குறுநாவல் ‘விஷம்’-இவன் என் படோஸி. வீட்டுக்குள் விஷம் குடிக்கிறானா,கல்யாணி பியர் குடித்துக் கொண்டிருக்கிறானா தெரியாது

‘பக்கத்தில் போகாதே … ஷாக் அடிக்கும்’.

 

சர்தார்ஜி என்னைப் பார்த்து அலறுகிறான்.  தரைக்குக் கீழே வரும் மின்சார வயரை பீகாரி எப்படியோ துண்டிக்க முற்பட்டு, மின்சாரம் தாக்கிக் கிடக்கிறான்.

 

யார் யாரோ ஸ்கூட்டர்களில் போய் யாரை எல்லாமோ அழைத்து வந்தார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. பீகாரி இறந்து போய் இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. லாஜ்வந்தி அலறும்போது  விம்முகிற மாரிபில் பார்வை அசந்தர்ப்பமாகப் பதிகிறது. நிலைக்கிறது. மனமில்லாமல் பிய்த்துக் கொள்கிறது.

 

வீட்டு சொந்தக்காரர் வந்தபோது ராத்திரி மணி எட்டு. போலீசுக்குப் போனபோது ஏதோ நடைமுறை சிக்கல், எந்த போலீஸ் ஸ்டேஷன் ஜூரிஸ்டிகேஷன் என்று.

 

பிணத்தைத் துணி போட்டு மூடிச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். மயக்கம் போட்டுத் தரையில் கிடக்கிற லாஜ்வந்தியைச் சுற்றிலும் இன்னொரு கூட்டம்.

 

இருட்டு. பெண்களின் அழுகை. காற்றில் குளிரோடு சாவும் கலந்து இருட்டைக் கனமாக அப்புகிறது.

 

புரண்டு புரண்டு படுக்கிறேன். வாசனை. ஆளை அடிக்கிற, வசீகரமான வியர்வை வாசனை. கால் தண்டைகள் கட்டிலில் டங் டங்கென்று சங்கீதம் எழுப்ப தலைமுடியில் ஒட்டிய மண் துகள் என் கண்ணில் விழுந்து இன்பமாகக் குறுகுறுக்க, கன்னத்தில் பிசுபிசுவென்று அவள் கழுத்து வியர்வை இதமாக ஒட்ட, லாஜ்வந்தி என்மீது கவிகிறாள். வெங்காய மணத்தோடு காதோரம் சிரிக்கிறாள். காம்பவுண்ட் சுவரில் பாம்பு ஊறுகிற சத்தம். பீகாரி எட்டிப் பார்க்கிறான். அது தெரிந்ததால் எனக்குப் பயம் கலந்த சந்தோஷம். புஜங்களில் வியர்வை வடிய உள்ளே மிதந்து கொண்டு வருகிறான். ஓடு, சுவரேறிக் குதி.. டாக்டர் தாவரின் டிஸ்பென்ஸரி. நான் பொய் மெடிக்கல் சர்ட்டிபிகேட் வாங்குவதற்காகக் காத்திருக்கிறேன். கம்பவுண்டர் வந்து, ‘எல்லாரும் சுவாசம் அடக்கிப் படுங்கள். டாக்டர் வருகிறார்’ என்கிறான்.  என் பக்கத்தில் பீகாரி படுத்துக் கொண்டு, ‘எனக்கும் சேர்த்து சர்டிபிகேட் எடுத்து விடு’ என்று மலையாளத்தில் சொல்கிறான். டாக்ட்ர் எங்கள் இருவர் நெஞ்சிலும் குரிசு வரைகிறார்.

 

திடுக்கிட்டு விழித்தேன். குளிருகிறது. வியர்க்கிறது. எல்லாம் கனவு. இல்லை. பீகாரி மரணம் நிஜம். சுவருக்கு அந்தப் பக்கம் பிணம் கிடக்கிறது. ஈயென்று இளித்துக் கொண்டு, கால் பரப்பி, மல்லாந்து, சுவருக்கு இந்தப் பக்கம் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டு .. சலாம் சாப்.. குளித்தாகி விட்டதா.. சாரத்தில் ஏறுகிறீர்களா? வாசனை வீபுதியா இது?

 

நிஜம். சாவின் வாசனை நிஜம். இதற்கு எதுவும் பொருட்டில்லை. கற்பனையும், கள்ளப் பார்வையும், இதழோரம் சிரிப்பும், நிமிஷ நேர மனச் சோரமும் எதுவும் பொருட்டில்லை. காம்பவுண்ட் சுவரில் கை பதித்துப் பார்க்கிற சாவை எதிர்நோக்க முடியாமல் அந்த ராத்திரி விடியாமல் நீண்டு போனது…

————————————————————

அத்தியாயம் – 5

 

கார் ஆஸ்பத்திரிக்குள் நுழைநதபோது போத்தி ஏறக்குறைய காய்கறியைப் போல, ஒரு துணியைப் போல இடுப்பு லுங்கி அவிழ்ந்து த்ரையைத் தொட்டுத் தொங்க..

 

நானும் சின்னப் பையனும் அவனை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைந்தோம். நான் நினைத்ததை விடப் பையன் பலசாலி என்று தெரிந்தது. சுமையில் பாதிக்கு மேல் அவன் தான் தாங்கிக் கொண்டு படியேறினான்.

 

நான் எதிர்பார்த்தது போல, ரிசப்ஷனில் யாரும் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் எதிர்பார்த்தபடியே, ‘மெடிகோ லீகல் கேஸ்.. போலீஸில் அறிவித்து விட்டு வந்தால் தான் ஆயிற்று’ என்று சொல்லிவிட்டார்கள்.

 

‘அவன் இறந்து விடுவானே, டாக்டர்?’

 

‘நான் டாக்டர் இல்லை. அலுவலர் தான்’.

 

‘அவன் இறந்து விடுவானே ஆபீஸர் சாப்’.

 

‘வருத்தப் படுகிறேன். நான் செய்யக் கூடியது ஏதுமில்லை’.

 

‘நான் வேண்டுமானால் டாக்டரைப் பார்க்கட்டுமா?’

 

‘அவரும் இதையே சொன்னால் சுகாதார மந்திரியைப் பார்க்கப் போவீர்களா?’

 

சர்க்கார். சாணிக் காகித வாசனையில், ஐந்தாவது கார்பன் காப்பியில் தெளிவில்லாமல் உருட்டி விழிக்கிற அதிகார முகம். ‘வேர் ஆஸ்’ என்று நைச்சியமாக ஆரம்பித்து,  என் கழுத்தை அறுக்க என் கையையே கத்தி தீட்ட வைக்கிற சாமர்த்தியத்தோடு, கோந்து பாட்டில் கவிழ்த்த மர மேஜைக்கு அப்புறம் விச்ராந்தியாக அமர்ந்து சிரிக்கிற முகம். நான் அடி பணிந்தேன்.

 

‘நீங்கள் ஏன் சார் அவரை விஷம் சாப்பிட விட்டீர்கள்?’

 

அந்த போலீஸ்காரர் திரும்பத் திரும்ப அதைத்தான் கேட்டார். போத்திக்கு நானே குவளையில் அதைக் கலந்து கொடுத்து, மெதுவாக ரசித்துக் குடிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றோ, அல்லது அவனாகச் சுய விருப்பத்தோடு கலந்து குடித்துக் கொண்டிருந்தபோது, புத்தகம் படிக்கிற பாவனையில் ஓரக் கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்ததாகவோ அவர் கற்பனை செய்திருக்கலாம்.

 

‘நான் இவருக்கு அண்டை வீட்டுக்காரன்’. அவசரத்தில் அண்டை வீட்டுக்காரருக்கான இந்தி வார்த்தை நினைவில் வராது போக, அதை ‘நெய்பர்’ என்று ஆங்கிலத்தில் கூறினேன். நெய்பர் என்பது மதராஸிகளுக்குள் மாமன், மச்சான் போல நெருங்கிய உறவாக இருக்கும் என்று தீர்மானம் செய்து கொண்டவர் போல அந்தப் போலீஸ்காரரின் முகம் மலர்ந்தது. இவ்வளவு நெருக்கமான உறவுக்காரர், கிடுக்கிப் பிடியாகப் பிடித்து, பேதிக்குக் கொடுக்கிறது போல வாயை வலியத் திறந்து புகட்டி இருக்கவும் கூடும். குடும்பங்களும் பந்தங்களும் சிதைந்து கொண்டிருக்கின்றன.

 

‘அது சரி.. ஏன் சார் உங்கள் நைபரை விஷம் சாப்பிட விட்டீர்கள்?’ இன்னமும் கரிசனத்தோடு அவர் கேட்க, நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தபோது அண்டை வீட்டுக்காரருக்கான இந்தி வார்த்தை ஞாபகம் வந்து விட்டது.

 

‘சார், இவன் என் படோஸி. தலைக்கு மேலே உட்கார்ந்திருக்கிறான். வீட்டுக்குள் விஷம் குடிக்கிறானா, இல்லை, கல்யாணி பியர் குடித்துக் கொண்டிருக்கிறானா  என்று நான் சதா கண்காணிக்க வேண்டும் என்று நீங்கள் உண்மையாக்வே கருதுகிறீர்களா?’

 

 

(to continue)

வ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன