மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 1
(’இரா.முருகன் குறுநாவல்கள்’ நூலில் இருந்து)
======================================================
இந்தக் குறுநாவல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தைப் பற்றியது. கதை நடக்கும் இடம் கேரளத்தின் வள்ளுவநாடு பிரதேசம் (இன்றைய மலைப்புரம் பகுதி).
கதைக் களன் தான் மலையாள நாடே தவிர, கதை சுத்த சுயம்புவான தமிழ்க் கற்பனை.
என் கற்பனையில் உருவானது.
கதையில் நிஜங்கள் –
1) நம்பூதிரி சமுதாயப் பழக்க வழக்கங்கள் (தற்போது வழக்கொழிந்து போனவை)
2) கிறிஸ்து ஆண்டு 1906-ல் (கொல்ல வருஷம் 1081) ஒரு நம்பூதிரிப் பெண் குறித்து நடந்த சமூக விசாரணை
கதாபாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் கற்பனை.
.
————————————————–
பகவதி குளிக்கக் கிளம்பினாள். காலை இளம் வெயிலில் தென்னையும், குலை தள்ளிய வாழையும், கமுகும் நிழலிட்ட வழி. வீட்டுக் கூடத்தில் முடிகிறது அது.
எல்லா நம்பூதிரி மனையிலும் குளம் உண்டு. சிலவற்றில் தெற்கு வடக்காக. இரண்டு பத்தாயப் புரையும், மதிலும், தோப்பும், துரவுமாக விரிகிற மனைகள்..
எல்லா நம்பூதிரி மனையிலும் வீட்டுக்கு மூத்த ஒரு நம்பூதிரி இருக்கிறார். கூடப் பிறந்த இளைய நம்பூதிரிகள் இருக்கிறார்கள். மூத்த நம்பூதிரி கல்யாணம் கழித்த மூத்த தம்புராட்டி இருக்கிறாள். ஆனால் இந்தக் குளக்கரை மனையில் மட்டும் தான் பகவதி என்ற வினோதப் பிறவி.
நம்பூதிரி மனைக் குளங்கள் சூரியன் உதிக்க ஒரு நாழிகை முந்தியே பரபரப்பாக இருக்கும். மூத்த நம்பூதிரி குளித்து பூஜைக்கு அமர்வதற்குள், மூத்த தம்புராட்டி குளித்து விடுவாள். பூஜைக்கான பூவும், நெய்யும், அன்னமும், மற்றதும் அவள்தான் எடுத்து வைக்க வேண்டும். நடுப்பகல் வரை நீண்டு போகிற பூஜை அது.
பூஜை முடிவதற்குள், முந்தின நாள் ராத்திரி படி இறங்கி, ‘பந்தம் புலர்த்தப் போன’ மனைக்கு இளைய நம்பூதிரிகள் திருப்தியாக மனை திரும்பி இருப்பார்கள்.
‘இந்தப் பெயருள்ள மனையின் இளைய நம்பூதிரி எங்கள் வீட்டுப் பெண்ணோடு உறவு வைத்துக் கொண்டு வந்து போகிறார்’ என்று பெருமையாகப் பேசிக் கொள்கிற நாயர் தரவாடுகள் இருக்கும் வரை இந்தத் திருப்திக்குக் குறைவு ஒன்றும் வராது.
சித்ரன் நம்பூதிரி மட்டும் கொளுத்திப் பிடித்த தீப்பந்தத்தோடு. ‘உறவு வைத்துக் கொள்ள’ ராத்திரியில் மனையை விட்டுப் போவதில்லை. ஒரு மேட மாதப் பகலில், திருமாந்தாங்குன்னு கோவிலில் வைத்துப் பகவதியைக் கல்யாணம் கழித்து சித்ரன் அழைத்து வந்து ஐந்து வருடம் உருண்டோடி விட்டது.
‘மூத்த நம்பூதிரி தவிர அவர் சகோதரன்மார் வேளி கழித்து, வீட்டில் மனைவி கொண்டு வருவது நம் நம்பூதிரி சமூகத்திலேயே இல்லாத பழக்கமாச்சே..இந்த சித்ரனுக்கு என்ன கிறுக்கா? கை நிறையச் சம்பாதிக்கிறான். வா என்று கண் காட்டினாலே நூறு பெண்கள் பின்னால் வருவார்கள். இரு என்றால் படுப்பார்கள்.சிவப்பும் வலியதுமாக இவன் தேகம் அவர்களைக் கட்டிப் போடும். போயும் போயும் ஒரு ஏழை நம்பூதிரியின் பெண்ணை இவன் மோகித்து.. கல்யாணம் வேறு கழித்து… கலி.. கலிதான்… கலி முற்றுகிறது… சம்சயமில்லை’.
வள்ளுவநாட்டு கிராமப்புற மனைகள் தோறும் புருவங்கள் உயர்ந்தன. அப்போது குரல்களை உயர விடாமல் தடுத்தது குளக்கரை மனையின் பாரம்பரியம். பத்து தலைமுறையாக வைத்திய சிகிச்சையில் பேர்போன மனையல்லவா இது. கள்ளிக்கோட்டை சாமுத்ரி மகாராஜாவோடு சரிக்கு சரியாக உட்கார்ந்து பேசக் கூடிய அந்தஸ்துள்ள குளக்கரை மனை நம்பூதிரி. வேதமும் மீமாம்சையும் கரை கண்ட வம்சம்.
பகவதி சர்ப்பக்காவில் சற்று நின்றாள். சிவப்பு வரியோடி அடையடையாகப் படர்ந்த புற்றுகள். தாழப் பறந்து ‘யாரங்கே’ என்று விசாரித்துக் கொண்டிருந்த குருவிகள், காலடிச் சத்தம் கேட்டு மரக்கிளைகளுக்கு மாறின.
‘யட்சி.. யட்சி.. அடி யட்சி.. இருக்கிறாயா நீ?’
பகவதியின் கண்கள் புற்றில் நிலைத்தன.
இங்கே ஒரு யட்சி இருக்கிறாள். பார்வைக்குத் தட்டுப்பட மாட்டேன் என்கிறாள். ஆனால் காதில் வந்து நிறையப் பேசுகிறாள்.
சித்ரனிடம் சொன்னால் எல்லாம் பிரமை என்பான்.
நம்பூதிரி இல்லங்களிலேயே நாலு எழுத்து படித்த ஒரே பெண்ணான உனக்கா இந்த மயக்கம் என்று கேலி பேசுவான்.
‘மனைக்கு வெளியே காலாற நடந்து எல்லோரிடமும் பேசிப் பழகு. நீ மனைக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் பகவதி அந்தர்ஜனம் இல்லை. மற்றவர்கள் பயந்து ஒதுங்கி மரியாதை செய்ய வேண்டிய பகவதி தம்புராட்டியும் இல்லை. நீ பகவதி. நான் சித்ரன். வெறும் மனுஷர்கள். எல்லோரையும் போல’.
சித்ரன் திரும்பத் திரும்பச் சொல்கிற வார்த்தைகள் பகவதி காதில் ரீங்காரமிட்டன.
இருந்தாலும் யட்சி.. அவள் இருக்கிறாள். பகவதிக்கு மட்டும் தெரியும். நினைத்ததும் வந்து விடுவாள்.
யட்சி.. அடி யட்சி.. இருக்கிறாயா நீ?
‘இல்லாமல் எங்கே போனேன்? நீ குளிக்க இன்னும் வரவில்லையே என்று தான் பார்த்துக் கொண்டிருந்தேன். வா, போகலாம்’.
கலகலவென்று சிரிப்பைச் சிதறிக் கொண்டு முன்னால் மிதக்கிற யட்சி.
‘அடியே யட்சி.. நில்லு..நில்லு… இப்படிச் சரசரவென்று போனால் நான் கூட வருவது எப்படி? மானுடப் பெண்ணாயிற்றே. நடந்து வர வேண்டாமா?’
‘நீயும் என்னைப் போல் யட்சியாக மாறி விடு. சேர்ந்தே பறந்து திரியலாம். காடுகளிலும், மலை முகடுகளிலும், பாரதப் புழையின் அலைகள் மேலும், தூதப் புழையின் பளிங்கு நீர்த் தடத்திலு.. வாயேன்’.
‘எனக்கு அந்த சந்தோஷமெல்லாம் வேண்டாமடி. பார். பார். வாசனைத் திரவியக் கிண்ணத்தில் எதற்காக ஊதிப் புகையைக் கிளப்புகிறாய்?’
‘நானில்லை. காற்று அது…’
‘மெல்லத்தான் போயேன்.. குளக்கரைப் படிக்கு அப்புறம் கடக்க மாட்டாமல் நின்று விடப் போகிறாய். அதற்குள் ஏன் இந்த ஓட்டம்.. சரி, வர்த்தமானங்கள் சொல்லு…’
‘சொல்லப் புதிதாக ஒன்றுமே இல்லை, என் பொன்னு பகவதீ… மூத்த நம்பூதிரிகள் பூஜை செய்கிறார்கள். இளையவர்கள் நெல் பாட்டங்களில் உச்சி வெய்யிலில் உழைக்கிறவர்களைத் தாழங்குடை பிடித்து அதன் நிழலில் இருந்து அதிகாரம் செய்கிறார்கள். முன்னிரவில், ஊர் ஓசை அடங்கும் முன் தரவாடுகளை நோக்கி வயல் வரப்புக்களூடே, ஆசையும் காமமும் முந்தித் தள்ள நடந்து போகிறார்கள்’.
‘இது என்ன விசித்திரமடி.. முந்திப் பிறந்தவர் மட்டும் வேளி கழிக்கலாம். அதுவும் எங்கள் மூத்த நம்பூதிரி போல என்றால், வம்சம் வளர்க்க என்ற சாக்கில் மூன்று நாலு கல்யாணம் கழிக்கலாம். பின்னால் பிறந்த இளையவர்கள் வேளி கழிக்க முடியாது. வேலி தாண்டிச் சாட வேண்டியவர்கள்.’
‘கொடுமை இதில்லை பகவதி.. இவர்கள் வேலி கடந்து பந்தம் புலர்த்தப் போகிற அந்தத் தரவாட்டுப் பெண்களை நினைத்துப் பார். பந்தம் புலர்த்தி விட்டு உடுப்பைச் சரியாக்கிக் கொண்டு திரும்பி வருகிறபோது வழிக்கு வைத்து இன்னொரு அழகான பெண்ணைப் பார்த்து எச்சில் ஊறினால் பழைய பந்தம் அறுந்து புதியது தொடங்க வேண்டியது. பாவப்பட்ட அந்தப் பழைய உறவுக்காரிக்கும், அவள் மூலம் பிறந்த குழந்தை குட்டிகளுக்கும் ஒரு சக்கரம் பணம் காசு கூட செலவழிக்க வேண்டியதில்லை ஆயுசுக்கும்… இந்த பரசுராம பூமியில் அழகான பெண்களுக்கும் குறைச்சல் இல்லை. இளைய நம்பூதிரிகளுக்கும் குறைச்சல் இல்லை. அவர்கள் வாய் எச்சிலுக்கும்…’.
‘பேசாமல் ஆணாகப் பிறந்திருக்கலாமடி யட்சி..’
‘மற்றவர்கள் வேண்டுமானால் சொல்லு. உனக்கென்ன குறைச்சல் பகவதி.. சித்ரன் வைத்யர் ஊர் அறியக் கல்யாணம் கழித்துக் கொண்டு வந்த பகவதி தம்புராட்டி இல்லையா நீ?’
‘நான் தம்புராட்டியில்லை. பகவதி. ஒரு சிறையில் இருந்து இன்னொன்றுக்கு மாறி இருக்கிற கைதி…’
‘இந்தக் காவுங்கல் கிராமமும் உன் குளங்கரை மனையும் வேண்டுமானால் உனக்கு சிறையாகப் படலாம். நீ பிறந்த செவ்வரம் ஒரு சிறையா? பரசுராமன் கோடாலி எறிந்து கடலைப் புறந்தள்ளி மலையாள பூமி சிருஷ்டி செய்து அறுபத்து நாலு குடும்பங்களுக்கு அதைப் பிரித்துக் கொடுத்ததாக ஐதீகம் இருக்கிறதே.. அந்த அறுபத்துநாலில் அறுபது மனை உன் செவ்வரத்து நம்பூதிரிகள் இல்லையா? மீமாம்சையிலும், வியாகர்ணத்திலும் கரை கண்ட ஆழ்வாஞ்சேரி மனையும், கூடல்லூர் மனையும் களரிப் பயிற்சியும் எல்லாம் அங்கேதானே?’
‘கையகலம் நிலம் கூட இல்லாது அம்பலத்தில் பூஜை செய்து வயிறு கழுவின மேல் சாந்திக்காரன் பரமேஸ்வரன் நம்பூதிரியும் அந்த ஊர் தானடி யட்சி..’
‘யார்.. உன் தகப்பனா பகவதிக்குட்டி? அந்த ஷேத்ர பூஜை தான் அவரை இப்போது சொர்க்கத்தில் சகல சவுகரியத்தோடும் உட்கார வைத்திருக்கிறது. கேட்டாயோ? நல்ல வேர்ப் பலா சுளை, அவியல், பப்படம், பால் பாயசத்தோடு சோறு, வெற்றிலை, பாக்கு, கதகளி சங்கீதம்.. அளிவேணி எந்து செய்வு..’
‘ஆமா நீ போய்ப் பார்த்தாயாக்கும்.. சோபான சங்கீத ராகம் இழுத்து எரிச்சலைக் கிளறாதே… ‘
‘சித்ரன் வைத்யர் பயணம் வைத்துப் போய் நாலு நாளாகிறதல்லவா? அவர் வருகிற வரை என் ப்ரியமான பகவதித் தம்ப்ராட்டிக் குட்டிக்கு சலிப்பு தான்.. அவர் வந்ததும் இருக்கவே இருக்கு களிப்பு..’
கலகலவென்று காற்றோடு சிரிக்கிற யட்சி.
குளம் வந்து விட்டது. பாசி படிந்த படிகளில் மெல்ல இறங்கிய பகவதி பின்னால் திரும்பி ‘யட்சி’ என்று மென்மையாகக் கூப்பிட்டாள்.
’போய் விட்டாயாடி?’
குளம் சின்ன அலைகளை வீசி எறிந்து சிநேகிதமாகச் சிரித்தது