ஆப்பிள்காரர்
வாழ்க்கை வரலாறுகள் படிக்க சுவாரசியமானவை – அவற்றில் மெயின் கதாபாத்திரமாக வருகிறவர்களுக்கு.
சுயசரிதம் இன்னும் விசேஷமானது. உயிரோடு இருக்கும்போதே கடியாரத்தின் முள்ளைப் பின்னால் நகர்த்தி, பழைய காலண்டரை சுவரில் ஆணியடித்து மாட்டி, ஏற்கனவே நடந்ததை எல்லாம், இப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கிற படி மாற்றி அமைப்பது.
இங்கே ஒரு காந்தி, அங்கே ஒரு லூயி பாஸ்டர் இப்படி விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் நேர்மையான சுயவரலாறுகளின் எண்ணிக்கை, வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை ஒட்டுமொத்தமாகக் கணக்கெடுத்தால் ஒரு டசன் தேறும்.
சுயசரிதையில் சுய கற்பனை கலந்தால் சம்பந்தப்பட்டவரின் மனசாட்சி வேண்டுமானல் உறுத்தும். பாட்டுடைத் தலைவன் சொல்லச் சொல்ல, அடுத்தாற்போல் உட்கார்ந்து கேட்டு புளகாங்கிதம் அடைந்து பயாகிரபி எழுதும்போது அந்த உறுத்தலுக்கெல்லாம் இடமில்லை. நீளமான மெய்யை கொஞ்சம் வளைத்துச் சுற்றி வளையம் வளையமாக அழகு படுத்தி அளிப்பது எழுதுகிறவரின் எழுத்துத் திறமைக்கு சவால். இந்த மாதிரி –
இவருடைய சொந்த மாமா மரண தண்டனை பெற்று ஜெயிலில் அடைபட்டு எலக்ட்ரிக் நாற்காலியில் சேர்த்துக் கட்டி வைத்து மின்சார ஷாக் கொடுத்து கொல்லப்பட்டார்.
இதை வாழ்க்கை வரலாற்றில் எழுதும்போது அந்த மாமாவை கௌரவமானவராக்கி விடலாம் –
His maternal uncle occupied a honarary chair of applied electronics in a premier Governmental institution and died in harness.
1940-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 20-ந் தேதி அவனியாபுரம் கிழக்கில் காலை ஏழு மணிக்குப் பிறந்தார் என்று சாங்கோபாங்கமாக ஆரம்பிக்கும் கெட்டி அட்டை போட்ட வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தால், புத்தகத்தின் கடைசி பக்கத்தைப் படித்து இன்னும் இருக்காரா என்று உறுதி செய்து கொண்டு திரும்ப புத்தகக் கடை அலமாரியிலோ நூலக மேஜையிலோ வைத்துவிடுவது வழக்கம்.
இப்படியான எளிதாக உடைக்க முடியாத, சரி இங்கிலீஷிலேயே சொல்லி விடலாம், tough nut to crack ஆசாமிகளையும் உட்கார்ந்து படிக்க வைக்கிற ஒரு வாழ்க்கை வரலாறு சமீபத்தில் காலம் சென்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியது. டைம்ஸ் பத்திரிகை மற்றும் சி.என்.என் டெலிவிஷனில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த, வாழ்க்கை வரலாறு எழுதியே பிரபலமான வால்டர் ஐசக்சன் எழுதியது.
ஈர்ப்புக்கு ஒரு காரணம் கோடிக் கணக்கில் உலகம் முழுவதும் விற்கும் நம்பர் ஒன் ஆப்பிள் லேப் டாப் கம்ப்யூட்டர், ஆயிரம் பாட்டுக்களையும் அதற்கு மேலும் சேர்த்து வைத்துக் கேட்க வழி செய்யும் கைக்கடக்கமான ஐபாட், பேசவும் பாட்டுக் கேட்கவும் இன்னும் கம்ப்யூட்டரோடு உறவாடவுமான சேவைகள் கொண்ட ஐபாட், புத்தகம் படிக்க, சினிமா பார்க்க, கையில் சுமந்து திரிய இறகு மாதிரி லேசான ஐபேட் இப்படியான சாதனங்கள் மூலம் ஒரு சின்ன சைஸ் எலக்ட்ரானிக் புரட்சியையே உருவாக்கிய ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியை ஏற்படுத்தி வளர்த்த பிரம்மா – விஷ்ணு இந்த ஸ்டீவ் ஜாப்ஸ். அடுத்த காரணம், ஸ்டீவ் ஜாப்ஸ் இப்போது உயிரோடு இல்லை. புற்று நோயால் அக்டோபர் மாதம் காலமாகி விட்டார் என்பது. அதைவிட முக்கியமான காரணம், தன் வாழ்க்கை முடியப் போகிறது என்று உணர்ந்து கொண்ட ஸ்டீவ் ஐந்து வருடம் முன்பே வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக்க எழுத்தாளரை அணுகியிருக்கிறார் என்பது.
ஸ்டீவோடு கிட்டத்தட்ட நாற்பது நீண்ட பேட்டிகள் – நேர்முகமாகவும், தொலைபேசி மூலமும். அவருடைய நண்பர்கள், உறவினர்கள், ஊழியர்கள், தொழில் முறை போட்டியாளர்கள் இப்படிப் பலரையும் கூட இந்தப் புத்தகத்துக்காகப் பேட்டி எடுத்திருக்கிறார் எழுதிய வால்டர் ஐசக்ஸன்.
ஸ்டீவ் மட்டுமில்லாமல் அவரோடு தொடர்பு கொண்டவர்களையும் சந்தித்துப் பேசியதில் இரண்டு காரியங்களை முடிக்க முடிந்திருக்கிறது. முதலாவது, ஸ்டீவ் பற்றிய அவர்களின் பார்வைக் கோணத்தையும் நினைவுத் தடங்களையும் பதிவு செய்தல். அடுத்தது இன்னும் விசேஷமானது.
ஸ்டீவ் தன் சொந்தக் கதையை, எதிர்நீச்சல் போட்டு மற்ற அமெரிக்க கம்ப்யூட்டர் கம்பெனிகளின் போட்டியை சமாளித்து முன்னுக்கு வந்ததை எல்லாம் சொல்லும்போது, பெரும்பாலும் நடந்தது நடந்தபடி நேர்மையோடு சொன்னார் என்றாலும், அவ்வப்போது அவருடைய ‘கற்பனை நிஜத்தை’யும் (his own version of reality) கலந்தே சொல்லியிருக்கிறார். கூடிய மட்டும் இவற்றைப் பகுத்தறிய சம்பவங்களில் சம்பந்தப்பட்ட மற்றவர்களிடம் இத் தகவல்களைச் சரி பார்க்க வேண்டிய வேலையும் எழுத்தாளர் வால்ட்டர் ஐசக்சனுக்கு வாய்த்தது.
ஆக, முழு உண்மை, பகுதி உண்மை, முறுக்கி வேறு மாதிரி மாற்றப்பட்ட உண்மை, கற்பனையான உண்மை இப்படி உண்மையின் சகல முகங்களோடும் ஸ்டீவ் இந்தப் புத்தகத்தில் அறிமுகமாகிறார்.
ஸ்டீவ் அக்டோபர் மாதம் இறந்தபோது உலகமெங்கும் அவருடைய ஆராதகர்கள் – இவர்களில் இளைய தலைமுறையே அதிகமான இடத்தைப் பிடித்தவர்கள் – இண்டர்நெட்டில் அஞ்சலிக் கோபுரம் எழுப்புகிற மாதிரி ‘வானத்து அமரன் வந்தான் காண், வந்தது போலே போனான் காண்’ ரீதியில் உருகிக் கண்ணீர் விட்டார்கள். ஸ்டீவ் பற்றி அரசல் புரசலாகத் தெரிந்தவர்களும் அவசர அவசரமாகக் கைக்குட்டை தேடி கண்ணில் ஒற்றிக் கொண்டு இரங்கல் பா பாடிய சத்தம் ஒரு வாரம் முழுக்க நெட்டில் கேட்ட வண்ணம் இருந்தது. ஸ்டீவ் கேட்டுக் கொண்டபடி எழுத ஆரம்பித்த இந்தப் புத்தகம், அவருடைய மரணத்தைத் தொடர்ந்து பெருகிய ஆராதகர்களை வாசகர்களாக்கக் குறி வைத்திருப்பதால், பெரும்பாலும் ஸ்டீவ் காவிய நாயகனாகவே ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சித்தரிக்கப் படுகிறார். காந்தியும் காட்பாதரும் கலந்த ஒரு கலவை.
கம்ப்யூட்டர் கம்பெனி நடத்தியதாலோ என்னமோ ஸ்டீவுக்கு உலகமே பைனரியாகத் தான் தெரிகிறது. திறமைசாலிகள் – முட்டாள்கள், நல்லவர்கள் – அல்லாதவர்கள் இப்படி. அவர் கருத்துப்படி ‘இந்த ஆள் பெருமூடன்’ என்று கணித்தால், பட்டியலில் விழுந்தவர்கள் என்ன செய்தாலும் வெறுப்பை உமிழ்ந்து அவர்களை அவமானப் படுத்துவதை ஸ்டீவ் தன்னைப் பொருத்தவரை ஒரு நாகரீகமாகவே கருதி இருக்கிறார். முக்கியமாக, ஆப்பிள் கம்பெனியின் பெயர் இன்றைக்கு உலக அளவில் பேசப்படுவதற்கு அடித்தளமான பணியாற்றிய மூத்த கம்ப்யூட்டர் விற்பன்னர்களை, மற்ற ஊழியர்கள் முன்னால், கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விடுவதில் ஸ்டீவுக்குக் கொள்ளை ஆசை. கார்ப்பரேட் ஹிட்லர்.
இந்த சேடிஸத்துக்குப் பின்னணிக் காரணமாகக் காட்டப்படுவது ஸ்டீவ் பிறந்ததுமே பெற்றோரால் கைகழுவப்பட்ட குழந்தை. அம்மா யூத மதப் பெண். அப்பா சிரியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஒரு முஸ்லீம். அவர்கள் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே உறவு வைத்திருந்ததால் பிறந்தவர். பெற்றோர் உதறித் தள்ளிய ஸ்டீவை அடுத்தவர் எடுத்து வளர்த்திருக்காவிட்டால் அவர் அமெரிக்கக் கீழ் நகரப் பகுதிகளில் அலைந்து திரிந்து ஏமாற்றி வயிறு வளர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். சின்ன வயதிலேயே சுவீகாரம் எடுத்துக் கொண்ட அம்மாவும் அப்பாவும் அவருடைய பிறப்பு பற்றி ஸ்டீவிடம் சொன்னது அவரை வாழ்க்கை முழுதும் பாதித்து தொழில் ரீதியாகவும், நடைமுறை வாழ்க்கையிலும் வார்த்தை வன்முறையாளராகவே இருக்க வைத்திருந்த பரிதாபம் இந்தப் புத்தகம் முழுக்கப் படிக்கக் கிடைக்கிறது. ஒவ்வொரு வாக்கியத்திலும் கட்டாயம் ஒரு fuck, ஒரு shit வருகிறபடிக்கு ஆப்பிள் கம்பெனியின் மூளை வேலைக்காரர்கள் பலரையும் ஸ்டீவ் ஜாப்ஸ் வார்த்தைச் சவுக்கால் விளாச, அவர்கள் அதை அமைதியாக விழுங்கியிருக்கிறார்கள். அங்கே மட்டுமில்லை எல்லா நாட்டு கம்ப்யூட்டர் கம்பெனிகளிலும் ஊதியத்தை உயர்த்திக் கொடுத்து நாக்கைப் பிடுங்கிக் கொள்வது வழக்கமாக நடக்கிறதுதான்.
தன்னைக் கைவிட்ட அம்மாவையும் அப்பாவையும் விந்து அணுவைச் சேகரித்துக் கருத்தரித்து பெற்றுப் போட்டவர்களாக வாழ்க்கை முழுக்கக் கண்டதும், புற்றுநோய் முற்றிய நிலையில் படுக்கையில் இருக்கும்போது அந்த அப்பா எழுதிய அன்பான கடிதத்துக்கு ‘தேங்க் யூ’ என்று ரெண்டே வார்த்தையில் பதில் எழுதி அலட்சியப் படுத்தியதையும் அவர் மனம் காயப்பட்டதன் விளைவு என்று புரிந்து கொள்ளலாம். ஒன்பது மாதம் ராப்பகலாக ஆப்பிள் கம்பெனி இஞ்சினியர்கள் உழைத்து உருவாக்கிய ஐபோன் வடிவமைப்பு பிடிக்காமல் தூக்கிக் கடாசி விட்டு, ‘புதுசா செய்யணும். ராவாப் பகலா, சனி, ஞாயிறு வீட்டுலே அக்கடான்னு உட்காராம ஆபீசுக்கு வந்து சேருங்க. நான் சொன்னது பிடிக்கலேன்னா, துப்பாக்கி தர்றேன். என்னை இப்பவே சுட்டுக் கொன்னுட்டுப் போங்க’ என்று அழுத்தம் கொடுத்து சிந்திக்க முழு அவகாசம் கூடத் தராமல் ஒரு வல்லுனர் கூட்டத்தையே ‘எஸ் சார்’ போட வைத்த போல்பாட் தனம் டாலர் கனவுகளை மெய்யாக்க பிரயோகித்த அல்டிமேட் ராஜதந்திரமாக இருக்கலாம். ஆனால், உடம்பு சரியில்லாத காரணத்தால் ஆபீசுக்கு மாதக் கணக்கில் போக முடியாமல் இருந்து, திரும்பப் போனதும் ஊழியர் கூட்டம் கூட்டி நரசிம்மாவதாரம் எடுத்து நாலைந்து ஊழியர்களைக் கிழித்துத் திருப்திப்படுவதும், சபையில் அவமானப்படுத்தி அங்கேயே வைத்து பதவியைப் பறித்து ‘பேண்டைக் கழற்றி’ அனுப்புவதும் நோய் மனக்கூறாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியே ஆக வேண்டும் என்று அவருக்கு வாழ்நாள் முழுக்க வெறியே இருந்திருக்கிறது. அறுபதுகளில் ஹிப்பியாக இந்தியா வந்திருக்கிறார். வெறுங்காலோடு கோவில் பிரசாத உண்டைக்கட்டிக்காக மைல் கணக்காக நடந்திருக்கிறார். தன் வயது மற்ற அமெரிக்க இளைஞர்களின் பெரும்பான்மையினருக்குக் கிடைக்காத இந்த அனுபவங்களோடு, பாலில் தண்ணீர் கலந்து விற்ற பால்காரியோடு இங்கே அவர் சண்டை போட்டதையும் சேர்த்துக் கொள்கிறார் வால்டர் ஐசக்ஸன்.
முழுக்க பழங்கள் மட்டுமே உணவாக மாசக் கணக்கில் இருந்திருக்கிறார் ஸ்டீவி. அப்படி இருந்தால் உடலில் கழிவே தங்காது என்றும் வியர்த்தாலும் வாடை அடிக்காது என்றும் திடமாக நம்பிக் குளிக்காமல் நடமாடி இருக்கிறார். அப்படியே வேலைக்குப் போக, மற்றவர்களைக் குறைவாக இவருடைய உடம்பு வாடையால் கஷ்டப்படுத்த, ஆள் குறைவான ராத்திரி ஷிப்டில் உட்கார வைக்கப் பட்டிருக்கிறார். இதனால் எல்லாம் பாதிக்கப்படாமல், புற்றுநோய் முற்றும்வரை, இது தினசரி மூணு வேளை ஆப்பிள் வாரம், இது முழுக்க முழுக்க சாலட் வாரம் என்று விதவிதமாக சாப்பாடு சம்பந்தமாக சோதனை செய்தபடி இருந்திருக்கிறார்.
ஸ்டீவ் புதுச் சிந்தனைகளோடு சதா திரிந்த தொழில்நுட்ப விற்பன்னர் என்று ஆராதகர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம் கொஞ்சம் உடைய, அவருடைய வெற்றிக்கு, காலமும் இடமும் சூழ்நிலையும் பார்த்துச் செயல்பட்டு தொழில்நுட்பத்தை வியாபாரமாக்கும் தந்திரம் இயல்பிலேயே கைவந்ததுதான் காரணம் என்று காட்டுகிறார் ஐசக்ஸன். ஆப்பிள் கம்பெனி உருவாக ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தோள் கொடுத்த இன்னொரு ஸ்டீவ் ஆன, முழுக்க முழுக்கத் தொழில்நுட்ப வல்லுனரான ஸ்டீவ் வோஸ்நியக் தான் ஆப்பிளின் மகத்தான வெற்றிக்கு அடித்தளம் அமைத்ததில் பெரும் பங்கு உள்ளவர் என்று தெரிகிறது.
ஏ.டி.அண்ட் டி தொலைபேசிக் கம்பெனியின் தொலைபேசி அலை அதிர்வுகளைப் போலி செய்து ஓசியில் டெலிபோன் பேச வசதி செய்யும் நீலப் பெட்டி என்ற மோசடி வன்பொருள்-மென்பொருள் தொகுதி தான் இந்த இரட்டையர் முதலில் உருவாக்கி விற்றது. நீலப் பெட்டி மூலம் இரண்டு பேரும் வாட்டிகன் நகரில் போப்பாண்டவரிடம் பேச முயற்சி செய்தது, அதுவும் ஹென்றி கிஸ்ஸிங்கர் போல் குரலை மாற்றிப் பேசி, போப்பாண்டவரின் மடாலயப் பாதிரியார்களை அலறி அடித்துக் கொண்டு பேச வைத்தது போன்ற இளமைப் பருவக் குறும்புகளில் இரண்டு பேர் பங்கும் சரிசமம்.
இப்படிப் பிள்ளையார் சுழி போட்டாலும், முதல் ஆப்பிள் கம்ப்யூட்டரை வடிவமைத்து ஸ்டீவ் வோஸ்நியக் காட்டியதும், இதை எப்படி மற்ற கம்ப்யூட்டர்களோடு இணைப்பது, எப்படி இதில் இருக்கும் தகவலை பிரதி எடுத்து வைப்பது என்று தொலைநோக்கோடு முதல் கேள்விகளைக் கேட்டு ஆப்பிள் நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு போக சாமர்த்தியம் காட்டியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனாலும் வோஸ்நியக்கை ஜாப்ஸ் ஏமாற்றி இருக்கிறார். அடாரி விடியோ விளையாட்டு கம்பெனிக்கு இவர்கள் உருவாக்கிய விளையாட்டு யந்திரத்துக்கான வருமானத்தில் பாதியைப் பகிர்ந்து கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் கம்ப்யூட்டர் சில்லுகளை மிச்சம் பிடித்து குறித்த காலத்தில் வடிவமைத்துக் கொடுத்ததற்காக அடாரி கொடுத்த போனஸைப் பற்றி பங்காளி வோஸ்நிக்கிடம் மூச்சுக்கூட விடவில்லை. இன்னும் கூட இது வோஸ்நிக்குக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இனிப்பில்லாத நினைவு. ஆனாலும் அவருக்கு ஸ்டீவ் நல்ல நண்பராகவே இருந்திருக்கிறார்.
ஐபோன் 4-இல் எழுந்த ஆண்டென்னா சிக்கலை நாலே வாக்கியங்களை சபையில் சொல்லி சமாளித்தது (We’re not perfect. Phones are not perfect. We all know that. But we want to make our users happy), ஐபேட் உருவான போது சரியான முறையில் விளம்பரங்கள் அமையவில்லை என்பதற்காக விளம்பர நிறுவனத்தை துரத்தித் துரத்தி அடித்து வேலை வாங்கியது, ஐ-கிளவுடுக்காக பதினெட்டு மில்லியன் பாட்டுகளை இணைய மேகத்தில் (cloud computing) சேகரிக்க இசை வெளியீட்டுக் கம்பெனிகளோடு ஒப்பந்தம் போட்டு, போட்டியாளரான அமேசனை தலை குப்புற வீழ்த்தியது என்று ஸ்டீவ் ஜாப்ஸின் பராக்கிரமங்கள் விவரமாகச் சொல்லப்பட்டுப் பட்டியல் போடப் படுகின்றன. கூடவே அவர் ஒபாமாவை விருந்துக்கு அழைத்ததும் விவரிக்கப் படுகிறது.
ஒபாமாவிடம் ஸ்டீவ் சொன்னாராம் – அமெரிக்காவில் கல்விமுறை சகிக்கலை. வாத்தியார்களை தொழிற்சங்கம் அமைக்க விடக்கூடாது. சங்கத்தை உடைத்து, வேலையிலே சேர்க்க, அப்புறம் திறமைசாலி இல்லேன்னு சொல்லி நீக்க அதிகாரத்தை கல்லூரி முதல்வர்களுக்குத் தரணும். வருஷம் பதினோரு மாசம், தினம் சாயந்திரம் ஆறு மணி வரை வகுப்பு நடக்கணும். புத்தகத்தை எல்லாம் தூக்கிக் கடாசிடுங்க. வேஸ்ட் அது எல்லாம். இனி (ஆப்பிள்) கம்ப்யூட்டரில் ஈ-பாடப் புத்தகத்தைத் தான் எல்லாரும் படிக்கணும்னு சட்டம் கொண்டு வரலாம்.
அச்சுப் புத்தகங்களை நேசிக்க முடியாத ஸ்டீவ் ஜாப்ஸ், எப்போதாவது சென்னை அண்ணா நூலகத்தைப் பற்றி இதே போல் நம்மவர்களுக்கு உருப்படியான யோசனை என்று ஏதும் சொல்லிவிட்டுப் போனாரா, தெரியவில்லை.