அத்தியாயம் 7
கடைசி இதழையும் உதிர்த்தாகி விட்டது. ஜவ்வந்திப் பூவின் காம்பு டியூப்லைட் வெளிச்சம் அப்பிய தெருவில் தெறித்து விழுந்தது. கொஞ்சம் தள்ளி இன்னும் நிறையப் பூ இரைந்து கிடந்தது. சேகரன் வருவதற்குள் அதையும் எடுத்து வந்து உதிர்த்துக் கொண்டிருக்கலாம். எதிரே சப் ஸ்டேஷனில் கூழாங்கல் பரப்பில் கம்பீரமாக நின்று டிரான்ஸ்பார்மர்கள் ஹூம்ம்ம் என்று பாடிக் கொண்டிருக்க, ஓடைப் பாலத்துச் சுவரில் போத்தி தனியாக உட்கார்ந்திருந்தான். வழியெல்லாம் பூ. அலங்காரமாக அணிந்து கொண்டு போனவன் கூப்பிடு தூரத்தில் சுடலையில் முதல் ஷெட்டில் எரிந்து கொண்டிருந்தான். தூவிக் கொண்டு போனவர்கள் பொதுக் கிணற்றில் குளித்து. ஈர வேட்டி தொடையில் ஒட்டக் குளித்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு வேதாந்தம் பேசி இக்பால் ஈவினிங் மட்டன் ஸ்டால் கடையில் எண்ணெய்ப் பொரட்டா தின்னக் கிளம்பிப் போய்விட்டார்கள். கொட்டு முழக்கோடு ஊர்வலம் கிளம்பிப் போய்க் கொஞ்ச நேரம் கழித்துப் பின்னாலேயே பூவையும் புகையையும் முகர்ந்து கொண்டு போத்தியும் சேகரனும் புறப்பட்டார்கள். சப்கோர்ட் அருகே வந்தபோது வலது பக்கம் சந்தில் திரும்பினான் சேகரன்.
‘போத்தி, நீயும் வாயேன்’.
அவன் போகிற இடம் போத்திக்குத் தெரியும்.
‘குடும்ப பென்ஷன் விஷயமா ஜி.ஓ காப்பி ஒண்ணு விஜயா கேட்டிருந்தாள். கொடுத்துவிட்டு உடனே வந்துடலாம் வா’.
அத்தனை சீக்கிரம் அவன் வரப் போவதில்லை. கல்லூரி விடு வந்ததும் விஜயாவைப் பார்க்கப் போக ஏதாவது காரணம் தேடிக் கொண்டிருப்பான். கல்யாண்மாகாத, வேலையில்லாத போத்தி. கல்யாணமாகிக் கணவனை இழந்த விஜ்யா.
‘நீ என்னடா கூடமாட ஒத்தாசையா?’
ஈவினிங் மட்டன் ஸ்டால் வாசலில் புகை பிடித்துக் கொண்டு நிற்கிற கூடப் படித்த நண்பர்கள் போத்தியைக் கிண்டுவார்கள். அது அவன் தனியாக மாட்டும் போது. சேகரன் முரடன் என்று பெயர் எடுத்தவன். அவனிடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
போன வாரம் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போனதால் போத்தி கூடப் போனான். நிறையத் தவிர்த்தாலும் சமயத்தில் இப்படி வாய்த்து விடுகிறது.
‘சங்கர்.. சேகர் அங்கிளுக்கு ஹ்லோ சொல்லு’
சின்னப் பையன் சேகரனை லட்சியம் செய்யாது போத்தியின் காலைக் கட்டிக் கொண்டான். மூன்று வ்யது இருக்குமா? சுவரில் பூப்போட்டு மாட்டி இருந்த மீசைக்காரன் படம் சாயலைச் சொன்னது. கண் குழி விழுந்து பாழ் நெற்றியோடு விஜயா யாரிடமோ பதக்கம் வாங்கும் படம் சின்னதாகப் பக்கத்தில். அது நிச்சயம் எதிரே உட்கார்ந்து கன்னம் குழிய நிறையச் சிரித்துச் சேகரனோடு பேசிக் கொண்டிருக்கும் விஜாயா இல்லை.
குழந்தை போத்தியின் மடியில் படுத்துத் தூங்கிப் போனது. ஜூஸ் கொடுத்த டம்ளர்களில் எறும்பு மொய்க்க ஆரம்பித்தது. போத்தியைச் சுருட்டி, சுவரில் படமாகத் தொங்க விட்டு விட்டு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். கால் மரத்துப் போக ஆரம்பித்தது.
‘அப்ப வீட்டுக்குப் போ’ என்றான் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த மீசைக்காரன்.
‘போத்தி, நீ வேணா போய்ட்டு இரு. இந்த அப்ளிகேஷனை மட்டும் ட்ரா பண்ணிக் கொடுத்திட்டு வரேன்’.
‘குழந்தையை சோபாவிலேயே விட்டுடுங்க.. பாவம் உங்களுக்கு கஷ்டம்.. வேஷ்டியை நனைச்சுட்டானா?’
போத்தி வெளியே நடந்து மெயின் ரோட்டில் திரும்பும்போது அந்த வீட்டுக்குள் விளக்கு அணைந்திருக்கும் என்று மனது அரிக்கத் திரும்பிப் பார்த்தான். இல்லை. அணைந்திருக்கவில்லை.
அது அன்றைக்கு. இன்று ராத்திரி போத்தி பாலத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தான்.
’போகலாமா?’ சேகரன் தோளைத் தொட்டான்.
‘கால்குலேட்டர் கொண்டு வர மறந்து போய்விட்டது. அரியர்ஸ் கால்குலேஷன் எல்லாம் நான் ஊருக்குப் போய்விட்டு வந்துதான் போட்டுத் தர வேண்டும்’.
நாளைக்கு சேகரன் மதுரை போகிறான். கல்லூரி ஆசிரியர் சங்க மாநாடு.
போகிற வழியில் டெய்லர் ராகவன் கடையில் படியேறினார்கள் சேகரனும் போத்தியும்.
’இல்லை சார்.. பேண்ட் நாளைக்குத் தான் ரெடியாகும்..’.
‘நாளைக்கு மதுரை போகிறேன். அடுத்த வாரம் வாங்கிக் கொள்கிறேன்’.
அடுத்த வாரம் புதுக்கோட்டையில் பெண் பார்க்கப் போக இருப்பதாக சேகரன் அப்பா சொன்னார்.
‘ஏம்பா போத்தி, பொண்ணு பார்க்கறதுக்கு அந்தக் கைம்பொண்ணையும் கூடக் கூட்டித்தான் போவேன்னு அடம் பிடிக்கறான் உன் சிநேகிதன். இவன் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் புத்தி போறது பாரு.. அவளுக்கும் நமக்கும் என்ன எழவு.. சாடை மாடையா சொன்னவங்க எல்லாம் நேராவே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.. நீ அவனுக்கு உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை நறுக்குனு சொல்லேன்’.
சொல்ல முடியவில்லை. இது தனிப்பட்ட விஷயம். போத்திக்கு எந்த விரோதமும் இல்லை. கால் மரத்துப் போகக் காத்துக் கிட்க்க வேண்டாத வரைக்கும். சேகரன் மதுரை போய்த் திரும்பி வரட்டும். கல்யாணம் செய்து கொள்ளட்டும். விஜயாவைக் கவனித்துக் கொள்ளட்டும். விஜயாவைக் கவனித்துக் கொள்ள வரிசையில் நிற்கிறார்கள். வரிசைக் கடைசியில் போத்தியும்.
அடுத்த நாள் சாயந்திரம் செய்தி வந்தது. தூக்கி வாரிப் போட்டு அதிர வைக்கிற செய்தி. சேகரன் போன பஸ் ராஜபாளையத்துக்கு அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி விட்டது. சேகரன் உட்படப் பத்துப்பேர் அந்த இடத்திலேயே இறந்து போய் விட்டார்கள். உடலை மதுரை ஆஸ்பத்திரியில் வைத்திருக்கிறார்கள்.
‘வாங்க, நான் எத்தனை தடவை போட்டாலும் சரியா வரலை. கால்குலேட்டர் கொடுத்து அனுப்பிச்சாரா?’
‘சேகரன் இல்லை’.
அவளுக்குப் புரியவில்லை. உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வீறிட்டு அழ போய்ச் சமாதானப்படுத்தி விட்டு வந்தாள்.
‘சேகரன் போய்விட்டான்’.
இடுப்பில் இழுத்துச் செருகிய கொசுவமும், கையில் தலைக்குத் தடவி மீந்த எண்ணெயும், உச்சந்தலையில் முடிக்கற்றைக்குள் பொதிந்த சீப்புமாக நிற்கிற விஜயா அதிரப் போத்தி விஷயத்தைச் சொன்னபோது, எதிர்பார்த்தபடி அவள் பெருங்குரலெடுத்து அழவில்லை. உள்ளே குழந்தை விழித்துக் கொண்டு விடும் என்ற பயம் காரணமாக் இருக்கலாம்.
அவள் பெரிய விழிகள் கலங்கிய மாதிரி இருந்தது. இந்த உலகில் நான் தனியானவள். படங்களுக்குப் பூப்போடுவதும், பதக்கம் வாங்குவதும், இளம் விதவைகளுக்கான குடும்ப பென்ஷன் சம்பந்தப்பட்ட கணக்குகளைத் தனியாக உட்கார்ந்து போட்டுச் சரி பார்ப்பதுமே எனக்கு வேலை என்று விதிக்கப் பட்டிருக்கிறது.
போத்தி படி இறங்கிப் போனபோது திரும்பவும் உள்ளே குழந்தை அழுகிற சத்தம்.
ராத்திரி மங்கிக் கொண்டு வருகிறது. போத்தி மாடியில் சால்வையைப் போர்த்திக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் உலாத்திக் கொண்டிருக்கிறான். தொட்டடுத்த வீடுதான் சேகரன் வீடு. வாசலில் இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகள். கரண்ட் இல்லாமல் இருண்டு கிடந்த தெருவில் நீளநீளமாக நிழல்கள் விழுந்து படர ஒரு கூட்டம். சேகரனின் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும்.
ஆம்புலன்ஸ் மதுரை ஆஸ்பத்திரியில் இருந்து சாயந்திரமே கிளம்பி விட்டதாம். நடு ராத்திரிக்குள் சேகரன் உடல் வந்து சேர்ந்து விடும். நிமிஷத்துக்கு நிமிஷம் கூட்டம் பெருகிக் கொண்டிருந்தது. படியேறி யாரோ வந்து மணியடிக்க, போத்தி கீழே இறங்கிப் போய்த் திறக்கிறான்.
‘ஒரு பெஞ்ச் இருக்குமா? பிரின்சிபால் வந்திருக்கார்’.
மாடியில் இருந்து பெஞ்சைத் தூக்கிப் போகிறார்கள். ‘போத்தி, வெளியே வா, உள்ளே என்ன செய்யறே?’ கீழே இருந்து யாரோ கூவுகிறார்கள்.
இல்லை. போத்தியால் அதில் கலந்து கொள்ள முடியாது. கொஞ்ச நேரத்தில் சேகரனின் உடலைக் கொண்டு வந்து வாசலில் கிடத்துவார்கள். அப்புறம் பூவும் புகையுமாக அவன் முன்னால் போக, ஒரு சிறிய ஊர்வலம். எந்தச் சந்திலும் திரும்ப வேண்டியதில்லை. எந்தப் பாலத்திலும் காத்திருக்க வேண்டியதில்லை. சுடலையின் முதல் ஷெட்டில் எரிந்து அடங்க எல்லாம் முடியப் போகிறது. ஆனாலும் போக வேண்டும். சேகரன் வந்து சேரட்டும்.
வயிற்றில் பசி இல்லாமல் கடமுட என்று உருட்டச் சற்றே கண்ணயர்ந்தான். கீழே இருந்து தேனிக்களின் ரீங்காரம் போல குரல்கள் முனை மழுங்கிக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. விஜயா. அவளைத் தவிர எதுவும் மனதில் வரவில்லை. சேகரன் புது பேண்ட் போட்டுக் கொண்டு வெளியே காத்திருக்கட்டும். விஜயாவைத் தோளில் சாய்த்துக் கொண்டு போத்தி உள்ளே பக்கம் பக்கமாகப் பென்சிலால் கூட்டிக் கொண்டிருந்தான். பேப்பர் எல்லாம் பறக்க ஜன்னல் கதவுகள் காற்றில் படபடக்க பொறுமை இழந்து போத்தி விஜயாவை இறுகத் தழுவுகிறான். சேகரன் ஜன்னலில் பார்க்கிற சந்தோஷத்தில் இன்னும் நெருங்கி அணைத்துக் கொள்கிறான் விஜயாவை. நாகங்களாக நாவுகள் நெளிந்து கலக்க, கூழாங்கல் பரப்பில் கால் பரப்பி நிற்கும் டிரான்ஸ்பார்மர்கள் ஹூம்ம்ம் என்று ஆர்பரித்து ஆமோதித்து உடனே இணையச் சொல்ல போத்தி விஜயாவை இன்னுன் இறுக இறுக இறுக இறுக.
பரபரப்பாக எழுந்த குரல்கள் உச்சத்தை அடைந்து, அடைத்த கதவு வழியாக உள்ளே புகுந்து எழுப்ப போத்தி விழித்துக் கொண்டபோது கீழே காரோ ஏதோ வந்து நிற்கிற ஓசை. உள்கட்டில் கடியாரம் குழப்பமாக ஒரு மணியை மட்டும் அடித்தது. சேகரன் வந்து சேர்ந்தாகி விட்டது.
போத்தி சட்டை அணிந்து கொண்டு கீழே வந்தபோது சேகரனை வாசல் திண்ணையில் கிடத்தியிருந்தார்கள். மார்பு வரை போர்த்தி, வாயைப் பின்னால் இருந்து உச்சந்தலையோடு சேர்த்துக் கட்டி மூக்கில் எப்போதும் போல் கண்ணாடியோடு சேகரன். போஸ்ட்மார்டம் செய்த உட்ல். அவசரமாகக் கூடிய மட்டும் உள்ளே திணித்து அனுப்பியிருக்கிறார்கள்.
எல்லோரும் யாரோ சொன்னதால் வரிசையாக நிற்கிறார்கள். பலர் கையில் மாலையும் உண்டு. சாயந்திரமே வெளியே போயிருந்தால் வாங்கி வைத்திருக்கலாம்.
சேகரனின் மரணம் இனும் சில நினைவுகளையு போத்தியின் மனதில் பாக்கி வைத்திருக்கிறது.
சவ ஊர்வலம் போனபோது எல்லோருக்கும் பின்னே சுப்பிரமணிய சர்மாவோடு – அவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் – நடந்தது. சர்மா தன் வீட்டு வாசலில் ஒரு நிமிடம் தாமதித்து, வெளியே வந்த யாரிடமோ ‘குளிக்க வென்னீர் போட்டு வை.. இளம் சூடாக இருந்தால் போதும்’ என்று சொல்லி விட்டுப் போனது. இரண்டு நாள் கழித்து சேகரன் வீட்டுக்கு போன போது அவன் உற்வுக்காரர் யாரோ – உடலைக் கொண்டு வரப் போனவரில் அவரும் உண்டு – மதுரை ஆஸ்பத்திரியில் மூத்திரப் புரையைத் தேடி ஒவ்வொருத்தராக விசாரித்துப் போனது பற்றி விஸ்தாரமாக யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தது. ராகவன் டெய்லர், சேகரன் தைக்கக் கொடுத்த துணிகளோடு அவன் வீட்டுப் படியேறிப் போனது..
அத்தியாயம் – 8
ரஞ்சனா என்னை வெகு ஆவலாக வரவேற்றாள். உதாசீனப் படுத்தப்ப்ட்ட பாவத்தோடு ஆனால் தகவல் தெரிந்து கொள்கிற ஆவலோடு அவள் அத்தை பிள்ளை தலையணைப் புத்தகம் ஒன்றைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். என் உதவியோடு கூடி என் புரபஸர் எழுதிய புத்தகம் என்று முகம் முழுக்க எழுதிய பெருமை. போன வாரமே இதை அறிவித்துக் கண நேர முக்கியத்துவத்தை எங்களிடம் இருந்து பெற்றாகி விட்டது. நாகரிகம் கருதிக் கையில் தூக்கி எடை பார்ப்பது போல பாவனை செய்து, ‘இத்தனை கனமான விஷயமா? எழுத எத்தனை ஆயுசு தேவைப்பட்டது?’ என்று விசாரித்தாகி விட்டது. முதல் பக்கத்தின் கடைசியில் புரபஸர் நன்றி சொன்ன நூற்றுச் சில்லரைப் பெயர்களில் அவன் பெயரைக் கடைசிக்குக் கொஞ்சம் முன்னால் தரிசித்து – ‘பையா லைட்டா டீ வாங்கிட்டு வந்து, பிளாஸ்டிக் தட்டாலே மூடி வச்சுட்டு, அந்த மின்விசிறியையும் தட்டிட்டுப் போ. உன் பெயரையும் முதல் பக்கத்தில் சேர்த்துக்கறேன்’ – பக்கத்துக்குப் பக்கம் என்_த் டிகிரி நார்மலைசேஷன், ஆங்க்யுலர் வெலாசிடி என்று வினோதமாக விழுந்து கிடந்த இங்கே யாருக்கும் சம்பந்தமில்லாத சமாசாரங்களை அவசரமாக்ப் புரட்டி, ‘சக்ஸேனா, யூ ஆர் இன் இல்லஸ்ட்ரியஸ் கம்பெனி’ என்று தீர்மானமாக அறிவித்து ஒரு விதமாக அந்தச் சடங்கு முடிந்து விட்டது. இன்றைக்கு அவ்ன் கிரீடம் இழந்த ராஜகுமாரன். புதிய தகவல்களை அறிவிக்கிற, வாழ்க்கையின் சுவாரசியத்தை அணையாது காக்கிற மகத்தான கடமையைத் தேவதைகள் எனக்கு இன்று பிரத்தியேகமாக வழங்கி இருக்கின்றன.
‘போத்தி ஏன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தான்?’
நான் சாய்ந்து உட்கார்ந்தேன். எல்லோரும் நெருங்கி வாருங்கள். ரஞ்சனா, வா, என் மடியில் உட்கார். காதைக் கொடுங்கள்.
கட்டிடத் தொழிலாளிகள் குளிக்கிறதுண்டா? போத்திக்கு சந்தேகம். வீட்டுக்குப் பக்கத்தில் கட்டிட வேலை நடக்கிறது. அதில் கருப்பாக ஒரு பையன். க்ரணை கரணையாகக் கையும் காலும், சின்னச் சிரிப்புமாக அடிக்கடி போத்தி வீட்டை வெறித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று தெரிகிறது. சாரத்தில் ஏறி இறங்குகிற பெண்களோடு கண்ணில் போதை நனையப் பேசுகிறான். பார்வை மட்டும் இங்கே தான். முப்பது வய்தானாலும் போத்தியின் மனைவி இருபது வயது அழகோடு தலை குளித்து, நெற்றியில் சந்தனக் குறி தொட்டு, பளீரென்று அசர வைக்கும் மலையாளச் சிரிப்போடு வரந்தாவுக்கும் உள்ளுக்குமாகத் துவைத்த துணி உலர்த்த நடக்கிறவளைப் பீகாரி மெய்மறந்து வெறிக்கிறான்.
‘இந்தப் பாவாடை உங்கள் வீட்டிலிருந்து கீழே விழுந்து கிடந்தது’.