விஷ்ணுபுரம் தேர்தல் படகு ஓட்டம் ஐலசா – குறுநாவல் பகுதி

விஷ்ணுபுரம் தேர்தல்                   குறுநாவல்  பகுதி – 7

 

முறை வைத்துக் கொண்டு மீன் ஆபீஸிலும் சைக்கிள் ஆபீஸிலும் ஒலிபரப்பு நடத்தினார்கள்.

 

மீன் ஆபீஸில் ‘கப்பலோட்டிய தமிழன்’ பாட்டும், ‘திருவிளையாடல்’ வசனமும் போட்டார்கள். ‘நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி..சீவி.. சீவி..’ என்று கிராமபோன் மக்கர் செய்த போது நிறுத்தி, ‘நான் கவிஞனுமில்லை’ போட்டார்கள்.

 

‘இங்கே ஒரு வருஷமாக விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கின்றன.. காப்போம் தேசம். இல்லையென்றால் நாசம்’.. என்று எழுதி வைத்துக் கொண்டு யாரோ படித்தார்கள்.

 

சாயந்திரம் புவனா ‘பரிபாலய.. பரிபாலய.. பரிபாலய ரகுராமா’ என்று கச்சேரி செய்தாள். இப்படித் தினம் மிரட்டினால் டாக்டர் ஜெயித்து விடுவார்.

 

மீன் ஆபீஸ் சமாசாரம் அப்படி என்றால் சைக்கிள் ஆபீஸில் இப்படி –

 

அங்கே செல்லம் சவுண்ட் சர்வீஸ்காரர் திரும்பத் திரும்ப ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’  போட்டார். அப்புறம் மதுரையில் போய் ரிக்கார்ட் புதிதாக வாங்கி வந்து ’கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’ போட்டார், ராத்திரி ஒன்பது மணிக்கு ‘தூங்காதே தம்பி தூங்காதே’ போட்டார்.

 

ஜீவராசன் ‘மைக் டெஸ்டிங் ஒன் .. டூ .. த்ரி…’ சொல்லி விட்டு ‘சிற்பி லெனின் பெயர் சொல்லும் பொழுதிலே அற்புத சிந்தனை தோன்றி வரும்’ என்று கட்டைக் குரலில் பாடினார்.  ‘பரிபாலய ரகுராமா’வுக்குச் சரியான போட்டி மிரட்டல் அது.

 

அறிவரசன் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து, வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழர்’ என்று மைக்கில் பேச ஆரம்பித்ததுமே தெரிந்தது, இதை எங்க தமிழ் வாத்தியார் கார்மேகம் தான் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று. லீவ் லெட்டர் எழுதினாலும் அப்படித்தான் அவர் தொடங்குவது வழக்கம்.

 

வேதாத்திரி ஐயங்கார் சைக்கிள் ஆபீஸில் மைக்கைப் பிடித்து இருமித் துப்பி, ‘சுவராஜ்யாவிலே ராஜாஜி என்ன எழுதியிருக்கார்ன்னா..’ என்று பேசியபோது தாத்தா முகத்தைப் பார்த்த மாத்திரத்தில், அவர் ஓட்டு பாலுசாமிக்கு என்று தெளிவாகியது – ‘இண்டு’ பத்திரிகை சரியாக நேரத்துக்கு வரும் பட்சத்தில்.

 

காம்ராஜ் வருகிறார்… எம்ஜியார் வருகிறார் என்று எல்லாம் பேச்சு அடிபட்டது.

 

‘இல்லை.. வரமாட்டார்.. நம்பாதே..’

 

நாகேஷ் வசனம் முழுவதும் மனப்பாடம் ஆனது.

 

‘சந்தைக்கடை மாதிரி ஒரே இரைச்சல்..’

 

தாத்தா ஹியரிங் எய்டைக் கழற்றியபோது அன்றைய ஒலிபரப்பு முடிவடைந்தது.

 

************************************************************************************************

விஷ்ணுபுரம் தேர்தல்                   குறுநாவல்  பகுதி – 8

 

டாக்டர் சதானந்தம் மச்சினியோடு ஐலசா..’

 

வாரச் சந்தைக்கு வியாழக்கிழமை போய்க் கொண்டிருந்தபோது சுவரில் எழுதியிருந்ததை சுந்தரம் பலமாகப் படித்தான்.

 

சந்தைக்குப் போவது சாதாரணமாகப் பெரியவர்கள் செய்வது. ‘லீவு தானே.. இப்பப் பழகிக்காட்ட எப்பப் பழகிக்கறது..’ என்று எல்லா வீடுகளிலும் இருந்து எங்களைப் பையும் கையுமாகத் துரத்தி விட்டார்கள். சீதரன் வீட்டில் ஒவ்வொரு காய்கறி விலையும் உத்தேசமாகக் குறித்த துண்டுச் சீட்டு கொடுத்திருந்தார்கள். அதற்கு மேல் விலை கொடுக்கக் கூடாது. அவ்வளவு தான்.

 

‘ஐலசான்னா போட்டுலே போறது தானே..’

 

சீதரன் கேட்டான்.

 

‘ஐலசா இல்லேடா.. ஜல்ஸா…’

 

கிரி சொன்னான்.

 

இந்த வார்த்தையை வேறு எங்கேயோ பார்த்திருக்கிறோமே…

 

நினைவு வந்து விட்டது. காயாம்பு பெட்டிக்கடையில் கடலை மிட்டாய் பாட்டிலுக்குக் கீழே ‘இந்து நேசன்’ என்று போட்டு ‘குட்டி நடிகையோடு இன்னார் ஜல்ஸா’ என்று பெரிய எழுத்தில் அச்சான பேப்பர் தொங்குமே..

 

‘ஜல்ஸான்னா என்னடா?’

 

இதெல்லாம் சரியாகச் சொல்லக் கூடிய குள்ளக் கிட்டு வரவில்லை.

 

இது ஏதாவது நடிகை.. நடிப்பு.. பாட்டுப் பாடுவது சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கு,.. லெட்டர் கொடுக்கிறது மாதிரி கெட்ட காரியம்…

 

ஆம்பளையும் பொம்பிளையுமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு.. பாட்டுப் பாடிக்கொண்டு..

 

புவனாவுக்குத் தெரிந்த ஒரே பாட்டு ‘பரிபாலய’ தான். சும்மா பாடினாலே பின்னாலிருந்து யாரோ குரல்வளையை நெரிக்கிற மாதிரி இருக்கும். கட்டிப் பிடித்தால் பாட்டு வருமா.. அதுவும் டாக்டரை..

 

இவர் ஐந்தடி தான் இருப்பார். அவள் ‘உசரமா சிவப்பா லிஸ் டெய்லர் மாதிரி’ இருப்பதாக கிருபாகரன் அண்ணன் வகையறாக்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டிருக்கிறோம். அம்மா கூட ‘கோயில் அம்மன் விக்ரகம் மாதிரி லட்சணமான பொண்ணு புவனா’ என்று எப்போதாவது சொல்வாள்.

 

ஒருத்தரே எப்படி அம்மன் ஆகவும், டெய்லராகவும் இருக்க முடியும் என்று தெரியவில்லை.

 

அது போகட்டும்.. புவனா ஏன் டாக்டரைக் கட்டிப் பிடித்துப் பாட வேண்டும்? பைண்டு செய்த தொடர்கதை படிக்காத நேரத்தில் மாமியே இதையெல்லாம் செய்யலாமே.. ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடுவது தவிர, சமயத்தில் அதில் படுத்திருக்கிற டாக்டருக்கு தலைவலி மருந்து தேய்த்து விடுகிற மாமியை விகடன் இரவல் வாங்கப் போனபோது பார்த்த ஞாபகம்.. அதெல்லாம் ஜல்ஸாவில் சேர்த்தி இல்லையோ..

 

ஒரு மண்ணும் விளங்கவில்லை. இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு.. வீட்டுக்குப் போனதும், குள்ள கிட்டுவைப் பார்க்க வேண்டும் ஜல்ஸா என்றால் பாட்டு மட்டும் இருக்காது.

 

‘கத்திரிக்காய் கிலோ ஒரு ரூபாய்க்குத் தருவீங்களா?’

 

கண்டிப்பான குரலில் கேட்டோம்.

 

‘தங்கமா எடுத்துட்டுப் போங்க.. எட்டணான்னு தான் கொடுத்துக்கிட்டிருக்கேன்..’

 

*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன