அற்ப விஷயம் – சோற்றுக்கடியார்கள்

என்  ‘அற்ப விஷயம்’ மின்நூலிலிருந்து

அற்ப விஷயம் -11         நாக்கு மூக்கு

 

காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி.  காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக் கடனே என்று குடித்து விட்டு செருப்பில் காலை நுழைத்துக் கொண்டு புறப்படும் இடம் தெருக்கோடி நாயர் டீக்கடையாக இருக்கும். அங்கே ஒரு டீயை வயிற்றுக்குள் இறக்கினால் தான்  மற்றையவை கிரமமாக இறங்கி இன்றைய நாள் இனிய நாளாகும். நாயர் டீயில் வல்லாரை லேகியத்தையா கலக்கித் தருகிறார்? ஓணத்துக்கு அவர் கடையடைத்தால் இங்கேயும் கார்க் வைத்த மாதிரி அடைப்பு வந்துவிடுமா என்ன?

 

‘டயபடீஸ் கிளினிக் ஆரம்பிக்கப் போறேன். எங்கே திறக்கலாம்?’ சர்க்கரை வியாதிச் சிகிச்சை நிபுணர் ஒருத்தர் என் நண்பரைக் கேட்டார். பிசினஸ் கன்சல்டண்ட் ஆன இவர் ஒரு ஸ்வீட் ஸ்டால் பெயரைச் சொன்னார். நகரம் முழுக்க அங்கங்கே கிளைகள் வைத்து இனிப்பு விற்கும் நிறுவனம் அது. ‘அதிலே ஏதாவது ஒரு கடைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளே கிளினிக் திறங்க. உங்க காட்டிலே மழைதான்’. பின்னே இல்லையா? நாம் எல்லாம் இனியவர்கள். கடைக்காரரின் தாத்தாவுக்கு நூறாவது பிறந்த நாள் என்பதால் விலையில் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி என்று சமீபத்தில் ஒரு விளம்பரம். விடிகாலையிலேயே நாலு தெரு கடந்து நீண்ட வரிசை. கடையின் சீனிச் சுவைக்கு நாக்கை அடமானம் வைத்தவர்கள்  காத்து நின்று பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்வீட் வாங்கிப் போனார்கள்.

 

திருவல்லிக்கேணியில் ஒரு ஓட்டலில் சாம்பார் ஸ்பெஷல். அதுவும் ஞாயிற்றுக் கிழமை தேவலோகத்திலிருந்து இறங்கி வந்து அங்கே யாரோ சாம்பார் வைப்பதாகக் கேள்வி. பஸ், ஆட்டோ, ஸ்கூட்டர், கார் என்று ஏறி வந்து மக்கள் அங்கே காலையில் வந்து குவிவது வாடிக்கை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி எல்லோரும் இட்லி சாம்பார் தான் ஆர்டர் செய்வார்கள். அந்த சாம்பார் தேசத்தில் சட்னி கொண்டு வரச் சொன்னால், சர்வர் உங்களைத் துச்சமாகப் பார்ப்பது நிச்சயம். மராத்திய மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட சாம்பாருக்கு சூப்பர், வேணாம், ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தைப் ஏற்படுத்திக் கொடுத்தது நாம்தான்.

 

ஊருக்கும் தீனிக்கும் முடிச்சுப் போடுகிற கலை கைவந்த ஒன்று நமக்கு. சைவ சாப்பாட்டு ஓட்டல் என்றால் பெயரில் எங்கேயாவது உடுப்பி ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். அசைவம் என்றால் திருச்சிக்குத் தெற்கே இருக்கும் ஏதாவது ஊரின் பெயரைத் துணிந்து வைக்கலாம். பாக்கி இருக்கிற ஊர்கள் சிவகங்கை, கல்லல், சருகணி, தேவகோட்டை. வேணாமா? பெயர்ப் பலகையில் அப்பத்தா, அம்மாச்சி என்று உறவுமுறை சொல்லி  அழைக்கலாம்.  அதாவது தெக்கத்தி உறவே தேவை.

 

தி.நகர் ஹோட்டலில் மதியச் சாப்பாட்டுக்கு உட்காரும்போது  பொரியலுக்கு மேல் ரசத்தைத் தவறுதலாக ஊற்றிவிட்டால் பரிமாறுகிறவரிடம் எரிந்து விழுகிறவர்கள் சினம் காக்கும் இடம் ஐந்து நட்சத்திர ஓட்டல். டையைக் கட்டிக் கொண்டு கருத்தரங்கம், போர்ட் மீட்டிங் என்று இங்கே எப்போதாவது படியேறும்போது பகல் சாப்பாடு கட்டாயம் இருக்கும். ஒரே தட்டில் தயிர் வடை, வறுத்த கோழி, கீரை மசியல், தேங்காய்ச் சாதம் என்று கலந்து கட்டியாகச் சாப்பிட வேண்டி வரும். அதுவும் நின்ற கோலத்தில். யாரும் இதுக்காக அலுத்துக் கொள்வதில்லை.

 

விலைவாசி எகிற எகிற ஹோட்டலை மறந்து ஒரு பெரும்படை தெருவோரக் கையேந்தி பவான் தள்ளுவண்டிகளில் பொடி தோசைக்காகக் காத்து நிற்கிறது. சொகுசு காரில் வரும் இன்னொரு கூட்டம் ஸ்டார் ஹோட்டலில் நுழைகிறது. அங்கே ஸ்பெஷலாக கையேந்தி பவான் அரங்கம் அமைத்து தள்ளுவண்டி வைத்து பொடி தோசை விற்கிறார்கள். அதிக விலைக்கு, இக்கரையில் அக்கரை ருசி.

 

ஆகாரத்தில் வீட்டு மணத்துக்கு ஏங்குகிறதில் வெள்ளைக்காரர்கள் தனிரகம். பெரிய ஹோட்டல்களில் கூட ‘ஹோம் மேட் சூப்’ என்று பெருமையோடு விளம்பரம் செய்திருப்பார்கள். ஐந்து இலக்கச் சம்பளம் வாங்கும் சமையல்காரர்கள்  காரில் வேலைக்கு வரும்போதே தூக்குப் பாத்திரத்தில் வீட்டிலிருந்து சூப் கொண்டு வந்து விடுவார்களோ என்னமோ. எடின்பரோ நகரில்  ஒரு ஹோட்டலில் பார்த்தது இது. ‘நேற்றைய சூப்பும் ரொட்டியும்’ சிறப்பு காலை உணவு. கறுப்போ வெளுப்போ,  நேத்து வச்ச மீன் குழம்பு வகையறா சகலரையும் கட்டிப் போடுகிற சமாச்சாரம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன