பகல் பத்து ராப்பத்து – குறுநாவல் அத்தியாயம் 2 இரா.முருகன்

அத்தியாயம் 2

 

’பாஞ்ச் ரூப்யோ கோ தோ .. பாஞ்ச் கோ தோ ..’

 

சாந்தாபாய் யந்திரமாகக் கூவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் தவழும் கிருஷ்ணன்.

 

பொடிப்பொடியாகத் தரையில் விழுந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோலத்தைச் சுற்றி விரையும் கால்கள்.

 

இது ஆபீஸ் போகிற கூட்டம். கொலாபாவும், நாரிமன் பாயிண்டும் இன்னும் சமுத்திரக் கரையை ஒட்டிய மகா உயரக் கட்டிடங்களுமே இவர்களின்  காலை நேர லட்சியம். சாந்தாபாயும், கோலக் குழல் கிருஷ்ணனும், விக்டோரியா டெர்மினஸின் இதர இயக்கங்களும் தினசரி சகித்துக் கொள்ள வேண்டிய தொந்தரவுகளாக விரியும் அவர்கள் உலகம்.

 

சாந்தாபாய் கிருஷ்ணனை நம்புகிறாள். நூறு கோலக் குழலாவது விற்றால்தான்  தாராவியில் குடிசை தங்கும்.

 

‘சாப்புடறே .. புடவையை வழிச்சுட்டுக் குத்த வைக்கறே.. படுக்கறே .. வாடகை எங்கேடி?..

 

காலையில் கிளம்புகிற பொழுது, ஜம்னாதீதி நாக்கைப் பிடுங்குகிறதைப் போல் கேட்டாள்.

 

கங்காதர் செயலாக இருந்தவரை ஒரு மாதமாவது வாடகை தவறி இருக்குமா?

 

இரண்டு கோலக் குழல் ஐந்து ரூபாய். யார் வாங்க வருகிறார்கள்?

 

பெரிய பெரிய மூக்குத்தியும் எல்லா வண்ணத்திலும் பாவாடையுமாக எதிரே பத்திரிகை ஆபீஸ் பக்கம் இருந்து கடந்து வரும் கூட்டத்தில் சாந்தாபாயின் பார்வை நிலைக்கிறது.

 

ராஜஸ்தானிகள்.

 

பாலைவனத்தில் கோலம் போடுவார்களா? இதுவரை போடாவிட்டால் என்ன? இனிமேல் பழகினால் போகிறது.

 

சாங்க்லி கிராமத்து சாந்தாபாய் பம்பாய் நடைபாதையில் குந்தி இருந்து கூவி விற்கப் பழகிக் கொண்டது போல ..

 

‘பாஞ்ச் கோ தோ…’

 

சாந்தாபாயின் குரல் பிசிறு தட்டுகிறது. காலையில் கிளம்பும்போது சாப்பிட்ட தீய்ந்த ஒற்றைச் சப்பாத்தியோடு காய்கிற வயிறு.

 

வந்ததிலிருந்து ஐந்து ரூபாய்க்குக் கூட விற்காமல் கொட்டிக் கொள்ள இப்போது என்ன அவசரம்?

 

எல்லாமே அவசரம் தான். விடியும் முன்னே அழுக்கு டால்டா டப்பாவோடு கழிப்பறைக்கு ஓட.. தண்ணீர் பிடிக்க… கங்காதருக்கு ரொட்டி எடுத்து வைத்துவிட்டு கித்தான் பையில் கோலக் குழலையும் மாவுப் பொடியையும் கட்டித் தூக்கிக் கொண்டு ஓடி வர.. தெருவோரம் இடம் பிடிக்க..

போன வருடம் வரை கங்காதர்தான் இந்த அவசரத்தோடு ஓடியது.

 

விடிந்தது முதல் இருட்டும் வரை தாராவியின் அழுக்கிலும் சகதியிலுமே சாந்தாபாயின் உலகம் அடங்கி இருந்தது அப்போது.

 

ரயிலில் தொங்கிக் கொண்டுபோய்த் தவறி விழுந்து இரண்டு காலும் கணுக்காலுக்குக் கீழ் துண்டிக்கப்பட்டு கங்காதர் குடிசையில் முடங்கி ஒரு வருடம் ஆகிறது.

 

’என்ன விலை இதெல்லாம்?’

 

வயதான ராஜஸ்தானி, சாந்தாபாயைத்தான் கேட்கிறாள்.

 

முன் தள்ளிய மார்பும், ஏக காலத்தில் பேச்சுமாக மற்ற வண்ணப் பாவாடைகள், தெருவோரம் நெயில் பாலீஷ் விற்கிற நசீமைச் சூழ்ந்து நிற்க, நகம் முறிந்து சுருக்கம் கண்ட கைகள் சாந்தாபாயைச் சுற்றி நீள்கின்றன.

 

‘கிருஷ்ண கன்னையா.. கோபால கிருஷ்ணா.. கோகுல கிருஷ்ணா..’

 

சாந்தாபாய் நேர்த்தியாக நடைபாதையில் இன்னும் இரண்டு கிருஷ்ணனைத் தவழ விட்டாள்.

 

சாங்க்லியில் எப்போதோ பார்த்த சினிமாவில் லதா மங்கேஷ்கர் இப்படி வரிசையாக வார்த்தை அடுக்கிப் பாட, ஆஷா பரேக்கோ, நூதனோ, கையில் பொம்மையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டு வாயசைப்பார்கள்…

 

சினிமா… பம்பாய் வந்து பத்து வருஷத்தில் பார்த்த சினிமா எல்லாம் கல்யாணம் ஆன முதல் வருஷத்தில் தான்.

 

‘கடைசியா என்ன விலை?’

 

ராஜஸ்தானி கிழவி கேட்கிறாள். ‘என்னை யாரும் ஏமாற்ற முடியாது’ என்ற தீர்மானம் தெறிக்கிற குரல். தலை தன் பாட்டுக்கு இப்படியும் அப்படியும் அசைகிறது.

 

இவள் வீட்டில் ஒட்டகம் வளர்ப்பாள் என்று ஏனோ சாந்தாபாய்க்குத் தோன்றியது.

 

‘நாலு கொடு’.

 

கிழவி சுருக்குப் பையில் இருந்து ஐந்து ரூபாய் நோட்டை நாலாக மடித்தபடியே நீட்டினாள்.

 

‘கட்டி வராது அம்மா..’.

 

வாடகை ராத்திரி வராட்ட, உன்னோட தட்டு முட்டு சாமானை, உதவாக்கரை புருஷனை, கோலக் குழலை எல்லாம் வெளியே எரிஞ்சிடுவேன்.

ஜம்னாதீதியின் குரல் இன்னும் விரட்டிக் கொண்டே தான் இருக்கிறது.

 

‘காலையிலே முதல் வியாபாரம். கூடவே ஒண்ணு பிடியுங்க’.

 

சாந்தாபாய் மூன்று கோலக் குழலை எடுத்துக் கொடுத்துவிட்டு நிமிர்ந்த பொழுது, பஸ்ஸைப் பிடிக்கிற அவசரத்தில் யாரோ பக்கத்தில் இருந்த மாவு பக்கெட்டைத் தட்டி விட்டுப் போனார்கள்.

 

’சாப், உனக்குக் கண் இல்லையா?’

 

தெருவின் சத்தத்துக்கு நடுவே அவள் குரல் எடுப டவில்லை.

தொடரும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன