மனை குறுநாவல் இரா.முருகன் பகுதி 3
(இரா.முருகன் குறுநாவல்கள் நூலில் இருந்து)
———————————————————————————
மனை மத்தியான உறக்கத்தில் கிடந்தது. மூத்தவருக்கும், சித்ரன் நம்பூதிரிக்கும் இடைப்பட்ட நீலகண்டன் நம்பூதிரி, ராமச்ச விசிறியைத் தலை மாட்டில் வைத்துக் கொண்டு, முகப்பில், பளிங்குத் தரையின் குளிர்ச்சியில் நித்திரை போயிருந்தார். நாற்பது வயதில் இப்போது ஒரு மாதமாகப் புதிய உறவு வைத்துக்கொண்டு வாராவாரம் திருச்சிவப்பேரூர் போய்த் திரும்புகிற களைப்பு…
இளசாக ஒரு பெண் கிடைக்கிறாள் என்றால் ஓணம் கேராத மூலையில் ஒரு குக்கிராமமாக இருந்தாலும், வெள்ளை வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடுகிறபோது வராத ஆயாசம் இது.
பகவதி வெளியில் வந்தாள். சித்ரன் பயணம் போய் நான்கு நாளாகிறது. இன்னும் திரும்பக் காணோம்.
அவன் கையால் சிகிச்சை செய்து கொள்ள எங்கே இருந்தெல்லாம் வந்து அழைத்துப் போகிறார்கள்..
கைராசி வைத்தியர்.. அதற்காக கைப்பிடித்துக் கூட்டி வந்தவளை இப்படிக் தனியாக விட்டுவிட்டு..
நல்ல வேளை.. இருப்பும் சமையலும் எல்லாம் தனியென்று ஆனது. இல்லாவிட்டால் மனையில் உயரும் இந்தக் கூச்சலுக்கும் சண்டைக்கும் நடுவே பிராணன் போயிருக்கும்..
உள்கட்டு அமைதியாகக் கிடந்தது. எச்சில் சண்டை எப்படி முடிந்தது என்று தெரியவில்லை. சொர்க்கம் புகுவது பற்றிய சிந்தனைகளை இன்னும் ஒரு மத்தியானம் தள்ளிப் போட்டுவிட்டுத் தம்புராட்டிகளும் உறங்கி இருந்தார்கள்.
இனிமேல் சாயந்திரம் மறுபடி குளியலும், நாமஜபமும், மரக்குடை பிடித்துக் கொண்டு ‘அம்மே நாராயணா .. தேவி நாராயணா’ என்று ஜபித்து உருவிட்டபடி கோயில் போய் வருவதும், நிலவிளக்கேற்ற்றி ‘தீபம் தீபம்’ என்று சத்தமிட்டபடி முகப்பில் வைக்கிறதுமாக இன்றைய பொழுது போய்விடும்.
வேலை பார்க்கிற நாணிக்குட்டி என்ற நாராயணிக்குட்டி கூட வீட்டுக்குப் போயிருந்தாள். அவளுக்கும் வீடு இருக்கிறது. ராத்திரியும் பகலும் குடித்துக் கொண்டே இருக்கிற கணவன் இருக்கிறான். அவனுக்குச் சோறு எடுத்துப் போக வேண்டிய கடமை இருக்கிறது.
பகவதி பின்கதவைத் திறந்தாள். தோட்டத்துக்கு நீள்கிற பாதை…
‘யட்சி.. அடி யட்சி.. நீயும் உறங்கி விட்டாயோ?’
வாகை மரத்தில் துளையிட்டுக் கொண்டிருந்த மரங்கொத்தி மெல்லத் திரும்பிப் பார்த்தது.
‘யட்சி தானே… பார்த்தால் நீ தேடியதாகச் சொல்லுவேன். நீ உள்ளே போய் உறங்கேன் பகவதி. உச்சி வெய்யிலில் ஏன் அலைந்து திரியணும்?’
இன்றைக்குள் இந்த மரத்தைத் துளைத்துச் சாய்த்துவிட வேண்டும் என்று யாரோ இட்ட கட்டளையை நடப்பாக்கிக் கொண்டிருக்கிறது போல அதன் அலகு சாய்ந்து மரத்தில் இழைந்தது.
பகவதி மாமரச் சுவட்டில் நின்றாள்.
அவள் பிறந்த செவ்வரம் கிராமத்தில் இதுபோல மரங்கள் அடர்ந்த தோட்டத் தரை இல்லை. மனையே இல்லை. நசித்துக் கொண்டிருந்த ஒரு பழைய நாலுகட்டு. வெயில் உக்ரமாகப் பற்றி இறங்கும் அனல் சூட்டில், உடல் முழுவதும் படுக்கைப் புண்களோடு பக்கவாதம் பிடித்துப் படுத்திருந்த பகவதியின் அச்சன் பரமேஸ்வரன் நம்பூதிரி…
‘காவுங்கல் குளக்கரை மனை சித்ரன் நம்பூதிரி கை வைத்தாலொழிய ரோகம் மாறுமென்று தோன்றவில்லை..’
யார்யாரோ சொன்னார்கள். பேசி வைத்துக் கொண்டு சொன்ன மாதிரி ஒரே பெயர் தான் அவர்கள் நினைவிலும் நாவிலும் கடந்து வந்தது – சித்ரன் நம்பூதிரி.
மூலிகை சஞ்சியோடு படியேறி வந்த சித்ரன் நம்பூதிரியை பகவதி முதல்முதலாகப் பார்த்த, ஐந்து வருஷம் முந்திய அந்தக் கோடை காலப் பகல்…
சுற்றி எரிந்து படரும் பாலைத் தீயின் நடுவே ஓர் இதமான மலைச்சாரல் காற்றாக… தூவித் தெறிக்கும் மழைத்துளிகளாகச் சித்திரனின் பார்வை..
மாதக் கணக்கில் தைலமும், இலையும், விழுதும், மேலே எண்ணெய் புரட்டியும், குடிக்கக் கொடுத்தும் வைத்தியம் பார்த்த சித்ரன் ஒரு சக்கரம் கூட வைத்தியக் கூலியாக வாங்க மாட்டேன் என்று மறுத்த பிடிவாதம்…
பரமேஸ்வரன் நம்பூதிரியின் இறுதி சுவாசததை வாங்கிக் கொண்டு ஊருக்கு விடிந்த மிதுன மாதத்துக் காலைப் பொழுது… இடிந்து கொண்டிருக்கும் நாலுகட்டின் சுவர்களுக்கு நடுவே ஓர் அழகான யுவதி..
ஐந்தாம் தாரமும், ஆறாம் தாரமும் ஆக்கிக் கொள்ள ஆர்வம் காட்டித் தூது அனுப்பியவர்கள்… நெருக்கிய கடன்காரர்கள்..
மிதுனம் முடிந்து கர்க்கடகம் பிறந்ததும் சித்ரன் வந்து நின்றது ஒரு புலர்காலைப் பொழுதில்…
‘பகவதி, என்னோடு வா..’
திருமாந்தாங்குன்னு கோயிலில் வைத்து பகவதி கழுத்தில் திருமாங்கலியம் அணிவித்து மனைவி என்று ஊரறியச் சொல்லி இங்கே அழைத்து வந்து ஐந்து வருடம் உருண்டு போய் விட்டது
பழைய நினைவுகளில் மனம் அலையடித்துக் கொண்டிருக்க, பச்சை பூத்துக் கிடந்த வெளியில் பகவதியின் பார்வை நிலைத்தது.
வெற்றிலைப் பச்சைக்குக் குறுக்கில் வெள்ளை நரம்பாக ஓடுகிற ஒற்றையடிப் பாதையில் யாரோ வந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. தலையில் வைத்துக் கை உயர்த்திப் பிடித்த வாழைக்குலையோடு தள்ளாடி வருகிற அந்த வயதான மனிதரைப் பகவதிக்குத் தெரியும்..
ஆற்றிங்கல் மாதவன் எம்பிராந்திரி.
அச்சன் இருக்கும்போதும் அப்புறமும் யார் யாரோ பல்லுப் போன கிழவர்களின் பெண்டாட்டியாக்கப் பகவதியின் ஜாதகம் கேட்டு வந்தவர் இவர்.
பன்றியூரில் சின மனைக்காரர்களுக்கு இப்படி இணை சேர்ப்பதே தொழிலும் பொழுது போக்கும்… அவர்களை அண்டி சேவகம் பார்க்கிற ஏழை பிராமணக் கிழவர் இவர்.
ஆற்றிங்கல் மாதவன் எம்பிராந்திரி என்ற தன் பெயரை இவர் கூட மறந்திருக்கலாம். ‘ஊட்டுப்புரை எலி’ … அது இவருக்குப் பழகிப்போன பெயர்.
‘ஊட்டுப்புரை எலி..’
சின்னப் பையன்கள் பின்னால் இருந்து விளையாட்டாகக் கத்தி விட்டு ஓடினால் மட்டும் நல்ல மலையாளத்தில் நாலு வசவு உதிர்ப்பார். மற்றபடி பேசுவதே அபூர்வம்.
ஊட்டுப்புரை எலி… கோவிலில் இலவசமாகக் கிடைக்கும் சோற்றை நம்பி ஒரு வாழ்க்கை. எல்லாப் பரிகாசத்தோடும் இலையில் விழுகிற சோறு…
உச்சி வெய்யிலில் வாழைக் குலையைத் தலையில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள்.
யாசக வாழ்க்கை. இருந்தாலும் பிறப்பால் மேல் சாதி.
பகவதியின் கண்கள் மாதவன் எம்பிராந்திரியைக் கடந்து தூரத்தில் விரியும் பசுமையில் வெறித்தன.
இந்தக் கிழவர் வரும் வழியில் எதிர்ப்பட்ட ஈழவன் எட்டு அடி பின்னால் ஓடி ஒதுங்கி நின்றிருப்பான். வயலில் உழைக்கும் அவன் மனைவி மார்பு மறைத்த துணி முழுவதுமாகக் கையில் உருவி எடுத்துக் கொண்டு தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கப்படும் அவமானம் கண்ணில் நீர்த்துக் கலங்க, கூனிக் குறுகித் தலை குனிந்து நின்றிருப்பாள்.
மேல் குடியினர் முன், தாழ்ந்த சாதிப் பெண்கள் விலங்கு மாதிரி வெட்கத்தை விட்டு உடுதுணி விலக்கி நிற்பதே மரியாதை என்று கற்பித்த அல்ப ஜந்துக்கள் அழுகியும் புழுத்தும் செத்திருக்க மாட்டார்களா?
இந்த மரியாதையை இன்னும் எதிர்பார்க்கிற இந்தத் தம்புரான்கள் எத்தனை மணி நேரம் பூஜை செய்தால் என்ன.. அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால், நிச்சயம் நரகல் தின்னும் அழுக்குப் பன்றிகளாகப் பிறந்து சேற்றில் கிடப்பார்கள்…
ஆனால் இந்த மாதவன் எம்பிராந்திரி.. இவர் ஒரு பாவப்பட்ட மனுஷர்… ஒரு பசுவாகப் பிறந்தாலே போதும். ஊட்டுப்புரைப் பசு.. பால் மரத்துப் போனது..
அப்புறம் இந்த மனையின் மூத்த நம்பூதிரி… அவர் ஒரு கரடியாகப் பிறவி எடுக்கட்டும்… அடுத்தவரான நீலகண்டன் நம்பூதிரி … ஒரு மண்புழு.. பந்தம் புலர்த்த மண்ணில் உருண்டு போகிற புழு..படி ஏறும் முன் சுருண்டு மண்ணோடு மண்ணாகி இன்னொரு ஜன்மம் அதேபடி மண்புழுவாக..
சித்ரன் நம்பூதிரி.. சித்ரன் ஒரு கொம்பன் யானையாவான்… பகவதி பிடியானையாவாள்.. கம்பீரமாக இணை விழைந்து சேர்கிற யானைகள்…
பகவதிக்குச் சிரிப்பு வந்தது. ஒரு பத்து நிமிடம் போலக் கடவுளாக இருந்த சந்தோஷம்.
மாதவன் எம்பிராந்திரி ‘குருவாயூரப்பா.. ரக்ஷிக்கணே’ என்று உரக்கச் சத்தமிட்டபடி வாழைக்குலையைத் தரையில் கிடத்தினார். வீட்டுக் குளத்தில் கைகால் கழுவி வந்தார்.
படுத்துக் கிடந்த நீலகண்டன் நம்பூதிரியின் தலைமாட்டுப் பக்கம் நின்று, ‘நீலண்டா.. நீலண்டா..’ என்று விளிக்க ஆரம்பிக்க, பகவதி உள்ளே போனாள்.
ஒரு வினாடி பின்னால் திரும்பிப் பார்க்க, மாதவன் எம்பிராந்திரி இடுப்பிலிருந்து எடுத்துக் கொண்டிருந்த ஓலை நறுக்கு கண்ணில் பட்டது.
பெண் ஜாதகமாக இருக்கும்.
மூத்த நம்பூதிரிக்கு அடுத்த கல்யாண யோகம்.
எச்சில் இலை யுத்தம் இன்னும் உக்கிரமடையக் கூடிய சாத்தியக் கூறுகள்.
(தொடரும்)