விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 13
விஷ்ணுபுரம் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிற சிறு நகரம். தமிழகத்தின் மற்ற சிறு நகரங்கள் போல மார்பளாவு சிலைகளும் ஒடுங்கிய வீதிகளும், ஒன்றிரண்டு சினிமா தியேட்டர்களும், தெருவில் குறுக்கும் நெடுக்கும் படர்ந்து பந்தலிடுகின்ற கேபிள் டிவி ஒயர்களும், வாகன இரைச்சலும், மக்கள் தொகைப் பெருக்கமும் இங்கும் உண்டு.
கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ, தொழிற்துறை மேம்பாட்டாலோ இதுவரை இந்த ஊர் முதன்மைப்படுத்தலோ சிறப்பாகப் பேசப்படவோ இலக்கானதில்லை. இப்போது ஆகியிருக்கிறது.
அரசியல் நோக்கர்கள் இந்தத் தேர்தலை, ‘வருங்காலத்தை சூசகமாக உணர்த்துகிற’ ஒரு முடிவைத் தரப் போவதாக, மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளின் பின்னணியில் கட்சிகளின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக மதிப்பிட வழிவகுப்பதாகக் கருதுகிறார்கள்.
இடைத் தேர்தல்கள், கருத்துக் கணிப்பு போல உடனடியான, பரவலான கண்ணோட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. ஆனால் இந்த வாக்காளர்களை, நாட்டின் ஒட்டுமொத்தமான மக்களைப் பிரதிநிதிப் படுத்துகிறவர்களாக நாம் கருத முடியாது. இடைத் தேர்தல்களின் பலமும் இதுதான். பலவீனமும் இதுதான்.
சராசரி மனிதர்களின் வாழ்க்கையை இந்தத் தேர்தல் எப்படிப் பாதிக்கிறது? ஒரு அலசல்.
வாரச்சந்தையில் கறிகாய்க் கடை வைத்திருக்கிற காமாட்சிநாதன் – ‘தக்காளி விலை ஏறினா மட்டும் லபோ திபோன்னு அடிச்சிக்கிறாங்க.. இப்படி சினிமா, வீடியோ, ஊர்வலம், விளக்கு அலங்காரம்னு செலவு செய்யறபோது யாரும் கணக்கை பார்க்கிறதே இல்லே… இதுக்கு செலவழிக்கறது யாரு பணம்? எப்படி வந்தது?’
பழக்கடை உரிமையாளரான அறிவரசன் – ‘நானும் ஒரு காலத்திலே இதிலே எல்லாம் தீவிரமா இருந்தவன் தான். இருபது முப்பது வருடத்தில் எல்லாமே மாறியிருக்கு.. என் வீட்டுலே யாருக்கும் அரசியல் ஈடுபாடு இல்லை..’
ரிக்ஷா ஓட்டும் நாச்சியப்பன் – ‘முப்பது வருஷமா ஓட்டறேன். பையனும் அதான் செய்யறான். எலக்ஷன் வந்தா நாலு காசு அதிகம் பார்க்கலாம். அடிக்கடி வரட்டும். வயிறு இருக்குதே..’
மரக்கடை நடத்தும் ஸ்தானிஸ்லாஸ் நாடார் – ‘வரவர எலக்ஷன்னா வன்முறைதான் அதிகமாவுது.. நான் சமீபத்துலே தான் அமெரிக்கா போய் வந்தேன்.. அங்கேயும் எலக்ஷன் நடக்கறதுன்னாங்க.. ஒரு ஸ்பீக்கர் சத்தம்..ஒண்ணு கேக்கணுமே.. ஊஹூம்..இல்லியே.. என் பையன் கம்ப்யூட்டர் எஞ்சினியரா அங்கே இருக்கான்.. கலிபோர்னியாவிலே.. இதுதான் போட்டோ.. ஆமா குடும்பத்தோட … வெள்ளைக்கார்ச்சிய கட்டிக்கிட்டான்.. மாமா மாமான்னு நல்ல மதிப்பு..அடக்கம்.. ரெண்டு பேரும் காரு ஓட்டுவாங்களா.. என்னை ;நம்மாளுங்க கட்டின பெருமாக் கோவிலுக்கு.. என்னங்க.. எலக்ஷனா… போய் ஓட்டுப் போடறாங்களோ இல்லே கம்ப்யூட்டர்லேயே போடுவாங்களோ.. தெரியலே..’
டாக்டர் சதானந்தம் – ‘நானும் ஒரு டெர்ம் முனிசிபல் கவுன்சிலரா இருந்தவன்.. அப்பல்லாம் தேர்தல் அமைதியா நடக்கும்.. வன்முறைன்னா என்னன்னே தெரியாது..’
லெனின் வாசக சாலை நடத்தும் ஜீவராசன் – ‘ வன்முறை எப்பத்தான் இல்லே? சுதந்திரப் போராட்டத்தும்போது தேவகோட்டை கோர்ட்டை எரிச்சதும், போஸ்ட் ஆபீஸ் சூறை போனதும் எனக்கு சின்ன வயசு ஞாபகம்.. இங்கே அடிப்படை மனித நேயம் குறைந்து வருது.. கலாச்சாரம், கலை, இலக்கியம்.. சகலமானதிலும் நாம் பழைய காலத்தின் தொடர்புகள் அறுந்து போய் அந்நியப்பட்டு நிற்கிறோம். தேர்தல் கால வன்முறைகள் இந்த வெற்றிடத்தில் கருக்கொள்பவை.. நம் பிரச்சார சாதனங்களும், பத்திரிகைகளும், திரைப்படங்களும் வளர்ப்பவை. எதிர்காலம்? எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்கள் சக்தியின் மீது..இறந்து போன சித்தாந்தமா? யார் சொன்னது… இறுதித் தீர்ப்பு இன்னும் எழுதப்படவிலை..
———————————
கடைசியாக வந்த செய்தி:
விஷ்ணுபுரம் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு வன்முறை கோஷ்டிகள் மோதல். வாசகசாலை தீயிடப்பட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் வாசகசாலைக்குள்ளிருந்து வெளியே வந்த முதியவர் காயம். எட்டுப் பேர் படுகாயம் அடைந்தார்கள். ஊரடங்கு உத்தரவு. அமைதி திரும்பிக் கொண்டிருப்பதாக மாவட்ட நிர்வாக அதிகாரி…
(நிறைந்தது)