1899 மதறாஸிலிருந்து திருக்கழுக்குன்ற யாத்திரை – விஸ்வரூபம் நாவலில் இருந்து

மகாலிங்கய்யன் சமர்ப்பித்த கருணை மனுவிலிருந்து

(கீழ்க்கண்ட சம்பவங்கள் நடந்தது டிசம்பர் 3,4  1899 விகாரி வருடம் கார்த்திகை 19, 20 புதன்கிழமை, வியாழக்கிழமை எனக் கருதப்படும்)

 

திருக்கழுக்குன்றத்தில் தொழுதுவிட்டு, கழுகுகளின் தரிசனமும் முடித்துவர உத்தேசித்து நான் மாத்திரம் கிளம்பியது என் பூஜ்ய பிதாவின் சிரார்த்தம் முடிந்த  தேய்பிறையில் திரயோதசிக்கு அடுத்த சதுர்த்தசியன்றைக்கு. அமாவாசைக்குக் கடையடைப்பு. முந்தின ரெண்டு தினமும் கடையில் ரஜா சொல்லியிருந்தேன்.

 

சிரார்த்த தினத்தில் விஷ்ணு இலையில் சாப்பிட்டு சோமனும் தட்சிணையுமாக புரோகித சிகாமணிகள் இடுப்புத் துண்டை விரிக்கச் சொல்லி அதில் ஏறி, ஏப்பம் விட்டபடி நடந்து போன பிறகு நானும் சித்தே சிரம பரிகாரம் செய்து எழுந்தேன். பிறகு கொத்தவால்சாவடி போய் ஏற்கனவே பிரஸ்தாபித்த தாங்குதூரி பாலையா என்ற தெலுங்கனிடம், ரெட்டை மாடு பூட்டிய வண்டியில் திருக்கழுக்குன்றம போய்வர ஒரு ரூபாய் அச்சாரம் கொடுத்துவிட்டு சாயரட்சையோடு வீட்டுக்கு வந்தேன். அடுத்த நாள் பகலில் கிளம்ப வேண்டும் என்று உத்தேசித்து வைத்திருந்தபடி சதுர்த்தசியன்று வெய்யில் தாழ்ந்து கிளம்பியானது. வீட்டு ஸ்திரி பிரஷ்டையாக ஒதுங்க வேண்டிப் போனதால் தனியாகவே போகவேண்டி வந்த கஷ்டத்தை முந்தின லிகிதத்தில் தெண்டனிட்டு உரைத்தது துரைகள் கடைக்கண் பார்வையில் பட்டிருக்கக் கூடும்.

 

எட்டு பிரம்மரிஷிகளில் ரெண்டு ரெண்டு பேராக கழுகு உருவில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து ஆறு பேர் முக்தியடைய மிச்சம் ரெண்டு பேர் இந்தக் கலியுகத்தில் கழுகாக அலைந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறது கழுக்குன்றம்  தலபுராணம். இந்தத் தகவல் என் தகப்பனார் சேகரித்து வைத்து செல்லரிக்கத் தொடங்கியிருந்த அச்சு புத்தகம் ஒன்றிலிருந்து நான் கிளம்புகிற நேரத்தில் கிடைத்தது. போகத்தைப் பற்றி ஆசிரியப்பாவும், கொச்சகக் கலிப்பாவும் எழுதாமல் இப்படியான ஸ்தல புராணங்களை இயற்றியிருந்தால் நான்  காராக்ரஹத்தில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க மாட்டேனோ என்னமோ. அது எந்தப்படிக்கும் போகட்டும். துரைகள் தொடர்ந்து மேலே படிக்க உத்தரவாகணும்.

 

பட்டணத்திலே பிறந்து, சமுத்திரக் காற்றைக் குடித்துக் கொண்டு, மயிலாப்பூர் திருக்குளத்து ஜலத்தில் குளித்துத் தொழுது குடத்தில் சேந்தி வந்து, கொத்தவால் சாவடியில் காய்கறி, பழ வர்க்கங்களும், ஆடியப்ப நாயக்கன் சந்தில் அரிசியுமாக வாங்கி வந்ததை நறுக்கியும் கொதிக்கவும் வேகவும் வைத்தும் ஆகாரம் செய்து நித்திரை போய் எழுகிற தினசரி ஆச்சாரத்தில் இருக்கப்பட்டவன் நான். என் போன்றவர்களுக்கு திருக்கழுக்குன்ற யாத்திரை போன்றவை ஒரு சந்தோஷத்தையும் தரமாட்டாது. சதுப்பு நிலங்களையும் களிமண் பூமியையும் கடந்து, நடுவே கல்லும் முள்ளுமான பாதையில் சிரமத்தோடு போனால், பாதி தூரம் போவதற்குள் அது முடிந்து போகும். அப்புறம் வண்டி முன்னேற முடியாதபடி சேறும் சகதியும். எருமை மாடுகளும், வராகங்களும் நீந்தித் திளைத்துக் கொண்டிருக்கும் மடு. அந்தப் பிரதேசத்துக் கரையில் மாடுகளை நடத்தியபடி ஒரு தடவையும், வண்டியை ஜாக்கிரதையாக இழுக்க வண்டிக்காரனுக்கு ஒத்தாசை செய்தபடி இன்னொரு தடவையும் போய்வந்த பிறகு சகதி கடந்து திரும்ப வண்டி பூட்டி ஓட்டலானோம்.

 

வழியில் ஒரு கிராமம் தட்டுப்பட்டது. பெரிய மைதானமாக பக்கத்தில் நீர்நிலையோடு கூட இருந்ததால், வண்டிக்காரன் இங்கேயே தங்கி விட்டு விடிந்து இரண்டு மணி நேரம்போல் யாத்திரையைத் தொடர்ந்தால் திருக்கழுக்குன்றம் போய்விடலாம் என்றான். அவன் இங்கே ஏற்கனவே பல தடவை வந்து அனுபவப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. மாட்டை அவிழ்த்துக் கட்டி கூளம் வைத்த பிறகு உத்தேசித்திருந்தபடிக்கோ என்னமோ கள்ளுக் குடிக்க மேற்கே பார்த்து நடந்து போய்விட்டான்.

 

நான் கொண்டு போயிருந்த அவலை மோர் விட்டுப் பிசைந்து நாலைந்து உருண்டை ராப்போஜனமாக சாப்பிட்டான பிறகு சிரார்த்தத்துக்குச் செய்து மீந்த எள்ளுருண்டை நாலைந்தையும் தின்றேன். கொண்டு வந்திருந்த சுத்த ஜலத்தை ஒரு மடக்கு அருந்தியானது. அப்புறம் கொஞ்சம் அந்தத் தரிசில் லாந்திவிட்டு, பூச்சி பொட்டு இல்லாத இடமாகப் பார்த்து துண்டை விரித்து நித்திரை போக சித்தம் செய்தேன். பக்கத்திலே நீர்நிலையில்  நீர் அலையடிக்கிறதும், ராப்பறவை இரைகிறதும், தவளைக் கூச்சலும் தவிர வேறு சத்தம் இல்லை. நானும் மேலே கவிந்த ஆகாசத்தில் நட்சத்திரமுமாக தனியாகக் கிடந்த பொழுது அது. காற்று ஆனந்தகரமாக வந்து தாலாட்டு பாடி கண்ணயரச் சொன்னபோது நான் சத்தியமாக பகவத் விஷயமாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆறு பிரம்மகுமாரர்கள் கழுகாக அவதாரம் செய்து முக்தி அடைந்து மற்ற ரெண்டு பேருக்காக பக்தவத்சலேசுவரரின் காலடியில் காத்திருக்கிறதை மனதில் வெண்பாவாகச் செய்கிறபோது இரண்டு அடிகளே இயற்றி முடியக் கண்ணயர்ந்து போனேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன