பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்த இரவு – குறுநாவல் மனை பகுதி

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி  7

 

மனைக்கு உள்ளே அந்தர்ஜனங்களின் நாமஜபத்தை மீறி எழுகிற மூத்த நம்பூதிரியின் குரல்.

 

‘யார் இந்த தரித்திரம்? எப்படி உள்ளே வந்தது?’

 

குழந்தை நந்தினி விளையாடியபடி மனையின் உட்புறம் ஓடி, படியேறி வந்து கொண்டிருந்த மூத்த நம்பூதிரியின் பெரிய வயிற்றில் மோதிக் கொண்டு நின்றது.

 

‘இது யார் குடுமியும் பானை வயிறுமாக? ராட்சசனா? ஏன் என்னைப் பார்த்து உருட்டி விழித்து சத்தம் போடணும்?’

 

பயத்தில் கையும் காலும் செயல் மறக்க, சிறகு நனைந்த குருவிக் குஞ்ஞாக அப்படியே ஒடுங்கி நின்றது அது.

 

‘ஏய்.. யாராக்கும் நீ?’

 

‘நான்.. நான்.. நந்தினி.. அச்சனைப் பார்க்க வந்திருக்கேன்..’

 

‘எந்தக் கழுவேறி உன் அச்சன்?’

 

குழந்தை மிரள மிரள விழித்துச் சுற்றிலும் பார்க்க, தோட்டத்திலிருந்து குளித்து ஈர வேட்டியும், வாயில் உரக்கச் சொல்லும் திருநாமமுமாகத் திரும்பிக் கொண்டிருந்த நீலகண்டன் நம்பூதிரி மேல் பார்வை நிலைத்தது.

 

அச்சன் வந்தாச்சு. தூக்கி வைத்து முத்த மழை பொழிய அச்சன் வந்தாச்சு.

 

’அச்சா .ஏன் நீ வீட்டுக்கு வரவில்லை? திருநாவாய் அம்பலத் திருவிழாவுக்கு அழைத்துப் போகிறதாகச் சொல்லித் தூங்கப் பண்ணி, விடிந்து பார்த்தால், நீ போயே போய் விட்டாய். உன்னோடு பேச மாட்டேன் போ…அம்மாவும் திருவிழாவுக்குக் கூட்டிப் போகவில்லை. காசு இல்லையாம். சாப்பிடக் கூட ஒன்றும் இல்லையென்று நிறையத் தண்ணீரைத்தான் குடிக்கத் தருகிறாள். வா அச்சா..நம் வீட்டுக்குப் போகலாம்.. எனக்குப் பாவாடை வேண்டும்.. மர பொம்மை வேண்டும்.. மர யானை.. வாங்கித் தா..’

 

எல்லாம் சொல்ல வேண்டும். மாரில் ஏறி மிதிக்க வேண்டும். காதைக் கடித்துக் கொஞ்ச வேண்டும். தலையில் முட்ட வேண்டும். அச்சா… என் அச்சா..

 

நீலகண்டன் தன்னைத் தீண்ட வந்த பிஞ்சுக் கரங்களை அவசரமாக விலக்கி விட்டு வெளியே பார்த்து சத்தம் போட்டான்.

 

‘யாரங்கே.. இந்தப் பிசாசுகளை வெளியே விரட்டு..’

 

சின்னப் பூமுகம் சுருங்கிப் போனது. நான் பிசாசா? குஞ்சோமனே என்று வாய்க்கு வாய் கொஞ்சுகிற அச்சனா இது? அதே சிவத்த உடம்பு, வெளுத்த உடுப்பு.. கன்னத்தில் மரு..

 

‘ரான்..’

 

கார்த்தியாயின் தடுமாறி வந்து நீலகண்டன் காலில் விழுந்தாள்.

 

தம்பிரான் என்பதின் சுருக்கம் ரான். அடிமை சனங்களுக்கு வலியவர்கள் எல்லோரும் ரான், ஏமான்..

 

ஏமானே என்று காலைப் பிடிக்கிற போது, அந்த எஜமானன் மிதிக்கலாம்.. காறி உமிழலாம்.. தப்பே இல்லை.. அதுவும் சம்பந்தம் வைத்து பந்தம் அறுத்த பெண்… தீர்க்கமாக ருசித்து அனுபவித்துத் துப்பிய பின் அந்த சக்கை என்னத்துக்கு உபயோகம்?

 

கார்த்தியாயினியை அசிரத்தையோடு நோக்கிய நீலகண்டனின் கண்கள்.. மனம் இன்னும் நாணிக்குட்டியில் மார்பகங்களிலேயே சிறைப்பட்டிருந்தது.

 

இந்தக் கார்த்தியாயினியும் ஒரு காலத்தில் அழகாக இருந்தவள் தான்.. ஊரையே கிறங்க வைத்த பேரழகு.. இன்னும் இன்னும் என்று பகலும் இரவும் சுகித்து முடித்தது எல்லாம் இப்போது பழங்கதை. இதோ நிற்கிற ஷயரோகி கார்த்தியாயினி  அருவருக்கத் தக்க ஈனப் பிறவி. குத்திருமலும், சளியும், நாறும் உடுப்புமாக இவள் அருகில் வந்ததுமே உமட்டுகிறது… இப்பொழுது உறவு வைத்துக் கொண்டிருக்கிற ராயிரநல்லூர்க்காரியும் இப்படித்தான் ஆவாளோ என்னமோ… அத்தனை தூரம் ராயிரநல்லூருக்கு நடந்து சிரமப்படக் கூடத் தேவை இல்லை.. வாசலுக்கே வருகிற புஷ்ப ரதம்.. நாணிக்குட்டி.. குடிகாரப் புருஷனுக்குக் கள்ளு வாங்கி முட்ட முட்டக் குடிக்க வைத்து வாசலிலே படுக்க வைத்து விட்டு, உள்ளே அவன் வீட்டுக்காரியை  அனுபவிப்பதில் இருக்கிற சுகம் வேறு எதில் வரும். பின்னிரவில் திரும்பவும் நாணிக்குட்டியிடம் போக வேண்டியதுதான். அவள் மிரட்சியும், பயமும், கண்ணீருமாக வேண்டாம் வேண்டாம் என்று தடுக்கத் தடுக்க ஏறுகிற வெறி.. முதலில் இந்தப் புழுவைத் தூக்கி எறிய வேண்டும்..

 

காலில் பிடித்துக் கிடந்த கார்த்தியாயினியைத் தூக்கி நிறுத்திய நீலகண்டன் அவளை ஒரு கணம் பார்த்தான். சுட்டெரிக்கிற அந்தப் பார்வையின் கனம் தாங்காமல் தலையைத் தாழ்த்திக் கொண்டவளின் முடியைக் கொத்தாகப் பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு வாசலுக்குப் போனான்.

 

’தாசி முண்டை.. என்ன தைரியத்தில் இங்கே படி ஏறினாய்? பந்தம் முறித்து ஒரு வருஷம் ஆகிறது.. இன்னும் என்ன இழைய வேண்டி இருக்கிறது பிணமே’

 

‘ரான்.. ரான்.. எனக்கு உங்களைத் தவிர வேறு யாரைத் தெரியும்?..’

 

மன்றாடி அழுகிற கார்த்தியாயினி.  அம்மா.. அம்மா என்று கதறிக் கொண்டு கூடவே ஓடுகிற குழந்தை.

 

‘நான் என்ன உனக்கு சாசுவதமான புருஷனா? இந்த அழுக்கு உடுதுணியை நீ அவிழ்த்து விரித்தால் உன் ஓட்டைக் குடிசையில் கூட வந்து படுக்க ஒரு குஷ்ட ரோகி கூட இல்லாமலா போனான்?’

 

‘ரான்..நீங்கள் அப்படி எல்லாம் சொல்லலாமா? நான் உங்களைத் தொல்லைப் படுத்த வரவில்லை.. நிச்சயமாக.. நான் பாதை ஓரத்தில் புழுத்துச் சாகப் போகிறேன்…என்னைப் பற்றிக் கவலையில்லை.. இந்தப் பிஞ்சை.. உங்கள் குழந்தையை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்..’

 

‘என்னது.. என் குழந்தையை.. உறவு வைக்கிற இடத்தில் பிறந்து விழுகிற குட்டிச் சாத்தான்களை எல்லாம் ஆயுசு பூரா வைத்துக் காப்பாற்ற இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?’

 

இதுவரை இதை எல்லாம் பார்த்து ரசித்தபடி நின்ற மூத்த நம்பூதிரி அந்தப் பிஞ்சுக் கரங்களை இறுகப் பற்றி நீலகண்டன் முன்னால் நிறுத்தினார்.

 

‘நன்றாகச் சொன்னாய் நீலா… இது சிசு இல்லை.. யமன்.. உடனே துரத்து…’

 

அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குழந்தை தரையில் விழுந்தது.

 

‘வா சனியனே’

 

அந்தப் பச்சைத் தளிரை இழுத்தபடியே ஆடியாடிப் போகிற மூத்த நம்பூதிரி.

 

நீலகண்டன் கார்த்தியாயியை எட்டி உதைத்துத் தள்ளினான்.

 

‘ரான்.. ரான்.. தள்ளாதீர்கள்.. வல்லாத்த ஷீணம்.. நானே போகிறேன்.. குழந்தையையாவது தயவு செய்து..’

 

‘உன் வம்சத்தின் நாற்றக் காற்றே இங்கே அண்ட வேண்டாம்.. ஒழிந்து போ..’

 

பலம் கொண்ட மட்டும் தள்ளிய நீலகண்டனின் கைகளும் கால்களும்… மதில் சுவரில் பலமாகத் தலை மோதி கார்த்தியாயினி குழைந்து விழுந்தாள்.

 

‘நீயும் ஒழி..’

 

கருங்கல்லில் மோதப் போன குழந்தையை ஒரு வளைக்கரம் பாய்ந்து பிடித்து நிறுத்தியது.

 

பகவதி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன