jottings – December second fortnightகிறுக்கல்கள் – மார்கழிப் பிறப்பு

மார்கழி பிறக்க்ப் போறது. தமிழ்நாட்டுலே சின்ன ஊர், பெரிய ஊர்லே எல்லாம் அதிகாலையிலே எல்.ஆர்.ஈஸ்வரியோட ‘செல்லாத்தா மாரியாத்தா’, எங்கேயாவது சிவன் கோவில்லே தேசலா ‘காதார் குழலாட பைம்பூண் கழலாடா’ அமர்க்களப்படும்.

இந்த வருஷம் இன்னொரு ஸ்பெஷல் மார்கழி நிகழ்வு – பல கோவில்கள்லே பூஜை நேரத்திலே செண்டை மேளம் முழங்கப் போகுதாம். கேரளத்திலிருந்து பல செண்டை மேளக் குழுக்கள் திரண்டு வந்து சான்ஸ் வாங்கிட்டாங்களாம்.

நம்ம ஊர் நாதசுவர, தவில் கலைஞர்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே. சபாவிலேயும் ஒதுக்கி வைப்பு, கோவில்லேயும் பாய்காட்.. எங்கே தான் போவாங்க அவங்க?

******************************************************************

நியூ ஜெர்ஜி கவர்னர் கிறிஸ்டி ‘கொஞ்சம் பூசினாப்போல’ இருக்கார். இதெல்லாம் ஒரு வெயிட்டா, நான் ஜனாதிபதியானா வெள்ளை மாளிகைக் கதவு திறந்து வழிவிடக் கஷ்டமாவா இருக்கும்னு சிரிச்சுக்கிட்டே கேட்டிருக்கார்.

யோசிச்சுப் பார்த்தா, நம்ம நாட்டுலே ஜனாதிபதிகளிலே பி.வி.கிரி தவிர வேறே யாரும் ரெட்டை நாடியா என் நினைவுக்குத் தெரியலே..ராதாகிருஷ்ணன் தலையிலே குஞ்சம் வச்ச பென்சில் மாதிரி இருப்பார். பிரணாப் தா கொஞ்சம் ஓவர் வெயிட் தான். மிஷ்டி தஹியும் ரசகுல்லாவும் சாப்பிடறதை நிறுத்தினா துரும்பா இளைச்சுடுவார்.

நம்ம பிரதமர்கள்? நேருவிலே தொடங்கி, இன்னிக்கு மன்மோகன் சிங் வரை யாரையும் குண்டுன்னு சொல்ல முடியாது. தேவே கௌடா கொஞ்சம் ..

அவ்வளவு தான்.. தேசிய அளவோட நிறுத்திக்கலாம்.

**************************************************************

இசை மேதை பண்டிட் ரவிசங்கருக்கு அஞ்சலி.

91 வயது நிறைவாழ்வு. இறக்க ஒரு மாதம் வரை மனதுக்கு நிறைவான சிதார் இசையை அள்ளி வழங்க வாய்ப்பு. தேசிய, அனைத்துலக அங்கீகாரம், பாராட்டு, கிராமி விருது குறும்பட்டியலில் இந்த வயதிலும் இடம் பிடித்த கலை நேர்த்தி, பீட்டில்ஸ் என்ற மிகப் பிரபல இசைக்குழுவோடு இணைந்து (சர்ஜெண்ட் பெப்பர்ஸ் லோன்லி ஹார்ட்ஸ் கிளப் – முக்கியமாக ஜார்ஜ் ஹாரிஸனின் மனதை இன்னும் நெருடும் ‘வித்தின் யூ, வித் அவுட் யூ’) இசை வெளியீடு, மீடியாவின் பார்வையில் எப்போதும் இருக்க வாய்ப்பு, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மாறி மாறி குடியிருப்பு..

மிகச் சிலருக்கே இதெல்லாம் வாய்க்கும். ரவிசங்கர் அவர்களில் ஒருவர். அவர் இசையைக் கொண்டாடுவோம். Let us celebrate his life and times. அவர் இறப்புக்கு வருந்துவதில் அர்த்தமில்லை.

************************************

அதிகாலை வாக்கிங் போகும்போது தெருக்கோடி டிரான்ஸ்பார்மர் பெட்டி மேல் ‘விரைவீக்கமா, சிகிச்சைக்கு..’ போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இல்லை, இது ‘விறை வீக்க்கமா?’.

‘Hardballing’ strategy in creating awareness?

ஆமா, அது ஏன் டிரான்ஸ்பார்மர் பெட்டிகள் மேல்தான் ‘விரைவீக்கமா?’ போஸ்டர் ஒட்ட வேண்டும் என்ற நியதி?

************************************************

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன