காலையில் ஆரம்பித்தது உச்சிப் பொழுதுக்கு அப்புறமும் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பங்காளிகளை புஸ்தி மீசைக் கிழவன் சம்பாதித்து வைத்து விட்டுப் போயிருக்கிறான்.
புதுசாக மொட்டை போட்ட தலையில் நரம்பு புடைத்துத் தெரிய காதெல்லாம் முடியோடு கிழவனினின் மூத்த மகன் உட்கார்ந்திருந்தான். மீசையை மழித்து, மொட்டைத் தலையோடு அவன் ராஜாவின் அன்ன சாத்திரத்தில் ராத்திரிச் சாப்பாட்டுக்குக் காத்திருக்கும் பரதேசி போல் இருந்தான்.
அவனா பரதேசி ? தாமிரவருணிப் பக்கம் காணி காணியாக நிலம் நீச்சும் தென்னந்தோப்பும், வாழைத்தோட்டமும் வைத்திருக்கிறவன். எல்லாம் அவன் கட்டிய புலியடிதம்மம் பெண்பிள்ளை கொண்டு வந்தது. ராஜாவுக்கு அவள் எதோ உறவு முறையில் சகோதரமாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் அவருக்கு புலியடிதம்மம் சம்பந்தம் வாய்த்திருக்கும். சட்டமாக நிலத்தில் வேலையாட்களை விரட்டிக் கொண்டு, தோப்பில் தேங்காய் பிடுங்கிப் போடுவதைக் கணக்குப் பண்ணிக் கொண்டு முழங்காலுக்கு மேலே கட்டிய ஒற்றை வேட்டியும் மேலே தறித் துண்டுமாக நின்றிருப்பார்.
அரண்மனையில் உட்கார்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்வதை விட உசத்தியா என்ன அதெல்லாம் ?
இல்லை என்று உறுதியாகத் தலையசைத்து எதிர்த் திண்ணையில் உட்கார்ந்திருந்த மொட்டையனைக் கனிவோடு பார்த்தார் அவர்.
எல்லோருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய கடமைப்பட்டவர் அவர்.
கட்டலாமா ?
யாரோ கேட்டார்கள். மொட்டையன் தலையை ஆட்டுகிறான். உருமால் தலையில் ஏறுகிறது. வந்தவன் துக்கம் ஏற்பட்டது போல் முகத்தை வீங்க வைத்துக் கொண்டு எழுந்து கொட்டகையில் இட்டலி தின்னப் போகிறான்.
காலையிலிருந்து இதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பது அலுப்புத் தட்ட ஆரம்பித்தது ராஜாவுக்கு. எழுந்து கொஞ்சம் காலாற நடமாடி விட்டு வந்தால் என்ன ?
செம்மண் நிறத்தில் அலையடித்துக் கொண்டிருந்த நல்ல தண்ணி ஊருணி மனதில் வந்தது. ரம்மியமான பிரதேசம். போன தடவை இங்கே வந்தபோது புஸ்தி மீசைக் கிழவன் ஜீவியவந்தனாக இருந்ததால், ஒரு சாயங்கால வேளையில் குதிரையில் ஆரோகணிக்க வைத்துக் கூட்டிக் கொண்டு போய் வெகு வினோதமாகக் காட்டினான் அந்த நீர்நிலையை.
முரண்டு பிடிக்கும் குதிரையும், லகானைப் பிடித்தபடி கூடவே வந்த சிப்பாயும், ஊருணிக்குப் பக்கம் அனுமார்சாமி கோவிலும் அங்கே சுக்காக உலர்ந்த வடைகளைக் சணல் கயிற்றில் கட்டி சாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாகக் கொடுத்த கன்னட பாஷை பேசும் குருக்களும் நினைவில் வரத் தவறவில்லை.
எச்சில் படாமல் விண்டு வாயிலிட்டு வடைகளை ருசித்துக் கொண்டு, ஊருணியில் தண்ணீர் தூக்கிப் போன படி இருந்த பெண்களின் கால்களைப் பார்த்துக் கொண்டு இருட்டும் வரை உட்கார்ந்திருந்த அந்த இடத்துக்கு இன்னொரு முறை போய் வந்தால் என்ன என்று ராஜா யோசித்தார்.
தொரெ
குனிந்து வணங்கி ஒரு பணியாள் தாம்பாளாத்தில் வாழை இலை பரத்தி அதன் மேல் எதையோ வைத்து இன்னொரு இலையால் மூடிக் கொண்டு வந்து நீட்டினான்.
மேல் இலையை மெல்லத் தூக்கிப் பார்த்தார் ராஜா. லட்டு உருண்டை நாலும் கார சேவும்.
வக்காளி, சாப்பிட வச்சே ஒழிச்சுடுவானுங்க போல இருக்கே. அதுவும் முழுச் சைவமான பதார்த்தங்கள். எண்ணெய்ப் பலகாரங்கள். நொடிக்கொரு தரம் இப்படித் தின்றால் ஊரில் இருக்கப்பட்ட ரோகம் எல்லாம் எங்கே எங்கே என்று உடம்பில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்புறம் சந்ததியாவது விருத்தியாவது. வைத்தியன் மூத்திரக் கொல்லையில் இடது கையால் பறித்த கண்ட பச்சிலையையும் சாறு பிழிந்து பவ்யமாக வணங்கிக் குடிக்கக் கொடுப்பதை விழுங்குவதை விட மயானம் போவதே மேல்.
அந்தத் தட்டை நீட்டியவன் நீட்டியபடியே குனிந்து நின்றிருந்தான். வேண்டாம் என்று மறுக்கவும் மனம் இல்லாமல் ராஜா ஒரு லட்டை எடுத்து உதிர்த்து அசை போட ஆரம்பித்தார். கூட அந்த அனுமார்சாமி கோவில் வடை இருந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு வண்டியை உடனே சித்தம் பண்ணுங்கள். நல்ல தண்ணி ஊருணிப் பக்கம் போய் வர வேணும்.
ராஜா நேராகப் பார்த்துக் கொண்டு உத்தரவு செய்தார். யாராவது செய்து விடுவார்கள் என்று தெரியும்.
மூன்று லட்டு உருண்டைகளும் கால் வீசை கார சேவும் வாயில் அரைபட்ட பிறகு பின்னால் சத்தம் கேட்டது.
சாவுத் தீட்டு இருக்கும் போது சாமி கோவிலுக்கு யாராவது போவார்களா ? உங்களுக்கு ஏன் புத்தி இப்படித் தறிகெட்டுப் போகிறது ?
ராணிதான். பக்கத்தில் குனிந்து சொல்லவே, காதை உஷ்ணம் தகித்துப் போட்டது.
அது எனக்குத் தெரியாதா என்ன ? கோயிலுக்குள் எல்லாம் போக மாட்டேன். அந்த ஊருணிக் கரையில் கொஞ்சம் லாந்தி விட்டு வந்தால் உடம்புக்கு இதமாக இருக்கும். காலையில் இருந்து உட்கார்ந்து உட்கார்ந்து பிருஷ்டம் தேய்ந்து போயிடுத்து பெண்ணே.
சின்ன மைத்துனனின் பிள்ளைகள் அதற்குள் குதிரை வண்டியைச் சித்தம் பண்ணிக் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருந்தார்கள்.
விரசா வந்துடுங்க. துஷ்டிக்கு வந்தவர்கள் ஒருத்தொருத்தராக் கிளம்புவார்கள் இனிமேல். சொல்லிக் கொண்டு போக முடியாதில்லையா ? கண்ணசைத்து உங்களின் மேலான உத்தரவு இல்லாமல் அவர்களெல்லாம் பிரயாணம் கிளம்புவது உசிதமாக இருக்காதே.
பக்கத்தில் யாராவது சூழ்ந்து நிற்கும்போது ராணி தனக்குரிய மரியாதையைத் தரத் தவறுவதில்லை என்ற ஆசுவாசத்தோடு அதெல்லாம் நான் பாத்துக்கறேன் என்பது போல் கையை ஆட்டியபடி ஓரடி நடந்தார் ராஜா. குடுகுடுவென்று யாரோ முன்னால் ஓடி வந்து அவருடைய பாதரட்சைகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்.