குறுநாவல் விஷம் – குளிர்காலக் காலையில் வெங்காயமும் வம்பும் வாங்குகிறவர்கள்

விஷம்    – குறுநாவல்                 அத்தியாயம் – 4

 

‘கட்டிட வேலை செய்கிறவர்கள் குளிக்கிறதுண்டா?’

 

‘இது நம் இலாகா சம்பந்தப்படாத விஷயம். எதற்கு உனக்கு அந்தத் தகவல் வேண்டியிருக்கு?’

 

‘இதோ, இந்தப் பக்கத்து வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மூக்கில் வியர்வை நெடி ஏறுகிறது.  ஒரு நிமிடம் குமட்டுகிறது. ஒரு நிமிடம் குமட்டுகிறது. ஒரு நிமிடம் சொக்க வைக்கிறது. பீகாரியும் அவன் மனைவியும் மாறி மாறி வருகிறார்கள்.’

 

போத்திக்கு என்னிடம் பகிர்ந்து கொள்ள சுவாரசியமான விஷயம் கிடைத்து விட்டது. மூன்றாம் ரவுண்டில் நாக்கும் மனமும் லகுவாக இளகிப் போயிருக்கின்றன.

 

நாலு வருஷம் முன்னால், நீ குளித்து விட்டு வீபூதியணிந்து மெட்ராஸ் ஆப்பீஸில் , தகர டப்பா கம்ப்யூட்டரில் கொபால் ப்ரொகிராம் எழுதிக் கொண்டிருந்தபோது நான் இங்கே ராப்பகலாகக் குளிரில் நடுங்கிக் கொண்டு மினி கம்ப்யூட்டர், யூனிக்ஸ் ஆபரேடிங்க் சிஸ்டம் என்ற மாயாலோகங்களில் புதிதாகச் சஞ்சரிக்கத் தொடங்கியிருந்தேன். ‘இந்தக் குளிர் காலம் முடிவதற்குள் உன் பர்ச்சேஸ் ஓர்டர் சாப்ட்வேர் பேக்கேஜ் தயாராகாவிடால், நீ கரோல்பாக் நடைபாதையில் நைலான் ஜட்டி விற்கப் போகலாம்’ என்கிறார்கள் ஆபீஸில்.  தினசரி வீட்டுக்கு வரும்போது வக்கீல் குமஸ்தா மாதிரி ஒரு கட்டு பேப்பரோடு வருவேன். எல்லாம் பூச்சி பிடிக்க வேண்டிய புரகிராம் கோடிங். அப்போது கீழ் வீட்டில் தான் இருந்தேன். இங்கேயானால், ராவென்றாலும், பகலென்றாலும் சதா அசுர சத்தம்தான்.  இந்தப் பக்கத்து வீடு இருக்கிறது பார், காவிக் கொடி கட்டி. ஒரு அஸ்பெஸ்டாஸ் கூடாரமாக இருந்த இதை இடித்து அப்போதுதான் ரெட்டை மாடி வீடாகக் கட்ட ஆரம்பித்தார்கள். கட்டிட வேலை செய்து வந்த பீகாரிகள் இங்கேயே குடும்பம் குடும்பமாகத் தங்கி இருக்கிறார்கள். சாயந்திரம் வரை வேலை நடக்கிற சத்தம். இருட்டானால் காடா விளக்கு வெளிச்சத்தில் ராமாயண வாசிப்பு, இல்லை சண்டை.

 

வீட்டில் வழக்கம்போல இவள் சங்கணாச்சேரியில் புதையல் எடுக்கப் போயிருக்கிறாள். லீவு என்று பையனும் கூடப் போயிருக்கிறான். கூடப் படுக்கப் பெண் துணை இல்லாத டெல்லிக் குளிரில் கண்ணில் தட்டுப்படுகிற பெண்கள் எல்லாம் அப்சரஸ்கள்.

 

இந்தப் பீகாரிக் கும்பலிலும் ஒரு அப்சரஸ் இருந்தாள்.  நாள் கணக்கில் குளிக்காத அப்சரஸ். கல்யாணமானவள். வீட்டுக்காரன் விடலைப் பையன் போல இருப்பான். டாக்டர் தாவரிடம் பொய் மெடிக்கல் சர்ட்டிபிகேட் வாங்கப் போனபோது அவன் அங்கே நிஜமாகவே வைத்தியம் பார்த்துக் கொள்ள வந்திருந்தான். சத்யநாராயண் சின்ஹாவோ ஏதோ பெயர் சொன்னான். தேவையான சிநேகிதம் தான். நான் போகும்போது, வரும்போதெல்லாம் சலாம் வைக்கிற மட்டில் அப்புறம் ஒரு அடுப்பம். அப்சரஸ் நெருங்கிக் கொண்டிருந்தாள்.

 

‘சாப், இது உங்கள் துணியா?’

 

அந்த சுந்தரி திடீரென்று ஒருநாள் சாயந்திரம் என் லுங்கியைக் கையில் எடுத்துக் கொண்டு படியேறி வந்தாள். வீட்டில் துவைத்து காம்பவுண்டுக்குள் கொடியில் உலர்த்தியது. எப்படியோ வெளியே போய் விழுந்திருக்கிறது.

 

துணியைப் பார்க்கிற சாக்கில் கொஞ்சம் நெருக்கமாகவே போனேன். குப்பென்று நெடி. அழுக்கான நீளப் பாவாடையும், முன்னே திரண்டு நிற்கிற மார்பும், மண்புரண்ட தலைமுடியும், கூப்பிடுகிற கண்ணும், கைத்தண்டையில் தேமலும் எல்லாமே போதையேற்றுகிறது.

 

’இது என்னுடையது இல்லையென்றால் என்ன செய்வதாக உத்தேசம்?’

 

அவள் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே சிரிப்போடு கேட்டேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இவளோடு நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்து பிழைக்க ஓடி விடலாமா?

 

’உங்களுடையது இல்லையென்றால் இதை நானே உடுத்திக் கொள்வேன்’.

 

உலகம் அழகானது. பெண் வாசனை நிறைந்த அற்புதமான உலகம்.

 

‘லஜ்வந்தி, அங்கே என்ன செய்யறே’

 

காம்பவுண்ட் சுவர் பின்னால் சின்ஹா தலை தெரிந்தது. லாஜ்வந்தி லுங்கியை எடுத்துக் கொண்டு ஓடிப் போனாள். காலயில் பார்த்தபோது, பீகாரி அந்த லுங்கியை உடுத்திக் கொண்டு எனக்கு சலாம் சொன்னான்.

 

அதற்கப்புறம் நான் வரும்போது, போகும்போதெல்லாம் என் பார்வை லாஜ்வந்தியைத் தேடுவதும், எந்தத் தடங்கலும் எதிர்ப்படாத கணத்தில் அவள் அதை ஏற்று வாங்கித் திருப்புவதும் வழக்கமாகி விட்டது.

 

ஹோலி வந்து போனது.

அந்த வாரமோ, அடுத்த வாரமோ நினைவில்லை. சனிக்கிழமை. மதிய நேரம். எதற்காகவோ விடுமுறை விட்டார்கள். நான் ஜன்னல் அருகில் உட்கார்ந்து சாரத்தில் ஏறி இறங்குகிற லாஜ்வந்தியை நோட்டம் இட்டுக் கொண்டிருந்தேன். ஒரு ஓரமாகப் பழைய சுவரை இடித்துக் கொண்டிருந்தார்கள். எதிர் வீட்டு சர்தார்ஜி குடும்பத்தில் எல்லோரும் குளித்து விட்டுத் தலையாற்றிக் கொண்டிருந்தார்கள். தெருக் கோடியில் இருந்து ஒட்டகத்தை நடத்திக் கொண்டு ஒருத்தன் வந்தான். அதன் முதுகிலே வெங்காய மூட்டை. நான் வாசலுக்கு வந்து, வாழ்க்கையின் சின்னச் சின்ன சுவாரசியங்களை ரசிக்கிற பாவனகளோடு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்நிய ஸ்திரியை இச்சிக்கிற மனசு சாரத்தைப் பார்க்கிறது. அடுத்த, எதிர் வீடுகளில் இருந்து பைஜாமா அணிந்த கிழவிகள் கிளம்பி வந்து, குளிருக்கு இதமாகப் பேரம் பேசி வெங்காயம் வாங்குவதில்  ஈடுபட்டார்கள்.

 

‘சாப், வெங்காயம் வேணுமா?’

 

தலை பின்னிக் கொண்டு சர்தார்ஜி பையன் கேட்கிறான்.

 

திடீரென்று பக்கத்து வீட்டில் இருந்து பயங்கரமான அலறல். சீனியர் சர்தார்ஜியும் இந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களும் விழுந்தடித்துக் கொண்டு அடுத்த கட்டிடத்துக்குள் ஓடினார்கள். நானும் ஓடினேன்.

 

உள்ளே, தரையில் செங்கல், சிமெண் கலவைக்கு நடுவே, அந்த பீகாரி சின்ஹா தாறுமாறாக விழுந்து கிடந்தான்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன