பல்லாங்குழி விளையாட நிர்பந்திக்கப்பட்டவர்கள் -விஷ்ணுபுரம் தேர்தல்

குறுநாவல் விஷ்ணுபுரம் தேர்தல்                  இரா.முருகன்  பகுதி – 11

 

இன்று மீன் ஒலிபரப்பு இல்லை. சாயந்திரம் ‘பரிபாலய ரகுராமா’ இல்லை. டாக்டர் வீட்டில் இருந்து அழுகை சத்தம்.

 

‘நீ என்ன காப்பி கொண்டு போறது.. நான் சாதம் போட மாட்டேனா.. எங்கேயோ ஒழியறேன்… எல்லாரும் சௌக்கியமா இருங்கோ.. சந்தி சிரிச்சா என்ன போச்சு?’

 

டாக்டர் வீட்டு மாமி குரல் தான்.

 

மாமி விடுவிடுவென்று படி இறங்கிப் போனாள்.

 

‘அம்மா..’

 

வீரபத்ரன் பின்னாலேயே ஓடினான்.

 

‘விடுடா வீரபத்ரா.. நெட்டூருக்கு நிலத்தைப் பார்க்கப் போறேன்.. எங்க அப்பா சாகறபோது மஞ்சக்காணி சொத்தா கொடுத்துட்டுப் போனார் மகானுபாவன்.. அது தாண்டா எனக்கு கொழந்தை.. மனுஷா எல்லாம் கபடம்..’

 

பஸ் ஸ்டாண்டை நோக்கிப் போகிற மாமி…

 

‘சமையல் மாமியை தோசை மாவை அரைக்கச் சொல்லு.. காலம்பறயே ஊறப்போட்டது..அரை உப்பு போட்டா போதும்.. கல்லுப்பு..’

 

போகிற போக்கில் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்து விட்டுப் போனாள்.

 

சைக்கிள் ஆபீஸில் பாட்டுப் போட ஆரம்பித்ததும், ஜீவராசன் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

 

நாங்கள் வேறு தெருக்களில் வேடிக்கை பார்க்கப் போனோம். படகு, இங்க் பாட்டில், குடை, கடியாரம், ரேடியோ என்று ஊரே ஏகக் களேபரமாக இருந்தது.

 

‘குதிரை வீரன்’ சின்னத்துக்காக வேலாயுதசாமி கோவில் தெருவில் ஒரு சின்னப் பையன் குதிரையில் உட்கார்ந்து கொண்டு ‘நாயினா ..எறக்கி விடு.. ஒண்ணுக்கு’ என்று நச்சரித்தான்.

 

’ஊரில் நூத்து நால்பத்துநாலு  தடையுத்தரவு போடப் பட்டுள்ளது’ என்று அறிவிக்க மட்டுமே பயன்பட்ட குருசாமி ஆசாரியின் சவுண்ட் சர்வீஸில் கூட யாரோ மைக் வாடகைக்கு எடுத்து, ‘ஒய்ங்ங்க்… ஒய்ங்ங்க்.’ என்ற ஓட்டை ஸ்பீக்கர் சத்தத்துக்கு நடுவே ‘படகு.. படகு..’ என்று பேசினார்கள்.

 

திரும்பி வந்தபோது, அக்பர் வீட்டு மாடியில் விளக்கு எரிந்தது.

 

‘சைவ சமயக் குரவர் நால்வர்..’

 

போன வருஷப் பாடத்தை அக்பர் படிக்கிற சத்தம். குப்குப் என்று ரயில் எஞ்சின் போல புகை.

 

அத்தா கோபமாக இருந்தால் சுருட்டு பிடிப்பார்.

 

————————————————————————-

 

பொழுது விடிந்து அதிகாலையில் குளத்தில் குளிக்கப் போன பாலுசாமியை யாரோ இருட்டில் கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார்கள். ஏராளமான ரத்த சேதத்தோடு அவனை மதுரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போனார்கள்.

 

கடை வீதியில் தியாகி டெய்லரின் தையல் கடை காலையில் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

 

நாச்சியப்பனை யாரோ துரத்தித் துரத்தி அடித்து அவன் ரிக்‌ஷாவையும் நொறுக்கினதாகப் பேச்சு…

 

தாத்தா வாசல் திண்ணையில் இருந்து கூடத்துக்கு நாற்காலியை மாற்றிக் கொண்டு, விட்ட இடத்திலிருந்து பவன்ஸ் ஜெர்னலைப் படிக்க ஆரம்பித்தார்.

 

‘இவன் வெளியே இறங்கினா காலை உடச்சுடு..’

 

அப்பா ஆபீஸ் போகிறபோது எட்டு ஊருக்குக் கேட்கிற குரலில் சொல்லி விட்டுப் போனதைக் கடைப்பிடிக்க அம்மாவுக்குக் கஷ்டமில்லை.

 

தெரு முழுக்க சிறைகள்… கிழவிகளோடு பல்லாங்குழி விளையாட நிர்ப்பந்திக்கப்பட்ட கைதிகள்.

 

ஒற்றைப் போலீஸ்காரன் கையில் பிரம்போடு சாவகாசமாக நடந்தபோது, பக்கத்துத் தெருக்களில் ஒலிபரப்புகள் சத்தமாக முழங்கிக் கொண்டிருந்தன.

 

ஒரு சாக்பீஸ்… ஒரு சுவர்.. மீனும் சைக்கிளும் போன இடம் தெரியவில்லை.

 

ஜல்ஸா என்றால் சந்தோஷமில்லை. பயங்கர பூதம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன