என் வாசகர்களும் நானும்

என் வாசகர்களும் நானும்

என் புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்த ஒரு வாசகர் சொன்னார், ‘ரெண்டு நாளா இந்த புத்தக வேலையிலே தான் இருந்தேன்’.

பதிப்பாளரின் அலுவலகத்தில் அவரைப் பார்த்த நினைவு இல்லாததால், ‘என்ன மாதிரி வேலை?” என்று கேட்டேன். ‘இது வாராவாரம் திண்ணை பத்திரிகையோட இண்டர்நெட் தளத்திலே வந்துச்சு இல்லே? நூற்று நாலு அத்தியாயமும் தேடி எடுத்து அதே ஆர்டர்லே கட் அண்ட் பேஸ்ட் செஞ்சு எம்.எஸ் வேர்ட் ஃபைல் ஓப்பன் பண்ணி சேர்த்து வச்சுக்கிட்டேன். செம வேலை. ஆபீசுக்கு அரை நாள் லீவு போட வேண்டிப் போச்சு” என்றாரே பார்க்கணும்.

அரசூர் வம்ச நாவல்களாக மேஜிக்கல் ரியலிசம் எழுதுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது என்றால் அதைப் படித்து விட்டுக் கேட்கப்படும் கேள்விகளும் இன்னொரு வகை சுவாரசியம். ‘அரசூர் வம்சத்திலே சாமிநாதன் அவனுக்கு நூறு வருஷம் முந்தைய ஒரு பெண்ணின் ஆவியோடு உடல் உறவு வச்சுக்கறானே, அது சாத்தியமா?”. இன்னொரு கேள்வி, ‘ஆலப்பாட்டு வயசன், பறந்து போய் கோவில் கொடிமரத்துக்கு மேலே இருந்து அசுத்தம் பண்றானே, அது நிஜமாவே நடந்ததா?”

என்னிடம் கேள்வி கேட்ட அன்பர்களுக்குச் சொன்ன பதில், ‘இது ஒரு இலக்கிய உத்திங்கற அளவுலே மட்டும் பாருங்க. ஆவியோட எல்லாம் போகம் பண்ண முடியாது. அது எதுக்கு? ஆவி இருந்தாலும், மிதந்துக்கிட்டு வந்தாலும். போகத்துக்கு ஆவியை ஏன் தேடிப் போகணும்? அதே போலத்தான் வயசன் பறக்கறதும். அவன் தன்னை மறந்த நிலையில் செயல்பட்டுக் கிட்டிருக்கான்னு எடுத்துக்கிட்டா பிரச்சனை இல்லை” என்று சொல்லி மேஜிக்கல் ரியலிசம் பற்றி சிறுகுறிப்பு வாயால் வரைய வேண்டிய சந்தர்ப்பங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன.

இந்த நாவலை எழுத எம்புட்டு நேரம் பிடிச்சது? ஒரு வாசகர் என்னைப் புத்தகக் கண்காட்சியில் கேட்டார். அது அரசூர் வம்சம் நாவல்களில் இரண்டாவதான விஸ்வரூபம் வெளியான நேரம். கனமான எழுத்து. ஆமாம், கிட்டத்தட்ட தொள்ளாயிரம் பக்கம் அந்த நாவல் இருக்கும். நான் ஓரக்கண்ணால் அந்த வாசக நண்பர் சுமந்திருந்த புத்தகப் பையைப் பார்த்தேன். விஸ்வரூபம் அதில் இருந்ததாகத் தெரியவில்லை. என்றாலும் சாந்த சொருபனாகப் பதில் சொன்னேன் –’ரெண்டு வருஷம் எடுத்துக்கிட்டேன் இதை எழுதி முடிக்க”. “நான் கூட ரிடையர் ஆனதும் ஒரு பெரிய நாவல் எழுதலாம்னு இருக்கேன்” என்றார் அவர். ஆகியிருப்பார் இப்போது. அவர் எழுதிய நாவல் வெளியானதா என்று தெரியவில்லை.

இதே நாவலில் 1899 டிசம்பரில் ஏழு கிரகம் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வந்த தினத்தன்று நடப்பதாக ஒரு அத்தியாயம் அமைத்திருந்தேன். அதைக் குறிப்பிட்டுக் கேட்டுப் பாராட்டி அந்த நிகழ்வு பற்றி மேலதிக விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார் இன்னொரு வாசகர். அந்த அத்தியாயத்தில் மகாலிங்க அய்யன் திருக்கழுக்குன்றம் யாத்திரை போகும்போது ஒரு சோனியான, மார்பு பெருத்த கன்யகை மேல் மோகவசப்படுவான். ‘போன வாரம் கழுக்குன்றம் போனேன் சார், அந்த அய்யனும் பொண்ணும் எனக்கு முன்னாடி படி ஏறிட்டிருந்ததா தோணிக்கிட்டே இருந்தது. கழுகு இப்போ எல்லாம் வர்றதில்லே தெரியுமா?” இது இன்னொரு வாசகர் இந்த நாவலை ஆழ்ந்து படித்து விட்டுச் சொன்னது.

விஸ்வரூபம் நாவலைப் படித்து விட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று ஆவலாகக் காத்திருந்தார் இன்னொரு வாசகர். நல்ல எழுத்தாளரும் விமர்சகருமான ஐராவதம் தான் அவர். எனக்கும் அவருக்கும் நண்பரான விருட்சம் இலக்கிய இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான அழகியசிங்கர் அவரோடு வந்து என்னைச் சந்தித்திருக்க வேண்டியது நடக்காமலே போனது. ஐராவதம் காலமாகி விட்டார் அதற்குள். “விஸ்வரூபம் நாவல்லே ஒவ்வொரு பக்கமா அங்கங்கே அடிக்கோடு இட்டு, மார்ஜின்லே எழுதி வச்சிருந்தார் அவர். நிறைய உங்களோடு பேசணம்னார்” என்றார் அழகியசிங்கர். ‘எனக்கு வேறே எதுவும் வேணாம், பொக்கிஷம் போல, அவர் கையெழுத்தும் போட்ட கோடும் இருக்கற புத்தகப் பிரதி கிடைச்சாலும் போதும். எதை எல்லாம் படிச்சு ரசிச்சிருக்கார், என்ன எல்லாம் பேசணும்னு நினைச்சிருந்தார் ஐராவதம் அப்படீன்னு ஓரளவாவது தெரிஞ்சுக்கலாம்” என்றேன். அந்தப் பிரதி எங்கே போனதோ.

அரசூர் நாவல்களில் வரும், எண்ணற்ற குடும்பங்களின் தீர்த்தயாத்திரை விவரங்களைத் தலைமுறை தலைமுறையாகப் பதிந்து வைக்கும் ஹரித்துவார புரோகிதர்கள் பற்றிய தகவல், மீரட் கத்தரிக்கோல் எங்கே கிடைக்கும் என்ற விசாரிப்பு (மீரட்டில் தான் என்று பதில் சொல்லிக் கத்தரித்துக் கொண்டு போக முடியாது, இது வேறே விஷயம்), எடின்பரோ மோஸ்தரில் பிஷ் அண்ட் சிப்ஸ் கடை இங்கே காரைக்குடியில் திறந்தால் பிசினஸ் இருக்குமா என்று ஆலோசனை கோருதல் என்று கதையோடு ஒட்டியும் விலகியும் எழுப்பப்படும் சகல விதமான வினாக்களுக்கும் பதில் சொல்லும்போது எனக்கும் அதைப் பேசுவதில் ஈர்ப்பு அதிகமாகி நானே என் எழுத்தை மீண்டும் படிக்கத் தோன்றும்.

பயோ பிக்ஷன் ஆன நெம்பர் 40, ரெட்டைத் தெரு மற்றும் தியூப்ளே வீதி நூல்களின் வாசகர்கள் வேறு மாதிரி. வாழ்க்கை வரலாற்று அடிப்படையில் புனைவு கலந்து எழுதப்பட்ட இந்த நாவல்களைப் படித்துவிட்டு வந்து கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமானது, ‘இதுலே எவ்வளவு உண்மை?”. நான் சொல்வேன், “ஐம்பது சதவிகிதம் உண்மை, ஐம்பது பெர்செண்ட் கதை. எது கற்பனை, எது உண்மைங்கறதை நான் சொல்லறதுக்கு இல்லே. எழுத்தை எழுதவும் வாசிக்கவும் சுவையாக்குவது இந்த மயக்கம் தான்”.

ரெட்டைத் தெரு நாவலைப் படித்துவிட்டு நான் படித்த பள்ளியின் .தலைமை ஆசிரியர் கேட்டார் – “அந்த பேங்க் மேனேஜர் வீட்டு வாசல்லே உக்கார்ந்து பாட, நானும் இன்னொருத்தரும் கேட்டோம்னு எழுதினதுலே ஒரு பிசகு. அவர் பாடினது காம்போதியிலே எவரி மாட. நீ எழுதின படிக்கு இல்லே’ என்று நமுட்டுச் சிரிப்போடு சொன்னார். மட்டுமில்லை, ஒரு நாற்பது பக்க நோட்புக்கை நீட்டினார். “இதெல்லாம் நீ சொல்ல விட்டுப்போன அந்தக்கால நிகழ்ச்சிகள். இதையும் சேர்த்துக்கோ”. அந்த நோட்புக்கை பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய அந்த சம்பவங்களை எப்போது எழுதப் போகிறேனோ. இன்னொரு தடவை இறங்க முடியுமா நினைவு நதியில்?

தியூப்ளே வீதி படித்து விட்டு, ‘அமேலியோட நீங்க படுக்கைக்குப் போறபோது காண்டோம் உபயோகிச்சதா சொல்லியிருக்கீங்களே, அப்போ எது காண்டோம்?” ஒருத்தர் கிடுக்கிப்பிடி போட்டார், “ஏன் சார் நான் என்ன 1940-களின் பிரஜையா? 1970-களிலே நடக்கிற கதை இது” என்றால் விடாமல் பிடிக்கிறார் – ‘இன்னும் அமேலியோட செக்ஸ் வச்சிட்டிருக்கீங்களா?’. பைனரியாக ஆம் – இல்லை என்று பதில் சொன்னால் வம்புதான் என்பதால், இந்தக் கேள்விக்குப் பதிலாக நான் புன்னகை பூத்தேன். அவ்வளவுதான்.

சிறுகதை, குறுநாவல் வாசகர்களில் சிலர் உக்கிரமானவர்கள். அபானவாயு வெளியேற்றும் போட்டியை மையமாக வைத்து ‘வாயு’ என்ற குறுநாவல் எழுதி குமரி மாவட்டத்தில் ஒரு நூலகரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டேன். பரவலான வாசிப்பு உள்ள, நல்ல நூல்களை மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதில் அலுப்படையாத நல்ல மனுஷர் அவர். அவருடைய நூலகத்தில் அந்தக் குறுநாவல் உள்ள ‘சைக்கிள் முனி’ சிறுகதைத் தொகுதி இருக்கிறதா என்று கேட்ட வாசகரிடம் பொரிந்து தள்ளி விட்டாராம் – ‘நல்ல நல்ல கதையா எழுதிட்டு வெளிநாடு போனான் அந்த விளங்காப்பய (நான் தான்). குசு விடறதைப் பத்தி எழுதறானாம். பைத்தியம் பிடிச்சிருச்சு”. அவர் சொன்னதை அட்சரம் பிசகாமல் இவர் வந்து என்னிடம் ஒப்பிக்க, என்ன ஒரு சந்தோஷம்.

சிறுகதையோ, நாவல் அத்தியாயமோ, நாலு வரி வெண்பாவோ, எதை எழுதினாலும், முதலில் அதைப் படிக்க அனுப்புவது என் நெருங்கிய நண்பர் கிரேசி மோகனுக்குத்தான். பரந்த இலக்கிய வாசிப்பும், ஆழ்ந்த சமய ஞானமும், மெய்ஞானமும் கரைகண்ட அவருடைய விமர்சனங்களை உட்கொண்டுதான் அவை அச்சேறும்.

”ஏண்டா, அம்பின்னு நான் சின்ன வயசிலே 1920-லே எங்க அக்கா இறந்துபோன போது அனுபவிச்ச துக்கத்தைக் கதையா எழுதியிருக்கியே, நான் உங்கிட்டே அதெல்லாம் பேசினதாவே நினைவு இல்லையே”. அப்பா என்னிடம் தினமணி கதிரில் வெளியான அந்தக் கதையைப் படித்து விட்டுச் சொன்னார். “எனக்குத் தெரியும் அப்பா, எப்படின்னு தெரியாது”. அந்த மகாவாசகர் மறைந்து இன்றோடு பத்து ஆண்டு ஆகிறது.

(  2018 ) அந்திமழை மாத இதழில் மற்றும் வேம்பநாட்டுக் காயல் மின்நூலில் வெளியானது

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன