விஷம் குறுநாவல் – பகுதி 2

விஷம்      குறுநாவல்      இரா.முருகன்             அத்தியாயம்2

 

 

வாசலில் சங்கரன். மேல் மாடியில் குடியிருக்கும் போத்தியின் ஏக புத்ரன்.

 

என்னை விட உயரமான அந்தப் பதினைந்து வயதுப் பையன் அழுகையும் மலையாளமுமாகச் சொன்னது இந்த்த் தரத்தில் இருந்தது –

 

போத்திக்கு ஏதோ ஆகியிருக்கிறது. படுக்கையில் தொப்பல் தொப்பலாக வியர்வையோடு மூச்சு வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். வீட்டில் யாரும் இல்லை. பையனின் அம்மா சங்கணாச்சேரி போயிருக்கிறாள். எப்போது திரும்பி வருவாள் என்று தெரியாது. நான் உடனே மாடியேறி ரட்சிக்க வேண்டும்.

 

போத்தி. சிறையிங்கீழ் சுப்ரமணியப் போத்தி. என்னை மாதிரி ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் கம் ப்ரகிராமர். ஆபீஸில் பக்கத்து பக்கத்து காபின்களிலும், வீட்டில் மேலும் கீழுமாகவும் இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் முப்பது வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாதது பற்றியும், கவிதை எழுதுவது பற்றியும் நிஜமாகவே கவலைப் படுகிறவன். மனைவி ஊருக்குப் போகும்போது அநேகமாக சின்னப் போத்தியை முன்னீர்காவில் மாமா வீட்டில் விட்டுவிட்டு – பள்ளிக்கூடம் பக்கத்தில் தான் – என்னோடு தண்ணியடிக்க உட்கார்ந்து விடுவான். பால் காவடிக்காரனை மலையேற்றுகிற மாதிரி, அவனை மேலே கொண்டு போய்ச் சேர்க்கிற வேலை எனக்கு வாய்க்கும்.

 

பாத்ரூம் செருப்புகளோடு மாடிக்கு விரைந்த போது, பையன் சொன்ன படிக்கே கவலை அளிக்கிற சூழ்நிலையில் போத்தி. கண்கள் நிலை குத்தப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்தன. சுவாசம் கராபுரா என்று பிசிறடிக்க, பெரிய தலையணையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான். சுற்றி நிறைய சிகரெட் துண்டு, நிலக்கட்லைத் தோல். போன வாரத்துக் ’கலாகௌமுதி’ பத்திரிகை கதகளி ஆட்டக்காரனின் பின் வசத்துப் புகைப்படம் தெரிய விரிந்து கிடந்தது.

 

‘போத்தி.. எடோ போத்தி..’

 

அவனைத் தொட்டு அசைத்து, அப்புறம் தோளில் தட்டி, கடைசியாக உலுக்கி அவன் கவனத்தைக் கவரும் முயற்சிகளில் ஈடுபட்டேன். கல்பகோடி காலம் இப்படிக் கழிந்த பிறகு போத்தி என் பக்கம் லேசாகத் திரும்பி, ‘விஷம்’ என்றான்.

 

’என்னது?’

 

அவன் திரும்பச் சொல்ல எந்தப் பிரயாசையும் எடுக்கவில்லை.

 

நான் கேட்டதைப் பையனும் உறுதி செய்தான். போத்தி விவகாரமான சமாசாரம் எதுவோ சாப்பிட்டிருக்கிறான்.

 

’கண்ட கருமத்தையும் எதுக்குத் முழுங்கினே?’

 

அவன் காதில் உஷ்ணமாக அலறியபோது என் குரலே எனக்கு அந்நியமாகப் பட்டது. என்றாலும் எனக்கு அந்தத் தகவல் வேண்டும்.

 

இதை இங்கே நிறுத்தி விட்டு, இந்த விஷயமாகப் போன வாரம் கம்ப்யூட்டரை சம்பளப் பட்டியல் தயாரிக்க வைத்து விட்டு கன்சோலில் எழுதிய கவிதையைத் தர வேண்டியிருக்கிறது.

 

சேகரித்து வைத்துக்கொள்

எதுவும் இல்லாவிட்டாலும்

தகவலையாவது.

 

ஒரு மூட்டை வெங்காயம் என்ன விலை?

தீபாவளிப் படங்களில்

எதற்கு வசூல் அதிகம்?

கிரிக்கெட் மேட்சில் நேற்று

பாகிஸ்தான் ஸ்கோர் என்ன?

டி.வியில் புதிதாகச் செய்தி படிக்கும்

பெண்பிள்ளை பெயர் என்ன?

இன்றைக்கு ராகுகாலம்?

என்றைக்கு அடுத்த விடுமுறை நாள்?  டைம்ஸில்

காலமானார் விளம்பரம் செய்யக் கட்டணம்?

 

சுவாசிக்க முன்னே பின்னே ஆனாலும்

நீ கொடுக்கும் தகவல்களால்

உன் இருப்பை நிலைநிறுத்த

முடியும் என்றே தோன்றுகிறது.

 

மேலும்,

உனக்கும் எனக்கும் பரிமாறிக் கொள்ள

வேறு என்ன உண்டு

தகவல் தவிர?

 

எழுதின படிக்கு இதைப் போத்தியிடம் படித்துக் காட்டினேன்.

 

’ராமு, நீ ஆங்கிலம் மற்றும் தமிழில் கவிதை பண்ணுவதால் பிழைத்தாய். மலையாளத்தில் எழுதி இருந்தால் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். முக்கியமாக எம்.கிருஷ்ணன் நாயர் போன்ற விமர்சகர்கள்.’

 

‘எனக்கு ஒரு கொம்பனிடமும் பயம் இல்லை. நீயே வேண்டுமானால் இதை மொழி பெயர்த்து ஏதாவது மலையாளப் பத்திரிகைக்கு அனுப்பி வைக்கலாம்’.

 

’அதற்குப் பதில் நான் விஷம் குடித்துச் செத்துப் போவேன்’.

 

செய்து காட்ட முனைந்திருக்கிறான்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன