வாதவூரான் பரிகள் 2 இரா.முருகன்
பயணம் செய்யத் தயாராவது பயணத்தைப்போல் சுவாரசியமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. விரிவாகத் திட்டமிட்டு, எல்லா நூற்றாண்டுகளிலும் சீனா, அரேபியா, போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து என்று பல நாடுகளிலிருந்து உலகம் சுற்றக் கிளம்பி வந்து, பயணத்தில் முக்கியப் பகுதியாக தென்னிந்தியாவில் பயணிகள் ஆர்வத்தோடு அலைந்திருக்கிறார்கள்.
இபன் பதூதா, பாஹியான், மார்க்கோ போலோ, யுவான் சுவாங் என்று கிட்டத்தட்ட எல்லாப் பயணிகளும் பயணம் முடித்து ஊர் திரும்பி, உடுப்பைத் துவைக்கப் போட்டுவிட்டு வீட்டுச் சமையலை ருசித்தபடி, மற்றவகை விருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில் பயணக் கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்களில், போய்ப் பார்த்த இடங்கள், சந்தித்தவர்கள் பற்றி விரிவாகக் குறிப்பு எடுத்து வந்து அவற்றை எல்லாம் கொட்டிக் கிளறி அடுக்கி நாள்வாரியாக பயணக் குறிப்பு எழுதியவர்கள் பலரும். ஞாபகம் கலைந்துபோய், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் நிஜம் என்று எழுதியவர்களும் உண்டு. மார்க்கோ போலோ பயணக் குறிப்புகள் இப்படிப்பட்டவை – சுவாரசியம். எனில், முழுக்க நம்ப முடியவில்லை.-
பதினேழாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த இத்தாலியப் பயணி வல்லே Pietro Della Valle உலகம் சுற்றவே அவதாரம் எடுத்தவர். தாயகத்துக்கு திரும்பப் போய் இதயம் பேசாமல் அங்கங்கே பார்த்தது கேட்டது அனுபவப்பட்டதை சோம்பலின்றி உடனே கடிதங்களாக எழுதி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். கூரியர் சர்வீஸும் அஞ்சலும் இல்லாத அந்தக் காலத்தில் வல்லே எழுதி அனுப்பியதெல்லாம் வரல்லே என்று தொலைந்து போகாமல், சரியாகப் போய்ச் சேர்ந்தனபோல. அவர் ஊர்போய் உடனே அதையெல்லாம் எடுத்து அடுக்கி புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார் அது மட்டுமல்ல, இத்தாலிய மொழியில் அமைந்த இந்த நூலை இங்கிலீஷில் உடனுக்குடன் மொழிபெயர்த்து ஆங்கிலம் கூறும் நல்லுலகில் பரப்பப்பட்டது. The Travels of Pietro Della Valle in India என்று 1624-ல் வெளியான இந்த நூலை 1800களில் மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள். படிக்க வேண்டிய புத்தகம்.
கர்னாடகத்தில் வடக்கு கன்னட பிரதேசத்திலும், கோவாவிலும், கோழிக்கோடு, கண்ணூரிலும் பாதம் பதித்துப் போயிருக்கிறார் வல்லே. இப்போது குக்கிராமமாகத் தேய்ந்து போன, அந்தக்கால நகரமான கெருஸொப்பா, உள்ளால், ஹொன்னாவர் என்று வந்திருந்து தங்கிப் போயிருக்கிறார். அவர் சொல்வது- அந்தப் பிரதேசத்தில் ஆண்களும் பெண்களும் காது மடல்களில் பெரிய ஓட்டை போட்டு நகை அணிந்திருக்கிறார்கள். காது தோள்வரை தொங்க, மடலைக் கிழித்திருந்தார்கள் அவர்கள். இதை அப்படியே கொடுத்து விட்டு பதிப்பாசிரியர் அடிக்குறிப்பாக எழுதிச் சேர்க்கிறார் – பர்மாவில் காது ஓட்டைக்குள் பாதி பிடித்த சுருட்டைச் செருகி வைத்துக் கொள்கிறார்கள். வல்லே சுற்றிவந்து அனுபவித்ததின் அடிப்படையில் கன்னடத்தில் அப்பா என்றால் தந்தை, அம்மா என்றால் தாய் என்று சொல்ல, பதிப்பாசிரியர் அவசரமாக அடிக்குறிப்புக்குப் பிடித்து இழுத்து துளு மொழியில் அப்பா என்றால் தாய், அம்மா என்றால் அப்பா என்று புதுப்புது அர்த்தங்களைச் சொல்கிறார். இதெல்லாம் இருந்தாலும் புத்தகம் திரட்டித் தரும் தகவல்களால் சிறப்பாகிறது.
வல்லே பயணம் வந்த ஊரில் ஒரு வாத்தியக்கார் இறந்துபட, அவருடைய மூன்றாம் மனைவி தானும் உயிர் நீப்பேன் என்று அறிவிக்கிறாள். கணவரின் உடலை எரியூட்டும்போது கூடவே எரிவது இல்லை இது. ஒரு மாதம் தினசரி சாயந்திரம் நாலு தெரு சுற்றி ஊர்வலமாக வருகிறாள். கையில் முகம் பார்க்கும் கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்த்தபடி மற்ற கையில் வைத்த எலுமிச்சம் பழத்தை முகர்ந்தபடி இருக்கிறாள் அவள். கண்ணாடி சிற்றின்பத்தை விலக்கப் போவதையும் எலுமிச்சை, தீ தீண்டப்போகும் உடலாலும் மனதாலும் அவள் பரிசுத்தமாவதையும் காட்டுகிறதாம். அந்தப் பெண்ணோடு மொழிபெயர்ப்பாளர் மூலம் உரையாடி அவளை உயிர்த் தியாகம் செய்துகொள்ளாமல் தடுக்க வல்லே அவள் வீட்டுக்குப் போகிறார். அடுத்த வாரம் சதிமாதாவாக அக்னியில் உயிர்விட நாள் குறிக்கப்பட்ட அந்தப் பெண் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க வல்லே போய்ச் சேருகிறார். ஏழு வயதிலும் எட்டு வயதிலும் இரண்டு சிறு குழந்தைகள் அவளுக்கு. ‘உனக்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்காக நீ வாழ வேண்டாமா’ என்று அவர் கேட்டதை அந்தப் பெண் லட்சியம் செய்வதில்லை. ‘என் சக்களத்திகள் அதுகளை வளர்ப்பாங்க’ என்று ஒரு வரி பதில் வேறு தருகிறாள். வல்லே திரும்பும்போது அவள் சொல்கிறாள் ‘நாளை உங்களை சந்திக்க நீங்க இருக்கற இடத்துக்கு வருவேன்’. வருகிறாள். வல்லேவிடம் பிச்சை கேட்கிறாள் – அடுத்த வாரம் என்னை எரிக்கப் போறோம். அதுக்கு விறகு வாங்கணும், நெய் வாங்கணும். சாவுச்சடங்கு செய்யணும். ஏழைப்பட்ட குடும்பம் எங்களோடது. உங்களுக்கு புண்ணியமாகட்டும் முடிஞ்ச காணிக்கை கொடுங்க ஐயா.
இந்த ஒரு சித்தரிப்புக்காகவே வல்லேவுக்கு வணக்கம்.