இலை மகா யுத்தம் – குறுநாவல் மனை

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி 2

 

‘நானாக்கும் இன்று..’

 

‘நீ போடி தெம்மாடி.. இலையைத் தொடாதே..’

 

‘நீ என்ன மோகினி என்று நினைப்போ.. கண்ணாடியில் உன் குரங்கு முகத்தைப் பார்த்ததே இல்லையா?’

 

‘என் முகத்துக்கு என்னடி கிழவி? எனக்கு இன்னும் முப்பது வயது கூடத் திகையவில்லை… உன் மாதிரி தொங்கிப்போன மாரோடு திரிகிறேனா என்ன?’

 

‘ஊருக்கெல்லாம் மாரைத் திறந்து போட்டு எடுக்கஞ்சேரி மனையிலிருந்து சவிட்டி இறக்கிய நாயில்லையா நீ…. கிழம் மூன்றாம் தாரமாகக் கொண்டு வந்த நாய்.. எனக்கில்லாத உரிமை உனக்கேதடி கழுவேறி..’

 

‘ராத்திரி அவர் என் எச்சிலுக்காக என் காலடியில் கிடக்கிறார்.. பகலில் நான் அவருடைய எச்சில் இலையில் கை நனைக்கிறேன்… உனக்கு என்ன போச்சு கிழப்பட்டி?’

 

ஏகக் களேபரமாக மனைக்குள் சத்தம் உயர்ந்து கொண்டிருந்தது. சுற்றுக் காரியம் பார்க்கிற நாணிக்குட்டி உம்மரத்திலிருந்து பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

‘என்ன நாணிக்குட்டி?’

 

பகவதி கேட்டாள்.

 

‘சண்டை தம்புராட்டி… இன்றைக்கு மூத்த நம்பூதிரி குளியும் தேவாரமும் முடிந்து சீக்கிரமே கிளம்பி, பன்றியூர் அம்பலத்தில் உற்சவக் கொடியேற்று என்று போய் விட்டார்…இவர்களும் சீக்கிரமே ஆரம்பித்து விட்டார்கள்..’

 

பகவதி ஜன்னல் வழியாக  உள்ளே பார்க்க ஐம்பது வயசுக்கு மேலே ஆன தலை நரைத்த மூத்த தம்புராட்டியும், பகவதி இங்கே வந்ததற்கு முதல் வருஷம் நம்பூதிரி வேளி கழித்துக் கூட்டி வந்த இளைய தம்புராட்டியும் ஆக்ரோஷமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

மானப் பிரச்சனை இது. உரிமைப் பிரச்சனை. ஆதிக்கத்தை நிலைநாட்ட உயரும் குரல்கள். இனி கைகளும், நகங்களும், பல்லும் கூட ஆயுதமாகப் பாய்ந்து வரும் நிமிஷங்கள் அதிக தூரத்தில் இல்லை.

 

எல்லாம் ஒரு இலைக்காக. ஒரு எச்சில் இலைக்காக.

 

மூத்த நம்பூதிரி திருப்தியாகச் சோறும், எரிசேரியும், அவியலும், பப்படமும், உண்ணி மாங்காய் ஊறுகாயும், தயிரும் உண்ட இலை. எச்சில் இலையில் சாப்பிடப் போட்டி போடுகிற மூத்த தம்புராட்டிக்கும், ஆக இளையவளும்.

 

மொத்தம் மூணு தம்புராட்டி ஆச்சே மூத்த நம்பூதிரிக்கு. நடுத் தம்புராட்டி கல்யாணி அந்தர்ஜனம் எங்கே?

 

எப்போதும் விலகாது கவிந்திருக்கும் உள்கட்டின் இருளில் பகவதியின் கண்கள் துழாவின.

 

கல்யாணி அந்த இலைக்கே நேரே உட்கார்ந்து அவசரமாக அதில் சோறை வட்டித்துக் கொண்டு, அள்ளி அள்ளி வாயில் அடைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கப் பகவதிக்குச் சிரிப்பாக இருந்தது. துக்கமாக இருந்தது.

 

ஆகக்கூடி இந்தக் கல்யாணி சொர்க்கம் போக மற்றவர்களை விட சாத்தியம் அதிகம். புருஷன் சாப்பிட்ட இலையிலேயே சாப்பிடுகிற பெண்களுக்காக சுவர்க்கத்தில் தனியாக ஒரு வாயில் திறந்து வைத்திருக்கிறது. உள்ளே போகிற வழியெல்லாம் வாழையிலை விரித்து வைத்திருக்கிறது…

 

‘பரமேஸ்வரன் நம்பூதிரிக்குப் பெண்ணாகப் பிறக்காது போயிருந்தால், நீயும் கூட இப்படித்தான் இருந்திருப்பாய்’.

 

பகவதியின் மனசு சொன்னது.

 

சொத்து சுகம் இல்லாவிட்டாலும் ஒரே மகளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த அச்சன்… அறியாப் பருவத்தில் அம்மா இறந்தபோது வேறு கல்யாணம் செய்து கொள்ளாமல்… கோயில் உத்தியோகஸ்தனுக்கு ஒரு வேளியே அதிகம்…

 

திருநாவாயூர் அம்பலத்தில் சோபான சங்கீத சேவை செய்த கோவிந்த மாராரிடம் சங்கீத சிட்சைக்கு அனுப்பி வைத்தவரும் அவர்தான்.

 

‘மகளே..உனக்கு ஒரு பிரகாசமான ஜீவிதம் இருப்பு உண்டு..’

 

பகவதியின் காதில் அச்சனின் குரல் ஒலிக்கிறது.

 

‘அதற்குள் இந்த மனையின் சுவர்கள் என்னை விழுங்கி விடுமோ, அச்சா?’

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன