குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து; அத்தியாயம் 4
ராமபத்ரன் ஓபராய் ஓட்டலை ஒட்டி நிழலில் நின்றார்.
டிபன்வாலா நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்த காரியரில் வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்ட திருப்தி.
நல்ல வேளையாக அகிலாண்டம் புளியோதரை வைக்கவில்லை.
‘சூனாம் தே..’
தட்டுக்கடைக்காரன் டூத் பேஸ்ட் போல ட்யூபில் அடைத்த சுண்ணாம்பை நீட்டினான்.
கடற்காற்று மெரின் டிரைவ் பக்கமிருந்து சீராக வீச ஆரம்பித்திருக்கிறது.
மணி பார்த்தார். இரண்டு முப்பது.
இன்னும் ஒரு பதினைந்து நிமிஷம் நிம்மதியாக ‘முறுக்க’லாம்.
தஞ்சாவூரிலிருந்து இருபத்தைந்து வருஷம் முன்னால் கிளம்பி வந்தபொழுது நாக்கில் புரண்ட தமிழில் ‘முறுக்குவது’ இல்லை. ‘வெற்றிலை போடுவது’ தான்.
பிரக்ஞையில் உரைக்காமலேயே தஞ்சாவூர்த் தமிழ் பாலக்காடாகி விட்டது. .. ‘கேட்டியா?..’ …’’ட்டேளா’ … ‘ வந்துட்டில்லே..’ …’சவட்டித் தள்ளு..’…
எதிர்த்த பேங்கில் முகப்பை இடித்துக் கொண்டிருந்தார்கள்.
கம்ப்யூட்டர் வைக்கப் போகிறார்களாம்.
சகலத்துக்கும் கம்ப்யூட்டர்.
கண்பத்ராவ் மளிகைக் கடையில் சுக்கு வாங்கினால் கூட, கம்ப்யூட்டர் பில்லைக் கிழித்து நீட்டுகிறான்.
கண்பத்ராவும் ராமபத்ரனின் குடியிருப்பில், முன்னூற்றுச் சொச்சம் சதுர அடியில் சுவாசித்துக் கொண்டிருந்தவன் தான். அது இருபது வருஷம் முன்னால்…
அரண்மனை போல வீடும், ஆஸ்துமாவுமாக அமர்க்களமாக இருக்கிறான் இப்போது..
சுக்கும் மிளகும் விற்றுக் கட்டின வீடு..
ராமபத்ரன் பற்றுவரவு நோட்டில் பதிந்து மளிகை வாங்கி, மாதம் பிறந்ததும் அடைத்துக் கொண்டு, அதே குச்சில் தான் சுகவாசம்.
அரைகுறையாக உடையணிந்த பெண்கள், டர்க்கி டவலால் லேசாக மாரை மறைத்து, வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கியதை வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே பார்த்தார்.
நாரி ஸ்தனபார தர்சனம் என்று இந்த நிமிஷத்துக்கு ஜாதக பலன் போல… எல்லோருக்கும் குளிர் விட்டுவிட்டது.
டெலிவிஷனில் பாதி நேரம் சதைபிடிப்பான முலைகளும் பிருஷ்டங்களும் தான் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.
கண்ணியமானவர்கள், ‘எனக்குப் பிடித்த பிருஷ்டங்கள் உள்ள அழகி இவள்’ என்று கொடுத்த தகவலை, பளபளப்பான இங்கிலீஷ் பத்திரிகைகளில் மூணு பக்கம் சர்வேயாக, உறுதி செய்கிற புகைப்படங்களோடு போடுகிறார்கள்..
கையில் நாலு பலூன்களைப் பிடித்தபடி, அராபிய ஷேக் பின்னால் ஓடி விற்க முயன்ற கந்தல் சட்டை குழந்தை, அவன் ’வேண்டாம்’ என்றதும், வயிற்றைத் தொட்டுக் காட்டி கையை விரித்து நீட்டுகிறது.
தொளதொள உடுப்பில் எங்கேயோ தேடி எடுத்து பைசாவை வீசிவிட்டுப் போகிறவன் ஒரு பார்வைக்கு தப்ளாம்புதூர் பஞ்சாபகேச சாஸ்திரி ஜாடையில்..
தஞ்சாவூரும் தப்ளாம்புதூரும் எப்போதாவது நினைப்பில் தலைகாட்டுவதோடு சரி. தப்ளாம்புதூர் காரைவீடு விற்று வந்த தொகை இங்கே ஃப்ளாட் வாங்கியதில் கரைந்து விட்டது. தஞ்சாவூரிலிருந்து இருபத்தைந்து வருஷம் முந்தி மடிசார் கட்டோடு கல்யாணம் பண்ணிக் கூட்டி வந்த அகிலாண்டம், சரளமாக மராத்தியில் பொரிந்து தள்ளுகிறாள்.
புனாவில் படிக்கிற ஒரே பிள்ளை லீவில் வரும்போது, ஆவக்காயோடு தமிழையும் தொட்டுக் கொள்கிறான்.
ஆபீஸில் சகல லோனும் வாங்கி, முதல் வருடப் படிப்பு முடிந்து என்ஞினியரிங் இரண்டாம் வருடம்.
முழுசும் முடிந்த பிறகும் இந்த உத்தியோகம் சீராகத் தொடர வேண்டும்.
அப்புறம்… அப்புறம் என்ன..
ஆயுசு முடிகிறவரை இனிமேல் இங்கேதான்.
முன்னூற்று ஐம்பது சதுர அடியில் காலண்டர் மாட்டிக் கிழித்து, விநாயக சதுர்த்திக்கு ஊரோடு பத்து நாள் கொண்டாடி, சௌபாத்தியில் சமுத்திரத்தில் கரைக்க விசர்ஜன் ஊர்வல லாரியில் வைத்து, தீபாவளிக்கு யாரோ கொடுத்த வாதுமைப் பருப்பும் கெட்டி அல்வாவும் தின்று வயிறு பொருமி, மழைக் கோட்டு கிழியக் கிழியத் தைத்துக் கொண்டு, கம் பூட்ஸுகளைப் பத்திரிகை சுற்றி அடுத்த மழைக் காலத்துக்குப் பாதுகாப்பாக முடக்கி, பேப்பரில் சுற்றித் தரும் பொடேடோ வடா, இஞ்சி அதக்கிக் கலந்த சாயாவோடு ருசித்து, கனவிலும் வரிசை தப்பாது வரும் ஸ்டேஷன்கள் வழியே தினசரி போய் வந்து, கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தி, பங்கு மார்க்கெட்டில் சின்னதாகக் கோட்டை விட்டு, கேபிள் டிவியில் இந்தி டப்பிங்கில் ‘ரோஜா’ படம் தூக்கம் வருகிறவரை பார்த்து..
மழைக்காலத்தில் எல்லாம் யார் யாருக்கோ சாவு விழ, குடை பிடித்துக் கொண்டு போய் வந்த இந்த ஊர் மசானம்.. ஈர விறகு.. இந்தியில் சண்டை பிடிக்கிற, மாடுங்கா சங்கர மடவாசல் புரோகிதர்கள்… சூனாம்பட்டில் பத்தாம் நாள் காரியம் நடக்கிற இடம். கால் அலம்பி திரும்ப நுழைகிற ராமபத்ரனின் மூன்றாம் மாடி ஃப்ளாட்… இரண்டு பேர் சேர்ந்து நடக்க முடியாதபடி குறுகிய மாடிப்படி..
மூச்சு நின்றால் அந்தப் படி வழியே எப்படி இறக்குவார்கள்? ஒருக்களித்தாற்போல் பிடித்துக் கொண்டு.. ஜாக்கிரதை.. ஜாக்கிரதையா..
யோசித்தபடியே தெரு திரும்பி, ஏர் இந்தியா கட்டடம் வரை வந்து விட்டார்.
போன வருஷம் மார்ச் பனிரெண்டாம் தேதி இந்த நேரத்தில் பம்பாய் பற்றி எரிந்தபோது இங்கே வெடிகுண்டு வெடித்துக் கருகிய உடல்களை வரிசையாகத் திணி மூடி எடுத்துப் போனது சட்டென்று நினைவின் விளிம்பில் எட்டிப் பார்த்தது.
அப்படி எல்லாம் போகக் கூடாது.. இறக்கி எடுத்துப் போகச் சிரமப் பட்டாலும் பரவாயில்லை..சொந்த வீட்டில் தான்..
ஸ்டேட்டஸ் ஓட்டலில் நுழைந்து, ஒரு காப்பி குடிக்கலாமா என்று தோணல்..
வேண்டாம்.. சரிப்படாது.. பத்து ரூபாய் பழுத்து விடும்.. காண்டீன் சாயாவே போதும்.
திரும்ப ஆபீஸில் நுழைந்தபோது ‘சின்ன கோகலே சாப்’ கூப்பிடுவதாக அட்டெண்டர் தாய்டே வந்து சொன்னான்.
சின்ன கோகலே நாளைக்கு ஸ்விட்சர்லாந்து போகிறான். வர ஒரு மாதம் ஆகும். மூத்த கோகலே கிட்டத்தட்ட சாய்வு நாற்காலியும் கட்டிலுமாக முடங்கி விட்டார். நடுவாந்திர கோகலேவுக்கு பிசினஸ் ஒரு எழவும் தெரியாது.
‘மிஸ்டர் அய்யர்.. நீங்க தான் கூட இருந்து பார்த்துக் கொள்ளணும்..’
ஜாதகத்தில் அடிமை உத்யோகம் என்று தீர்க்கமாக எழுதியிருக்கிறது.
இருபத்தெட்டு வருஷம் முன்பு தஞ்சாவூரிலிருந்து டிரங்க் பெட்டிக்குள் பிட்மென்ஸ் ஷார்ட் ஹேண்ட், சவுந்தர்ய லஹரி, சர்ட்டிபிகேட்கள், ட்வீட் பேண்ட், கோவிந்தா மஞ்சள் சட்டையோடு கிளம்பி வந்து, மாடுங்கா கன்சர்னில் மோர்க் குழம்போடு சாப்பிட்டுக் கொண்டு, முன்னூறு ரூபாய் சம்பளத்தில் ‘கோகலே அண்ட் கம்பெனி’யில் சேர்ந்ததிலிருந்து, தலைமைக் குமஸ்தனானது வரை அதேபடி தான்…
அப்போது ஆபீஸ் ஜி.பி.ஓ பக்கம் வெட்டிவேர்த் தட்டியும், நாலைந்து பெடஸ்டல் ஃபேனும், ரெமிங்டன் டைப்ரைட்டருமாக ஒரு பழைய கட்டடத்தில்…
‘மிஸ்டர் அய்யர்.. கம்ப்யூட்டர் செக்ஷன் பிள்ளைகள் என்ன கேட்டாலும் சாங்க்ஷன் செஞ்சுடுங்க.. காலம் மாறிக் கொண்டிருக்கு.. இந்தக் கம்பெனியையே அவங்க தான் தாங்கறாங்க..’
சின்ன கோகலே தங்கப் பல் தெரிய சிரித்துக் கொண்டே சொன்னான்.
டைப்பிஸ்டாகச் சேர்ந்து, விரல் நுனிகளில் கம்பெனியைத் தாங்கிய ராமபத்ரன்…
கண்ணாடிச் சுவர் தடுப்புக்கு அந்தப் பக்கம் தெரியும் டெர்மினல்களையும், மல்ட்டிப்ளக்ஸர்களையும் அவற்றோடு இழையும் ‘வாண்டுப் பசங்களை’யும் அசிரத்தையாகப் பார்த்தபடி ஷார்ட் ஹேண்ட் புலி வெற்றிலை மெல்லுகிறது.
புலிக்குப் பிறந்ததும் நாளை அவர்களின் பாஷை பேசும்.
’பழைய டைப்ரைட்டரை எல்லாம் ஏலத்தில் விடச் சொன்னேனே.. மறந்துட்டீங்களா? சும்மா கொடுத்தாலும் பரவாயில்லே.. சதுர அடிக்கு இருபதாயிரத்துக்கு மேலே விலை கொடுத்து வாங்கின இடத்தை அடைச்சுக்கிட்டு.. அடுத்த வாரம் இன்னும் நாலு கம்ப்யூட்டர் வருது.. உள்ளே வைக்கணும்..’
சின்ன கோகலே சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ராமபத்ரனுக்கும் நீட்டினான்.
‘வேணாம்’.
எந்த துர்ப் பழக்கமும் இல்லாமல் நாற்பத்தொன்பது வயது கடந்து விட்டது. வெற்றிலை அந்தப் பட்டியலில் வராது.
‘உங்க கோயில் கட்டி முடிச்சாச்சா?’
வாய் நிறையப் புகையை விட்டுக் கொண்டு சின்ன கோகலே கேட்டான்.
‘வேலை நடக்குது..’
‘சார்’ என்று சேர்க்கத் தோன்றவில்லை.
‘திரும்பினதும் ஐம்பதாயிரத்து ஒண்ணு ரூபாய்க்கு செக் போட்டுத் தரேன்.. போகிற காரியம் ஜெயமாகட்டும்.. இந்த சாஃப்ட்வேர் பிபிஓ மட்டும் க்ளிக் ஆனா நாம எங்கேயோ போயிடுவோம்..’
‘விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.. தேங்க் யூ சார்’.
‘அய்யர் .. உங்க டேபிள்ளேயும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கச் சொல்றேன்.. நேரம் கிடைக்கறபோது வேர்ட் ப்ராசசிங்.. எக்செல் ஸ்ப்ரெட் ஷீட் இப்படிச் சின்னச் சின்னதா கத்துக்கிட்டா உபயோகமா இருக்கும்.. பசங்க யாரைக் கேட்டாலும் பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்க.. இவங்க எல்லாரோட அப்பன்மாரும் உடுப்பைக் கழட்டின நேரம் வெகு விசேஷமானது போல.. ஒருத்தன் விடாம தலையெல்லாம் மூளை..’
ராமபத்ரன் இருபது வருஷம் முந்திய, அடைமழை பெய்து வெள்ளக்காடாகி, ரயில் போகாததால் ஆபீஸ் போகாமல் வீட்டில் தங்க வேண்டி வந்த அந்த அதி விசேஷமான பகல் பொழுதை நினைத்துக் கொண்டார்.
‘ஏதாவது முக்கியம்னா ஈ-மெயில் செஞ்சுடுங்க.. பொடியன்கள் கிட்டே சொன்னா க்ஷணத்தில் தட்டி விட்டுடுவாங்க..’
கதவை மூடுகிறபோது சின்ன கோகலே சொன்னான்.
வெளியே அட்டெண்டர் தாய்டே சாவகாசமாக வெற்றிலை போட்டுக் கொண்டு, விரலில் மீந்த சுண்ணாம்பை டைப்ரைட்டர் ஓரமாகத் தடவிக் கொண்டிருந்தான்.