமாக இன்னும் இயற்கை விடைபெறாத பிரதேசம். பண்படுத்தப்படாத தரை, மேலே நட்சத்திரங்களும் சந்திரனும் மூடிய ஆகாசம். பார்த்தால் போதாதா, நடந்து அந்த அமைதியை ஏன் குலைக்கணும்? அப்பா அப்படி நினைக்கறார் என்றாள் கல்பா.
நான் இவ்வளவு நேர்த்தியாக கோவையாக நினைக்க மாட்டேன். ஆனாலும் கிட்டத்தட்ட இதெல்லாம் நினைவுலே வந்தது என்றார் திலீப் ராவ்ஜி.
ராவ் அங்கிள், ஆறு பேட்டரி செல் போட்ட பெரிய டார்ச் நாலு வச்சிருக்கோம். டிரைவர் பாலனுக்கு இது ரொம்பப் பழக்கமான இடம். நாளைக்கு பார்க்கறபோது கெருஸொப்பா இன்னும் தீர்க்கமாக அர்த்தமாகணும்னா இன்னிக்கு ராத்திரி அதில் கொஞ்சமாவது பார்த்துவிட்டு வரணும்னு கிளம்பினேன் என்ற மருதுவுக்குப் பின்னால் மற்ற எல்லோருமே நின்றார்கள்.
பரமன் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதால் அவரை அப்படியே உறங்க விட்டு கதவைச் சார்த்தினார் பிஷாரடி.
தனியா இருக்கணுமே அப்பா என்று கவலைப்பட்டார் திலீப் ராவ்ஜி.
அவர் என்ன குழந்தையா, யார் எங்கே எப்போது இருக்கறாங்கன்னு எல்லா பிரபஞ்சத்திலும் தகவல் இருக்குமே என்று பிஷாரடி சொல்ல, அதை ஏற்கனவே அவர் சொன்ன தேஜாவூ திலீப் ராவ்ஜிக்கு.
இந்த பிரவேச அனுமதி ராத்திரியிலே இந்தப் பிரதேசத்தில் அலைந்து திரிய அனுமதி கொடுக்கலே என்றார் கடைசியாக திலீப்.
எந்த நேரத்தில் இங்கே நடக்கலாம்னு சொல்லாததாலே இருபத்து நாலு மணி நேரமும் பிரவேசிக்க, சுற்ற அனுமதி உண்டுன்னேன் என்றான் மருது.
டார்ச் விளக்குகள் தரையில் பரந்த ஒளிவட்டங்கள் இட்டு நகர்ந்து போக, பிஷாரடி முன்னால் நடந்தார். வடக்கில் கை சுண்டியபடி மற்றவர்கள் பின்னால் மெல்ல வருவதால் அவர்கள் வந்து சேரச் சற்றே நின்றார் அவர்.
ஏனோ அவருக்கு இல்லாத நினைவெல்லாம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அதெல்லாம் அவர் அனுபவமும், எண்ணமும் சார்ந்து எழுந்த நினைப்புகள் இல்லை. அடுத்தவர் டயரியைப் படித்துத் தன்னை அவராக உணரும் விசித்திரமான மனநிலையில் அவர் இருந்தார்.
கைக்கடியாரத்தில் நேரம் பார்த்தார். இரவு பதினொன்று.
மற்றவர்கள் வந்தபிறகு வடக்கில் கொஞ்ச தூரத்தில் சதுர்முக பஸதி இருக்கிறது. நாளை அங்கே ஒரு மணி நேரமாவது செலவிடுவோம். அங்கிருந்துதான் நம் கெருஸொப்பா நடைப் பயணம் தொடங்கும்.
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது பின்னால் இருந்து சத்தம்.
நாளைக்கு ஏன், இன்னிக்கு இப்பவே நடக்கலாம் வாங்க. நான் எல்லாம் காட்டித் தரேன் என்று பரமன் குரல்.
கட்டைக்கால்களை ஊன்றி நடந்தபடி பரமன். அவர் குரல் தெளிவாக இருந்தது. புதர் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அவர் நடக்க, அந்தப் பாதை இருப்பதை அப்போதுதான் கவனித்த மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். இது வாணியர் தெரு. தனபாலன் செட்டியார் மாளிகை இதோ நிற்கிறது. பரமன் கூறினார்.
ஆனா, இங்கே என்று ட்ரைவர் பாலன் ஏதோ இடைமறிக்க பிஷாரடி உஷ் என்று வாயில் விரல் வைத்து சும்மா இருக்கச் சொன்னார்.
ஒருவர் பின் ஒருவராகப் போய்க் கொண்டிருக்க, பரமன் சொன்னார் – நாங்கள் தினசரி தேங்காயெண்ணெயும் நல்லெண்ணெயும் இங்கே வாங்கித்தான் ஜயவிஜயீபவ இனிப்பு செய்ய எண்ணெய்ச்சட்டி காய வைப்போம்.
ரோகிணியம்மாள் மிட்டாய்க் கடையிலே என்று எங்கேயோ பார்த்தபடி பிஷாரடி சொன்னார்.
ஆமா, நான் தான் தலைமை மடையன். இது ரதவீதி. என் வீடு இங்கே தான் இருக்கு. அதோ அந்த மேற்கிலே நாலாவது, அதான் என் வீடு. என் பெண்டாட்டி ரோகிணி எனக்கு வாடகைக்குப் பார்த்துக் கொடுத்த வீடு.
அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு என்றார் பிஷாரடி முணுமுணுப்பாக.
ரொம்பவே. நேமிநாதன் இல்லேன்னா என்னை நல்லா வச்சிண்டிருப்பா. குழந்தை மஞ்சுநாத்தையும் தான்.
இங்கே கிழக்கே நடந்தால் கோவில் வீதி. ராத்திரியிலே கோவில் எதுவும் திறந்திருக்காதே. பரமன் சோகமாக நின்றார்.
நாளைக்கு பார்த்துக்கலாம் என்றார் வெட்டவெளியைப் பார்த்தபடி பிஷாரடி.
ஆமா, எங்கே ஓடிப் போகப் போறது எல்லாம் என்றபடி நடந்தார் பரமன். நின்றார். எல்லோரும் நின்றார்கள்.
திலீப் ராவ்ஜிக்கு அவர் சித்த சுவாதீனம் இல்லாத பிரகிருதியாக ஏதோ பிதற்ற, பின்னால் எல்லோரும் சிரத்தையாக வருவது அபத்தம் எனப் பட்டது.
இங்கே இருந்து பாருங்க எல்லோரும். இதுதான் சதுர்முக பஸதி.
அவர் காட்டிய வெளியில் நிலவொளியில் கம்பீரமான ஒரு கட்டிடம் எழுந்து நின்றது. நான்கு பக்கத்திலும் நான்கு கதவுகள் திறந்திருந்தன.
சமணக் கோவில். உண்மைக்கு நூறு வாசல் உண்டு. இது தான் சத்தியத்தை நோக்கி அழைத்துப் போகும் என்று மதமோ, இனமோ, மொழியோ இல்லை. எல்லாத் திசையில் இருந்தும் எல்லா நல்ல வழிகளில் பயணப்பட்டும் அதை அடையலாம். சதுர்முக பஸதி. நான்கு வாசல் கோவில். நான்கு வாசல் நான்கு திசை குறிப்பது. வாருங்கள். எல்லாக் கதவும் திறந்திருக்கிறது.
பரமன் இப்போது கூட்டத்துக்கு முன்னால் வந்திருந்தார். ஏதோ அசாதரணமான ஒரு சம்பவம் நிகழப் போவதாக எதிர்பார்த்து எல்லோரும் அவர் பின் நடந்தார்கள்.
எத்தனை அழகான சத்திய ஆலயம். பரமன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கட்டிடம் மெல்லச் சுழலத் தொடங்கியது.
நடுவில் அச்சு வைத்துச் சுழலும் சக்கரத்தின் மேல் அந்தக் கட்டிடம் நின்றிருந்தது. பஸதியின் உள்ளே ஒவ்வொரு வாசல் வழியாகவும் வரிசையாக பரமன் பிரதிகள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு நிமிடம் கெருஸொப்பா தெரு பஸதிக்குள் தட்டுப்பட்டது. ஒரு பரமன் குதிரை வண்டியில் வேகமாக நகரும்போது எதிரே அரச அலங்காரங்களோடு ஒரு அறுபது வயது மூதாட்டி கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பரமன் வண்டியை ஓரமாக நிறுத்த, வந்தவள் ‘நீர் வரதனா’ என்று அவரைக் கேட்டாள்.
இல்லை மகாராணி, நான் பரமன் என்கிறார். நானூறு வருடங்கள் உங்கள் காலத்துக்கு அப்புறம் பம்பாயில் ஜீவிக்கிறவன்.
பம்பாயா? தலைக்கு சுகவீனம் போல என்றபடி அந்த மூதாட்டி போகும்போது நான் தான் வரதன் என்று இளைஞனாக இருக்கும் இன்னொரு பரமன் பிரதி பஸதிக்குள் காட்சிப்படுகிறான்.
இளமையான அழகான பெண் ஒருத்தி, கோச்சில் வந்த அரசிதான் அது, நேர்த்தியான தோட்டத்தில் ஓடிவர வரதன் என்ற பரமன் பிரதி அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு இதழ் கலந்து நிற்கிறான்.
உம்மை நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நாளை கோகர்ணத்தில் நமக்குத் திருமணம். என் மகன் மஞ்சுநாத்துக்கு ஒரு பிரியமான அப்பா வேணும். எனக்கு ஒரு கணவன் வேணும். மிக்க அழகான சற்றே உயரம் குறைந்த முப்பத்தைந்து வயதுப் பேரழகி ஒரு பரமன் பிரதியை நெஞ்சில் தடவிச் சாய்ந்தபடி சொல்கிறாள்.
பால் மணம் மாறாத ஐந்து வயதுச் சிறுவனோடு பட்டாம்பூச்சிகளைத் துரத்தி ஓடுகிறான் ஒரு பரமன் பிரதி.
அப்பா அப்பா.
குழந்தை மஞ்சுநாத் குரல். சுழன்று போன ஒரு வாசல் பார்வையை அடைக்க அங்கிருந்து அப்பா அப்பா என்று மஞ்சுநாத் குரல்.
இன்னொரு வாசல் பார்வையை அடைக்க அங்கே இருந்து அப்பா அப்பா என்று மஞ்சுநாத் குரல். அடுத்த வாசலோடு ஓடி வருகிறான் மஞ்சுநாத்.
மஞ்சு வந்துட்டேண்டா.
பிஷாரடியின் கைப்பிடியை உதறிச் சுழலும் பஸதிக்குள் ஓடும் பரமனுக்கு இரு கால்களும் முழுமையாக இருந்தன.
அப்பா அப்பா,
திலீப் பரமன் பின்னால் பஸதிக்குள் சாடப் பார்க்கிறார். பிஷாரடியும் பாலனும் அவரை இறுகப் பற்றி நிறுத்த சதுர்முக பஸதி சுழற்சி நிற்கிறது.
நிலவொளியை அடர்ந்த மேகம் மறைக்க இருட்டில் அவர்கள் மௌனமாக வந்த வழியே மெல்ல நடக்கிறார்கள்.