வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s lover who happens to be the mistress of the Spanish dictator and his lust for Achilles, the Greek warrior revived from the pages of an ancient text, is more in the Latin Americal genre of..’ என்று ஆரம்பித்து இதெல்லாம் சகஜம்’பா தோரணையோடு எழுதிக் கொண்டு போகலாம். ’அம்மா இன்னிக்கு செத்துப் போனாள். இல்லே அது நேற்றா?’ என்று ஆல்பர்ட் காமு எழுதிய ‘அந்நியன்’ கதைத் தொடக்கம் எத்தனை கட்டுரைகளுக்கு மூல ஊற்று!.
தமிழ், ஆங்கில எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் இரண்டாவது ஆங்கில நாவல் ‘The muddy river’. இதில் அங்கி இழந்த பாதிரிகளோ, இருவழி புரட்சிக்காரர்களோ, கிரேக்கத்து ஹெலனோ எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தில்லி, அசாம், உல்பா, தீவிரவாதிகளால் கடத்தப்படும் அரசாங்க இஞ்சினியர்கள், சாவு, காதல், காமம், மின்சார டிரான்ஸ்பார்மர்கள், அவற்றை நிறுவவதில் ஊழல், தமிழும், பெங்காலியும், அசாமியர்களுமான கதாபாத்திரங்கள் – பலதும் நாவலில் உண்டு.
அப்புறம் கம்பீரமான நடை. நிமிர்ந்து உட்கார்ந்து கவனமாக வாசித்து அனுபவிக்க வேண்டிய, சாய்வு நாற்காலிகளுக்கு சரிப்படாத புத்தகம் இது. இதுவும் வேற்றுமொழி நாவலில் எதிர்பார்க்கக் கூடியதுதான். .
நாவலாசிரியர் சொல்லும் கதையே நாவல் பாத்திரம் எழுதும் ’கதைக்குள் இன்னொரு கதை’யாக விரிவது நாவலை சுவாரசியமாக்குகிறது. புதினமும், கதைக்குள் கதையும் இணங்கியும் பிணங்கியும் இறுதிவரை நடப்பது பி.ஏ.கேயின் Tiger Claw Tree (புலிநகக் கொன்றை) தொடங்கிப் பரிச்சயமான நறுக்குத் தெறித்தாற்போன்ற அற்புதமான ஆங்கில நடையில். வாழ்வின் அசாதாரணமான முரண்களையும் அவற்றின் அங்கதத்தையும் போகிற போக்கில் விவரித்துப் போகிற நேர்த்தியை The Muddy River-லும் காணலாம். ஆனால் இந்த இரண்டு நாவல்களும் வெவ்வேறு வகை – ழானர்.
நாவலின் கதைச் சுருக்கம் இப்படிப் போகிறது –
மத்திய அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன். தில்லியின் பாதுகாப்பான சர்க்கார் ஆபீஸ், கோப்பு, குறிப்பு, செக்ரட்டரி, அமைச்சர் இத்யாதி நடமாடும் தெய்வங்களோடு ஒட்டியும் வெட்டியும் உறவாடுவது, மற்றபடிக்கு சுவாசிப்பது, பிரியமான மனைவி சுகன்யாவோடு சுகிப்பது என்று நகர்கிற வாழ்க்கை சமீபத்தில் ஒரே மகளான குழந்தை பிரியாவை மஞ்சள் காமாலையில் பறிகொடுத்ததும் அலைக்கழிய ஆரம்பிக்கிறது. போதாக்குறைக்கு ஆபீஸில் வேறே அல்பமான மேலதிகாரி, கேண்டீன் டீ சூடு ஆறிப் போய் வாயில் வைக்க வழங்கவில்லை என்பதற்காக கேண்டீனையும் நிர்வகிக்கும் ரமேஷோடு மோதுகிறார். டீ தயாரிப்பது, அதன் வெப்ப நிலை, மேலதிகாரி அறையில் வெப்ப நிலை, அவர் டீ குடிக்காமல் கோப்பையை வைத்திருப்பதால் எத்தனை நிமிடம் ஆறாமல் இருக்கும் இன்னோரன்ன நுணுக்கமான விவரணைகளோடு அவரைச் சீண்டி ரமேஷ் ஆபீஸ் நோட் போட, அந்தாளுக்கு பனிஷ்மெண்ட் போஸ்டிங்க். அசாம் சலோ. அசாமில் அரசாங்க மின் உற்பத்தி கார்ப்பரேஷனுக்கு அதிரடி பணிமாற்றம். அங்கே இருந்து போனமாதம் தான் சீனியர் எஞ்சினியர் ஒருத்தரை தீவிரவாதிகள் கடத்திப் போய் 4 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்கிறார்கள். அசாமில் தீவிரவாதிகளோடும், சாதாரணர்களோடும், அதிகார வர்க்கத்தின் இதர தூண், தூசி துப்பட்டைகளோடும், காண்ட்ராக்டர்களோடும் ரமேஷுக்கு ஏற்படும் அனுபவங்கள் நாவலாக விரிகின்றன. இந்த அனுபவங்களை (அல்லது இவற்றை அடிப்படையாக வைத்து, நிகழ்ந்த அனுபவங்களை, நிகழாத கற்பனை சம்பவங்களை) ரமேஷ் தன் முதல் நாவலாக எழுதுகிறான். அவன் மனைவி சுகன்யா அந்த நாவல் உருவாக உருவாக தன்னையும், ரமேஷையும் அதில் வேறு மனிதர்களாக உணர்ந்து ரசிப்பதோடு, ரமேஷின் நாவலில் கதாபாத்திரங்களான அவனுடைய இரண்டு நண்பர்களுக்கும் அத்தியாயங்களின் பிரதிகளை மின்னஞ்சலில் அனுப்புகிறாள். சுகன்யாவும், இந்த நண்பர்களும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் The Muddy River நாவல் வெளியில் நடக்க, பெரும்பாலான கதை நிகழ்வு ரமேஷ் சந்திரன் எழுதும் நாவலுக்குள் நடக்கிறது. அந்த ’நிகழ்வில்’ எத்தனை சதவிகிதம் உண்மை, எது ரமேஷின் கற்பனை என்று கடிதங்கள் தகவல் பகிர்ந்து கொள்கின்றன.
புரியலை என்று யாராவது கையை உயர்த்தினால், நம்ம பதில் – படிச்சுப் பாருங்க ப்ளீஸ். தானே புரியும்.
இந்தக் கட்டுமானத்தில் பிஏகே உயர்த்தியிருக்கும் புதினம் ஒரு வினாடி ரோலர் கோஸ்டர் பயணமாக (அல்லது பொருட்காட்சியில் ராட்சத ராட்டினத்தில் தலை கிறுகிறுக்கச் சுற்றுவது) விரைகிறது. மறுவினாடி கலீடாஸ்கோப் காட்சிகளாக விளையாட்டு காட்டுகிறது. தொடர்ந்து மார்ஃபீன் கனவுகளாக ஒன்றின் மீது ஒன்றாக முன்னது முற்றும் அழியும் முன் படிந்து அலாதியான அமைப்பை (palympset) உருவாக்குகின்றது. இவற்றோடு, இலக்கு நிர்ணயிக்கப்ப்பட்டு கதையும் முன்னேறுகிறது. மரங்களும், பறவைகளும், காந்தியுமாக ஆரம்பமாகும் ரமேஷின் ‘நாவலுக்குள் நாவல்’, அதே போல் முடிவடைவது பிஏகேயின் புனைகதை ஒழுங்கமைதி பற்றிய அக்கறையைக் காட்டக் கூடும் என்று சொன்னால் அவருக்கு விமர்சனம் இருக்குமோ?
ஆபீஸ் மேஜையில் நக்னமாக, குறி விரைத்து நிற்க தலைகீழாக சிரசாசனம் செய்யும் அரசு அதிகாரி, கடத்தல் காரர்களை சந்திக்கப் போகும் இடத்தில் இரண்டு பெண்கள் டேப் ரிக்கார்டர் கொண்டு வந்து ரமேஷ் கேட்டு அனுபவிக்க வைக்கிற அசாம் நாட்டுப்புற இசை, பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலப்பரப்பு, குடிப் பழக்கத்திலிருந்து பக்தரை விடுவிக்க, காணிக்கை வைக்கிற இனிப்பில் ரோமத்தை ஒட்டித் தரும் யோகி (எங்கே இருந்து பிடுங்கிய முடி என்று நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்), தில்லி துர்க்மான் கேட்டில் சந்தோஷமாகப் பேசியபடி மாதுளம்பழம் விற்று, அடுத்த நிமிடத்தில் குடல் சரியக் குத்தப்பட்டு இறக்கும் இளைஞன், பாங்க் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் அரவம் பூண்டு ஆவேச்மாக தாண்டவ நிருத்தம் புரியும் பருமனான சிவன் வேஷ நடிகர், நண்பர்களின் சாவுக்கு அட்டெண்டென்ஸ் கொடுப்பதற்காகவே சொந்த ஊரான திருநெல்வேலியில் விடாப்பிடியாகத் தங்கி இருந்து, ராத்திரி ஏழு மணிக்கு உறங்கப் போகும் தொண்ணூறு கடந்த முதியவர்கள், இண்டர்நெட் மூலம் ‘கம்பெனி கொடுக்க’ வரும் பெண், போலீசாரால் ஆசனவாயில் எதேதோ நுழைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட, (லெனினை வண்டையாகத் திட்டும்) மார்க்சிஸ்ட், பழைய புள்ளிவிவரங்களால் வசீகரிக்கப்படும் வயதான சோஷலிஸ்ட்கள், ரவீந்த்ரநாத் தாகூரின் சிதை எரிந்து அடங்கும் முன்பே, கால் கட்டை விரலையும் எலும்புகளையும் நினைவுச் சின்ன்ங்களாக பறித்து எடுத்து ஓடும் வங்காளிகள், இன்கிரிட் பெர்க்மென் படங்களை நுணுக்கமாக ரசிக்கிற மற்றப்படி எளிய ரசனையுள்ள காண்ட்ராக்டர் இப்படி குறிப்பிடப்படுவதும், பாத்திரங்களும், பங்கு பெறும் சூழலும் நாவல் முழுக்க வருவதைக் காண்கிறோம்.
கதைக்குள் கதை அமைப்பு நாவலாசிரியருக்கு ஒரு தனி புஜபலத்தை அல்லது ஒன்–அப்-மேன்ஷிப்பைக் கொடுக்கிறது என்பது உண்மை. படிக்கும் வாசகனுக்கோ, விமர்சகனுக்கோ ஏதானும் விமர்சனம் எழுந்தால், அது என்னவாக இருக்கும் என்று அனுமானம் செய்யப்பட்டு, நாவலின் கடிதப் போக்குவரத்து வெளியில் உடனே குறிப்பிடப்பட்டு விடுகிறது. மின்சார டிரான்ஸ்பார்மர்களை நிறுவுதல் குறித்து நுணுக்கமாகத் தொழில் நுட்பத் தகவல்களை இவ்வளவு தர வேண்டுமா என்று நான் யோசித்தபடி வாசித்துப் போக, ரமேஷின் நண்பர் சுகன்யாவுக்கு எழுதிய கடிதத்தில் இதையே குறிப்பிடுகிறார் என்பது இதற்கு ஓர் உதாரணம். காண்ட்ராக்ட் ஊழல்கள் பற்றிய கதையாடலைப் புரிந்து கொள்ள அந்தத் தகவல் அவசியம் என்று பின்னால் புரிந்தது.
இப்படியான பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியை பிஏகேயிடம் கேட்டேன் – நாவல் ஏன் பெரும்பான்மையான பக்கங்களில் டைப் ரைட்டரில் தட்டச்சு செய்தது போன்ற எழுத்துருவில் அச்சாகி இருக்கிறது? ரமேஷ் சந்திரனின் நாவல் manuscript பக்கங்கள் டைப் செய்யப்பட்டவை என்பதால் The Muddy River நாவலிலும் அவை அதேபடியான அச்செழுத்துக்களில் வருவது பொறுத்தமாக இருக்கும் என்று காப்பி எடிட்டருடன் விவாதித்து முடிவு செய்ததாகச் சொன்னார். பாக்கியவான். நான் என் புத்தகங்களின் காப்பி எடிட்டர் யாரென்று அச்சடித்து வெளிவந்த புத்தகத்தைப் புரட்டித்தான் தெரிந்து கொள்கிறேன். எல்லா தமிழ் எழுத்தாளர்களும் இதேபடிதான் இருக்கிறார்கள்.
லார்க்கின், பார்ஸ்டர், எட்வர்ட் டயர், எஸ்ரா பவுண்ட், தாமஸ் ஹார்டி, ஆந்தணி பர்ஜஸ், ஜான் பெட்ஜமென் என்று எல்லா நூற்றாண்டுகளிலும் இருந்து ஐரோப்பிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், காந்தி, மேலும் காந்தி. ரமேஷ் மூலமும் மற்ற பாத்திரங்கள் மூலமும் இவர்கள் சொன்னதையும் எழுதியதையும், அங்கங்கே ஒரு வாக்கியம் இரு வாக்கிய மேற்கோள்களாகக் காட்டியபடியே கதையை நகர்த்திப் போகிறார். பிரஞ்சுப் புரட்சி போன்ற சரித்திர நிகழ்வுகள் பரிச்சயமானவர்களாக ஆங்கில இலக்கிய வாசகர்களை அனுமானம் செய்து கொள்ளலாம் என்பதால் ரோபஸ்பியர் பற்றிய குறிப்பும் அதே போன்ற மற்ற சரித்திர, மார்க் ஷகாலின் ஐரோப்பிய ஓவியம், ஜ்யோதீந்த்ரநாத் தாகூரின் இந்திய ஓவியம், தில்லி வில்லியம் கிரசெண்டில் தண்டி யாத்திரை சிற்பம் பற்றிய குறிப்புகளும் உறுத்தாமல் கதையில் பொதிந்துள்ளன. பிஏகே என்ற கிரிக்கெட் ரசிகரையும் நாவலில் இனம் காணலாம். சுகன்யாவை, ப்ராட்மென் வெளுத்து வாங்கிய தாத்தா கால கிரிக்கெட்டின் ரசிகை ஆக்கியிருப்பது உதாரணம்.
முன்னாள் மார்க்சிஸ்ட்கள் பலரும் பிரிட்டீஷ் ‘ஆராதகர்கள்’ (anglophile) என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் ரமேஷுக்குப் பிடித்த பிபிசி பேட்டியாளர் டிம் செபாஸ்டியனை எனக்கும் பிடிக்கிறது. ரமேஷ் போல், ஸ்காட்டிஷ் பின் ஸ்ட்ரைப் சூட் தான் நானும் விரும்பி அணிவது. பிஏகேயும் இன்னொரு ஆங்கிலோஃபைல் ஆக இருக்கக் கூடும்.
நாவலைப் படிக்கும்போது, பிஏகேயோடு (அல்லது ரமேஷ் சந்திரனோடு) நான் உடன்படுகிற இன்னொரு விஷயம் உடல் வாடை பற்றிய எழுத்து. ‘காமத்தில் கொஞ்சம் நாற்றமும் கலந்து இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும்’ என்பார் வைக்கம் முகம்மது பஷீர். பிஏகேயும் பஷீர் ரசிகரோ என்னமோ.
கடத்தப்பட்ட எஞ்சினியர் கோஷின் மனைவி நந்திதாவால் ஈர்க்கப்படுகிற ரமேஷ் சொல்கிறான்
Her smell, part feral and part fruity, is heady. (புனுகு வாடையும் பழவாசனையும் கலந்த, கிறுகிறுக்க வைக்கும் உடம்பு நெடி)
அசாமில் கூட வேலை பார்க்கும் அனுபமா பற்றி – இவள் மேலும் மோக வசப்படுகிறான்.
Anpuama is sweating. The aroma is bewitching. As we cross the timber shop crunching shavings of wood underfoot, the resinous aroma of timber snuffs Anupama’s. (புதிதாகச் சீவிய மரத் தூளின் வாசத்தோடு கலந்து வரும் வியர்த்த பெண் உடல் வாடை).
நாவலின் முக்கியமான பாத்திரங்கள் ரமேஷும் மனைவி சுகன்யாவும். படித்த உயர் நடுத்தர வர்க்கம். தம்பதிகள் என்றாலும் ஒவ்வொருவரின் individual space-ஐ மதிப்பவர்கள். அங்கு அத்துமீறல் ஏற்படுத்தக் கூடாது என்ற கண்ணியம் நிறைந்தவர்கள். என்றாலும் அவ்வப்போது ஆக்கிரமிப்புக்கான ஆயத்தம் நடப்பதும் உண்டுதான். மனிதர்கள் ஆயிற்றே. எப்போதும் ஒரே மாதிரியாக இயங்க முடியுமா? போதாக்குறைக்கு ரமேஷுக்கு காப்பி டிகாஷன் கூட சரியான பத்த்தில் இறக்க வராது. சுகன்யா நல்ல காப்பி தயாரித்துக் கொடுப்பது அத்துமீறல் என்றால் ரமேஷும் நானும் கவலைப்படப் போவதில்லை.
ரமேஷ் தன் நாவலில் சொல்லுவது இது –
In grief, Sukanya was tyrannous. She did things, she knew, I abhorred. She brought home manicured, diamond-studded astrologers. She played ghazals played by effeminate, moonstruck morons. She expected these everyday nothings to work on my temper.
பி.ஏ.கேயின் வசீகரமான ஆங்கில நடைககு ஒரு சிறு எடுத்துக்காட்டு –
The climb to Bedni Bugyal was steep and cypress and spruce quickly gave way to dwarfed rhododendron. We passed the tree line and were entering the moss and lichen zone when the weather was seized by a demon. The wind became a whirling dervish. Presently the rain froze and came down in an unremitting fusillade of pellets.
அகப்பயணமாக, வெட்டி விசாரத்தில் ஈடுபடுவதே இலக்கியத் தரம் வாய்ந்த நாவல் என்று திடமாக நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிற தமிழ்ச் சூழலில், நாவலின், சிறுகதையின் எழுதி வைத்த முகத்தை மாற்ற முயன்று கொண்டிருக்கும் வெகு சிலருக்கு இம்மாதிரி நாவல்கள் உற்சாகம் அளிப்பவை. நான் மகிழ்ச்சியில் மிதக்கிறேன்.
சொல்ல மறந்து விட்டேனே, நாவல் தமிழில் பிஏகேயால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மின்பிரதியைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் பெயர் ‘கலங்கிய நதி’. அது அச்சுக்கு வரும்முன் அறிமுகப்படுத்துவதையும் பொதுப் பகிர்வில் கருத்துத் தெரிவிப்பதையும் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆங்கில மூலம், தமிழில் மிக இசைந்த மொழியாக்கமாகி இருப்பதை மட்டும் சொல்ல எந்தத் தடையும் இல்லை.
88888888888888888888888888888888888888888888888888888888888888888888
கமல் ஹாசன் அலுவலகத்தில் அவரோடும், திரைக்கதை ஆசிரியர் அதுல் திவாரியோடும் (த்ரோகால், தசாவதார் இந்தி வசனம்) காஞ்ச்ச் இலையாவின் புத்தகம் பற்றி படப்பிடிப்புக்கு நடுவே பேசிக் கொண்டிருந்தேன், மேசையில் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘கிறிஸ்துவமும் தமிழ்ச் சூழலும்’ தட்டுப்பட்டது. ஆராய்ச்சி அறிஞர் நா.வானமாமலையின் மாணவர். படிக்க சுவாரசியமான புத்தகம்.
புத்தகத்தில் இருந்து –
தமிழில் நாட்டார் விவிலியம் (Appocripha) உண்டு. விவிலியத்தில் இல்லாத, உள்ளூர்ச் சூழ்நிலை சார்ந்த நிகழ்வுகள். நோவா பிரளய நேரத்தில் கப்பல் கட்டும் பகுதி, கன்யாகுமரி மாவட்ட நாட்டார் பாடலில் சொல்லப்படுகிறது –
ஆனைக்கு ஒரு கூடு செய்யடா – இப்போ
அய்யப்பன் ஆசாரி நீயடா,
பூனைக்கு ஒரு முறி செய்யடா – நீ
பூச்சாண்டி முறையைக் காட்டாதேடா
நரிக்கும் கீரிக்கும் கூடு – நாராயணா நீ செய்யடா
ஓரிக்கொரு கூடு செய்ய ஓச்சன் ஆசாரி போதுமே
கழுதைக்குக் கூடுவேறே வேணுமே
காசி செய்து வைத்தால் போதுமே
அண்டி ஆசாரியும் அறுத்துத் தள்ளுறான்
அண்டிக் கண்ணன் பப்பு எடுத்துச் சீவுறான்
நொண்டி ஆசாரியும் கணக்குப் பார்க்கிறான்
கோரச் சாமியும் நெட்ட முளக்கோலை வைத்து வரையறான்
இப்பகுதிகள் குமரி மாவட்டச் சூழலில் நோவாவின் கப்பல் – பேழை உருவாகிற உணர்வை கச்சிதமாக ஏற்படுத்தும். மொழியாக்கம் நம் முன்னோர்களுக்கு சுலபமாகக் கைவந்த சமாசாரம். வார்த்தைக்கு வார்த்தை முனைந்து செய்யப்படும் அதிரடி மொழிபெயர்ப்புகளுக்காக அவர்கள் மெனக்கெடவில்லை.
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
‘