யானைக்காரனான திருமாந்தாங்குன்னு வைத்தியனோடு ஒரு பகல்

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி 5

 

பகவதி குளித்திருந்தாள்.

 

’அந்தி சாயப் போகிற நேரத்தில் ஸ்திரியோடு பேசுவது பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?’

 

ஈரக்கால்களை நடையில் ஒற்றி உள்ளே வர, சித்ரன் தரையில் அமர்ந்து சரிகைத் துணியை மடித்து வைத்துக் கொண்டிருந்தான். காலோடு நடக்கிற கண்கள்.

 

‘ஆயுர்வேதம் என்ன சொல்கிறதென்றா கேட்டாய்? அது இன்னொரு தடவை பேசச் சொல்கிறது.. இப்படி ஆரம்பித்து..’

 

ஈரமும் மஞ்சளும் மணத்த அவளுடைய இரு பாதங்களிலும் முத்தமிட்டான்.

 

‘எய்.. இன்னும் எத்தனை தடவை குளிப்பது..ஒரேயடியாக ராத்திரி சாப்பிடலாம் என்று சொன்னீர்களே’

 

சத்தம் எழாமல் குலுங்கிச் சிரிக்கிற பகவதி.. அவன் பக்கத்தில் மெல்ல அமர்ந்தாள். அவள் தோளில் தலை வைத்து, வாசனைப் பொடி மணக்கும் ஈரத் தலை முடியை இழை பிரித்துத் தன்  முகத்தில் படிய விட்டுக் கொண்டு சொன்னான் சித்ரன்.

 

‘ராத்திரி ஆகி விட்டது.. கருமை அடர்ந்த இருளில் இருக்கிறேனாக்கும்.. சாப்பிடலாம்’.

 

‘ஆளை விடுங்கள்.. ஏகமாக வேலை இருக்கிறது.. மதியம் நீங்கள் உண்ட பாத்திரங்கள் அலம்ப வேண்டும். சர்ப்பக் காவில் விளக்கு வைக்க வேண்டும்.. ‘

 

பகவதி விலகி அமர்ந்தாள்.

 

‘நாணிக்குட்டி என்ன ஆனாள்? இதெல்லாம் அவள் தானே பதிவாகச் செய்வாள்?’

 

‘குளித்து விட்டு வரும்போது அவள் வீட்டுக்காரன் குஞ்ஞுண்ணியைப்  பார்த்தேன்.. உடம்பு திடீரென்று சுகமில்லாமல் போய் வீட்டில் படுத்திருக்கிறாள் என்று காசு கேட்டான்’.

 

‘குஞ்ஞுண்ணி சொல்வதை எல்லாம் அப்படியே நம்பி விட்டாயா? கள்ளுக் குடிக்கப் போகிற போக்கில், ஏதாவது இங்கே காசு பெயருமா என்று வந்திருப்பான். இந்த பாழாய்ப் போன கள்ளு… மனுஷ்யனை எப்படியெல்லாம் தான் ஒடித்துப் போட்டு விடுகிறது.. நானே குஞ்ஞுண்ணியை எத்தனை தடவை கேட்டிருப்பேன்.. உனக்கு வெட்கமாக இல்லையா குஞ்ஞுண்ணி? திருநல்லூரில் ஐந்து வருடம் கதகளி படித்து விட்டு இப்படி பெண்டாட்டி கொண்டு வரும் காசை நம்பி குடியும் உறக்கமுமாய்க் கிடக்கிறாயே என்று..’

 

‘மூத்தவர் கூட ஏதோ கதகளி ஒப்பனைப் பெட்டி குஞ்ஞுண்ணிக்கு வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னீர்களே..’

 

‘மூத்தவர் இல்லை அது.. அடுத்த அண்ணன் நீலகண்டன்.. குஞ்ஞுண்னி கதை கிடக்கட்டும்.. இந்த நாலு நாளில் இங்கே வேறே வர்த்தமானங்கள் என்ன?’

 

‘உங்களுக்கு ஈசுவர கிருபையால் இன்னும் கூடி ஒரு அண்ணி வரப் போகிறாள். அநேகமாக உங்களையும், என்னையும் விட இளையவளாக் இருப்பாள்..’

 

‘சிவசிவ.. பெரியவருக்கு ஏன் இப்படி புத்தி போகிறது? நிச்சயம் கேட்கத்தான் போகிறேன்’

 

‘வேண்டாம்.. சபித்து விடுவார்.. அவர் பேச்சைக் கேட்காமல் நீங்கள் என்னைக் கல்யாணம் கழித்து வந்ததால், நமக்கு சந்ததி இல்லாமல் போகிறதாம். மனையின் தம்புராட்டிகள் என் காதுபட ஜாடைமாடையாக எத்தனையோ பேசுகிறார்கள்..’

 

‘நீ அவர்கள் வழிக்கே போவதில்லையே’

 

‘அது கூட வம்பு வளர்க்க ஒரு காரணமில்லையா.. மனைக்குள்ளே மனையாக நாம் ஒதுங்கி இருப்பதில் பொறாமை.. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.. பூஜைக்குப் பூ எடுத்துத் தருவதிலும், சமைப்பதிலும், எச்சில் இலைக்குச் சண்டை போடுவதிலும் தவிர அவர்கள் ஜீவிக்கிற நிமிஷங்கள் எத்தனை… நம்பூதிரிப் பெண்.. நம்பூதிரி அந்தர்ஜனம்.. உள்ளே இருக்கப்பட்டவள்.. உள்ளேயே இருந்து மக்கி மடிந்து போகிறவள்.. இதெல்லாம் எப்போது மாறுமோ?’

 

பகவதியின் கண்ணில் சோகம் இழை விரித்து இமைகள் தாழ்ந்தன. அவற்றில் மெல்ல இதழ் பதித்து சித்ரன் சொன்னான் –

 

’இந்த நம்பூதிரி சமுதாயமே பிரளயம் வந்தது போல் அழியப் போகிறது.. எல்லாம் ஒரு அந்தர்ஜனம்தான் காரணம்.. தெரியுமா உனக்கு?’

 

‘சொன்னால் தானே தெரியும்?’

 

‘தாழமங்கலத்தில் பூகம்பம் வெடிக்கப் போகிறது. ஒரு நம்பூதிரிப் பெண் மேல் ஸ்மார்த்த விசாரணை தொடங்கி விட்டது..’

 

‘என்ன செய்தாள் அவள்? வேளி கழித்துக் கூட்டி வந்த நம்பூதிரியைக் கழுத்தை நெறித்துக் கொன்றாளா?’

 

‘அப்படி இருந்தால் ஒரே ஒரு மனைக்கு மட்டுமில்லையா நல்ல காலம் என்று வைத்துக் கொள்ள?’

 

‘பின்னே தாழமங்கலத்துப் பெண் என்ன தான் செய்தாள்?’

 

‘தாழமஙகலத்து அந்தர்ஜனம் தாசியானாள்’

 

‘எய்.. அதெல்லாம் பொய்யாக இருக்கும்.. அந்தர்ஜனமாவது.. தாசியாவதாவது.. நுணை..க்ட்டுக் கதை .. ’

 

‘அவளே உண்மை என்றால்?’

 

‘சொல்ல வைத்திருப்பார்களோ என்னமோ’

 

‘ஒரு வன்மத்தோடு செயல் பட்டிருக்கிறாள். .சுற்று வட்டாரத்தில் எல்லா கிராமத்தில் இருந்தும் மனைக்கு ஒருத்தராக, தரவாட்டுக்கு ஒருத்தராக மயக்கி இருக்கிறாள்..கொட்டாரத்து அரச குலமும் வந்து போனவரில் உண்டாம்.. கூட இருந்தவர்களின் அங்க லட்சணங்களையும், வந்து போன நாள், நட்சத்திரம், நாழிகையையும் கிரமமாகக் குறித்து வைத்திருக்கிறாளாம். அழகென்றால் பேரழகி அவள்.. உன்னைப் போல..கொஞ்சம் தாழ்வு..அவ்வளவு தான்… ‘

 

‘சரி சரி மேலே சொல்லலாம்.. இங்கே மேலே இல்லை.. தீபம் வைக்கப் போகணும்’

 

‘உத்தரவு தம்புராட்டி.. அந்த தாழமங்கலக்காரி அழகுக்கு தீபத்தில் விழுகிற விட்டில் பூச்சி போல விழுந்திருக்கிறார்கள் பிரதேசத்து ஆண்கள் எல்லாம்’.

 

‘குருவாயூரப்பா.. இதென்ன கொடுமை..’

 

பகவதியின் தேகம் நடுங்கியது.

 

‘கோழிக்கோடு சாமுத்ரி மகராஜா ஆக்ஞைப்படி வேத விற்பன்னர்கள் நீதி மன்றம் அமைத்து விசாரிக்கப் போகிறார்களாம்.. மாடம்பு மனையின் அடுதிரிப்பாடு தான் முக்கிய நீதிபதி..’

 

‘எப்போது தொடங்கப் போகிறதாம்?’

 

‘அடுத்த வாரம்..’

 

‘அடுத்த வாரம்.. கொல்லம் ஆயிரத்து எண்பது நம்பூதிரி சமுதாயத்துக்கு கொள்ளிதான் வைக்கும் போலிருக்கிறது. அந்தப் பெண் யார் பெயரை எல்லாம் சொல்வாளோ.. இந்த மனைக்காரர்களும் உண்டோ அதில்?’

 

‘நீ உண்டா என்று நேரடியாகவே கேளேன் பகவதி..’

 

‘இந்த யானைக்காரன் பழகிய யானையை விட்டு வேறே எங்கும் போக மாட்டான் என்று தெரியும்’

 

இறுகத் தழுவி மார்பில் முகம் பதித்த பகவதி..

 

‘திருமேனி … வந்து ரட்சிக்கணுமே.. தெக்கே பரம்பில் ராமப் பணிக்கருக்குப் பாம்பு கடித்தது’.

 

வெளியே பதற்றமான குரல்கள். சித்ரன் மூலிகை சஞ்சியோடு வெளியே ஓடினான்.

 

‘குளித்து விட்டுப் போங்கள் திருமேனி.. ஓ..என் யானைக்காரத் திருமேனி’..

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன