விஷ்ணுபுரம் தேர்தல் – பைசைகிளும் மீனும் -வரைய எளிய மீன்

வக்கீல் மோகனதாசன் ஆபீஸ் களைகட்டி இருந்தது.

 

கோர்ட் கட்சிக்காரர்களை விட, சிவப்புத் துண்டு போட்டவர்கள் தான் சாதாரணமாக் இங்கே அதிகம் தட்டுப்படுவார்கள். இப்போது, கருப்புத் துண்டு போட்ட பழக்கடை அறிவரசன், முனியாண்டி விலாஸ் தங்கராஜு, ரிக்‌ஷா நாச்சியப்பன் என்று ஏகக் கூட்டம்.

 

வக்கீல் வேதாத்திரி ஐயங்காரும் அங்கே தான் இருந்தார். இவர் ஒருத்தர் தான் கூட்டத்தில் கதர் சட்டை போட்டவர்.

 

நாங்கள் இடம் கிடைக்காமல் படிக்கட்டில் இடித்துப் பிடித்துக் கொண்டு நின்றோம்.

 

‘உங்களுக்கு என்னடா இங்கே வேலை.. போய் விளையாடுங்கடா..’

 

யாரோ விரட்டினார்கள்.

 

‘இவங்கதான் நமக்கு பிரச்சார அணி.. என்ன உடன்பிறப்புக்களே.. உதவி செய்வீங்களா..’

 

அறிவரசன் போல் அண்ணன் கேட்டுக்கொண்டால் கார்பனேட் மிக்சரைக்கூட கடகடவென்று குடித்து விடலாம்.

 

‘நண்பர்களே.. இந்த வார்டில் அவங்க டாக்டர் சதானந்தத்தை நிறுத்தியிருக்காங்க.. செல்வாக்கு.. பணம்…நிறையவே இருக்கப்பட்டவர்.. அவரை எதிர்த்து நாம போராடி வெற்றி அடையறது சாதாரணம் இல்லே.. ஆனால் பேரறிஞர் பெருந்தகை சொன்னபடி..’

 

அறிவரசன் மூக்கால் பேசுகிறது போல், ஆனால் பிரமாதமாக இழுத்து இழுத்து, கணீரென்று பேசினார்.

 

வேதாத்திரி ஐயங்கார் கடியாரத்தைப் பார்த்தார். அவர் முசாபரி பங்களாவில் பாட்மிண்டன் விளையாடப் போகிற நேரம்..

 

‘மிஸ்டர் அறிவு அரசு..’ கேண்டிடேட்டை ஃபர்ஸ்ட்லே அனவுன்ஸ் பண்ணிடலாம்.. பிரஸ் ரிப்போர்ட்டர் காத்துண்டிருக்கார்.. ரெண்டு வரி நியூஸ்னாலும் நமக்கு ஸோ இம்பார்ட்டண்ட்.. என்ன நான் சொல்றது?’

 

அறிவரசன் தோளிலிருந்து நீளமாக தரையைத் தொட்ட துண்டால் முகத்தை மெல்லத் துடைத்துக் கொண்டார்.

 

‘மதிப்புக்குரிய வழக்குரைஞர் ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டபடி, நம் வேட்பாளர்.. எந்த அறிமுகமும் தேவையில்லாத, எளிய, தொண்டே தன் மூச்சாக உலவி வரும் நம் இனிய நண்பர்..’

 

பெரிய சரீரத்தைத் தூக்கிக் கொண்டு பாலுசாமி எழுந்து நின்று வணக்கம் சொன்னான்.

 

 

—————————————-

 

 

டாக்டருக்கு மீன். பாலுசாமிக்கு சைக்கிள்.

 

கேட்டதும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மீனை சுலபமாக சாக்குக் கட்டியாலோ பேனாவாலோ வரைந்து விடலாம். டிராயிங் மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததில் அதுதான் சுலபமாக வரைய முடியும். ஆனால் சைக்கிள்? ஓட்டத்தான் முடியும்.

 

ஒரு சுவர் விடாமல் மீன் வரைந்து தள்ளி விட்டார்கள். மிஞ்சிய இடத்தில் சைக்கிள் எழுத ஒருத்தன் பிரஷ்ஷும் கையுமாக அலைந்தான்.

 

வக்கீல் ஆபீஸுக்குப் பக்கத்து வீட்டில் ‘சைக்கிள்’ ஆபீஸ். நாங்கள் உள்ளே மும்முரமாக ஸ்லிப் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

 

‘தம்பிகளா… இதை காமிச்சுத்தான் ஓட்டுப் போட சாவடிக்குப் போகணும்.. பார்த்து.. ஜாக்ரதையா நம்பரும் பேரும் எழுதணும்..’

 

அண்ணன் அறிவரசன் சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கிறோம்.

 

பாலுசாமி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். எங்களுக்கு முன்னால் தினத்தந்தியைப் பிரித்துப் போட்டு மூட மூட வேர்க்கடலை. நாச்சியப்பன் ஓரமாக உட்கார்ந்து ஒண்டிப்பிலி சர்பத்தைப் பெரிய பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டிருந்தான். அவன் ரிக்‌ஷாவில் இரண்டு பக்கமும் சைக்கிள் சின்னம் எழுதிய தட்டி கட்டி, ஒலிபெருக்கி வைத்திருந்தது. சாயந்திரம் அதில் ஏறி நின்றபடி பாலுசாமி நகர்வலம் வருவான். முன்னால் கோஷம் போட்டுக் கொண்டு ஒரு பட்டாளம் போகும்.

 

மொத்த வார்டையும் ஐந்து நிமிடத்தில் சுற்றி வந்துவிட முடியுமென்பதால், அடிக்கொரு தடவை இந்த ஊர்வலத்தை நிறுத்தி யாராவது பேசுவார்கள்.

 

எலக்‌ஷன் ஊர்வலத்தில் எல்லாம் கலந்து கொண்டு, கோஷம் போட்டுக் கொண்டு, தட்டி தூக்கிப் போக எல்லா வீட்டிலும் அவசரத் தடைச் சட்டம் கொண்டு வந்தார்கள்.

 

ஊர்வலத்தில் போகாவிட்டால் என்ன? ஸ்லிப் எழுதுவது, வீடு வீடாக பிட் நோட்டீஸ் கொண்டு போய் வீசுவது என்று ஏகப்பட்ட வேலைகள்…

 

இதற்கும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. என்றாலும் அவ்வப்போது கவனிக்காத நேரம் பார்த்து நழுவிவிட முடியும். வாசலிலேயே ஈசிசேர் போட்டு உட்கார்ந்திருக்கிற தாத்தாவை சமாளிப்பது தான் கொஞ்சம் கஷ்டம். வேதாத்திரி ஐயங்கார் வீட்டிலிருந்து ‘சுவராஜ்யா’வும், ‘பவன்ஸ் ஜேர்னல்’ பத்திரிகையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால், ஒரு நாள் பூரா அவர்  பாட்டுக்குப் படித்து மகிழ்ந்து கொண்டிருப்பார்.

 

இந்த இரண்டு புத்தகத்தையும் தினசரி ‘இண்டு’ பேப்பர் மாதிரி போட வேண்டும் என்று அரசாங்கத்தில் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

 

‘இண்டு’ பேப்பர் என்பது வாசல் தெளித்தவுடன், ஈரமான திண்ணையில் நல்லையா சைக்கிளிலிருந்தே வீசிவிட்டுப் போவது. நான் எழுந்து வெளியே வரும்போது தாத்தா ‘ஸ்போர்ட்ஸ் பேஜை’  திருப்பியிருந்தால், அடுத்த நிமிடம், கவாஸ்கரையும் வடேக்கரையும் மட்டையோடு பார்க்க ‘இண்டு’ என் கையில்.

 

அது என்னமோ.. இந்துவில் இந்தப் பக்கத்தில், ‘யாரெல்லாம் செத்துப் போனது’ என்று படிக்க ஆரம்பித்தவுடன் தாத்தா முகத்தில் ஒரு சந்தோஷம்…

 

‘டாய்லெட் காலியா இருக்கா?’

 

நல்லையா தாமதமாக வந்து தொலைத்தால், கார்பனேட் மிக்சருக்காக நான் தான் ஓட வேண்டும். இண்டு பேப்பரை ஏழு மணிக்கு முன்னால் போட வேண்டும் என்று கூட ஒரு சட்டம் வேணும்…

 

தாத்தாவை விடக் கஷ்டமான மனிதர் அக்பரின் அத்தா. அதுவும் தெருக்கோடியிலேயே துணிக்கடை என்பதால் திடீர் திடீரென்று வீட்டுக்கு வந்து விடக்கூடிய அபாயம்.

 

நேற்று அக்பர் வீட்டில், கோந்து பாட்டில் எடுக்க நாங்கள் போனபோது அத்தா வந்து சேர்ந்தார். நழுவலாம் என்று பார்த்தால், வாசல் கதவை வேறு சாத்தி விட்டுப் பத்து நிமிடம் ஜீவராசன் மாதிரி பிரசங்கம்.. பாட்டாளி வர்க்கமும், சோவியத் புரட்சியும் வராத பிரசங்கம் அது..

 

‘லீவுன்னா லைப்ரரிக்குப் போய் நல்ல புத்தகமா எடுத்துப் படிக்கறது.. நாலு கணக்கைப் போட்டுப் பார்க்கறது..என்ன நான் சொல்றது..’

 

அக்பரின் அத்தா எங்களுக்கு முன்னால் நின்று முழங்கினார்.

 

‘கணக்கு யாராவது கொடுத்தா போடலாம்’

 

சீதரன் எப்பவுமே முந்திரிக் கொட்டைதான்.

 

‘நான் தரேண்டா.. மெகரு..’

 

சண்டாளி. திரைக்கு அந்தப் பக்கம் ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, உடனே எங்கிருந்தோ பழைய நோட்டுப் புத்தகத்தில் கிழித்த பேப்பரும், நாலைந்து பென்சிலுமாக சந்தோஷமாக எடுத்துக் கொண்டு வந்து நிற்கிறாள்.

 

இவள், ‘குப்பி வீட்டுக்குப் போகணும்.. அக்பரைக் காணோம்… நீ வர்றியாடா’ என்று இனிமேல் வரட்டும்… பார்த்துக்கறேன்..

 

‘குப்பி வீட்டுலே முறுக்கு சுட்டு எடுத்தாந்தியேம்மா.. இங்கிட்டு எடுத்தா ’

 

அத்தா பிரசங்கத்துக்கு நடுவே இரைகிறார்.

 

தட்டோடு மெகர் வந்தாள். தட்டு நிறைய தேன்குழல்.

 

‘எடுத்துக்குங்கட.. சீக்கிரமே அக்பருக்கு மார்க்கக் கல்யாணம் வருது.. நீங்க எல்லாம் ரெண்டு நாள் சாப்பாடு இங்கே தான்.. இந்தப் பக்கம் சைவம்.. அந்தப் பக்கம் ஆம்பூர் பிரியாணி..’

 

வெறும் தரையைச் சுட்டு விரலால் பிரித்துக் காட்டினபோது அக்பர் முகத்தில் சின்ன பயம்.  இந்த வயசில் அவனுக்கு என்ன கல்யாணம்? இருந்தால், அதுக்காகப் பயப்படுவது நியாயம் தான் என்று பட்டது.

 

’மார்க்கக் கல்யாணம்னா என்ன சார்?’

 

கிரி கேட்டான்.

 

அத்தா சிரித்துக் கொண்டார்.

 

நான் ஆம்பூர் பிரியாணியைப் பற்றிக் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ‘பனியன் எட்டே முக்கால் ரூபா மேனிக்கு எட்டு

பனியன் விலை என்ன’ என்ற ரீதியில் கணக்குகளைச் சொல்ல ஆரம்பித்தார். நான் போடுகிற சைஸா, பாலுசாமி போடுகிற மாதிரியா?

 

.’யாரு மொதல்லே சரியா விடை கண்டு பிடிக்கறீகளோ அவுகளுக்கு ஒரு பார்க்கர் பேனா நம்ம தரப்பிலே ப்ரைஸ்’

 

அத்தா நைச்சியமாகச் சொன்ன படி நாலு பக்கமும் பார்த்தார்.

 

தூ.. பேனா எல்லாம் பரிசில் சேர்த்தியா.. சொக்கா அத்தனையும் பொன்னாச்சே அத்தனையும் பொன்னாச்சே என்று ஓயாமல் புலம்ப வைக்கிறதாக இருக்க வேண்டாமோ அது…

 

என்னவோ, ஆளை விட்டால் போதும். தலைக்கு மேலே வேலை கிடக்கிறது. வீட்டில் வேறே முடி வெட்டிக்கொள்ளப் போகச் சொல்லி பிடுங்கல்..

 

அது போனோம் வந்தோம் என்று நடந்து முடிகிற காரியமில்லை. சரோஜா முடிதிருத்தகத்தில் குட்டி சைஸ் செக்கோஸ்லோவேகியா டிராக்டர் மாதிரி ஒரு பயங்கர மெஷினை குமாரவேலு அண்ணாச்சி என் தலையை வெடுக்கென்று கீழே தாழ்த்தி, பிடரியில் கரகரவென்று மேய விடும் அராஜகம்.

 

முடிந்து வீட்டுக்குப் போனால் இரண்டு நபர் கமிஷனாக அம்மாவும் தாத்தாவுமோ அல்லது அம்மாவும் அத்தையுமோ என்னை விதவிதமாகத் திரும்பச் சொல்லி தலையை மேற்பார்வையிட்டு, ‘வலது பின்னம்பக்கம்.. காதுக்குக் கீழே இன்னும் கொஞ்சம் குறைக்கலாம்..போடா.. நான் சொன்னேன்னு சொல்லி எடுத்துண்டு வந்துடு.. குளிக்க வென்னீர் போட்டு வைக்கறேன்..’

 

குமாரவேலு நிற்க வைத்தே இன்னொரு தடவை தலையில் ஆழ உழுது அனுப்புவார்…

 

குள்ளக் கிட்டு தான் முதலில் முடித்தான்.

 

‘சபாஷ் தம்பி.. இந்தா..பிடி.. களுவிட்டு மசியடைச்சுக்கோ’

 

அத்தா மேஜையைத் திறந்து சிமெண்ட் கலரில் ஒரு சுமார் புதுசு பார்க்கர் பேனாவை நீட்டினார்.

 

‘அத்தா .. அவன் ஆளுதான் குட்டை… டென்த் ஸ்டாண்டர்ட்..’

 

அக்பர் கிட்டுவின் முதுகைப் பார்த்துக் கொண்டு அலறினான்.

 

‘யா அல்லா’

 

அத்தா ஆச்சரியப்பட்டு  முடிப்பதற்குள் பிய்த்துக் கொண்டு கிளம்பினோம்

 

————————————————

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன