குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து’ – அத்தியாயம் 3

குறுநாவல்   பகல் பத்து ராப்பத்து             அத்தியாயம் 3

 

 

ப்ரீதி குளித்துக் கொண்டிருந்த பொழுது டெலிபோன் ஒலித்தது.

 

விக்ரம்… கோகுல் .. டெல்லியிலிருந்து பல்பீர் .. சீனாக்காரி அண்ணி..

 

பாத்டப்பிலிருந்து ஒரு கையை உயர்த்தி எடுக்க, ரிசீவர் தண்ணீரில் மிதந்தது.

 

‘மாதம் ஆறாயிரம் வாடகை… ஃப்ளாட்டில் ஃபோன், கீஸர் பாத்டப், மைக்ரோ அவன் என்று சகலமானதும் ரொப்பியிருக்கிறேன்.. ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் .. ஏதாவது ஒண்ணு நோக்காட்டில் விழுந்திருந்தால், உன் அட்வான்ஸ் ஒரு லட்சம் உன்னதில்லை..’

 

வீட்டுக்காரி மிசஸ் பாட்லி வாலா முதல் நாளே பயமுறுத்தி விட்டுப் போயிருக்கிறாள்.

 

என்ன இருந்தாலும், டெல்லியை விட பம்பாய் எவ்வளவோ மேல்…

 

ப்ரீதிக்கு இரண்டு வருஷ டெல்லி வாழ்க்கையை நினைத்தாலே எரிச்சலாக இருந்தது.

 

டெல்லி.. அது ஒரு ஜயண்ட் சைஸ் கிராமம்..

 

சின்ன வயசுப் பெண் வீடு வாடகைக்குக் கேட்டு வந்து நிற்கிறாள் என்றால் டிபன்ஸ் காலனியின் ஓய்வு பெற்ற மேஜர்களும், கர்னல்களும் ஹூக்கா புகைவிட்ட படி விசித்திரமாகத்தான் பார்ப்பார்கள்..

 

‘என்ன உத்யோகம்?’

 

வயதான சர்தாரிணிகள் விசாரிக்கும்போது, ‘மாடலிங்’ என்று பதில் சொன்னால், ‘பத்து நிமிஷம் முன்னால் யாரோடோ படுத்து விட்டு எழுந்து வந்த குட்டி’ என்கிறதுபோல சர்வ நிச்சயமாக சின்னச் சிரிப்போடு, ‘சின்னப் பெண்களைக் குடி வைப்பதில்லை’ என்று சொல்லிக் கதவைச் சாத்தி உள்ளே போவார்கள்.

 

பம்பாயில் பரந்த மனசு எல்லோருக்கும்..

 

‘மிஸ் ப்ரீதி அஹூஜா, மாடலிங் டீசண்டான தொழில் என்று எனக்குத் தெரியும்.. எல்லோரோடும் இழைவது தவிர்க்க முடியாதது .. ஒரு வரம்பில் மற்றவர்களை நிறுத்தினால் சரிதான் .. 1போன் இருக்கு .. டிராயிங் ரூமில், பாத்ரூமில், டாய்லெட்டில் எல்லாம் ஆர்ஜே லெவன் சாக்கெட் போட்டு இணைப்பு கொடுத்திருக்கேன் .. விடிய விடிய வேணுமானாலும் பேசு.. வர மட்டும் சொல்லாதே..’

 

‘இல்லை மிசஸ் பாட்லி வாலா.. எந்தத் தடியனும் வர மாட்டான். எனக்காகத் தோன்றுகிற வரை, என் கட்டிலில் நான் மட்டும் தான் ..’

 

‘ஏய் ப்ரீதி .. கூப்பிட்டது காதில் விழலியா?’

 

ஃபோன் ரிசீவரைத் திரும்ப எடுத்து சோப்புக் கையோடு காதில் வைக்க விக்ரம் குரல்.

 

‘குளிச்சிட்டிருக்கேன்’.

 

‘சே.. நாசமாப் போன இந்த நாட்டுக்கு வீடியோ போன் எப்போ வந்து சேரும்னு தெரியலே..’

 

ப்ரீதி கலகலவென்று சிரிக்க திரும்பவும் ரிசீவர் பிடி வழுக்கித் தண்ணீரில்.

 

‘சாரி விக்ரம் ..  சரியாப் பிடிச்சுக்கலே.. ..’

 

‘கெட்டியாப் பிடிச்சுக்கற மாதிரி ஒரு விஷயம் சொல்லட்டா .. ரஷ்மி டிடர்ஜெண்ட் .. ஆரஞ்சு கலர் பவுட .. மேலே எல்லாம் நுரையைப் பூசிக்கிட்டு விக்கப் போறே… பெரைரா தெரியுமா.. அவன் தான் கேமராவிலே சுடறான்..’

 

குப்பென்று பொங்கிய சந்தோஷம் .. பிடரியில் குறுகுறுக்கும் ஈர மயிர்க்கால்கள்…

 

ப்ரீதி… நட்சத்திர அந்தஸ்தைப் பிடிக்கப் போகிறாய் ..

 

‘கான்செப்ட் டெவலப் பண்ணிட்டு இருக்கோம். சாய்ந்திரம் டிஸ்கஷனுக்கு வந்துடு .. பெரைரா உன் மூஞ்சியைப் பாத்துட்டுத்தான் ஷாட் கம்பொசிஷன் ஃபைனலைஸ் செய்வானாம்..’

 

’இப்பவே வேணும்னாலும் வரேன்..’

 

ஃபோனில் கண் அடிக்க முடியாது.

 

‘வேணாம் .. டிராபிக் எல்லாம் ஜாமாயிடும்..   உடுத்திக்கிட்டு சாயந்திரம் அஞ்சு மணிக்கு ரெடியா இரு.. என்ன சோப்பு தேச்சுக்கறே.. இங்கே வரைக்கும் வாசனை வர்றதே..’

 

’நாய்க்குட்டிக்குப் போடறது..’

 

ஃபோனை வைத்துவிட்டு பாத்டப்பில் இருந்து இறங்கினாள்.

 

கண்ணாடியில் முழுசாகத் தெரியும் ப்ரீதி.

 

‘யுரேக்கா ..’

 

உரக்கக் கூவியபடி டர்க்கி டவலை எடுத்துச் சுற்றியபடி வெளியே நிதானமாக நடந்தாள்.

 

கண்டுபிடித்தது இந்த உடம்பின் மகா வீர்யத்தை.

 

இரண்டு நிமிடக் கமர்ஷியல்களில், பார்க்கிறவர்கள் கண்ணைக் கட்டிப் போடும் வீர்யம்..

 

சோப்போ .. கரப்பான் பூச்சி மருந்தோ .. கார்பொரைஸ்ட் தீக்குச்சியோ .. இந்த வீர்யத்தால் எல்லாம் நினைவில் நிறுத்தப் படும். ‘ரீகால் பவர்’ கணிசமானது என்று மார்க்கெட் சர்வே சொல்லும்போது அடுத்த அசைன்மெண்ட் கதவைத் தட்டும்.

 

தட்டட்டும்… சமையல் உப்பில் தொடங்கி சானிடரி நாப்கின் வரை வந்தாகிவிட்டது.

 

டெல்லியில் திரும்பத் திரும்ப ஹவாய் செருப்பு, எட்டு லீவர் பூட்டு .. பல்பீர், ரந்தீர் என்று சதா ஜர்தாபான் குதப்பிக் கொண்டு உரக்கப் பேசுகிற சகாக்கள்..

 

அவர்கள் எடுக்கிற விளம்பரப் படங்களும் உரக்கச் சத்தம் போடும்.

 

ஜீன்ஸில் உடம்பை நுழைத்துக் கொண்ட போது, கதவிடுக்கு வழியே டைம்ஸ் ஆப் இந்தியா எட்டிப் பார்த்தது.

 

ஜீன்ஸ் உடம்பை இறுக்குகிறது போன தோணல்..

 

வென்னீரில் குளித்ததால் இருக்குமோ…

 

போன வாரம் கோகுலின் பார்ட்டியில் சாப்பிட்ட சாக்லெட்டா, ஐஸ்க்ரீமா..

 

எதுவாகவும் இருக்கட்டும்..

 

இனிமேல் ரெண்டு வாரம் தயிரும், ஆம்லெட்டும் கிடையாது.

 

சின்ன இடுப்பு.. வில்லாக வளையும் உடம்பு.. வசீகரமான சிரிப்பு ..

 

பெப்ஸியும் கோக்கும் கலர் டிவியும் வாஷிங் மிஷினும் உன் பாதையில் வரப் போகிறது பெண்ணே. மூக்குக்குள்ளே இருந்து எட்டிப் பார்க்கும் அந்த ஒற்றை ரோமத்தை மட்டும் அகற்றி விடு…

 

நாளை மறுநாள் ரோம நாசினி விளம்பர ஷூட்டிங்,

 

தொடை வரை மழித்துக் கொண்டு, சில்க் கைக்குட்டையை மேலே இழுத்துக் காட்ட வேண்டும்..

 

ப்ரீதி ஆஃப் தண்டரிங் தைஸ்..

 

நோ .. இது வடிவமான உடம்பு.. ப்ரீதி ஆஃப் லைட்னிங் ஸ்டெப்ஸ்..

 

சோபாவில் உட்கார்ந்து பத்திரிகையைப் பிரித்தாள்.

 

‘சூரத்தில் ப்ளேக்.. நகரம் காலியாகிறது..’

 

ஜாக்கிரதை தேவை.. குஜராத்திகள் பக்கம் போகவே கூடாது .. அவர்களின் ஒன்றுவிட்ட சித்தப்பாவோ, அத்தையோ சூரத்திலிருந்து கிளம்பி வந்திருக்கலாம்.. புறப்பட்டுக் கொண்டிருக்கலாம்..

 

இன்றைக்கும் ஆர்.கே.லக்‌ஷ்மண் கார்ட்டூன் புரியவில்லை.

 

டைம்ஸின் பக்கங்களை நிதானமாகப் புரட்டினாள்.

 

விளம்பரங்கள் .. பக்கம் பக்கமாக விளம்பரங்கள்..

 

குவைத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியர்களும், குதிரை பராமரிப்பவர்களும் தேவை..

 

முலுண்டிலிருந்து கொலாபாவுக்கு ஒரே காரில் வந்து திரும்பி, செலவைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய எக்ஸிக்யூட்டிவ்கள் தேவை …

 

செண்ட்டார் ஓட்டலில் செட்டிநாடு சாப்பாட்டுத் திருவிழா..

 

வீடு வாங்க.. விற்க ..

 

சீக்கிரம் ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டும். எப்பாடு பட்டாவது. யாரைப் பிடித்தாவது.

 

இனியும் சொந்த ஊர் திரும்ப அங்கே ஏதுமில்லை. அப்பா தன் பங்குக்கு விட்டுப் போன பத்து லட்சம் பாட்லி வாலாவுக்குக் கொடுத்த அட்வான்ஸ் போக பேங்கில் சமர்த்தாகக் குட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அம்மா பாண்டிச்சேரி ஆசிரமத்தில் சேர்ந்து, மாதம் ஒரு தடவை, பச்சைக் காய்கறிகளும் பழங்களும் நிறையச் சாப்பிடச் சொல்லிக் கையால் தயாரான காகிதத்தில் கடிதம் எழுதுகிறாள்.

 

அண்ணன்கள் சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் சீனாக்காரிகளைக் கல்யாணம் செய்து கொண்டு, செல்லுலாய்ட் பொம்மைகளைப் போல குழந்தை பெற்றுக் கொண்டு, டெலிஃபோனில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக் கொண்டு, சாப்ஸ்டிக்கால் சாப்பிடக் கற்றுக் கொண்டு சவுக்கியமாக இருக்கிறார்கள்.

 

இனிமேல் இங்கேதான்..

 

முகம் மெல்ல பரிச்சயமாகி வருகிறது. தெருவில் போனால் ஒரு வினாடி உற்றுப் பார்க்கிறார்கள்.

 

‘சொட்டு நீலம் படத்துலே வர்றது நீங்க தானே?’

 

எதிர் ஃப்ளாட் வேலைக்காரி நேற்று லிஃப்டில் கேட்டாள்.

 

இந்த மாதம் தொடர்ச்சியாக மூன்று விளம்பரம். ஆணுறை விளம்பரப் படத்தில் நடிக்கச் சம்மதமா என்று கோகுல் கேட்டான். யோசித்துச் சொல்வதாக வாய்தா வாங்கியிருக்கிறாள்.

 

பெரைராவின் கேமிரா இந்த உடம்பை வருடப் போகிறது.

 

அப்புறம்.. மேலே.. மேலே.. ஒரு செஷனுக்கு லட்ச ரூபாய் ..

 

பாந்த்ராவில் ஃப்ளாட் விற்பனைக்கு.. எட்டே கால் கோடி ரூபாய்.

 

சினிமாவில் நடித்தால் கூட பக்கத்தில் போக முடியாது..

 

சினிமா.. அது வேறு உலகம்.. அதுவும் இந்தி சினிமா.. தெரிந்தவர்களே தடுமாறுகிற பூமி … நிறைய மெனக்கெட வேண்டும்.

 

சாந்தாக்ரூஸ் .. ரெண்டு பெட்ரூம்.. கன்சீல்ட் வயரிங்.. லிஃப்ட் உள்ள ஃப்ளாட்.. தொண்ணூற்று எட்டு லட்சம்..

 

ஒரு கார் கூடத்தான் தேவை..

 

வேண்டாம்.. காருக்கு என்ன அவசரம்.. வரச் சொன்னால் வந்து காத்திருந்து கூட்டிப் போகிறார்கள். திரும்பக் கொண்டு வந்து இறக்கி விடுகிறார்கள்… சின்ன சில்மிஷங்கள்.. இதுவரை பெரிதாகாமல் சீராக எல்லாம் போகிறது .. இனிமேல் எப்படியோ..

 

’செஷனுக்கு லட்ச ரூபாய்க்கும் மேலே தர்றேன்.. மூணு நிமிஷக் கமர்ஷியல்…’

 

இல்லை மிசஸ் பாட்லி வாலா.. சில விஷயங்களை அனுமதித்துத்தான் ஆக வேண்டும். நீங்கள் ஆணுறை விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?

 

அந்தேரி.. மூன்றாம் மாடி.. லிஃப்ட் இல்லை… ஒரு பெட்ரூம்.. ஏழு லட்ச ரூபாய் தான்..

 

அந்தேரியில் வாங்கலாமா?

 

அதற்கு, மெட்ராஸில் குடியேறி இரண்டு தமிழ்ப் படம் செய்யலாம்.

 

உடம்பு ஊதிப் போனாலும் பரவாயில்லை.

 

பிடித்துப் போனால் கோயிலே கட்டிக் கும்பிடுவார்கள்.

 

ப்ரீதிக்குக் கோயில் வேண்டாம். சொந்த ஃப்ளாட் போதும்.

 

திரும்பத் தொலைபேசி சத்தம்.

 

என்ன விற்க வேண்டும் கனவான்களே? எவ்வளவு பணம் தருவீர்கள்?

 

தொடரும்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன