ராமோஜியம் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி. நாவல் சென்னை புத்தகக் கண்காட்சி 2022 கிழக்கு பதிப்பகம் அரங்கில் கிடைக்கும்
முரட்டாண்டி சாவடி வந்தாகி விட்டது. அடங்கொப்.. துயுப்ளே பேட்டை வந்தாச்சு.
”துரை உங்களை உக்கார சொன்னார்” என்று பாரா காவல் வீரர்களின் தலைவன் கிரிமாசி பண்டிதன் சொல்லி விட்டுத் திரும்பிப் போனான்.
துரை விடிகாலையிலேயே இங்கே கிளம்பி வந்துவிட்டார் போல. கோயிலுக்குப் போய் பூசை வைக்கிற சீலத்தை என்ன காரணமோ இந்த வாரம் வேண்டாம் என வைத்திருக்கிறார். அவரா வந்தார்? வைகாசி மாத வெய்யில் விரட்டி அடித்திருக்கிறது அவரை தோப்பையும் துரவையும் தேடி.
நடுப்பகலுக்கு துரைசானி ஆகாரமும் குடியும் எடுத்துக்கொண்டு, கூடவே தோழிப் பெண்டுகளான நான்கைந்து துரைசானிக் குரங்குகளோடு வந்து சேர்வாள். அதுவரை துரைக்கு தனியாட்சி தான்.
ராமோஜி போய்ச் சேர்ந்தபோது, தியூப்ளே துரை உள்ளே இருந்து ரொட்டியைக் கடித்துக்கொண்டு திரை விலக்கி எட்டிப் பார்த்தார். வாய் நிறைய ஆகாரத்தை வைத்துக்கொண்டு ராமோஜியைப் பார்த்து இரு வந்துடறேன் என்று சைகை காட்டினார். முழுக்க முழுங்கிய பிறகு கூடாரத்துக்குப் பின்னால் கை காட்டினார். அசிங்கம், ஆபாசம் என்றார், பிரஞ்சு மொழியில். அங்கே என்ன இருந்தது அப்படிக் குமட்டலெடுக்க? கிழிந்து ஒட்டுப்போட்ட கூடாரத் துணிதான் ராமோஜிக்குக் கண்ணில் பட்டது.
கிரிமாசி பண்டிதன் ஓரத்தில் கைகட்டி நின்று முக வார்த்தையாகச் சொன்னது –
“துரையவர்களே, காலையில் நீங்கள் வந்த வழியிலே ஓரமாக குத்த வச்சிருந்த எட்டு பேரையும் கையும் காலும் விலங்கு போட்டு கூடாரத்துக்குப் பின்னால் உட்கார்த்தி வைத்திருக்கிறோம். குண்டி உலர்ந்து போச்சு. தண்ணீர் கொடுத்தால் கழுவிக்கொண்டு இன்னும் காத்திருக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். பக்கத்தில் போக முடியலை. நரகல் வாடை”.
கிரிமாசி பண்டிதனின் கண்ணில் புன்சிரிப்போ விஷயத்தின் கோமாளித்தனம் படிந்த பெருஞ்சிரிப்பை அடக்கிய பிரயத்னமோ தெரிந்தது.
துரையின் புகார் இது –
அவர் காலையில் நிம்மதியாக பொழுது போக இங்கே வந்தபோது, பிருஷ்டத்தைக் காட்டிக்கொண்டு இத்தனை பேர் வெட்டவெளியில் குத்த வைத்திருந்தால், அவர் இல்லாத நேரத்தில் இந்தப் பாதை முழுக்க குதங்கள் தானே கண்ணில் படும்? அதுவும் அவருக்குப் பிரியமான தியூப்ளே பேட்டையில் இந்த விபரீதம் நடந்தால், மற்ற இடங்களில் எப்படி இருக்கும்?
”முசியெ பெனுவா பியெ தூமா என்ற நம் மரியாதைக்குரிய தூமா துரை கவர்னராக இருந்த காலத்தில் இப்படி கடற்கரையில், சம்பா கோவிலுக்குத் தெற்கே உப்பாற்றங்கரையிலே மலஜலம் கழித்தால் ஆறு பணம் அபராதம் என்று சட்டம் போட்டது என்ன ஆச்சு?” துரை ஆவேசத்தோடு கேட்டார்.
ராமோஜிக்குப் புரியவில்லை தான் –
அவனவன் குந்தாணி குந்தாணியாக பேண்டு வைக்கவா ராஜபாட்டை போட்டு வில்லியநல்லூருக்கும் பாகூருக்கும் ஏன் கடலூருக்கும் கூட எந்த சிரமமும் இல்லாமல் போகவர வசதி செய்து கொடுத்தது? இவன்கள் தெருவில் குத்த வைக்காமல் தினசரி வெளிக்கு இருக்க வீட்டில் கக்கூசு அமைத்துக் கொள்ள என்ன தடசம் பற்றியது?
தியூப்ளே துரை ராமோஜியை துச்சமாகப் பார்த்துக் கையை தூரத்தைச் சுட்டி அசைத்துச் சொன்னார் –
”போய் அவங்க கிட்டே எடுத்துச் சொல்லிட்டு வாரும்.. இந்த தடவை மன்னிச்சு விட்டுடறேன்.. அடுத்த தடவை இந்த பிருஷ்டங்களை காட்டினால் ஆளுக்கு பத்து கசையடி, ஐம்பது பணம் அபராதம்.. இதை புதுச்சேரி பிரதேசம் முழுக்க நியமமாக ஏற்படுத்தினேன்”.
தன் அதிகார எல்லைக்குள் புதுசாக ஒருத்தன், தற்காலிகம் என்றாலும் சாமர்த்தியமாக ஆனந்தரங்கம் பிள்ளை பெயரைச் சொல்லிக்கொண்டு நுழைந்து அதிகாரம் செலுத்தலாச்சே என்ற கோபமும், வெறுப்பும் கிரிமாசிப் பண்டிதனின் பார்வையில் தெறித்துக் கடந்து போயின.
துரை அடுத்த வேகவைத்த முட்டையில் மிளகு கலந்தபடி இருக்க, ராமோஜி கூடாரத்துக்குப் பின்னால் போனான். கிரிமாசி பண்டிதன் உன்னத உத்தியோகஸ்தனாக அவனுக்கு முன் மேட்டிமையோடு நடந்து போனான்.
”நானே சொல்கிறேன். நீர் இதெல்லாம் பழகாதவர். அதுவும் ஒருநாள் கூத்துக்கு குண்டி அலம்பிவிட வந்தவர். சும்மா இரும். நான் பார்த்துக்கறேன்”.
”சிவசிவ. நான் பேசுகிறேன் என்று எங்கே சொன்னேன். துரை ஆக்ஞை பிறப்பிச்சார். நான் தலையாட்டினேன். அவசரம் என்று அடித்துப் பிடித்து ஓடி வரச் சொன்னதால் அல்லவோ வந்தேன்” என்றான் ராமோஜி.
கூடாரத்துக்குப் பின்னால் நின்றபடிக்கும் தரையில் உட்கார்ந்தபடிக்கும் பதினைந்து பேராவது இருந்தார்கள். அத்தனை பேருமா துரைக்கு பிருஷ்ட தரிசனம் செய்வித்தது? இல்லையாம், துரை புது உத்தரவாக யாரும் வெளிக்கு போகக்கூடாது என்று கிரமம் செய்த அரை மணி நேரத்தில் அங்கங்கே பிடிபட்டவர்களாம். கிரிமாசி பண்டிதனின் காலாள் காவல் படை அதிரடியாக அவர்களைப் பிடித்த வேகத்தை அவன் தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.
பிடிபட்ட எல்லோரையும் ஏன் முரட்டாண்டி சாவடிக்குக் கொண்டு வரணும் என்று அங்கே யாரும் கேட்கவில்லை. யாருக்குமே ஏனென்று தெரியாது.
“கேளுங்க. துரையோட உத்தரவு” அவர்களுக்கு முன்னால் நின்று கிரிமாசி பண்டிதன் பேசத் தொடங்கினான். தமிழ் சனங்களின் அசிங்கமான பழக்கம் எதெல்லாம் என்று என்று பட்டியல் போட ஆரம்பித்து பாதியில் மேலே எப்படி பேச என்று நிச்சயமாகத் தெரியாமல் நிறுத்திப் போட்டு ராமோஜியைப் பார்த்தான். நீ பேசு என்று அதற்கு அர்த்தம்.
தியூப்ளே துரை கருணை காட்டி அவர்களைத் தண்டனையில்லாமல் விட்டுவிட்ட நல்ல செய்தியில் ஆரம்பித்தான் ராமோஜி. ஆசனம் நனைந்திராத மற்ற சந்தர்ப்பமாக இருந்தால் அவர்கள் தகவலை ஏற்று வாங்கி கரகோஷம் செய்திருப்பார்கள்.
அந்தப் பதினைந்து பேருடைய பெயரும், நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு ஒரே லிகிதமாக எழுதி, விலாசமும் தொழிலும் பதிந்து வைக்கலாம் என்று கிரிமாசி பண்டிதன் சொன்னபோது, காகிதம் இருந்தால் துடைத்து சுருட்டிப் போட்டு போயிருப்போமே என்றான் அவர்களில் ஒருத்தன்.
அதுவும் நியாயம் தான் என்று ராமோஜி ஒவ்வொருத்தருக்கும் முக வார்த்தையாக இனி இப்படி செய்யாதீர் என்று சொன்னபோது அதில் ரெண்டு பேர் கூத்துக்கு மத்தளமும் மிருதங்கமும் இசைக்கிறவர்கள் என்றும் இன்னொருத்தன் புல்லாங்குழல் வாசிக்கிறவன் என்றும் தெரிந்தது.
அரியாங்குப்பம் பட்டாமணியக்காரர் மகளுக்குத் திரண்டுகுளி வீட்டு விசேஷத்தில் நேற்று ராத்திரி வினிகை (கச்சேரி) நடத்த வந்து திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்களாம். தடபுடலான நேற்றைய ராத்திரி விருந்து இந்தக் காலை நேரத்தில் வயிற்றோடு பிரியாவிடை பெற்று வெளியேற அவசரப்பட்டதால் உடனடியாகச் சாலையோரமாகக் குத்த வைத்ததாகச் சொன்னார்கள் அவர்கள் எல்லோரும்.
இன்னும் இரண்டு நாள் முதலியார்பேட்டை டேராவாம். பக்கத்தில் பாலையர் மட சத்திரத்தில் ஜாகையாம். சரி சந்திக்கிறேன் என்றான் ராமோஜி. எதற்கு சந்திக்கணும் என்று கேட்கவில்லை யாரும்.
அதற்குள் நாலு கடைகால் நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து பித்தளைச் சொம்போடு வைத்துவிட்டுப் போக ஏற்பாடு செய்தான் ராமோஜி. அவர்கள் கால் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டு, கொஞ்ச நேரம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் அனுப்பிவித்துக் கொண்டு போனார்கள்.
அதில் ஒருத்தன் மட்டும் இவ்வளவு தூரம் தண்ணியும், சொம்பும், தோப்பு நிழலும், வெற்றிடமும் இருக்கே, நான் போய்விட்டு வரட்டுமா என்றபடி தூரத்தில் மூலையில் உட்கார எழுந்து போனான்.
ராமோஜி திரும்ப கூடாரத்துக்கு வந்தான். கபே குடித்துக் கொண்டிருந்தார் தியூப்ளே.