அற்ப விஷயம் -17 குங்குமம் பத்திரிகை பத்தித் தொகுப்பில் இருந்து
‘திரு.அ இறந்துவிட்டார்’. மொபைல் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ் தகவல். இந்த மாதிரியான செய்திகள் பெரும்பாலும் தூங்கப் போன பிற்பாடு வந்து படுக்கைக்குப் பக்கத்தில் பொறுமையாகக் காத்திருக்கும். விடிந்ததும் படிக்கக் கிடைத்து அன்றைய தினத்தையே தடம் புரட்டிப் போட்டுவிடலாம். யார் காலமானார், அனுப்பியவருக்கு என்ன உறவு அதைவிட முக்கியமாக நமக்கு யார் என்பதைப் பொறுத்த பாதிப்பு இது. முதல் எதிர்வினை உடனடி தொலைபேசி அழைப்பு.
அநேகமாக, தகவல் அனுப்பியவரை அழைத்து உண்மைதானா என்று உறுதி செய்கிற மறு அழைப்பாக இருக்கும் இது. அந்தப் பக்கம் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டோ, கூப்பிட்ட குரலுக்குப் பதில் குரல் கிடைக்காமலோ போகலாம். அப்போது கையில் காப்பிக் குவளையும் காலடியில் கொஞ்சம் விரிந்த பூக்கள் போல் வந்து விழுந்த தினசரிப் பத்திரிகையுமாக அடுத்த அழைப்புகள். செய்தியை உறுதிப்படுத்தக் கூடியவர்கள் என்று நாம் நினைக்கிற மற்றவர்களுக்குப் போகும் இவை, இவர்களும் அதிகாலை மௌன விரதம் கடைப்பிடிக்கிறவர்கள் என்றால், வந்த எஸ்.எம்.எஸ் செய்தி அப்படியே பிரதி செய்யப்பட்டு, தகவல் உண்மையா என்ற பின்குறிப்பு சேர்த்து அனுப்பப் படும். தகவலானவர் பெரும்புள்ளியாக இருக்கும், அதாவது இருந்த பட்சத்தில், காலி காப்பிக் குவளையை வைத்த கை டி.வி ரிமோட்டைத் தேடும். பாட்டும், ஆட்டமும், சர்வ மத அருளுரையுமாக எல்லா மொழியும் பொங்கிப் பிரவகிக்கும் வாய்க்கால் வாய்க்காலாகத் தாவி, கீழே வெள்ளைப் பட்டையாக நகரும் செய்தித் தலைப்புகளை சிரத்தையாகப் படிப்பதில் அடுத்த சில நிமிடம் கரைந்து போகும்.
உள்ளூர் இறப்புகள் வழக்கமான தினசரி நடைமுறையைப் பாதிக்கக் கூடியவை. முதல் கவலை ஆபீசுக்கு லீவு சொல்வதா, சில மணிநேரம் தாமதமாக வர அனுமதி வாங்கிக் கொள்வதா என்பது. சாவைத் தெரிவிக்க மட்டுமில்லை, அது தொடர்பான மற்ற போக்குவரத்துகளுக்கும் மொபைல் குறுஞ்செய்திகளே மிகச் சரியான தகவல் தொடர்பு வசதி. அனுப்பி முடிந்ததும் பள்ளிக்கூடத்தில் மகனைக் கொண்டு விடுவது, போகிற வழியில் மனைவியை அலுவலகத்தில் இறக்கி விடுவது போன்ற காரியங்களுக்கும் ஒரு நாள் விடுமுறை விண்ணப்பிக்கப் படும். முணுமுணுப்பு, கூச்சல், அனுசரணையான பதில் என்று பலதரத்தில் எதிர்வினையோடு இதுவும் ஒருவழியாக அரங்கேறி முடிந்ததும் சட்டென்று சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத ஒரு பரபரப்பும், சமயத்தில் கொஞ்சம்போல் உற்சாகமும் எட்டிப் பார்க்கும். இன்றைய தினம் ஏதோ ஒரு விதத்தில் மாறுபட்டதில் வந்த பரபரப்பு அது.
இருப்பதிலேயே பழைய உடுப்பாக எடுத்து மாட்டிக் கொண்டு, தலை வாராமல், முகம் மழிக்காமல் போய்த் துக்கம் கொண்டாடுவது நம்முடைய பழக்க வழக்கம். மேலை நாட்டில் மேலே போனவர்களுக்கு அஞ்சலி செய்வது குளித்து, நன்றாக உடுத்திப் போய்த்தான். ஒரு செட் கருப்பு உடுப்புகள் எப்போதும் ஹாங்கரில் மாட்டி அலமாரியில் இருப்பது சாதாரணம். மகிழ்ச்சியோ துக்கமோ மலர்களை அளித்துச் சொல்வது என்ற அவர்களுடைய பழக்கம் மட்டும் நம்முடையதும் கூட.
விடிந்ததுமே மலர் வளையம் வாங்கப் போய் நின்றால் கடைக்காரர் ஐந்து பத்து நிமிடம் தாமதிக்கச் சொல்வார். யாராவது நாலு முழும் பூவோ, நல்ல காரியத்துக்காக பூமாலையோ வாங்கி போணி செய்யும்வரை இந்தக் காத்திருப்பு நீளலாம் என்பதால் கொஞ்சம் தாமதமாகப் போவதே மேல். ரொம்பவும் தாமதமாகி விட்டால் போகிற இடத்தில் கூட்டம் அதிகமாகி விடும். அங்கே அப்புறம் நம்மை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். நிச்சயமாக, நாயகன் அங்கே நாம் இல்லை.
இறப்பு நிகழ்ந்த வீட்டுக்கோ, இறுதிச் சடங்கு செய்யப்படும் இடத்துக்கோ மலர் வளையத்தோடு புறப்படும் போது தவறாமல் எட்டிப் பார்க்கும் ஒரு சின்னக் கவலை – வண்டியை எங்கே விடுவது, எல்லாம் முடிந்து வரும்போது எப்படி சிக்கல் இல்லாமல் திரும்ப எடுப்பது. நாம் போகிற இடத்தின் நெருக்கடி, அமைப்பு, சூழ்நிலை போன்ற தகவல்கள், முன் அனுபவம் ஆகியவை இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். போகிற இடத்தில் அற்ப சங்கைக்காக பாத்ரூம் இருக்குமா என்பது போன்ற கவலைகளும் இவ்வண்ணமே.
உள்ளே நுழைந்ததும் காலணிகளை அவிழ்த்து விட்டு (அடுத்த கவலை), எதிர்ப்பட்டவரிடம் பேசத் தொடங்க வேண்டும். எப்படி, எப்போ, முந்தாநாள், போன மாசம், போன வருடம் பார்த்தபோது நல்லா இருந்தாரே என்பது போன்ற பதிலை எதிர்பார்க்காத கேள்விகள் பொருத்தமானவை. சட்டென்று ‘பாடி எப்போ வரும்’ என்று யாரோ இல்லை நாமோ அடுத்த கேள்வி கேட்கும்போது ‘அவர்’ ஆக இருந்தவர் ‘அது’வாக மாறிவிட்ட அதிர்ச்சியில் ஒரு வினாடி உறைந்து போக நேரும். ஆனாலும் தாமதிக்காமல் வழக்கமான வாழ்க்கைப் பாதையில் விரைவாக வண்டியைத் திருப்புவது அவசியம். காலமானது நாம் இல்லை. இப்போதைக்கு.