விடிந்து கொண்டிருந்தது. கனவான்க்ள் அரை டிராயர் அணிந்து காலில் சராய்களோடு ரிங் ரோடில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அல்லது தலையில் கம்பளி முண்டாசும், கையில் கோலுமாகப் பால் வாங்கப் போய்க் கொண்டிருந்தார்கள். காக்கி நிக்கரும், கையில் குண்டாந்தடியுமாக மளிகைக் கடைக்காரர்களும் மற்றவர்களும் உடன்படாதவர்களை அடக்க வலிமை பெற உடற்பயிற்சி.செய்யப் போனார்கள். சௌத் எக்ஸ்டென்ஷன் வரை நடந்து வந்த பிறகு தான் கார் ஞாபகம் வந்தது. போக வேண்டும். போனால், திரும்பவும் சந்தேகமான போலீஸ்காரர்கள். கண்டிப்பான ஆஸ்பத்திரிப் பணியாளர்கள், பேரழகும் சுறுசுறுப்புமான நர்ஸ்கள், கித்தானைக் கிழித்துக் கிடத்தின மாதிரி போத்தி, மற்றும் அவன் பிள்ளை.
காரைச் சுற்றி நான்கைந்து பேர். அங்கே பக்கத்தில் போகும்போதே வயிற்றைப் புரட்டுகிற நெடி. நான் கார்க் கதவைத் திறந்தபோது, பெரிய மீசையோடு இருந்தவன் கேட்டான் – ‘என்ன சாப், சிங்கம் புலி ஏதாவது ஏற்றிக் கொண்டு வந்தீர்களா?’
பின்சீட் முழுக்க அசுத்தமாக இருக்கிறது. போத்தி செய்த வேலை தான். இதைக் கழுவித் துடைக்கவே காலன் காலனாகத் தண்ணீர் வேண்டியிருக்கும்.
உள்ளே நான் ராத்திரி பார்த்த டாக்டரும் நர்ஸும் டியூட்டி முடிந்து புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். அந்த நர்ஸ் ராத்திரி தென்பட்ட தேவதை நிலையில் இருந்து டெட்டால் கழுவிய சிமெண்ட் தரையில் நகம் வெட்டாத பாதங்களோடு நிற்கும் மத்திய வயசு தொட்ட பெண்ணாகி இருந்தாள். டாக்டரோ வெள்ளை கோட் தரித்த அப்ரண்டிஸ் தேவதூதனாக ஆகியிருந்தார்.
சின்னப் போத்தி வரிசையான நாற்காலிகளில் கடைசி இருக்கையில் உட்கார்ந்தபடிக்குத் தூங்கிக் கொண்டிருந்தான். போலீஸ்காரர் யாரும் கண்ணில் படவில்லை.
‘உங்கள் நண்பர் பூரணமாகக் குணமடைந்து விட்டார்’
என்னை மட்டும் பார்த்து முழுவதாகச் சிரித்தபடி நர்ஸ் சொன்னாள். அவளுக்கு மறுபடி தேவதைச் சிறகுகள் முளைத்தன. சூரியோதயத்தில் நல்வாக்கு தருகிற ஆரணங்குகளுக்கு தோத்திரம்.
’காரிலே தானே வந்திருக்கிறீர்கள்?’ டாக்டர் கேட்டார்.
‘ஆமாம், ஆனால் நோயாளியை ஆட்டோ ரிக்ஷாவில் அழைத்துப் போகலாமா?’
‘ஏன், ஏதாவது சிரமம் உண்டோ?’
‘நேற்று ராத்திரி இங்கே கொண்டு வந்ததில், பின்சீட் முழுக்க வாந்தியும் பேதியுமாக விஷம் வேலை செய்திருக்கிறது. காரைக் கழுவ அனுப்ப வேண்டும்’.
‘அவர் விஷம் சாப்பிட்டதாக யார் சொன்னார்கள்? நீங்கள் பார்த்தீர்களா?’
‘இல்லை .. ஆனால் அவன் சொன்னது போல இருந்தது.. அப்புறம் அவன் இருந்த நிலை.. இங்கே பேச்சு மூச்சில்லாமல் தூக்கி வந்து போட்டது..’.
’இருக்கட்டுமே, அவர் விஷம் சாப்பிட்டதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’
எனக்குப் புரியவில்லை. சத்தியமாகப் புரியவிலலை.
‘உங்கள் நண்ப்ர் எதையும் சாப்பிட்டிருக்கலாம். அது கோனியாக்காகவோ, வோட்காவாகவோ, பிளயின் ஆரஞ்சு ஜூஸாகவோ கூட இருக்கலாம். அதைக் குடித்த பிறகு அவருக்குத் தீவிரமாகத் தோன்றியிருக்கிறது. தான் இறந்து போகப் போவதாக … அதுவும் உடனே சாகப் போகவதாக .. இது ஒரு அனுமானம் தான்.. உங்கள் காரை அசுத்தப்படுத்தியது அவ்ர் சாப்பிட்ட சமாசாரம் இல்லை. அவருடைய பயம். சாவு பற்றிய பயம்’.
‘இந்த ந்டத்தைக்குக் காரண்ம் என்னவாக இருக்கும்?’
‘என்னைக் கேட்டால்? நீங்கள் தெரிந்து கொண்டு எனக்கும் சொன்னால் மருத்துவ உலகம் உங்களுக்கு நன்றி உள்ளதாக இருக்கும். நான் வருகிறேன். குளித்து விட்டுத் தூங்க வேண்டும்’.
’இனிமையான கனவுகள்’ என்று நர்ஸ் அவரை வாழ்த்தி இளங்காலைப் பனியில் சுறுசுறுப்பாக நடந்து பஸ் ஸ்டாப்பை நோக்கிப் போனாள்.
நான் உள்ளே நுழைந்தேன்.
—————————————
அத்தியாயம் – 10
போத்தி படு உற்சாகமாகக் காலை வணக்கம் என்றான். இந்த நாளில் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற் உறுதி அவன் குரலில் தெறித்தது. உடலில் இருந்து பிடுங்கிப் போடப்பட்ட குழாய்களும், கையில் அப்பி இருந்த பஞ்சும், கண்ணில் லேசான களைப்பும் ம்ட்டும் நேற்றைய தினத்துக்குப் பாக்கி சாட்சிகளாக இருந்தன.
‘இப்போது எப்படி இருக்கிறது?’ அபத்தமான, பதிலை எதிர்பார்க்காத கேள்வியை நான் கேட்டேன்.
‘தரக்கேடு ஒன்றும் இல்லை. இன்று அலுவலகம் போக முடியாது என்று நினைக்கிறேன். டாக்டர் ஓய்வு எடுக்கச் சொன்னார்’.
‘பாதகமில்லை. ஆபீசுக்குப் போன் செய்து விடுகிறேன். நானே போவதாக இல்லை. ராத்திரி பூரா தூங்கவில்லை’.
‘ஏதும் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தாயோ?’
இவனை விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம்.
தூங்கிக் கொண்டிருந்த பையனைத் தட்டி எழுப்பிக் கூட்டிக் கொண்டு கிளம்பினேன்.
‘கன்னடா ஸ்கூல் மெஸ்ஸில் காப்பி சாப்பிட்டு விட்டுப் போ’
காரைக் கழுவுவதற்காக வீட்டுவிட்டு வீடு போய்ச் சேர்ந்து உள்ளே நுழையும் போது பிடரியில் தடாரென்று மோதி தினசரிப் பத்திர்கை வந்து விழுந்தது. அசட்டுச் சிரிப்போடு பேப்பர் பையன் சலாம் செய்து விட்டு இன்னொரு பேப்பரை ரப்பர் பேண்ட் இட்டு அடுத்த வீட்டின் இரண்டாவது மாடிக்குக் குறி வைத்து எறிந்து விட்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு போனான்.
களைப்பான கண்களோடு பத்திரிகையைப் புரட்ட பக்கத்துக்குப் பக்கம் மருந்துக்குக் கூட நல்ல வார்த்தை இல்லை. ஏழாம் பக்கத்தில் ஆந்திராவில் ஏதோ கிராமத்தில் ஒரு கிழவி தற்கொலை செய்து கொண்ட செய்து. கொண்ட செய்தி. தொன்ணூற்று ஏழு வயது. குடும்பத் தகராறு காரணமம. போத்திக்குக் காண்பிக்க வேண்டும்.
போத்தியின் பிள்ளை அப்பாவுக்கு அபாயம் உடனே வரவும் என்று அம்மாவுக்குச் சங்கணாச்சேரிக்குக் கொடுக்க என்று தந்தி எழுதி எடுத்து வந்ததை ‘எப்போ வருவே? கடிதம் தொடர்கிறது’ என்று மாற்றி எழுதிக் கொடுத்து விட்டுப் படுக்கையில் விழுந்தேன். இன்று ராத்திரிப் போஜனம் சங்கணாச்சேரியில் எந்த மட்டில் இருக்கும்?
நானும் அந்தப் பஞ்சாபி போலீஸ்காரரும் ரஞ்சனாவின் அத்தை பிள்ளையும் ராஜபாளையத்துக்கு பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தபோது வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ஆரம்பித்தது.
பின்குறிப்பு
—————-
மூன்று குளிர்காலங்களும், நான்கு வேனில் காலங்களும் முடிந்து விட்டன. நான் போன ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாகதலைக்கு டை அடித்துக் கொண்டு விரல் கருப்பாகி விரல் சூப்பிக் கொண்டு திரிந்தேன். ரஞ்சனா ஒரு சுற்று குண்டாகி இருக்கிறாள். அவள் வீட்டில் வியாழக்கிழமை ராத்திரி பஜனைகளில் கலந்து கொண்டு ‘ராம் ஏக், ராம் தோ, ராம் தீன்’ என்று எண்ணி ஆயிரத்தெட்டு ராமநாமம் பாடி வருகிறேன். எட்ட்ரை லட்சம் ராம் முடிந்த பிறகு எங்கள் கல்யாணம் நடக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
போத்தியின் வம்சம் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விருத்தியாகி இருக்கிறது. அவன் மனைவி பெண்குஞ்சோடு சங்கணாச்சேரிக்கு ஷட்டில் சர்வீஸ் அடித்துக் கொண்டிருக்கிறாள். இடுப்பில் கைக்குழந்தையோடு, வயது வந்த பையன் முன் வளைய வருவதை அசௌகரியமாக உணர்ந்திருக்கலாம்.
சின்னப் போத்தி மீசையெல்லாம் வைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் ராட்சச வேகத்தில் பறந்து பஞ்சாபிக் குட்டிகளைக் கணக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறான். அவ்வப்போது அவ்ன பின்னால் பில்லியனில் உட்கார்ந்து முதுகை இறுக்கத் தழுவிப் போகிற பெண்ணைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன்,
அலுவலகத்தில் என்னைப் போடா படவா என்று புறங்கையால் தள்ளிவிட்டு போத்திக்கு ஒரு பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். நான் இன்னும் அவனை சார் என்று விளிக்க ஆரம்பிக்கவில்லை.
போத்தியோ, பிரஸ்தாப தினத்தில் என்னத்தைக் குடித்தான், ஏன் குடித்தான் என்று ஒரு தகவலும் வெளியிடவில்லை. போலீஸிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
ஒரு மாற்றம் தெரிகிறது. கொசுவர்த்திச் சுருள் கொளுத்தாமல் அவனால் ராத்திரி தூங்க முடிகிறது என்று சொல்கிறான். ‘என்னமோ தெரியலே.. கொதுகு ஏதும் என்னைக் கடிக்கறதில்லே’.
நான் கன்சோலில் கவிதை எழுதுவதை விட்டுவிட்டேன். புரகிராம் அடித்துத் திருத்திய பழைய கம்ப்யூட்டர் தாளை எல்லாம் சேர்த்து வைத்துப் பின்பக்கத்தில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதைப் போல
(நிறைவு)