எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ?
பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள்.
ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு வயிறு கிழிஞ்சு போகும். ஆனாக்க என்ன ? கன்னிப் பொண்ணுகள் ராத்திரியில் அம்பலத்துலே நிக்கக் கூடாதுன்னு வீட்டைப் பாக்க நெட்டோட்டம் ஓட வச்சுடுறதுதானே பதிவு ?
கன்னி கழியாத பெண்களுக்கு அம்பலமும் கூட இருட்டி வெகுநேரம் ஆனபிறகு பத்திரமான இடம் இல்லை. மூல மூர்த்திக்கு நைவேத்தியம் செய்து அப்புறம் நிர்மால்யதாரியான பக்க தேவதைக்கும் படைத்தது போக உண்டான மிச்சத்தை யாசித்துக் கொண்டு அங்கே பலிக்கல் பக்கம் பூதங்கள் வந்து நிற்கும். வழியிலே நடக்கும்போது பிரேத உபாதைகள் கன்னியகை என்றால் எங்கே எங்கே என்று ஓடி வந்து ஒண்ட இடம் பார்க்கும். கல்யாணம் திகைந்த பொண்ணு என்றால் இன்னும் இஷ்டம்.
நாணிக்கு முறைச் செக்கன் எட்டுமானூரிலிருந்து வரப் போகிறான். வேளி கழித்து அவளுக்கு இடம் மாற்றம் வருவதற்கு முன் பகவதிக்குட்டி புகையிலைக் கடைக்காரனைக் கல்யாணம் செய்து கொண்டு பாண்டிக்குக் குடிபோய்விடுவாள்.
புகையிலைக் கடைக்காரனோடு படுத்துப் பிள்ளை பெத்துக்கப் போறே. நாளைக்கு அதுகளுக்குத் தலையிலே வெளிச்செண்ணெய் புரட்டிக் குளிப்பாட்டினாலும் எட்டு ஊருக்கு புகையிலை வாடை தான் அடிக்கும் பாரு.
நாணி அம்பலத்துக்கு வரும்வழியில் அவளைக் களியாக்கிக்கொண்டு வந்தாள்.
ஆமா, உன்னோட நம்பூத்ரிக்கு ஹோமப் புகை நெய்வாடையும் சமித்து வாடையுமா மணக்கப் பிள்ளை பெத்துப் போடப்போறே. நான் புகையிலை வாடையோட பெத்தா என்ன குறஞ்சுது சொல்லு.
பகவதி அவளை அடிக்கக் கையை ஓங்க நாணி வரப்புகளுக்கு நடுவிலே குதித்துக் கொண்டு ஓடினாள்.
ஆக, அரசூர்ச் சங்கரய்யன் பகவதியைக் கூடிய சீக்கிரம் கைபிடிக்கப் போகிறான். அது நடக்குமோ இல்லை அவ்வளவுதானோ என்று இழுபறியாகி இப்போது தான் லிகிதம் வந்து சேர்ந்திருக்கிறது. நிச்சயித்த தேதியில் நிச்சயித்தபடிக்குக் கல்யாணம் வைத்துக் கொள்ளப் பூரண சம்மதம் என்று சுப்பிரமணிய அய்யர் கையொப்பிட்டு அனுப்பிய கடிதத்தை நேற்றைக்கு தமையன் துரைசாமி அய்யன் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து உரக்கப் படித்தபிறகு பகவதிக்கு நிலைகொள்ளவில்லை.
வீட்டுக்கு மூத்த பிள்ளை இப்படி பகவதி அங்கே படி ஏறி வரும்போது போய்ச் சேர்ந்திருக்க வேண்டாம். வீடே துர்ச்சொப்பனம் போல பற்றி எரிந்து இல்லாமல் போயிருக்கவும் வேண்டாம். ஆனால் அதற்கு பகவதிக்குட்டி என்ன செய்ய முடியும் ? அவள் பார்க்காத அந்த மூத்தானையும், அரண்மனைக்குப் பக்கத்து மச்சு வீட்டையும் நினைத்து ரெண்டு சொட்டுக் கண்ணீர் வடிக்க முடியும். அவளை நிச்சயம் செய்த அப்புறம் நடந்ததாக இருக்கட்டுமே. அவளால் இல்லை அந்த அசம்பாவிதம். பகவதி ஜாதகம் எல்லா விதத்திலும் தோஷமில்லாதது என்று அரசூரில் இருந்து வந்த அய்யங்கார் ஒருத்தர் ஏகப்பட்ட சோழிகளை உருட்டி சிக்கலான கணக்கெல்லாம் போட்டுச் சொன்னதாக தமையன் பிரஸ்தாபித்தது உண்மைதானே ?
அந்த ஜோசியர் துரைசாமி அய்யன் வீடு கூட பிரேதபாதைக்கு உட்பட்ட இடத்தில் இருப்பதாகவும், அதை நிவர்த்திக்க யந்திரம் நிர்மாணித்துத் தருகிறதாகவும் சொன்னார். உடனடியாக முடியாது. கல்யாணத்துக்கு வரும்போது கொண்டு வருகிறேன் என்று கொஞ்சம் முன்பணமும் வாங்கிப் போயிருக்கிறார் அவர். கையோடு செய்து கொடுத்திருந்தால் சிநேகா மன்னியின் தகப்பனார் இப்படிக் கோழி றக்கை மாதிரிப் பறந்து வெடிவழிபாட்டு இடத்தில் விழுந்து இல்லாத கூத்தெல்லாம் பண்ணியிருக்க மாட்டார்.
நாணி அந்த வயசன் பறந்ததைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்களில் ஒருத்தி.
பாவமாக்கும் அந்தக் கிளவன். தன்னேர்ச்சயா எவ்விப் பறந்தது மாத்ரம் இல்லே. எங்களோட மனை நம்பூத்ரிகள் மூத்ரம் ஒழிச்சுட்டு வர்ற போது சகலருக்கும் கிடைக்கிற மாதிரி சர்வ தர்சனம் வேறே. இது ஆகாசத்துலேருந்துங்கிறது அதிவிசேஷம். பாரு, நீ சரியாச் சாதம் போடலேன்னா அந்தப் புகையிலைக் காரனும் பறந்துடுவான். இடுப்புலே கயறைக் கட்டி வச்சுக்கோ அவனை