குறுநாவல் ‘விஷம்’ பகுதி 8அ – நான் அறிவித்த தகவலின் கனம் என்னையே அழுத்த மௌனமாகிறேன்.

 

‘இந்தப் பாவாடை உங்கள் வீட்டிலிருந்து கீழே விழுந்து கிடந்தது’.

 

பீகாரி உள்பாவாடையைச் செல்லமாகக் கையில் எடுத்துத் தவழ விட்டுக் கொண்டு படியேறி வருகிறான்.

 

‘உங்களுடையதா?’

 

‘பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது’ அவள் ஆமோதித்தாள்.

 

‘எனக்கும் தான்’ என்கிறான் அவன். ரெண்டு பேரும் சிரிக்கிறார்கள்.

 

‘குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?’

 

‘உள்ளே வா’.

 

படபடவென்று மோட்டார் சைக்கிள் பேயாக வந்து நிற்கப் போத்தி உள்ளே நுழைகிறான். ரயில் போகிற தாளத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் காடா விளக்கு வெளிச்சத்தில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னீர்காவில் மாமா வீட்டை விட்டுப் பிள்ளை வரமாட்டேன் என்கிறான். திரும்பவும் போக வேண்டும் என்கிறான்.

 

‘வீட்டில் உன் அம்மா தனியாக இருக்கிறாள், வா’.

 

செய்தி அறிக்கையை முடிக்கும் முன் நான்கு மகா நகரங்களில் இன்று நிலவிய தட்ப வெப்ப நிலை – டில்லி, நாற்பது டிகிரி செல்ஸியஸ்.

 

வியர்க்கிறது. வீடு முழுக்க வியர்வை வாடை. செங்கல்லும் சிமிண்டும் கலந்து மனுஷ தேகத்தில் படிந்து ஆண்மையின் வாசனையோடு பிரவகித்த வியர்வை. கட்டிலிலும் வியர்வை பூசி இருக்கிறது. காட்சி மாறுகிறது.

 

‘நீங்கள் ஆபீஸ் ஆபீஸ் என்று நாள் ஊரா ஏர்கண்டிஷன் குளிரில் வியர்க்காமல் விறுவிறுக்காமல், யந்திரங்களுக்கு அடிமை வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்.  நான் நாள் பூரா கரண்ட் கட் ஆனதால் வாசலில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு நிழலில் உட்கார்ந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நானும் வேலைக்குப் போகவா? எந்த வேலையும் எனக்கு இஷ்டம்’.

 

வியர்வை அடங்க சாயங்காலம் குளிக்கிறாள். டிராயிங் ரூம் சோபாவில் உட்காந்து பீகாரி சந்தன சோப்பு வாசனை பிடிக்கிறான். இல்லை. சோபா காலியாக இருக்கிறது.  அறை எல்லாம் சுத்தமாகத் துடைத்து வைத்திருக்கிறது.  வீட்டில் வேறு யாரும் இலை. போத்தி மட்டும் கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்து ஏதோ குடித்துக் கொண்டிருக்கிறான்

 

காட்சி முடிந்து விளக்குகள் போடப் பட்டன. நான் அறிவித்த தகவலின் கனம் என்னையே அழுத்த மௌனமாகிறேன். அவர்கள் எனக்கு அளித்த முக்கியத்துவம் நீடித்துக் கொண்டே போகிறது. கம்ப்யூட்டர்காரர்களையும், விண்ட்மில்களையும் எல்லாம் தூக்கி வீசு. சோரம் தான் செய்தி. இன்றைக்கு சுவாசிக்க இது போதும்.

 

அப்படியானால் கேளுங்கள். இன்னும் இருக்கிறது.

 

‘இனிமேல் இந்த வீட்டில் நீயும் நானும் சேர்ந்து இருக்க முடியாது’.

 

‘நான் சங்கணாச்சேரி போகிறேன். என் பிள்ளையைக் கூட்டிப் போகிறேன்’.

 

‘அவனுக்குப் படிப்புக் கெடும்’.

 

‘அதைப் பற்றி நீங்கள் கவலைபடத் தேவையில்லை’.

 

‘நான் அவன் தந்தை’.

 

‘அவன் தந்தை பட்டணத்தில் இருந்தார். இறந்த் பிறகு மெடல் கொடுத்தார்கள்’.

 

‘இருக்காது’.

 

‘சரி, அவன் தந்தை கல்லூரிப் பேராசிரியராக இருந்தார். பஸ்ஸில் போகும்போது ராஜபாளையம் பக்கம் ஒரு பஞ்சு லாரி மோதிய விபத்தில் இறந்து  போய்விட்டார்.’.

 

‘அது சேகரன். விதவையான விஜயாவை வைத்துக் கொண்டிருந்த சேகரன்’.

 

‘நான் தான் விஜயா. சேகரன் போன பிறகு என்னைக் கூட்டிக் கொண்டு ஓடி வந்து விட்டீர்கள்’.

 

ஸ்டியரிங்கில் தலை வைத்துக் கண்ணை மூடி இருந்ததால் தலை வலிக்கிறது. மணிக்கடில் கடியாரத்தைப் பார்க்கிறேன். நின்று போயிருக்கிறது.  அதிகமாகக் குளிர்கிறது. டில்லிக் குளிர் ஹோலி வரைக்கும் கூட வரும் நட்பான குளிர்,  மூக்கடைப்புக்கு இங்கே வைத்தியம் பார்ப்பார்களா?

 

——————————————————-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன