திருப்பாவை – 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். 12
திருவெம்பாவை – 12
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். 12
//
இன்னிக்குத் திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்கும் விளக்கமே தேவையில்லை. ஆண்டாளும் மணிவாசகரும் கவிதை அனுபவத்திலேயும் அது மூலம் பக்தி அனுபவத்திலும் உச்சத்தைத் தொட்ட அருமையான பாடல்கள் இவை. நாம் எத்தனை புதுசு புதுசா எழுதினாலும் நமக்கு மன நிறைவு வரலாம் ஆனா இந்தக் கவித்துவத்துக்குப் பக்கத்திலே கூடப் போக முடியாது. மெய்யாலுமே, செயல் மறந்து வாழ்த்துதுமே தான்.
ஆண்டாள் பாருங்க.. சீவில்லிப்புத்தூர் பெண்பிள்ளை. ஊர் உலகம் அறியாதவள்.
ஆனால், மனம் ஆய்ப்பாடியில் லயித்துக் கிடக்கு. அங்கே காலைக் காட்சியைச் சொல்லச் சொல்லி சிசுவேஷன் கொடுத்தா, இன்றைய கவிஞர்கள் நாலு பசு, ஏழெட்டு கன்று, ஆடு இருக்கும்ங்களா அங்கே. சரி அதுலே நாலு.. இப்படித்தான் ஆரம்பிப்பாங்க.. அது எல்லாம் அப்புறம் வரட்டும்.. ஆயர்பாடி பண்ணையார் வீடு.. சாய்வு நாற்காலி, நாலு வெங்கலப் பாத்திரம்.. கையைக் கட்டிக்கிட்டு நிக்கற சேவகர்கள்..
ஆண்டாள் நம்மளைப் போலவா.. வீட்டு முற்றத்திலே அவள் காட்டுவது எருமை மாட்டை. அதுவும் பால் கொடுக்கிற, கன்று பெற்று பாலூட்டுகிற ஜீவராசி தானே.. எருமை கனைக்கிற முன் வாசல்.. கனைக்கக் காரணம் அது தன் கன்னுக்குட்டியை இன்னும் காணோமேன்னு அழைக்க ஆயத்தமா.. அழைச்சு பாலூட்டணும்.. நினைச்ச உடனேயே பால் சொரியுதாம் நிலத்திலே.. இப்படி எருமைப்பால் நனைந்த தரை அந்த வீட்டுக்கு..
நம்ம கவிஞர்கள் இருக்கட்டும், பழைய ஆறாம், ஏழாம் நூற்றாண்டு கவிஞர்கள்.. அவங்களும் ஆயர்பாடி வீட்டு வாசல்ன்னா, மங்களகரமா பசுவும், கன்றுமா தொடங்கக் கூடும். ஆண்டாளுக்கு சம்பிரதாயத்தை விட ஆயர்பாடி முக்கியம்… எதுக்கும் கவலைப்படாமல் எருமையைக் கொண்டு வந்து நிறுத்திட்டா..
இளங்கோவடிகள் ‘செங்கண் முரா’ன்னு குறிப்பிடற நினைவு. முரா இன்னும் வழக்கத்தில் இருக்கும் சொல்தான். செங்கண் எருமை.. அழுத்தமான இமேஜ்..
அந்த வீட்டுக் கூரை தாழ்ந்த அமைப்பு. மார்கழிப் பனி தலையில் விழ, இந்தப் பெண்கள் அந்த வாசலைக் கையால் பிடித்தபடி குனிந்து உள்ளே பார்த்துக் குரல் கொடுத்து அங்கே தூங்கும் தோழியை எழுப்பறாங்களாம்..
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க இந்தப் பாட்டு..
மனதுக்கினியான் – ஆண்டாள் சொல்லும்போது மனம் மணிவாசகர் சொல்ற கண்ணுக்கு இனியானை நினைக்குது.. ரெண்டும் வெவ்வேறு பௌதிகமாக.. ரெண்டும் ஒண்ணு கவித்துவமாக..
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடுவோம்
கலகலன்னு பேசிக்கிட்டு, வளையொலியும் மற்ற ஆபரணங்களும் கூடவே ஏக சத்தமாக ஒலிக்க தலையிலே வச்ச பூவைக் கூட எடுக்க மறந்து (வண்டார் குழல்) குளத்து நீரைக் கையால் தள்ளித் தள்ளி அதன் குளிர்ச்சியில் ஈடுபட்டு.. சிவனை சதா நினைத்தபடி நீராடுவோம்.. மணிவாசகர் பெண்கள் படித்துறைக்குப் போயிருக்க மாட்டார்… ஆனால் குளிக்கிற அந்தப் பெண்களை இன்றும் கிராமத்தில் பார்க்கலாம்.. சிவங்கை போன்ற சிறு நகரத் தெப்பக் குளங்களில் உயர்த்திக் கட்டிய குளத்து சுற்றுச் சுவருக்கு அந்தப் பக்கம் இருந்து எத்தனையோ முறை கேட்ட குரல்கள், ஒலிகள் அவை.. சப்த ரூபமான உலகம்.. அதுவும் சாஸ்வதமானது தான் நினைவுகளில்..
******************************
கான்ஸ்டபிள் சுபாஷ் சந்த் தோமர். தில்லியில் ஒரு குளிர்கால தினத்தில் கடமையைச் செய்யும்போது வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டவர். வண்புணர்வுக்கு எதிராக உடனே செயல்படக் கோரி மாணவர்கள் திரண்டபோது, சமூக விரோதிகள் ஊடுருவினார்கள்.
கூடி வாழ்கிற கூட்டம் கூடிக் கலைகிற, அழிக்கிற கும்பலானபோது ((ஜெயகாந்தன் சொல்வார்) களப்பலி தோமர்.
சரித்திரங்கள் எழுதப்படும் போது காலாட்படை சேவகர்கள் இறப்பது நியதி. அடிக்குறிப்பாகக் கூட இவர்கள் இடம் பெறாது வரலாறு எழுதப்படும், நினைவு கொள்ளப்படும்.
கிங் லியர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர், கிளஸ்டர் பிரபு பாத்திர வாயிலாகச் சொல்வார்
As flies to wanton boys are we to th’ gods,
They kill us for their sport.
இங்கே gods இல்லை.. dogs..
பி.ஏ.கே சொல்வது போல் //’In all such incidents, mostly the poor and the foot-soldiers suffer. RIP Constable Subhash Tomar. Your death was needless, like many deaths in our benighted country are.’//
RIP