மே 2022 அந்திமழை மாத இதழில் பிரசுரமாகியுள்ளது
கர்லா
இரா.முருகன்
போன வாரம் கர்லாக்கட்டை கந்தசாமி வாத்தியார் கைலாசம் புகுந்தார் என்று கலிபோர்னியா சான் ஒசே நகரத்தில் இருந்து செய்தி வந்தது. அனுப்பியவன் வெங்கி. எழுபது வயதில் என்னைப் போல செய்திகளுக்காகக் காத்திருந்து வந்ததும் இன்னும் பத்து பேருக்கு ஒலிபரப்பி, பேசி, சமூக ஊடகத்தில் பகிர்ந்து ஒரு நாள் முழுக்க வாட்ஸ் அப் அரட்டை அடித்து உறங்கி அடுத்த நாளுக்குக் கடந்து போகிறதைச் செய்வதில் நிபுணன் அவனும். கர்லாக்கட்டை எப்படி மின்செய்தியானார் என்று தெரிவிக்காமல் வெங்கி மையச் செய்தியான சாவு மட்டும் அறிவித்துவிட்டு ஓய்வெடுக்கப் போய்விட்டான். அப்போது கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட நடுராத்திரி என்பதால் அவன் மறுபடி கண்விழிக்கும் வரை அகப்பட்ட மற்றவர்களோடு மட்டும் கர்லாக்கட்டை அலசப் பட்டார்.
எங்கள் பள்ளிக்கூடத்தில் உடல் பயிற்சி ஆசிரியர் என்ற பி.டி மாஸ்டராக இருந்தார் அவர். உலர்ந்த சுள்ளி மாதிரி உடம்பில் ஒரு கிராம் அதிக சதை கூட இல்லாமல், நெடுநெடுவென்று உயரமாக, கழுத்தில் கயிறு மாட்டித் தொங்கும் விசிலோடு அலைவார் கர்லா.
கர்லாவின் திறமை கொடி கட்டிப் பறப்பது கால் வருடப் பரீட்சை, அரை வருஷப் பரீட்சை, முழு வருடப் பரீட்சை என்று தேர்வு நேரத்தில் தான். காலையில் சீக்கிரமே ஸ்கூலுக்கு வந்துவிடுவார். பரீட்சை எழுத வந்த பசங்களை விட அவருடைய பரபரப்பு அதிகமாக இருக்கும். கேள்வித்தாள் விநியோகிக்கும்போது யார் எந்த டெஸ்கில் என்று பார்த்து வைத்துக் கொண்டு விடுவார். அடுத்து விடைத்தாள் பேப்பர் கொடுக்க உடனே உத்தரவு கொடுக்க மாட்டார். ஒரு நிமிஷம் ப்ரேயர். ”நான் மட்டும் நல்ல மார்க் வாங்கி பாஸ் ஆனா போதாது. நல்லா எல்லாரும் பாஸ் ஆகணும், நல்ல மார்க் வாங்கணும்னு வேண்டிக்கங்கடா” என்று அவர் சொல்லி முடித்து ஒரு நிமிடம் ப்ரேயர். எழுது என்று கையை உயர்த்தினதும்தான் எழுத ஆரம்பிக்கணும்.
சுற்றிச் சுற்றி வருவார். நடந்து கொண்டே தூங்குவது போல் கண்கள் கிட்டத்தட்ட மூடி இருக்கும். கேள்வித்தாளோ ஆன்சர் பேப்பரோ பக்கம் திரும்பும் மெல்லிய சத்தம் கூட பரீட்சை ஹாலில் தெளிவாகக் கேட்கும் நேரம் அது. அதை மேம்படுத்திக் காட்ட எழுதுவதில் ஆழ்ந்து இருக்கும் பசங்களின் மௌனம் சூழ்ந்திருக்கும். திடீரென்று ஒரு குரல் உச்ச ஸ்தாயியில் கேட்கும் – ”நடுவரிசை மூணாம் பெஞ்ச் வலதுகைப் பக்க மகாராஜா எழுந்து நிக்கலாம்”.
அவசரமாகப் பின்னால் திரும்பிப் போய் எழுந்து நின்ற பையன் முன் அல்சேஷன் போல சிகரெட் வாடையைக் கிளப்பிக்கொண்டு மோப்பம் பிடித்து மூச்சு விடுவார். காப்பி அடிச்சியாடா? இல்லே சார். அப்போ பையிலே இருந்து எடுத்துப் பார்த்தியே துண்டு சீட்டு அது என்ன? சீட்டே கிடையாது சார். அவன் பாக்கெட்டுக்குள் இருந்து கர்ச்சீப், மசி கசியும் பழைய பேனா, பென்சில் சீவி என்று என்ன என்னமோ கிடைக்குமே தவிர பிட் அடிக்க எழுதி வந்த பாடம் எதுவும் கிடைக்காது. இல்லியே நீ எதையோ பையிலே இருந்து எடுத்து அவசரமா பாத்துக்கிட்டிருந்தியே. பையன் இரு கையையும் தூக்கியபடி நிற்க, கர்லா கேட்பார் – தின்னுட்டியாடா? எங்கே வாயைத் திற பார்க்கலாம். கிருஷ்ண பகவான் மாதிரி அவன் வாயைத் திறந்து சொத்தைப் பல்லைக் காட்ட, திரும்ப எழுத அனுமதி தருவார்.
பரீட்சை முடிந்து பசங்க வெளியில் வரும்போது அந்தப் பையனை எதிர்பார்த்து வாசலிலே நிற்பார். அவன் வந்ததும் அன்போடு கையைப் பிடித்து முகர்ந்து பார்ப்பார். ”என்னடா வலது கையிலே மூத்திர வாடை அடிக்குது. இல்லையா? நான் கண்டு பிடிச்சதுமே நீ அவசரமா அண்டிராயர்க்குள்ளே திணிச்சுக்கிட்டியே. என்ன பாடம்டா அது? சரித்திரம்? காந்தியும் நேருவும் இப்படிக் கண்ட கண்ட இடத்திலே எல்லாம் சுருண்டு கிடந்து துர்வாடையை அனுபவிக்கணும்னு ஏதாவது சாபமா? பாவம்டா. இனிமேல் அவங்களை இடுப்புக்குக் கீழே மறைக்காதே. படி. நல்லா படி”. பையன் கண்கலங்கி நிற்பான். மன்னிப்பு அவனுக்கு நல்ல புத்தி தரும்.
தேர்வுக் கால ட்யூட்டி தவிர இன்னொன்றும் கர்லா பொறுப்பில் வரும். அழகான பள்ளி முற்றத்தில் மேஜிக் ஷோ, பொம்மலாட்டம், மோனோ ஆக்டிங் இப்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யச் சொல்லி ஹெட்மாஸ்டர் கர்லாவிடம் தான் பொறுப்பை ஒப்படைப்பார்.,
மேஜிக் ஷோ டிக்கெட் விற்க சாக்பீஸ் டப்பாவில் அடுக்கிய சதுரமாக வெட்டிய சிறு அட்டைத் துண்டுகளை இருபது பைசாவுக்கு ஒன்று என்று தர கர்லா தான் எப்போதும் வருவார். மேஜிக் ஷோவுக்கு இரண்டு நாள் முன்பே கர்லா சுறுசுறுப்பாகி விடுவார். வகுப்பு வகுப்பாகப் போய் பொதுவாக ஒரு சல்யூட் அடிக்க பதிலுக்கு யாரும் அடிப்பதில்லை தான். மாணவர்களை விளித்து தமிழ், அவருடைய சொந்த இங்க்லீஷ் என்று பேசி மேஜிக் எப்படி கண்கட்டு வித்தை என்று தமிழில் சொல்லப்படுகிறது என்று விளக்கி, இதை நேரில் பார்த்து அனுபவிக்க இருபதே பைசா தான் சிறப்புக் கட்டணம் என்று பெஞ்சுகளுக்கு இடையே சாக்பீஸ் டப்பாவைக் குலுக்கிக்கொண்டு நடக்கும்போது சிகரெட் வாடை அடிக்கும் அவரிடம்.
வாங்கலியா தம்பி? ஒரு டிக்கெட் இருபது காசு இருபதே காசு என்று மன்றாடும் போது சார் மதியம் வீட்டுக்கு சாப்பிடப் போவேனில்லே அப்பாரு அப்பத் தரேன்னாரு. ஒரு குரல் தயங்கித் தயங்கிப் பின்வரிசையில் இருந்து ஒலிக்கும். அது யார் குரல் என்று திரும்பிப் பார்க்காமலேயே தெரியும். சம்மு தான். எலக்ட்ரிசிட்டி போர்டில் லைன்மேனாக இருக்கும் குப்புசாமி மகன்.
குப்புசாமி கர்லாவின் ஆரம்பப் பள்ளித் தோழன் தான். இரண்டு பேருமே உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி என்ற கடைசிக் கட்டத்தைக் கடக்கவில்லை.
யாருடா, குப்பன் பெத்த ரத்தினமா? வகுப்பு வாத்தியார் பொறுமையில்லாமல் நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளவே இல்லாமல் அவருடைய சொந்த உலகுக்குள் புகுந்திருப்பார் கர்லா.
”குப்பனும் நானும் ஒண்ணாப் படிச்சவங்கடா. ராமகிருஷ்ணா பள்ளிக்கூடத்திலே அஞ்சாம் கிளாஸ் பெயில். எங்க கூடப் படிச்சவன் எல்லாம் டாக்டரா, எஞ்சினியரா, லாயரா, மந்திரியா இருக்கான். நாங்க ரெண்டு பேரும் இன்னும் அரை நிஜார் போட்டுக்கிட்டு திரிஞ்சுக்கிட்டிருக்கோம். அவன் டிராயர் போட்ட லைன்மேன். நான் உங்களை கட்டி மேய்க்கிற உடல் பயிற்சி வாத்தியான். என்னமோ போ”.
அவர் சொல்லும்போது சிரிக்காமல் முகத்தைக் கோண வைத்துக்கொண்டு துருதுருவென்று பார்க்கிற அழகுக்காகவே எல்லோரும் அவர் பக்கம் திரும்பி இருப்பார்கள். டாபடில்ஸ் வேர்ட்ஸ்வொர்த் கவிதையைத் தொங்க விட்ட வகுப்பு வாத்தியார் உட்பட.
”சரிடா, நான் உனக்காக இருபது காசு போட்டுட்டு, அவனைத் தேடிப் போய் வாங்கிக்கறேன். ஏதாவது ஒரு கம்பத்திலே ஏறிட்டிருப்பான் இல்லே இறங்கிட்டிருப்பான். அவ்வளவுதானே”.
அவர் சுவரில் பிடித்து ஏறப் போவது போல் அபிநயிக்க உச்ச ஸ்தாயியில் பசங்க சிரிப்பு அலையடிக்கும். கிளாஸ் வாத்தியாருக்கு தனிப்பட்ட நன்றி சல்யூட் அடித்து தரையில் கான்வாஸ் ஷூ அணிந்த காலை உதைத்து அடுத்த வகுப்புக்குப் போவார்.
ஒரு தடவை வெங்கி அவர் திரும்பும் நேரத்தில் ’மேஜிக்கை ஏன் கண்கட்டுன்னு சொல்றாங்க சார்? காதுகட்டு, மூக்கு கட்டெல்லாம் உண்டா’ என்று துடுக்காகக் கேட்க, கர்லா வாசல் வரை போனவர் திரும்பி வந்தார். வெங்கிக்கு அடி நிச்சயம் என்று பதைபதைப்போடு பார்த்துக் கொண்டிருந்தோம். அவரோ வந்தபடிக்கு விரலில் ஒட்டிய சாக்பீஸ் துகளால் வெங்கிக்கு ஒரு நரைமீசை வரைந்தார்.
“என் வயசிலே உனக்கும் தெரியும்டா. மேஜிக் என்ன, எல்லாமே கண்கட்டு தான். புரியுதா?” வெங்கி புரிந்தும் புரியாமலும் சிரித்தான்.
சாயந்திரம் நாலு மணிக்கு மேஜிக் ஷோ குழு வந்து சேரும். மேஜிக் நிபுணர்கள் பெயருக்கு முன்னால் எதற்காகவோ ப்ரபசர் என்ற பட்டத்தைப் போட்டுக் கொண்டிருப்பார்கள். காலேஜ் பெரிய வாத்தியார்களை ப்ரபசர் என்று கூப்பிடுவார்கள் என்று அப்பா சொன்னார். இந்த மேஜிக் ப்ரபசர்களுக்கும் காலேஜுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையாம்.
ப்ரபசர் எனப்பட்டவர் மதியம் ஐந்து மணிக்கு மேஜிக் தொடங்குவார். வகுப்பறைகள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க, நடுவே மேலே திறந்த முற்றத்தில் மேஜை நாற்காலி போட்டு மேஜிக் நடக்கும். பையன்களை ஏவி அங்கே சுத்தம் செய்து நடுவில் மேஜை போடுவது, சுற்றி நாலு வட்டமாக உட்கார்ந்து பார்க்க நாற்காலி போடுவது என்று பரபரப்பாக விசில் ஊதிக்கொண்டு திரிவார் கர்லா. மூணு மணிக்கே சக ஆசிரியர்களை உதவிக்கரம் நீட்ட அழைக்க ஆரம்பித்து விடுவார். சதுர அட்டை டிக்கெட்டை வாங்கி வச்சுட்டு உள்ளே அனுப்பணும். வாங்கினதும் டிக்கெட்டை குப்பைத் தொட்டியிலே தூக்கிப் போடறது இவ்வளவு தான். டிக்கெட்டை தொலச்சிட்டேன் என்று அவ்வப்போது கண்ணீரும் கம்பலையுமாகச் சில பையன்கள் நிற்பார்கள். இவர்களை உள்ளே அனுமதிப்பதா வேண்டாமா என்பதை கர்லா தான் முடிவு செய்வார். டிக்கட் காணாமல் போனதை நம்புவாரோ என்னமோ, யாரையும் திருப்பி அனுப்பியதில்லை. கூட்டம் கம்மியா இருந்தால், ஸ்கூல் டொனேஷன் அதிகமாக இருக்கும். அப்போது பசங்களை ஓசியிலேயே மேஜிக் பார்க்க அனுமதிப்பதும் உண்டு. யாரை உள்ளே அனுப்ப என்று தேர்வு செய்ய சக ஆசிரியர்களின் சகாயத்தை நாடுவார் கர்லா. உடனே கிடைக்கும் உதவி அது.
இன்றைக்கு வந்திருக்கும் ப்ரபசர் கொடுத்த அறிமுக அட்டைத் துண்டில் மேஜிக் ப்ரொபசர் என்பதோடு ஹிப்நாடிச ஸ்பெஷலிஸ்ட் என்றும் போட்டுக்கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன என்று கர்லாவைக் கேட்ட பசங்களிடம் தனக்கும் தெரியாது என்று அடக்கத்தோடு சொன்னார் அவர்.
மனோவசிய நிபுணர் என்று கணக்கு வாத்தியார் விளக்கம் சொன்னார். ஆளை மயக்கி கூட்டிட்டுப் போகிறதா? கர்லா கேட்க கணிதம் சிரித்தது.
”அவருக்கு சோறு கிடைக்கவே கஷ்டம் சார். மயக்கி இன்னொருத்தரைக் கூட்டிப்போய் என்ன பண்ணுவார்?”. மனோவசியம் எப்படி நடக்கும் என்று தனக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டார் அவர்.
வழக்கத்தை விட அதிகமாகக் கூட்டம் வந்த ஷோ அந்த மேஜிக் மற்றும் ஹிப்னாடிஸ ஷோ. மேஜிக்கில் கூட தகர டப்பாவில் காகிதத்தைக் கொளுத்திப் போடாமல் பெரிய ட்ரங்க் பெட்டிகளைத் திறந்து மூடி வித்தியாசமாகச் செய்தார் அந்த ப்ரொபசர் மூர்த்தி. இரண்டு ஸ்டூல்களுக்கு நடுவில் பெட்டியை வைத்து உள்ளே காலி என்று காட்டி விட்டு ஒரு துணியால் மூடித் திறக்க, சோனியான ஒரு பெண் பெட்டிக்குள் இருந்து கையசைத்தபடி வந்தபோது கைதட்டல் அள்ளிக்கொண்டு போனது. அவர் மகள் போல.
இப்போது யோகத்தோடு ஹிப்நாடிசம் என்று தடம் மாறினார் ப்ரபசர் மூர்த்தி. அந்தப் பெண்ணை ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லி எதிரே இன்னொரு நாற்காலி போட்டு அவர் உட்கார்ந்தார். கர்லாவைப் பார்த்து சட்டென்று காட்சியை மாற்றினார் ப்ரபசர். அவரை ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லி, எதிரே அந்தப் பெண்ணை இருத்தினார். ஏதோ ஜபித்துக் கொண்டிருந்தார். மந்திரவாதமாக இருக்கும் என்று கர்லா நினைத்தார்.
அந்தப் பெண் கர்லாவிடம், சார் என் கண்ணையே பாருங்க என்று சொல்ல கர்லா அதெல்லாம் நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவள் சட்டென்று எழுந்து அவர் பக்கம் நடந்து போய் அவரையே கண்ணில் உற்றுப் பார்த்தாள். கர்லா தலை சுற்றி தன் நாற்காலியில் கண்மூடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். மேஜிக் பார்க்க வந்த ஆசிரியர்கள் கூட ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்த நேரம் அது.
சார் அவரை சீக்கிரம் எழுப்புங்க என்று கைத்தொழில் ஆசிரியர் மேஜிக் ப்ரபசரிடம் முறையிட்டார். ப்ரபசர் சிரித்து அவசரப்படாதீங்க என்றபடி மேலே நடத்த அந்தப் பெண்ணுக்கு கை காட்டினார். ப்ரபசரும் அவரோடு கூட தோட்டக்காரர் ஒயிட்டு என்ற வெள்ளையப்பனும் கர்லாவை தலைப் பக்கம் ஒருத்தர், கால் பக்கம் இன்னொருத்தராகப் பிடித்து இரண்டு நாற்காலிகளுக்கு மேல் படுத்தாற்போல் வைத்தார்கள். அப்படிப் படுப்பது மகா சிரமமான காரியம் என்று சொல்லாமலே தெரிந்தது எல்லோருக்கும். அந்த சோனிப்பெண் விரலில் சொடக்குப் போட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கர்லா உடம்பு ப்ரபசர் சொன்னபடிக் காதுகள் மட்டும் உயிர்த்திருக்க வளைந்து நெளிந்து நீட்டி மடங்கி ஒத்துழைத்தது.
இரண்டு நாற்காலிகளின் நடுவில் கர்லா ஒரு ஐந்து நிமிடம் படுத்திருந்தார். சோனிப்பெண் கை காட்ட ப்ரபசர் அந்த நாற்காலிகளை மெல்ல ஒவ்வொன்றாக விலக்கி ஓரமாகக் கொண்டு போனார். ஒன்றில் அமர்ந்தார். மாலை நேர வெய்யில் கூட உள்ளே எட்டிப் பார்க்கத் தயங்கிய முற்றத்தில் தரைக்கு ஐந்தடி மேலே அந்தரத்தில் கண்மூடிப் படுத்திருந்தார் கர்லா.
கை தட்டப் பயந்த பசங்களோ, தங்களுக்குள் வியந்து கொண்டிருந்த ஆசிரியர்களோ கவனிக்காததை தோட்டக்கார ஒயிட் கவனித்தார்.
சார், இந்த மேஜிக் பெரியவர் நாற்காலியிலே உக்காந்திருக்கறது நல்ல விதமா இல்லையே என்றார் ஒயிட் உதவி ஹெட்மாஸ்டரிடம். அவர் வசியத்துலே இருக்காருப்பா என்றார் ஏ.எச்.எம்.
இல்லியே இந்தப் பொண்ணு அவரை வச்சு ஒண்ணும் மேஜிக் பண்ணலியே.
ஒயிட்டின் சந்தேகம் சரிதான் என்றபடி ஏஎச்.எம் ப்ரபசர் பக்கத்தில் போய் அவர் தோளில் கைவைக்க மரக் கட்டை போல் தரைக்கு வந்தார் ப்ரபசர். போய்ட்டாரா? யாரோ யாரையோ கேட்டார்கள். இதுவும் கடந்து போகும் என்று இறுக்கமான முகத்தோடு அந்தப் பெண் அமர்ந்து இருந்தாள்.
வெங்கி சொன்னான்- ”கர்லா சார் மேலே போய்ட்டிருக்கார்”. ஆமாம், பத்து நிமிடத்துக்கு முன் பார்த்ததை விட கர்லா அந்தரத்தில் ரெண்டு இஞ்ச் கூடுதல் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தார். தரைக்கு ஆறடி உயரம் அது.
கர்லா சார் பறந்து போயிட்டு இருக்கார் சார். ஒயிட் ஹெட் மாஸ்டர் அறையில் தடால் என்று நுழைந்து அறிவித்தார். தூக்கச் சுவடு மாறாமல் ஹெச்.எம் பதைபதைத்தது இப்படி இருந்தது – ”ஐயோ அடுத்த வாரம் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வராரே. ம்யூசிக் ட்ரில் யார் பசங்களுக்கு சொல்லித் தர்றது?”. ஒயிட் பின்னால் வந்த சீனியர் சயன்ஸ் ஆசிரியர் ”நாளைக்கு சனிக்கிழமை லீவுதானே, சேர்ந்து போய் லீகோ அடுப்புக்கரி வாங்கிட்டு வந்துடலாம்னு சொன்னாரே நான் தனியா எப்படிப் போறது, சைக்கிளும் ஓட்டத் தெரியாதே” என்று பிரலாபித்தார். ”இன்னிக்கு மேஜிக் ஷோ வசூல் அவர்கிட்டே தானே இருக்கு. ப்ரபசருக்கு எப்படி சன்மானம் தர்றது” என்றார் ஸ்கூல் கிளார்க் நாகு சார். கர்லா அவருக்கு தூரத்து உறவாம். கர்லா சட்டைப்பையில் இருந்து மேஜிக் ஷோ டிக்கட்களும், சிகரெட்டும், முழு சாக்பீஸும் கீழே விழுந்தன. “ஒயிட், சாக்பீசை எடுத்து வை” என்றார் ஏ.எச்.எம்.
முற்றத்துக்கு வெளியே ஆகாசத்தை நோக்கி கர்லா போகாமல் பெஞ்ச்களைப் பரபரவென்று ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சக ஆசிரியர்கள் சூழ்ந்து நிற்க, யாரோ சொன்னார்கள் அந்த சோனிப்பெண்ணைப் பார்த்து – ’பார்த்துக்கிட்டு நிக்கறியே அம்மா. மந்திரம் போட்டு கர்லா வாத்தியாரை கீழே இறக்கேன்”. அவள் சொன்னாள் – ”அந்த வசியம் எனக்கு சொல்லித் தரலியே”.
ஸ்கூல் தோட்டத்து முருங்கை மரங்களில் எச்.எம் வீட்டு சாம்பாருக்குக் காய் பறிக்க வைத்திருந்த துரட்டிக் கம்போடு ஓடி வந்தார் ஒயிட். உயரத்திலும் உயரமான தமிழ் வாத்தியாரும், குறளர் கணக்கு வாத்தியாரும் வெளியைத் துழாவி கர்லா வாத்தியார் சட்டை காலரில் துரட்டி மாட்டிச் சீராக இழுத்தார்கள். ”பார்த்து. சட்டை கிழியாம’ என்று எச்சரித்தார் வரலாற்று ஆசிரியர். ஹிந்தி பண்டிட் சும்மா நின்றார்.
பொங்கல் அலவன்ஸ் ஜி.ஓ ரிலீஸ் ஆகுதாம் என்றார் ஏ.எச்.எம். கர்லா கீழே வந்தார். அவரைத் தரையில் கிடத்தினார்கள். கண் விழித்து, ”தூங்கிட்டேன் சார். மியூசிக் டிரில் ஆரம்பிக்கலாமா?” என்று சுபாவமாகக் கேட்டார்.
ப்ரபசர் மூர்த்தி அடுத்தாற்போல் கண் விழித்தார். எவ்வளவு தூரம் இது போகும்னு பார்க்க, யோகத்தில் மூச்சடக்கி இருந்தேன் என்றார் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சிரித்தபடி. அவள் அவருக்கு மனைவியாம். அன்றைக்கு அவர் எழுபது ரூபாய் வருமானத்தோடு போய்ச் சேர்ந்தார்.
பழைய நினைவுகளில் மூழ்கியபடி வெங்கிக்கு தொலைபேசினேன். எப்படி இறந்து போனார் கர்லா? கயிற்றுக் கட்டிலில் இருந்து புரண்டு விழுந்து விட்டாராம். அப்புறம் பேசறேண்டா என்று வெங்கி போனை வைத்தான்.
(இரா.முருகன் )
ட்